குருதிச் சோறு

– நரோபா –

பகுதி – 1
பகுதி – 2

பூம்.. பூம்பூம்..பூம்..பூம்பூம்.. ..உறங்கிக் கொண்டிருக்கும் வனமிருகத்தின் மூச்சொலி போல் சீரான நிதானத்துடன் ஏறி இறங்கிக்கொண்டிருந்தது உடுக்கையொலி. மெல்லிய எதிரொலியாக தூரத்து பறையோசை ஒலித்துக் கொண்டிருந்தது. மருலாளி கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரைப் போல் வேப்பமரத்தடி மேடையில் அமர்ந்திருந்தார். நரைத்த வெள்ளி தலைமயிர், உடலுக்குள் இருக்கும் நீரை எல்லாம் ஒட்டுமொத்தமாக உறிஞ்சி எடுத்தாற்போல் வறண்டு மெலிந்த தேகம். அடர் கருப்பு தேகத்தில் சிறு கீறல்களாக பழுப்பு ரேகைகள் வயிற்றில் ஓடின. காவி வேட்டியும் செவ்வரளி மாலையும் அணிந்திருந்தார். காலுக்கு கீழே நான்கைந்து பிரம்மாண்டமான கரிய வெட்டருவாள்கள் கூர் மூக்குடன், அவர் கால்களைத் தீண்ட படமெடுத்து காத்திருந்தன. சிவந்த நாக்கை நீட்டி எதையோ விழுங்க காத்திருக்கும் தீ, பந்தத்தின் நுனியில் நின்றுகொண்டு காற்றில் இரையை தேடி துழாவிக் கொண்டிருந்தது.

சபரி கண்களை அகல விரித்து கண்கொட்டாமல் அந்தச் சுடரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விழிப்படலத்து ஈரத்தில் தீயொளி மினுங்கிக் கொண்டிருந்தது. .தீ நாவின் அடியில் ஊறிய எச்சில் பந்தத்திலிருந்து எண்ணெயாக வடிந்து சபரியின் காலில் சொட்டியது. ஏதோ ஒரு துர்சொப்பனத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தெழுவது போல் துணுக்குற்று எழுந்தான். குனிந்து காலை துடைத்துக்கொண்டான். தோல் சிவந்து எரிந்தது. சூடான வாநீர். அம்மாவின் முத்தத்தைப் போல. ஆனால் அது எரியாது சுகமாகத்தானே இருக்கும் என்று எண்ணிக்கொண்டான். அங்கே கும்பலில் சூழ்ந்து நோக்கும்  ஒவ்வொரு கண்ணிலும்  அந்தச் சுடர் எரிந்துக் கொண்டிருப்பது போலிருந்தது. உள்ளிருந்து எழும்  அனல் விழிவழியாக நா நீட்டி பசியாறத் துடித்தது.

பக்கத்தில் கைகட்டி கண்மூடி நெகிழ்ந்து பரவசத்தில் விசும்பிக் கொண்டிருந்தார் ராஜம் மாமா. திருநீர் பட்டை வியர்வையில் கருத்திருந்தது. ஓரத்தில் நின்றுகொண்டிருந்த சுப்புணியின் அக்கா ஒருமாதிரி குழைந்து உருகிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் ஏதோ ஒரு ஆணுருவம் ஒரு கையை அக்காவின் பின்னால் கொண்டு சென்றதைப் பார்த்தான். சபரிக்கு அச்சம் உடலெங்கும் ஊறலெடுத்தது. சுடலை ஓரமாக நின்று ஐஸை சப்பிக்கொண்டிருந்தான்.

கொஞ்சம் காற்று வீசி புழுக்கத்தை துடைத்தெடுத்தது. மரத்தில் கட்டப் பட்டிருந்த இரண்டு கரிய ஆட்டுக் குட்டிகள் கயிற்றை பலம் கொண்ட மட்டும் இழுத்துப் பார்த்து முட்டி மோதிக் கொண்டிருந்தன. இருளில் அவைகளின் கண்களும் சுடர்ந்து கொண்டிருந்தன.

“இங்கேர்ரா சபரி..வேணுமா?” சுடலை ஐஸை நீட்டினான்.

சபரி சைகையில் வேண்டாம் என மறுத்தான் . “டே வீட்டுக்கு போவோமா?”

“என்னா பயந்து வருதா….பாப்பார தொடநடுங்கின்னு காட்டிப்புட்டே..” கெக்கலித்துச் சிரித்தான்.

மெல்ல பூம் பூம் தாளம் வேகம் பிடிக்கத் தொடங்கியது. பறையொலியும் இப்போது வெகு அண்மையில் ஒலிப்பதுப் போலிருந்தது. மருலாளியின் உடல் மெல்ல ஆடத் தொடங்கியது. முழிப்புதட்டியும் கண் திறக்காத மிருகம் இரை மீது பாய்வதற்கு காத்திருப்பதுப் போலிருந்தது. மூடிய திரைக்கு அப்பால் கண்கள் குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தன.

“இதெல்லாம் எனக்கென்ன பயம்? எங்கூர்ல நாங்க பாக்காததா.. நேரமாகுதுல அதான்.. பாட்டி திட்டும் “

“இன்னும் ஒரு பத்து நிமிஷம் நில்லுடா.. நாடகம் பாக்க கூட நிக்கவேணாம்.. இனிமே தான் இருக்கு சீனே.. மருலாளி ஆட்டத்த இனிமே தான பாக்கப்போற..”

சிங்க வாகனத்தில் ஒருகாலை மண்ணில் ஊன்றி, நாக்கை வெளிநீட்டி, கோரைப் பற்கள் தெரிய உக்கிரமாக சிரித்திருந்தாள் காளி. காலுக்கு கீழே ஏதோ ஒரு அரக்கன். கரங்களில் வித விதமான ஆயுதங்கள். ஒரு கரத்தில் மட்டும் துண்டிக்கப்பட்ட நான்கு தலைகளை மயிரோடு கொத்தாக பிடித்துக் கொண்டிருந்தாள்.  சிமிண்ட் சிற்பத்தில் ஆங்காங்கு மேல்பூச்சு உதிர்ந்திருந்தது. சிங்கத்தின் ஒரு காலில் சிமிண்ட் பெயர்ந்து துரு ஏறிய கம்பிக்கட்டுகூட தென்பட்டது.

பறையோசையுடன் ஊரணியயைச் சுற்றி ஊர்வலமாக பானைகளில் அரிசியை சுமந்து வந்த மஞ்சள் சேலைப் பெண்கள் சிரமட்டார் காளியின் சன்னதியில் உள்ள மரக் களனில் அரிசியைக் கொட்டிவிட்டு அதிலிருந்து ஆளுக்கு ஒரு கைப்பிடி மட்டும் அள்ளி மருலாளியின் எதிரே கொதித்துக் கொண்டிருந்த உலையில் குலவையிட்டப்படி போட்டுவிட்டு நகர்ந்தார்கள். மரக் களனில் சேரும் அரிசியைக் கொண்டு மறுநாள் கஞ்சியும் கறி சோறு படையலும் உண்டு. படையலுக்கு பின்னர் ஊர்மக்களுக்கு அன்னதானம் செய்வது வழக்கம்.

“முன்ன எல்லாம்..இப்ப மாறி கிடையாது… தீட்டு நின்னுபோன கிளவிங்க மட்டும் தான் கோவிலுக்கு வரலாம்..திருழாக்கு மட்டும் தான் அம்புட்டு ஆளுகளும் உள்ளேயே வர முடியும்.. அப்ப எல்லாம் சோத்துக் களையத்துல வீட்டு பெண்டுக எல்லாம் ஆத்தாவுக்கு ரெண்டு சொட்டு ரத்தம் விடுறது வாடிக்கை.. குடிக்கிற கூழும் கஞ்சியும் ஆத்தா போட்ட பிச்சையில்லா.. எம்புட்டு திருப்புனாலும் கடனை அடைச்சிற முடியுமா என்ன?.. ஒரு பயபத்தி உண்டா..? ஆட்டிகிட்டு வந்து அரிசிய போட்டா போதுமா? .” ராஜம் மாமாவிற்கு பின்புறம் நின்றுக்கொண்டிருந்த வயசாளிகள் புலம்பிக் கொண்டிருந்தது சபரியின் காதில் விழுந்தது..

மருலாளியின் உடல் தாளகதிக்கு ஏற்ப ஆடத் தொடங்கியது. மருலாளிக்கு எத்தனை வயது என்று யாருக்கும் தெரியாது. சபரியின் தாத்தாவிற்கு விவரம் தெரிந்த நாட்களிலிருந்தே மருலாளிக்கு தலை மயிர் நரைத்து தான் இருந்ததாம். பல வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் திடிரென்று அவராகவே ஊருக்குள் வந்து இனி இந்தக் கோவிலை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதாகவும், குலம் கோத்திரம் ஏதும் தெரியாததால் ஊர் பெரியவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தபோது பெரிய வைத்தியர் கனவில் ஆத்தா வந்து மருலாளியை அனுமதிக்க சொன்னதாகவும் ஊரில் ஒரு கதையுண்டு.

அவர் ஒரு மர்மமான மனிதராகவே அறியப்பட்டார். யாரிடமும் அவராக சென்று பேசுவதில்லை. அவ்வப்போது பன்னீர் புகையிலையை வாயில் அதக்கி குதப்பிக் கொண்டிருப்பார். கிராமத்து வயசாளிகள் சிலருடன் அவர் பேசிய காலமெல்லாம் போய் முப்பது நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. குழந்தைகளுக்கு சோறூட்டும் போது கூட அவர் பெயரை சொல்லி பயமுறுத்துவது தான் வாடிக்கை. ஊர் எல்லையில் இருக்கும் காளியம்மன் திடலுக்கு யாரும் பொதுவாக விளையாடக் கூட போவதில்லை. இந்தப் புறமிருக்கும் மாரியம்மன் திடலுடன் விளையாட்டெல்லாம் முடிந்துவிடும்.  மருலாளி விளையாட்டு தான் அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டாக இருக்கும். இளவட்டக் கல் மீதேறி ஒருவர் மாறி ஒருவர் மருலாளியாக நின்று அதிகாரம் செய்து கொண்டிருப்பார்கள். தலையில் வெள்ளை நிறத் துவர்த்தைப் போட்டுக்கொண்டு பயம் காண்பிப்பார்கள். ஆட்டுக்குட்டிகளை துரத்திப் பிடிப்பார்கள்.

அவருடைய குடும்பத்தைப் பற்றியெல்லாம் இப்போது ஊருக்குள் இருப்பவர்களுக்கு யாருக்கும் எதுவுமே தெரியாது. மாதமொருமுறை ஜான்சி வண்டியில் ஏறி புதுக்கோட்டைக்கு செல்வார் என்பது மட்டும் எல்லோரும் அறிந்ததே. அன்று மட்டுமே அவர் மேல் சட்டை அணிந்து செல்வார். மற்ற நாட்களெல்லாம் ஒரு அழுக்கு வேட்டியைக் கட்டிக்கொண்டு காளியம்மன் கோவில் திடலில் உள்ள வேப்பமரத்தடி மேடையில் படுத்துக் கிடப்பார். அங்கேயே சோறாக்கி சாப்பிட்டுக் கொள்வார். ஊருக்குள் அரிதாகவே வருவார். புதுக்கோட்டையில் அவருடைய சந்ததிகள் இருப்பதாக ஒரு பேச்சுண்டு. ஆனால் அவரைத்தேடி யாரும் ஊருக்குள் வந்ததில்லை. எங்கோ தவசு மலை சித்தர் பீடத்திற்கு அருகே அவரை பார்த்ததாகவும் சிலர் சொல்லகேட்டதுண்டு. ஓரிருமுறை ஊரின் இளவட்டங்கள் புதுக்கோட்டையில் அவர் எங்கு செல்கிறார் என ஆராய அவரை பின்தொடர முயன்றதுண்டு. ஆனால் ஜான்சியை விட்டு இறங்கியது தான் தெரியும் மாயமாய் மறைந்து போவார். விடாப்பிடியாக அவரை துரத்தி பிடிக்க முயன்ற ஊர் தலைவரின் மகன் பூவரசனும் அவனுடைய சகாவும் சில வருடங்களுக்கு முன்னர் கோவிலுக்கு அருகில் இருக்கும் பாம்பாத்து பாலத்தின் அருகே சாலையோரம் ரத்தவெள்ளத்தில் மரணித்து கிடந்தனர். என்ன நடந்தது என்பது இன்றுவரை பெரும் புதிர் தான்.  அவனிறந்த மறுநாள் அவர்களின் வீட்டு தோட்டத்தில் உடைந்த முட்டையோடுகளையும் கோழி இறகுகளையும் கண்டதாக மக்கள் பேசிக்கொண்டனர். அதன் பின்னர் யாரும் அவரைப் பின்தொடர துணியவில்லை.

தாளம் அடுத்தகட்ட வேகத்தை எட்டியது. விளங்கியம்மன் கோவில் பூசாரி பாண்டியண்ணன் உடுக்கையை  அடித்துக்கொண்டே ஆட தொடங்கினார். சபரியின் கால்கள் அவனை மீறி தாள கதிக்கு ஏற்ப ஆடுவது போலிருந்தன. கண்ணுக்கு எதிரே குளிர்ந்த நதியோன்று சபரியைப் வசீகரித்து அழைப்பது போலிருந்தது. ஒரு அங்குலம், ஒரு புள்ளி, ஒரு கனம், அல்லது ஒரு மிக மெல்லிய திரை ஏதோ ஒன்று \அவனை அந்த நதியில் இறங்க விடவில்லை. ஒரு மெல்லிய சலன தூரத்தில் அவன் நின்றுக் கொண்டிருந்தான். நதியின் தெறிப்புகள் உள்ளங்காலில் சிதறி சில்லிட செய்தன. கால்களிலும் கரங்களிலும் படர்ந்திருக்கும் பூனை மயிர்கள் குத்திட்டு நின்றன. அதன் ஆழமும் வேகமும் குளுமையும் கருமையும் அவனை ஈர்க்கிற அதேசமயம் அவைகள் அவனை அச்சமுற செய்தன. ராஜம் மாமாவின் விசும்பல் கூடிக்கொண்டே போனது. யாரோ இரு பெண்கள் உடலை முறுக்கிக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ஊஊஊய் என அடிவயிற்றிலிருந்து ஒரு கூச்சல் எழுந்தது. நதி ஒரு சுழிப்பில் பலரையும் வாரி சுருட்டி கொண்டுவிட்டது.

சுடலை ஓசை நயத்துக்கேற்ப ஆடத் தொடங்கினான். மேலும் பல சுள்ளான்களும் காளையர்களும் நாக்கை துருத்தி கண்ணை உருட்டி தாள கதிக்கு ஏற்ப ஆடத் தொடங்கினார்கள்.

“டே ..வா..வந்து.. ஆடுறா” பக்கத்தில் நின்றிருந்த சபரியை நோக்கி உச்சக் குரலில் கத்தினான் சுடலை. அவனுடைய குரலும் அதன் தோரணையும் அவனை வேறு ஒருவனாக சபரிக்கு காட்டியது. சபரி வெளிறி நின்றான்.

“அடிங்க.. போடா.. போய் உங்க கோவில்ல கொண்டக் கடலைய தின்னுட்டு நல்லா குசு விடு,” சுடலைக் கத்திக்கொண்டே மையத்தில் பறைக்கு முன்னர்  ஆடிக்கொண்டிருக்கும் சுள்ளான்களில் ஐக்கியமானான்.

பசிகொண்ட மிருகம் ஒன்று கண் திறந்ததைப் போலிருந்தது. கட்டியிருந்த ஆட்டுக்குட்டியை யாரோ இழுத்துக்கொண்டு வந்தார்கள். சின்னஞ்சிறிய குட்டிகள். குட்டிகளில் ஒன்று “மேமேய்.” என்று தீன சுவரத்தில் இழுத்தது. மருலாளி தடுமாறி எழுந்து நின்றார். காலுக்கு கீழே கிடந்த வெட்டருவாக்களை வரிசையாக அமர்ந்து ஒரு ஏழெட்டு பேர் இருபக்கமும் பிடித்து அழுத்தினர். பாண்டியண்ணன் ஆட்டுக்குட்டிகளின் முகத்தில் மஞ்சள் நீரை தெளித்தபோது ‘மேய்ய்’ என இரண்டு குட்டிகளுமே மஞ்சள் நீர் கண்ணில் பட்ட எரிச்சலில் தலையை உலுப்பின. தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி, அவைகளில் ஒரு ஆட்டுக் குட்டியை மட்டும் தூக்கி கழுத்தில் போட்டுக்கொண்டு வெட்டருவாக்கள் மீதேறி முன்னும் பின்னுமாக ஆடத் தொடங்கினார் மருலாளி.

கருப்பன் சந்நிதியில் கொளுத்திய சாம்பிராணிப் புகை காற்றில் மந்தமாக கலந்து வந்தது. கிழவர் ஆட்டுக்குட்டியை கழுத்தில் போட்டுக்கொண்டு அதன் கால்களை இறுகப் பற்றிக்கொண்டு கால் மாறி கால் மாறி அருவாள்கள் மீது வெறியாட்டம் போட்டார். ஒரு துளி ரத்தம் வரவில்லை.. சபரிக்கு கால்கள் நடுங்கின. ஆனால் வீட்டுக்குப் போகவும் மனமில்லை. நின்ற இடத்தில் அப்படியே நின்றுக் கொண்டிருந்தான். சடாரென்று ஒரு திருப்பில் கழுத்திலிருந்த ஆட்டுக்குட்டியை அப்படியே வாயருகே கொண்டு வந்து, தாளம் அதன் உச்ச கதியை எட்டியபோது, ஆட்டின் குரல்வளையில் ஒரே கடி. குருதி பீறிட்டு வழிந்தது. அப்படியே அழுத்தி உறிஞ்சினார். குலவையொலி விண்ணைப் பிளந்தது. குட்டியின் கால்கள் மட்டும் கொஞ்ச நேரம் அந்தரத்தில் காற்றை உதைத்துக் கொண்டிருந்தன. கிழவரின் நரை முடியில் எல்லாம் குங்கும சிவப்பாக ரத்தம் திட்டு திட்டாக படிந்திருந்தது. பாண்டியண்ணன் அப்படியே அந்த குட்டியை வாங்கி கழுத்தறுத்து கொட்டிக்கொண்டிருந்த குருதியை உலையில் கொதிக்கின்ற அரிசி கலயத்தில் ஊற்றினான். கொட கொடவென்று ரத்தம் கொட்டி வடிந்தது.  மருலாளி ஆட்டத்தை நிறுத்தவில்லை. ஆனால் வேகம் குறைந்தது. வெட்டருவாக்களை விட்டு குதித்து இறங்கினார். ரத்தச் சிவப்பு கண்களுடன் வெறித்துப் பார்த்தபடி ஆடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரிடமிருந்து எந்த கூச்சலும் எழவில்லை. மிகவும் பரிச்சயமான நதியில் நிதமும் நீந்திக் கொண்டிருப்பவனைப் போல் ஏதோ ஒரு லாகவம். கூடியிருந்த பெண்கள் எல்லாம் அவரை வணங்கிவிட்டு அங்கிருந்து மெல்ல கலைந்து செல்ல தொடங்கினர். பாண்டியண்ணன் கரண்டியை வைத்து சோற்றைக் கிண்டிக் கொண்டிருந்தார்.

சுடலை களைத்துப் போய் வந்தான். “டே வாடா போவோம்..”

“முடிஞ்சிருச்சா?” ஒருமாதிரி நிதானத்துடன் சபரி கேட்டான்.

“இனியொன்னும் இருக்கு, ஆனா பெண்டுக புள்ளைங்க பாக்கக் கூடாது.. அப்பா சொல்லுவாரு.. அதான் கிளம்பி நிக்குறாரு.. எல்லாரும் மாரியம்மன் திடல்ல நாடகம் பாக்க போறோம்”. திடலின் கோடியில் சைக்கிளில் சுடலையின் தங்கையை முன்கூடையில் அமர்த்திவிட்டு சுடலையின் அம்மாவுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

“அதையும் பாத்துட்டு போவோம் டா..”

“வேணாம் சாமி..சொன்னா கேளு.. நீ தொடநடுங்கி இல்லைன்னு ஏத்துக்குறேன்..”

“சரி நீ வேணா போ.. நா பாத்துட்டு தான் போவப் போறேன்” என்றான் சபரி உறுதியுடன். சுடலை அவனையே முறைத்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

சுடலையின் அப்பா வண்டியை தள்ளிக்கொண்டே வந்தார். “அய்யாவு.. நீங்க வைத்தியர் வீட்டு பேரனில்ல.. இந்நேரத்துல இங்கென வந்தது அப்பத்தாவுக்கு தெரியுமா? உங்க சனங்க முற கடைசி நாள் தான…. இங்க எல்லாம் இப்ப நீங்க நிக்கக் கூடாது.. கிளம்புங்க அய்யாவு… சுடலை அய்யாவுவ கொண்டு போய் வீட்டுல விட்டுட்டு ஒழுங்கா பத்து நிமிஷத்துல திடலுக்கு வந்து சேரு.. இங்க நிக்கப்பிடாது” என்று சொல்லிவிட்டு சைக்கிளில் சுடலையின் அம்மா மற்றும் தங்கையுடன் கிளம்பிச் சென்றார்.

கூட்டம் கலைந்தது. பெண்களும் குழந்தைகளும் மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பாக வந்த ஆண்களும் அவர்களுடன் சென்றுவிட்டார்கள். சொற்ப எண்ணிக்கையிலான வயசாளிகள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அவர்களும் ஆங்காங்கு அப்படியே பழங்கதை பேசி உறங்கிப் போவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.

“பாத்துட்டு தான் போகணும்..வா” சபரி பிடிவாதம் பிடித்தான்.

“டே வேணாம்டா ரெண்டு திருழாக்கு முன்ன சோடாக்கடை வீரமுத்து அண்ணே வீட்டுக்கு விருந்துக்கு வந்த பய இப்படிதான் திருட்டுத்தனமா பாத்தானாம்.. பேயரஞ்ச மாறி திரியிரானாம்.. ஆத்தா கோவத்துல அடிச்சிபுட்டா.. இது ஆத்தா சோறு திங்குற நேரம்.. வருஷத்துல ஒருநாள் தான் அவ திம்பா….”

சபரி சுடலையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போனான்.

“சரிடா நான் நின்னு தொலையுறேன் ஆனா பாக்க மாட்டேன். நீ பாரு.”

பாண்டியண்ணனும் இன்னும் இருவரும் சூடான சோற்றுக் கலையத்தை சாக்கில் பிடித்து வேப்ப மரத்துக்கு பின்புறம், திடலின் தெற்கு மூலைக்கு கொண்டு சென்றனர். சபரியும் சுடலையும் திடலை சுற்றிக்கொண்டு ஊரணியோரம் சென்று திடலின் மறுகோடியில் இருக்கும் அழிஞ்சி மரத்துக்கு பின்புறம் பதுங்கிக் கொண்டனர். விழாக்கால விளக்குகளின் வெளிச்சத்தில் அங்கிருந்து ஒரு இருபதடி தூரத்தில் நடப்பதை துல்லியமாக பார்க்க முடியும்.

ஐந்தாறு பேர் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். தெற்கு மூலையில் அந்தக் கற்கள் இருந்ததை இதுவரை சபரி கவனித்ததே இல்லை. நடுவாக ஒரு பெரிய கல். இருபுறமும் சிறு கற்கள். கரிய வழுவழுப்பான கற்கள். கருமை என்றாலும் அந்த இருளின் விளக்கொளியில் அதிலொரு லேசான கரும்பச்சை சாயலிருந்ததாக சபரியின் பார்வைக்கு பட்டது. நடுக்கல்லிலும் இடது பக்கம் உள்ள கற்களிலும் கொஞ்சம் மஞ்சள் பூசியிருந்தது. எல்லா கற்களிலுமே சந்தனமும் குங்குமமும் வைக்கப்பட்டிருந்தன. சுடலை எத்தனை கற்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தான். நீள்வட்ட வடிவிலான நடுக் கல்லில் மட்டும் மேல் பகுதியில் ஒரு சிறிய பிளவு தென்பட்டது. நீள்வட்டத்தின் வளைவில் எவரோ ஒருவர் நுள்ளி எடுத்ததுப் போலிருந்தது.

பாண்டியண்ணன் செவ்வரளி பூக்களை மணியடித்துக் கொண்டே கற்களின் மீது தூவி, சதுர்காய் உடைத்து அதில் குங்குமத்தை தூவி வைத்தார். அதன் பின்னர் அவர் பெரிய தாம்பாளத்தில், குழைந்த சோற்றை கரண்டியில் கிண்டி எடுத்துப் போட்டார். அதுவரை எதுவுமே பேசியிராமல் இறுகியிருந்த மருலாளி ஒருவிதமான ஆவேசம் வந்தவராக நெஞ்சில் அடித்து கூவினார்..”ஆத்தா ..பசியாறு….ஆத்தா……” அவர் குரல் உடைந்து அழுவது போலிருந்தது. குருதிக் கலந்த சோறு சட்டென்று பார்க்க கவுனி அரிசி பாயாசம் போலிருந்தது.. அதிலிருந்து பாசமும் துறுவும் கலந்த உக்கிர நெடி கிளம்பியது.. சபரிக்கு குடலைப் பிரட்டிக்கொண்டு வந்தது. சுடலை நடுங்கிக் கொண்டிருந்தான்.

மருலாளி சோற்றை அள்ளி உதிரியாக்கி வானத்தை நோக்கி வீசி எறிந்தார். கண்ணுக்கு புலப்படாத பெரும் கரிய இருள் படலமாக ஒரு நாக்கு அப்படியே வாரிச் சுருட்டிகொண்டுவிட்டது போலிருந்தது. மணியோசை அன்றி வேறெந்த அரவமும் அங்கு கேட்கவில்லை. “ஆத்தா .. பசியாறு… ஆத்தா.. எல்லாரையும் சுகமா… வைய்யி.. ஆத்தா.. என்ன கூப்பிட்டுக்க ஆத்தா .” ஆவேசமாகக் கூவியபடி இரு கரங்களாலும் சோற்றை அள்ளி வானத்தில் வீசினார்.

ஆகாயமும் நட்சத்திரமும் அசையவில்லை. மரத்து இலைகள் கூட அசங்கவில்லை. முழுவதுமாக துடைத்து எடுத்துக் கொண்டது போலிருந்தது. சபரியும் சுடலையும் நடுங்கிப் போனார்கள். சபரிக்கு வயிற்றைப் பிரட்டி எடுத்தது. தலையெல்லாம் கனத்து வலித்தது. தலைக்கும் புடறிக்கும் ஏதோ ஒன்று குறுக்கையும் நெடுக்கையும் ஓடியது போலிருந்தது. இனி ஒரு கனம் கூட நிற்க முடியாது. இருவரும் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார்கள். அந்த சலசலப்புக்களை அங்கு நின்ற எவரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.

சபரிக்கு மருலாளியின் கண்கள் அவன் முதுகில் நிலைத்திருந்ததாக தோன்றியது.

(தொடரும்)

பகுதி – 1
பகுதி – 2

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.