மலையை விட்டு மலை
மலையை விட்டு மலை
என்று
நெளிந்து நெளிந்து
நெளிந்துச் செல்கிறது சாலை
கீழே சலசல சலவென்று
ஓயாமல் ஓடும் சட்லெஜ் நதியைத் தொட்டு
ஈரத்தை உள்வாங்கி என்னிடம்
விட்டுச் செல்கிறது
காற்று
முன்னால் நிற்கிறது
ஸ்ரீகண்ட மகாதேவ் சிகரம்
தூரத்தில் கின்னர் கைலாஷ் பர்வதம்
வலது பக்கத்தில் சராஹன்
அதற்குப் பின்னால் ஹத்து
வானைத் தொடும் சிகரங்கள்
சிகரங்கள் சிகரங்கள்
எங்கு திரும்பினும் பனி படர்ந்த சிகரங்கள்
பரந்த நீல வானத்தில் ஒரு விண்மீன்
இரண்டு
மூன்று
என்று மெதுவாக வானம் முழுவதும் விண்மீன்கள்
பிரம்மாண்டமான இந்த ஹிமலாய
மலைத் தொடரும் ஒரு சிறு துளிதான்
இந்த மஹாபிரபஞ்சத்தில் –
நடுநாயகமாக நான்.
One comment