திரும்பப்பெறுதல்

Frigyes Karinthy

ஃப்ரிக்ஸ் கேரிந்தி (Frigyes Karinthy) ஹங்கேரிய எழுத்தாளர். ஜோனதான் ஸ்விஃப்ட், ஹெய்ன்ரிச் ஹெய்ன் மற்றும் மார்க் ட்வைன் போன்றோரின் எழுத்துகளை நவீன ஹங்கேரிக்கு மொழிமாற்றம் செய்ததன் மூலமாக அங்கதத்தை ஹங்கேரிக்கு கொண்டு வந்தவர். எல்லா தரப்பு வாசகர்களுக்குமான எழுத்தை கொண்டவர்.

Refund (கல்விக்கட்டணத்தை திருப்புதல்) அங்கத ஓரங்க நாடகம். பழைய மாணவனொருவன் தான் பயின்ற பள்ளிக்கூடத்திற்கு திரும்பி வந்து நிகழ்த்தும் கூத்துகளும், அதற்கு பதிலடியாக ஆசிரியர்களின் திட்டங்களுமாக, முடிவில் எவர் வென்றார் என்று ஆவலுடன் எதிர்நோக்க வைக்கும் நாடகம்.

(தமிழாக்கம்: ஸ்ரீதர் நாராயணன்)

ஒரு மேல்நிலைப் பள்ளியில், முதல்வர் (Principal) தன்னுடைய அலுவலகத்தில் தட்டையான மேஜை முன் அமர்ந்திருக்கிறார். ஒரு பணியாள் நுழைகிறார்.

முத:- என்ன விஷயம்?

பணி:- வெளியே ஓராள் ஐயா. உங்களைப் பார்க்க வேண்டுமாம்.

முத [பின்னால் சாய்ந்ந்துகொண்டு நெட்டி முறித்தவாறு]:- நான் அலுவலக நேரத்தில் மட்டுமே பெற்றோர்களை பார்ப்பேன். அந்த குறிப்பிட்ட அலுவல் நேரம் அறிவிப்பு பலகையில் போட்டிருக்கிறது. அவரிடம் அதை சொல்லு.

பணி:- ஆமாம் ஐயா. ஆமாம் ஐயா. ஆனால் இவர் பெற்றோர் இல்லை ஐயா.

முத:- மாணவரா?

பணி:- அப்படியில்லை என்று நினைக்கிறேன். அவருக்கு தாடியெல்லாம் இருக்கிறது.

முத [அசௌகரியமாக]:- பெற்றோரும் இல்லை. மாணவரும் இல்லை. அப்படியானால் யார்தான் அவர்?

பணி:- ‘நான் வாஸர்கோப்ஃப்’ என்று மட்டும் சொன்னால் போதும் என்று சொன்னார்.

முத [மேலும் அசௌகரியமாக]:- பார்ப்பதற்கு எப்படி தெரிகிறார்? முட்டாளாகவா? அறிவாளியாகவா?

பணி:- நல்ல அறிவாளி என்றே சொல்வேன் ஐயா.

முத [நம்பிக்கையடைந்து]:- நல்லது! அப்படியானால் அவர் பள்ளி ஆய்வாளரில்லை. உள்ளே அனுப்பி வை.

பணி:- சரி ஐயா.

[அவர் போய்விடுகிறார். கணநேரத்தில் கதவு மீண்டும் திறந்து நாற்பது வயதுக்கு குறைவாக, அசட்டையான ஆடையணிந்த ஒரு தாடிக்காரன் உள்ளே வருகிறான். துடிப்புடனும் தீர்மானத்துடனும் இருக்கிறான்.]

வாஸ:- எப்படி இருக்கிறீர்கள்? [நின்றபடிக்கு இருக்கிறான்]

முத [எழுகிறார்]:- உங்களுக்கு நானென்ன செய்ய முடியும்?

வாஸ:- நான் வாஸர்கோப்ஃப். [இடைவெளிவிட்டு] என்னை நினைவில்லையா?

முத [தலையை ஆட்டியபடி]:- இல்லை.

வாஸ:- சாத்தியம்தான். நான் மாறிவிட்டேன். அதனாலென்ன…! இங்கே வருவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்பதை உங்கள் வகுப்பு ஆவணங்கள் காட்டும்,

முத:- வகுப்பு ஆவணங்கள்? எப்படி?

வாஸ்:- முதல்வர் அவர்களே, கொஞ்சம் கவனமாக…. நான் வாஸர்கோப்

முத:- சந்தேகமேயில்லை, சந்தேகமேயில்லை – ஆனால் அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?

வாஸ:- என் பெயரைக் கூட நினைவில் இல்லை என்று சொல்கிறீர்களா? [சற்று சிந்திக்கிறான்] இல்லை, உங்களுக்கு நினைவிருக்காது என்றே எண்ணுகிறேன். என்னை மறப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி கூட இருந்திருக்கலாம். முதல்வர் அவர்களே, பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நான் இந்த பள்ளியின் மாணவனாக இருந்தேன்.

முத [அதிக ஆர்வமில்லாமல்]:- அப்படியா? சரி, இப்பொழுது என்ன வேண்டும்? சான்றிதழ் ஏதாவது?

வாஸ:- நீங்கள் எனக்கு அளித்த நீங்கு சான்றிதழை திரும்ப கொண்டுவந்திருக்கிறேன் என்பதால் இன்னொரு சான்றிதழ் இல்லாமல் நான் சமாளிக்க முடியும் எனக் கருதுகிறேன். இல்லை. அதற்காக நான் இங்கு வரவில்லை.

முத:– சரி?

வாஸ [தொண்டையை தீர்க்கமாக கனைத்துக்கொண்டு]:- உங்கள் பள்ளியின் முன்னாள் மானவனாக, பதினெட்டு வருடங்கள் முன்னர் என்னுடைய கல்விக்காக நான் செலுத்திய கட்டணத்தை நீங்கள் திருப்பித்தர வேண்டும்.

முத [சந்தேகமாக]:- உனது கல்விக்கட்டணத்தை நான் திருப்பித்தர வேண்டுமா?

வாஸ:- அதே. கல்விக் கட்டணம்தான். என்னைப் பொறுத்தவரை, நான் ஒரு பணக்காரனாக இருந்திருந்தால், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியிருந்திருப்பேன்.

முத:- சரியாக புரியவைல்லை

வாஸ:- சட்! எனக்கு என்னுடைய கல்விக்கட்டணம் திரும்ப வேண்டும். இது புரிகிறதா?

முத:- ஏன் அதை திருப்பி கேட்கிறாய்?

வாஸ:- ஏனென்றால், என் பணத்துக்கு நிகரான பயனை நான் பெறவில்லை என்பதால். நான் கல்வி கற்றதாக இந்த சான்றிதழ் சொல்கிறது. ஆனால், நான் கற்கவில்லை. நான் எதையுமே கற்கவில்லை என்பதால் எனது பணத்தை திரும்பக் கேட்கிறேன்.

முத:- ஆனால், இங்கு பாருங்கள், இங்கு. பாருங்கள்! எனக்கு புரியவேயில்லை. இது போல நான் எதையுமே கேட்டதில்லை. என்ன ஒரு அபத்தமான யோசனை.

வாஸ:- அபத்தமா? இதொரு நல்ல யோசனை. இங்கு நான் பெற்ற கல்வியின் பயனாக, ஒரு திறனுமில்லாத கழுதையாக ஆகிவிட்ட என் தலையில் இப்படியொரு நல்ல யோசனை தோன்றவில்லை. என்னுடைய பழைய பள்ளித்தோழன் லியாடெரர் இந்த யோசனையை அரைமணி நேரம் முன்பு எனக்கு சொன்னான்.

முத:- சொன்னானா?

வாஸ [பலமாக தலையாட்டியபடியே]:- அது போலத்தான். என்னுடைய கடைசி வேலையை இழந்து, முழுவதும் திவாலான நிலையில், எப்படி கொஞ்சமாவது பணம் சம்பாதிப்பது என்று யோசித்தவாறே, நான் இப்படி தெருவோரமாக நடந்து போய்க்கொண்டிருந்தேன், லியாடெரரை சந்தித்தேன். ‘எப்படி போகிறது லியாடெரர்’ எனக் கேட்டேன். அவன் ‘நன்றாக’ என்று சொன்னான். ‘அவசரமாக தரகரிடம் போய், அந்நிய செலாவணியில் நான் திட்டமிட்டு ஈட்டிய பணத்தை பெற வேண்டும்’ என்றான். ‘அந்நிய செலாவணி என்றால் என்ன?’ என்றேன். அவன் சொல்கிறான் ‘உனக்கு சொல்ல எனக்கு நேரம் இல்லை. ஆனால், தினசரிப்படி, ஹங்கேரியன் பணம் எழுபது புள்ளிகள் கீழிறங்கியதால் நான் இலாபம் பார்த்துவிட்டேன். உனக்குப் புரியவில்லையா?’ ‘சரிதான். எனக்குப் புரியவில்லை’ என்று நான் சொன்னேன். ‘பணத்தின் மதிப்பு குறைந்தால் எப்படி பணம் ஈட்ட முடியும்?’ உடன் அவன் சொல்கிறான் ‘வாஸர்கோப், உனக்கு அது தெரியாவிட்டால், உனக்கு ஒரு எழவும் தெரியவில்லை. பள்ளிக்கூடத்திற்குப் போய் உன்னுடைய கல்விக் கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்.’ என்னை அங்கேயே விட்டுவிட்டு அவன் விரைவாக அகன்றுவிட்டான். நான் எனக்கே சொல்லிக் கொண்டேன் “நான் ஏன் அதை செய்யக்கூடாது? இப்பொது அதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் அவன் சொன்னது சரி. அதனால், எவ்வளவு வேகமாக வரமுடியுமோ அவ்வளவு வேகமாக இங்கே வந்தேன். என் கல்விக்கட்டணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள் என்றால், நான் மிகவும் இணக்கமாக இருப்பேன், ஏனென்றால் அது மிக அதிகமான பணத்தை கொடுக்கும் மற்றும் நான் அதனால் எந்த பயனும் அடையவில்லை.

முத [வாயடைத்துபோய்]:- அப்படியா…. ஆனால் இப்பொழுது…. இங்கே பாருங்கள், நாங்கள் உங்களுடையது போன்ற கோரிக்கையை கேட்டதேயில்லை. லியாடெரர் உங்களிடம் சொன்னது –

வாஸ:- லியாட்ரெர் ஒரு நல்ல நண்பன். அவன் சொன்னான், நானும் என் பணத்தை திரும்பப் பெற்றதும் அவனுக்கு ஒரு பரிசு வாங்கப்போகிறேன்.

முத [எழுந்தபடிக்கு]:- நீ… நீங்கள் உள்ளபடிக்கு தீவிரமாக சொல்கிறாயா?

வாஸ:- இதை விட தீவிரமாக என் வாழ்க்கையிலே நான் இருந்ததேயில்லை. என்னை சரியானபடிக்கு உபசரிக்காவிட்டால், நான் நேரே கல்வி அமைச்சகத்துக்கு போய் உங்களைப் பற்றி புகார் செய்வேன். நீங்கள் என் பணத்தை எடுத்துக் கொண்டு ஒன்றுமே கற்றுக் கொடுக்கவில்லை. இப்பொழுது நான் ஒன்றுக்கும் உதவாதவனாக, பள்ளியில் கற்றிருக்க வேண்டிய எதையுமே செய்யத் தெரியாதவனாக இருக்கிறேன்.

முத:- நீ ஒரு கிறுக்கு! [இணக்கமான தொனியில் தொடர்வதற்காக, நிறுத்திவிட்டு] என் அருமை ஐயா……ர்ர்ர்…. வாஸர்கோப், தயவுசெய்து வெளியே போய்விடுங்கள். நீங்கள் போனதும் இது பற்றி யோசிக்கிறேன்.

வாஸ [அமர்ந்தவாறே]:- இல்லை. இல்லை! என்னை அவ்வளவு சுலபமாக தொலைத்துவிட முடியாது. எல்லாவற்றையும் தீர்த்த பிறகுதான் நான் செல்வேன். நான் ஏதாவது செய்ய முடியும் என்று, பண பரிவர்த்தனை பற்றிய அறிவுரை இங்கேதான் தரப்பட்டது; ஆனால் என்னஅல் எதுவும் செய்ய முடியவில்ல ஏனென்றால் நான் மோசமாக கற்பிக்கப் பட்டேன், நான் என் பணத்தை திரும்பப் பெற்றாக வேண்டும் என்று எவருக்கும் தெரியும்.

முத [நேரம் கடத்துவதற்காக]:- உங்களால் எதையும் செய்ய முடியவில்லை என ஏன் நினைக்கிறீர்கள்?

வாஸ:- எல்லொரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஒரு வேலை கிடைத்தால் என்னால் அதை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கொரு பரீட்சை வைத்து நான் என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள். ஆசிரியர்களை கூப்பிடுங்கள், அவர்கள் சொல்லட்டும்.

முத:- என்ன ஒரு கடுந்துன்பம்! எவ்வளவு துரதிர்ஷ்டம்! நீங்கள் உண்மையில் இன்னொரு பரீட்சை எழுத விரும்புகிறீர்களா?

வாஸ:- ஆமாம். அதற்கு எனக்கு உரிமை உண்டு.

முத:- என்ன ஒரு அசாதாரண வழக்கு! [தலையை சொறிந்து கொள்கிறார்] இது போன்ற ஒன்றை நான் முன்னர் கேள்விப்பட்டதேயில்லை. ஆங்… நான் ஆசிரியர் குழுவோடு கலந்தலோசிக்க வேண்டும்…. ஆங்… கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்… ஆங் – எனக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க, நீங்கள் காத்திருப்பு அறையில் காத்திருக்கிறீர்களா?

வாஸ [எழுந்துகொள்கிறான்]:- சரி. வேகமாக ஆகட்டும். எனக்கு விரயம் செய்ய நேரமில்லை. [சாவகாசமாக உலாத்திக்கொண்டு வெளியே செல்கிறான்]

முத [மணியை அடிக்க, பணியாள் உள்ளே நுழைகிறான்]:- ஆசிரியர்களை இங்கே உடனடியாக வரச்சொல். மிகவும் அசாதாரணதொரு கலந்துரையாடல்!

பணி: சரி ஐயா! [வெளியில் செல்கிறார்]

முத [பேச்சை ஒத்திகை பார்க்கிறார்]:- கனவான்களே, வழக்கத்திற்கு மாறானதொரு நிகழ்வின் காரணமாக உங்களை இங்கே வரச் சொன்னேன். இதுவரை நிகழ்ந்திராதது. என்னுடைய முப்பது வருட ஆசிரியர் பள்ளி ஆசிரியர் பணியில் இதுபோன்ற ஒன்றைக் கேள்விப்பட்டதில்லை. இனியும் நான் வாழும்காலம்வரை, இது போன்ற ஒன்றைக் கேட்கப்போவதுமில்லை. இல்லை! கடவுள் தடுக்கட்டும்! [ஆசிரியர்கள் எல்லோரும் நுழைகிறார்கள். ஒவ்வொருவரும் மிகைபடுத்தப்பட்ட விசித்திர பண்புகளின் உருவங்களாக இருக்கிறார்கள்] கனவான்களே, வழக்கத்திற்கு மாறானதொரு நிகழ்வின் காரணமாக உங்களை இங்கே வரச் சொன்னேன். அமருங்கள், கனவான்களே. உரையாடலை தொடங்கி வைக்கிறேன். இதுவரை நிகழ்ந்திராதது, நம்பமுடியாதது மற்றும் அருமையானது. ஒரு முன்னாள் மாணவன் என்னைப் பார்க்க வந்திருக்கிறான் – அது – வாஸர்கோப்ஃப் என்றொருவன். இதுவரை என் அனுபவத்தில் சந்தித்திராததொரு கேள்வியை அவன் எழுப்பினான். [வெடிக்கிறார்] இதுபோன்ற ஒன்றை நான் எப்போதும் கேட்டதில்லை.

கணித ஆசிரியர்:- அதைப்பற்றி எங்களிடம் சொல்லுங்கள்.

முத:- அவனுக்கு – அவனுக்கு அவனுடைய கல்விக் கட்டணம் திருப்பி வேண்டுமாம்.

கணி ஆசி:- ஏன்?

முத:- ஏனென்றால் அவன் வேலையை இழந்துவிட்டான். ஏனென்றால் அவன் திவாலாகி விட்டான். ஏனென்றால் அவனொரு கழுதை. இந்த இணையற்ற நிகழ்வைப் பற்றிய உங்கள் கருத்தை சொன்னால் மகிழ்ச்சி அடைவேன்.

இயற்பியல் ஆசிரியர்:- இது இயற்கை. ஆற்றல் தக்கவைக்கும் விதியின்படி எந்தவொரு குறிப்பிட்ட மாணவனும், ஒரு குறிப்பிட்ட காலத்தில், வேறொரு காலத்தில், ஓர் ஆசிரியர், அதே நேரவரையறையில் அவன் தலையில் திணித்த அறிவை இழப்பான்.

வரலாறு ஆசியர்:- நாகரிகத்தின் வரலாற்றிலேயே இப்படி ஏதும் கிடையாது. போர்பானியர்கள் எதுவுமே கற்றதுமில்லை, மறந்ததும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில்.

இய ஆசி:- ஆற்றல் தக்கவைக்கும் விதி — [இருவரும் வாதிடுகிறார்கள்]

கணி ஆசி:- கேள்வி என்னவென்றால், அவனுக்கு அந்தப் பணம் தனி வட்டியுடன் வேண்டுமா இல்லை கூட்டுவட்டியுடனா? பிந்தைய விஷயம் என்றால்….

புவியியல் ஆசிரியர்:- என்னவோ, எங்கிருக்கிறான் இந்த ஆள்?

முத:- அவன் வெளியில் காத்திருக்கிறான். அவனுக்கு மீண்டும் பரீட்சிக்கப் படவேண்டுமாம். எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று சொல்கிறான். மீள்-தேர்வு அதை நிரூபிக்கும் என்கிறான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கல் என்றறிய விரும்புகிறேன்.

கணி ஆசி [சிரிக்கிறார்]:- மீள்-தேர்வு? கனவான்களே, வாஸர்கோப்ஃபை மீண்டும் பரீட்சிப்பதால் நாம் எதையும் இழக்கப்போவதில்லை என்பது எனது திடமான நம்பிக்கை. அவன் தோற்றானென்றால் அவன் நம்மை அசிங்கமானதொரு நிலையில் வைத்துவிடுவான்; ஆதலால், அவன் தோற்கக்கூடாது. அவன் வாழ்க்கையின் பள்ளியில் மேம்பட்ட கல்வியை கற்றிருக்கிறான் என்று சொல்வேன். நாம் நமது கேள்விகளை மிகக் கடினமாக உருவாக்க வேண்டாம். சம்மதமா கனவான்களே? நாம் ஒரு சூழ்ச்சிக்கார தந்திரக்கார பேர்வழியுடன் சம்பந்தபட்டிருக்கிறோம். நம்மை எப்படியாவது தோற்கடித்து, வஞ்கத்தாலோ, தூண்டிலிட்டோ அவன் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள முயல்வான். அவனை முடிவான முற்றுகையிட வேண்டும். செக்மேட்.

இய ஆசி:- எப்படி?

கணி ஆசி:- ஒன்றாக சேர்ந்துதான். நமது நோக்கம் அவன் தோல்வியடையாமல் தடுப்பதுதான். ஏனென்றால், அவன் தோற்றால் ஜெயித்துவிடுவான். அதைத்தான் நாம் தடுக்க வேண்டும். அவன் தோற்றால், நாளை இன்னும் இரண்டு மாணவர்கள் வருவார்கள். அதற்கடுத்த நாள் டஜன் கணக்கில் வருவார்கள். நாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துகொண்டு இந்த வேதனையான நிகழ்வு ஆசிரியப்பணியின் இழிவாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வோம். அவனிடம் கேள்விகள் கேட்போம். அவன் என்ன விடையளித்தாலும் அது சரியானதுதான் என்று முன்கூட்டியே ஒத்துக் கொள்வோம்.

இய ஆசி:- யார் தீர்மானிப்பார்?

கணி ஆசி:- நீங்கள் அனுமதித்தால் நானே செய்கிறேன். முதல்வர் அவர்களே, தேர்வை நடத்துவோம். நம்முடைய முன்னாள் மாணவனுக்கு நாமும் கூர்மதியாளர்தான் எனக் காட்டுவோம்.

முத [அசௌகரியமாக மணியடிக்கிறார்]:- ஏதும் தவறாக போய்விட வாய்ப்பிருக்கிறதா? செய்திதாள்களில் வந்துவிட்டால்….

கணி ஆசி:- அதை எங்களிடம் விட்டுவிடுங்கள்.

முத [மீண்டும் தோன்றிய பணியாளரிடம்]:- மிஸ்டர் வாஸர்கோப்ஃபை அனுப்பு.

[அனுமதிக்கு காத்திருக்காமலே அவன் உள்ளே நுழைகிறான் அவன் மிகவும் அராஜகமாக இருக்கிறான். தொப்பி ஒரு காதின் மேல் இருக்கிறது; கைகளை பைக்குள் விட்டுக்கொண்டு துடுக்காக பார்க்கிறான்]

ஆசிரியர்கள் [மனதார வாழ்த்தியபடி]:- எப்படி இருக்கிறீர்கள்?

வாஸ: யாரய்யா நீங்கள் எல்லாம்? உட்காருங்கள் சோம்பேறிகளே.

[தூக்கியெறிய காத்திருப்பவனாக இளிக்கிறான்]

முத:- என்ன தைரியம் இருந்தால்….

கணி ஆசி [குறுக்கிட்டபடியே]:- தயவுசெய்து [மற்ற ஆசிரியர்களை நோக்கி] அமருங்கள் சோம்பேறிகளே! [பெரும் திகைப்போடு அமர்கிறார்கள். வாஸர்கோப்ஃப்வை நோக்கி திரும்புகிறார்] அன்புக்குரியவரே, இப்போது நீங்கள் எங்களுக்கு அளித்த முகமன், இந்த நிறுவனத்தில் இருக்கும் எல்லோரிடத்திலும் நாங்கள் பதிய செய்யும் சமூக இங்கிதத்தை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதைக் காட்டுகிறது. மெடீவல் மானுடவியலாளர் காலத்து போல, ஆசிரியரும் மாணவரும் இங்கே கச்சிதமான சமநிலையிலிருக்கிறார்கள். மிகவும் சாமர்த்தியமான முறையில் எங்கள் வழக்கங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டதைக் காட்டிவிட்டீர்கள். நன்றாகச் சொன்னீர்கள். மீள்-தேர்வுக்கு ஆஜராகியிருக்கும் மாணவன் வாஸர்கோப்ஃப் இங்கிதம் தொடர்பாக பரீட்சிக்கப் படவேண்டியதில்லை என்று என் சகாக்களும் ஒத்துக் கொள்வார்கள் என நம்புகிறேன். அந்தப் பரீட்சையை தள்ளுபடி செய்து சம்பந்தப்பட்ட பாடத்தில் ‘அபாரம்’ என மதிப்பிடுகிறேன்.

முத [உடனடியாக புரிந்துகொண்டு]:- மிகச் சரி! மிகச் சரி! [எழுதுகிறார்] ‘இங்கிதம்: அபாரம்’

ஆசிரியகள்:- சம்மதம்! சம்மதம்!

வாஸ [குழம்பியவன், பின்னர் தோளைக் குலுக்கிக் கொள்கிறான்]:- நீங்கள் சொன்னால் சரிதான். என்ன எழவோ…! உங்களைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. நான் கண்ணியமானவனாக இருப்பதால் பரீட்சையில் தேர்ந்துவிட முடியாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, நான் அவ்வளவு சீக்கிரம் தோற்கிறேன். பணத்தை திருப்பிக் கொடுங்கள். மற்ற எல்லாம் முட்டாள்தனம்தான்.

முத [போலி புகழ்ச்சியாக]:- ஆசிரியர்கள் சார்பில் நான் நீங்கள் சொல்வதோடு ஒத்துப் போகிறேன். உங்கள் தனிப்பட்ட பண்புகள் எங்களை எவ்வகையிலும் பாதிக்காது. எங்கள் கேள்விகளுக்கான உங்கள் விடைகளை மட்டும் கொண்டு உங்களை பரீட்சிப்போம். அதைக் குறித்துக் கொள்ளுங்கள்.

வாஸ:- சரி. ஆகட்டும்! கேள்விகளைக் கேட்கலாம். எனக்கு வேண்டியது பணம். [மேலங்கியை நீக்கிவிட்டு, சட்டைக் கைகளை மடித்துக் கொள்கிறான்] தொடங்குங்கள்! ஆசிரியர்களே, அதாவது காது நீண்ட கழுதைகளே, கேள்விகளை கேளுங்கள். என்னிடமிருந்து ஒரு சரியான பதிலாவது வருகிறதா எனப் பார்க்கிறேன்.

முத:- தேர்வு தொடங்குகிறது. வரலாறு. மிஸ்டர் ஷ்வேஃப்ளர்?

வர ஆசி [மேஜையின் நடுப்பகுதி நோக்கி நடந்தவாறே அதை நோக்கியிருக்கும் நாற்காலியை சுட்டிக்காட்டி] :-மிஸ்டர் வாஸர்கோப்ர்ஃப் அமரவில்லையா?

வாஸ: [கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு அவரை துடுக்காக பார்த்துக்கொண்டே] நாற்காலி பாழாய்ப்போச்சு! நான் நிற்கிறேன்.

[வரலாறு ஆசிரியர் நிலைகுலைந்து போய் அதை வெளிக்காட்டவும் செய்கிறார். ஆனால் கணித ஆசிரியர் அந்த அத்துமீறலை தாவிப் பிடித்துக்கொள்கிறார்]

கணி ஆசி:- பிரமாதம்! அபாரம்! மிஸ்டர் வாஸர்கோப்ஃப் நமக்கு இரண்டு விஷயங்களை புரியவைக்கிறார். அவர் முறையான எழுத்துத் தேர்வை விடுத்து, வாய்வழியாகவே விடையளிப்பார். நல்லது! அவர் அமர மாட்டார்; அவர் நின்றுகொண்டிருப்பார். அதுவும் நல்லது. அவருடைய உடல்நிலை அபாரமாக இருக்கிறது என்பதால், உடல் பண்பாட்டில் அவருக்கு ‘அபாரம்’ என மதிப்பிட நானே முன்வந்து முடிவெடுக்கிறேன். அந்த பாடத்தை கற்பிக்கும் முதல்வரையும் அதற்கு ஒப்புக்கொள்ள கோருகிறேன்.

முத: மிகச் சரி. [எழுதுகிறார்] ‘உடல் பண்பாடு: அபாரம்’

ஆசிரியர்கள்:- சம்மதம்! சம்மதம்!

வாஸ [உற்சாகமாக]:- இல்லை! [அவன் அமர்கிறான். பிறகு இளிக்கிறான்] என்னை ஒருமுறை மாட்டிவிட்டீர்கள். இல்லையா? ஆனால் மீண்டும் செய்யமுடியாது. இப்போதிருந்து காதுகளை திறந்தே வைத்திருப்பேன்.

முத:- ‘விழிப்புணர்வு – மிக அருமை’

வர ஆசி:- விடாமுயற்சி: தனித்துவம்’

கணி ஆசி:- ‘தர்க்கம் – பிரமாதம்’

வாஸ:- கேள்விகளை ஆரம்பியுங்கள்.

கணி ஆசி:- [முதல்வரிடம்] இலட்சியம் – அளவிலடங்காது [முதல்வர் ஆமோதித்துவிட்டு எழுதிக்கொள்கிறார்]

வர ஆசி [தலையை சொறிந்தவாறு]:- இதோ. இதோ. ஒரு நிமிடத்தில். [பிற ஆசிரியர்கள் அவரை கவலையுடன் பார்க்கின்றனர்]

வாஸ: என்ன ஆயிற்று மிஸ்டர் ஷ்வேஃப்ளர்? நீங்கள் தயாராக வரவில்லையா?

வர ஆசி:- ஒரு கணத்தில்.

வாஸ: ஓ, ஒரு சுலபமான கேள்வியைக்கூட உங்களால் யோசிக்க முடியவில்லையா? நீங்கள் எப்போதும் மந்தபுத்திக்காரர்தான்.

வர ஆசி [யோசனை பிறக்கிறது. ஆரவாரத்துடன் கேட்கிறார்]:- தேர்வரே, இந்தக் கேள்விக்கு பதிலிறுங்கள். முப்பது வருடப் போர் எத்தனை காலத்திற்கு நடந்தது?

வாஸ:- முப்ப… [தன்னைத்தானே நிறுத்திக்கொண்டு], அதாவது, எனக்குத் தெரியாது.

வர ஆசி:- தயவுசெய்து கேள்விக்கு விடையளியுங்கள்! உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்! விடையளியுங்கள்!

[வாஸர்கோப்ஃப் புருவங்கள் ஒன்றுசேர யோசிக்கிறான். இயற்பியல் ஆசிரியர் அவனருகே நுனிக்கால்களில் நடந்துவந்து ‘முப்பது ஆண்டுகள்’ என உரக்க ரகசியம் சொல்கிறார். புவியியல் ஆசிரியர் அவனைப் பார்த்து கண்ணடித்தவாறே பத்துவிரல்களை மூன்றுமுறை மடக்கி மடக்கி நீட்டுகிறார்]

வாஸ:- முதல்வர் அவர்களே, இது தேர்வு நடத்தும் முறையல்ல. [இயற்பியல் ஆசிரியரை சுட்டிக்காட்டி] இந்த ஆள் என்னை ஏமாற்றுக்காரனாக ஆக்கப் பார்க்கிறார்.

முத:- இதை நான் தெளிவான முறையில் கவனிக்கிறேன். [இயற்பியல் ஆசிரியரிடம்] விலகிச் செல்லுங்கள்!

[இயற்பியல் ஆசிரியர் வெட்கி தன் நாற்காலிக்கு திரும்புகிறார்]

வாஸ [வெகுவான சிந்தனைக்குப்பின்னர்]:- முப்பது வருடப் போர் எவ்வளவு காலம் நடந்தது? அதுதானே கேள்வி?

வர ஆசி:- ஆம்! ஆம்!

வாஸ [இளித்தபடி]:- எனக்குத் தெரியும்! சரியாக ஏழு மீட்டர்கள்! [அவர்கள் அசைவற்றுப் போயினர். அவன் வெற்றிகரமாக பாக்கிறான்] ஹா ஹா! ஏழு மீட்டர்கள்! அவ்வளவு காலம் நடந்தது என்றெனக்குத் தெரியும். நான் தவறாகவதற்கு அதனால் தோற்றுப் போவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஏழு மீட்டர்கள்! ஹா, ஹா! ஏழு மீட்டர்கள் காலம்! ஏழு மீட்டர்கள்! தயவுசெய்து என்னுடைய கல்விக்கட்டணத்தை திருப்பிக் கொடுங்கள். [ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கின்றனர்; பொறுமையின் எல்லைக்கு வந்துவிட்டிருந்தனர்]

வர ஆசி [தெளிவாக]: ஏழு மீட்டர்கள்? சரி! உங்கள் விடை அபாரம்.

வாஸ [நம்பிக்கையற்றவனாக]: என்ன. என்ன சொன்னீர்கள்?

வர ஆசி [தைரியமாக எச்சிலை விழுங்கிக்கொண்டு, ஓரக்கண்ணால் முதல்வரைப் பார்த்துக்கொண்டு]:- உள்ளபடிக்கு இந்த விடை சரியானதுதான். தேர்வர் தன்னுடைய சிந்தனை முறை வெறும் மேலோட்டமானது மட்டுமல்ல எனக் காட்டுகிறார். நவீன ஆராய்ச்சிகளின்பால் இணக்கமாக பாடங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில்… அடிப்படையில்…

கணி ஆசி: ரிலேட்டிவிட்டி. சார்பியல். குவாண்டம் தேற்றம். ப்ளாங்க். ஐன்ஸ்டீன். எல்லாம் எளிமையானதுதான். [இயற்பியல் ஆசிரியரிடம்] இனியொரு சொல்லும் சொல்லாதீர்கள். நாங்கள் கச்சிதமாக புரிந்துகொண்டுவிட்டோம். நேரம் என்பது வெளி மற்றும் பருப்பொருள் போன்றது என்று ஐன்ஸ்டீன் நமக்கு போதித்திருக்கிறார். அது அணுக்களால் ஆனது, மற்றும் முழுமையான ஒருங்கிணந்த தொகுப்பாக ஆக்கி, மற்றவைகளைப் போல அளவிடவும் முடியலாம். அந்த நிறை தொகுதியை ஒரு அலகாக ஆக்கினால் வருடத்தை மீட்டரால் குறிப்பிட முடியும், அல்லது ஏழு வருடங்களை ஏழு மீட்டர்களாக. முப்பது வருடப் போர் ஏழு வருடங்கள்தான் நிகழ்ந்திருக்க முடியும் என்றும் நாம் நிலைநாட்டலாம். ஏனென்றால்…ஏனென்றால்….ஏனென்றால்…

வர ஆசி:- ஏனென்றால், உண்மையான போர் ஒரு நாளின் பாதிதான் நிகந்தது. – அப்படியென்றால், இருபத்திநான்கு மணிநேரத்தில் பன்னிரெண்டு மணிநேரம்தான் – உடன், முப்பது வருடங்கள் பதினைந்து வருடங்களாக குறைந்துவிடும். ஆனால், பதினைந்து ஆண்டுகளும் இடையறாது சண்டை நடந்திருக்காது, ஏனென்றால் போர்வீரர்கள் சாப்பிடவேண்டும் – ஒருநாளைக்கு மூன்று மணி நேரம், அது நமது பதினைந்து ஆண்டுகளை பன்னிரெண்டு ஆண்டுகளாக குறைக்கிறது. மேலும் நன்பகல் தூக்கத்திற்கும், பொழுதுபோக்குகளுக்கும், போரில்லாத நடவடிக்கைகளுக்கும் தந்த நேரத்தை கழித்தால்… [நெற்றி வியர்வையை துடைத்துக் கொள்கிறார்]

கணி ஆசி:- சமூக கவனசிதறல்களுக்கான நேரமும். இறுதியில் தேர்வர் சொன்ன ஐன்ஸ்டீனியனின் ஒப்பான ஏழு மீட்டர் கால அளவுதான் நமக்கு எஞ்சுகிறது. சரியே! கனவான்களே, நானே முன்வந்து வரலாற்று பாடத்தில் ‘மிக நன்றுது’ என்று தரவரிசையை முன்மொழிகிறேன். ஊஃப்!

ஆசிரியர்கள்:- பிரமாதம்! அபாரம்! அவர் தேர்வாகிவிட்டார் [வாஸர்கோப்ஃபை வாழ்த்துகிறார்கள்]

வாஸ[மறுப்புதெரிவித்தபடி]:- ஆனால் எனக்குப் புரியவில்லை…

முத:- வரலாறு தேர்வு நிறைவடைகிறது. [எழுதியபடி] ‘வரலாறு: மிக நன்று’ [ஏனைய ஆசிரியர் வரலாறு ஆசிரியரை சூழ்ந்து கொண்டு வாழ்த்துகிறார்கள்] இப்பொழுது இயற்பியல் தேர்வு.

வாஸ:- இப்போது பார்க்கலாம், ஏமாற்றுக்காரர்களே!

இயற்பியல் ஆசிரியர் [உற்சாகமாக]: வாங்க, வாங்க!

வாஸ [அடங்கமாட்டாமல்]:- இப்போது என்ன ஆகிவிடப் போகிறது? உங்கள் கேள்விகளை கேளுங்கள் அல்லது கேட்காதீர்கள். எனக்கு விரயம் செய்ய நேரமே இல்லை. [இயற்பியல் ஆசிரியரை முறைத்துப் பார்க்கிறான்.] ஓ! இப்பொழுது உங்களை நினைவுகூர்கிறேன். உங்கள் முதுகுக்கு பின்னால் உங்களை எப்படி அழைப்போம் தெரியுமா? [இயற்பியல் ஆசிரியர் வேதனையுடன் சிரிக்கிறார்] உங்களை கானிபால் என்று அழைப்போம். நரமாமிசத்தின்னி. ஏனென்றால் இப்போது போலவே எப்போதும் நீங்கள் கட்டைவிரலை சூப்பிக் கொண்டிருப்பதால். [அந்த ஆசிரியர் உடனே தன் விரலை எடுத்துவிடுகிறார். மற்ற ஆசிரியர்கள் சிரிக்கின்றனர்] அப்படித்தான் உங்களை அழைப்போம். ஓ, அன்றொரு நாள் நடையில் நீங்கள் தடுக்கி விழுந்தது நினைவிலிருக்கிறதா? நீங்கள் அப்படி விழும்படி என் மேஜையிலிருந்து மற்றொரு மேஜைக்கு கயிறு கட்டி வைத்திருந்தது யாரென்று தெரியுமா உங்களுக்கு? நான்தான் செய்தேன்!

இய ஆசி[கோபமாக]:- நீயா?

வாஸ:- கோபப்படாதீர்கள் சின்னவரே. அதற்கு பதிலாக என்னிடம் கடினமான கேள்வியைக் கேளுங்கள். என்னைப் புரட்டிப் போடுங்கள்.

இய ஆசி[வாஸர்கோப்ஃப் தன்னை எரிச்சலூட்ட முயல்கிறான் என்பதை உணர்ந்து தன்னை கட்டுபடுத்திக்கொள்கிறார். வெகு இனிமையாக]:- உங்கள் அன்பு அருமை. வெகு அருமை. இப்பொழுது, சொல்லுங்கள் மிஸ்டர் வாஸர்கோப்ஃப். ஸ்டீப்பில்ஸ் சர்ச்சில் உள்ள கடிகாரம், நீங்கள் விலகிச்செல்லும் போது சிறியதாகிவிடுகிறதா அல்லது பார்வைக்குரிய தோற்றப்பிழையினால் சிறியதாகிவிட்டது போல் தோன்றுகிறதா?

வாஸ:- என்னவொரு முழுமையான முட்டாள்தனம்? எனக்கெப்படி தெரியும்? கடிகாரங்களை விட்டு விலகி நடக்கும்போதெல்லாம் அவை பெரிதாகுகின்றன. மாற்றமே இல்லை. அவைகள் சிறியதாக வேண்டுமென்றால், நான் திரும்பி நேரே அவற்றை நோக்கி நடப்பேன். அவை சிறியனதாக ஆனதே இல்லை.

இய ஆசி:- ஒரு வார்த்தையில், அதாவது ஒரு வார்த்தையில் —

வாஸ:- ஒரு வார்த்தையில் என்றால், நீங்கள் ஒரு கழுத்தறுப்பு. நீங்கள் ஒரு கழுதை! அதுதான் என் பதில்.

இய ஆசி[கோபமாக]:- அதுதான் உங்கள் பதிலா? [கட்டுபடுத்திக் கொள்கிறார்] நல்லது! அதுதான் சரி. [ஆசிரியர்களை நோக்கி திரும்பி] கடினமான விடை ஆனால் அற்புதமான விடை. நான் விளக்குகிறேன் – சொல்லித்தான் ஆகவேண்டும். நான் விளக்குகிறேன். [பெருமூச்சு விட்டு, மேலும் தொடர்கிறார்] கழுதையைப் பற்றி பேசும்போது நாம் எப்போதும் ஒன்றை கவனித்திருப்போம். — எப்போதும் ஒன்றை கவனித்திருப்போம் —

ஆசிரியர்கள் [கவலையோடு]:- என்ன? என்ன?

இய ஆசி:- அதனுடைய பார்வை சோகமானது. அதனால் — [யோசிக்கிறார். திடீரென வெற்றியடைந்தவராக] எனக்கு புரிந்துவிட்டது.!

வாஸ [கவலையுடன்]:- என்ன புரிந்தது உனக்கு, பூனைமீசைக் குரங்கே?

இய ஆசி:- எனக்குப் புரிந்துவிட்டது, விடையும் சரிதான். ஏன் கழுதையின் பார்வை அவ்வளவு சோகமானது? ஏனென்றால் நாமெல்லாரும் தோற்றமாயையின் பலிகள். அந்த புராதன புலணுர்வு கொண்ட கழுதையை எவ்வகை தோற்றமாயைகள் பாதித்திருக்கும்? வெளிப்படையாக புலன்களால் ஆன தோற்ற மாயை, ஏனென்றால் கழுதைக்கு கற்பனாசக்தி போதாது; அதுவும் பார்வைப்புலன் தோற்றமாயையாகத்தான் இருக்க வேண்டும். கழுதை நம்மைப் போலவே, பொருட்களை விட்டு விலகிச் செல்லும்போது அவை சிறியவையாக ஆவதை கவனிக்கிறது. ஏமாற்றம் தரும் புலன்களால் சோகத்தை மட்டுமே முழுவதற்கும் வெளிப்படுத்தக் கூடிய ஒரு மிருகத்தின்பால் நமது கவனத்தை ஈர்த்து, தேர்வர் நமக்கு மிக அபாரமான விடையை அளித்தார்; இன்னொரு வகையில், ஒருபொருளின், இந்த இடத்தில் ஒரு கடிகாரத்தின், அளவில் வெளிப்படையான குறைவு ஏற்படுவது, தோற்றமாயையே குறிக்கிறது. இந்த விடை சரியானது. அதனால், தேர்வருக்கு இயற்பியலில் ‘மிக நன்று’ என மதிப்பிடலாம் என்று சான்றளிக்கிறேன்.

முத [எழுதிக்கொண்டே]:- “இயற்பியல்: மிக நன்று”

ஆசிரியர் கூட்டம்: பிரமாதம்!

[அவர்கள் இயற்பியல் ஆசிரியரை சூழ்ந்துகொண்டு அவர் முதுகை தட்டியும், கையை குலுக்கியும் வாழ்த்த, முழுவதும் களைப்படைந்த நிலையில் அவர் நாற்காலியில் மூழ்கிறார்]

வாஸ: நான் எதிர்க்கிறேன்!

முத [அவன சைகையால அமைதிப்படுத்திக்கொண்டே]:- புவியியலில் தேர்வு.

[புவியியல் ஆசிரியர் வாஸர்கோப்ஃபின் முன்னாடி அமர்கிறார்]

வாஸ:- இவரைப் பாரேன். அதே பாசாங்குக்காரன். எப்படி இருக்கிறாய் முட்டாளே?

புவி ஆசி:- மன்னிக்கவும். என்ன சொன்னீர்கள்?

வாஸ:- நமது வகுப்பு புத்தகத்தில் என் பெயர் உண்டு இல்லையா? படுபாவி! கொஞ்சம் பொறு! உன்னை சரியானபடி கவனிக்கிறேன்.

புவி ஆசி:- சொல்லுங்கள் தேர்வரே —

வாஸ:- சொல்கிறேன்! சொல்கிறேன்! ஓ! பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் உன்னை எவ்வளவு வெறுத்திருக்கிறேன் தெரியுமா?

புவி ஆசி [சலனப்படாமல்]:- ஜெர்மானிய பிரதேசமான ப்ரூன்ஸ்விக்கின் தலைநகரமான அதே பெயரைக்கொண்ட ஊரின் பெயரைச் சொல்லுங்கள்?

வாஸ:- என்னவொரு முட்டாள்தனமான கேள்வி. விடை கேள்வியின் பகுதியாகவே இருக்கிறது.

புவி ஆசி [திருப்தியாக]:- அப்படியா? அப்படியானால் விடை – என்ன?

வாஸ:- ‘அதே’தான். அதுதான் விடை. ஊரின் பெயர் அதேதான் என்றால் ஊரின் பெயர் ‘அதே’தானே. சரிதானே? இல்லையென்றால், நான் தோல்வியடைந்துவிட்டேன். என் கல்விக்கட்டணத்தை திருப்பிக் கொடுங்கள்.

புவி ஆசி:- விடை சரியே. அந்த ஊரின் பெயர் ‘அதே’தான். கனவான்களே, தேர்வர் ப்ரூன்ஸ்விக் நகரத்தின் வரலாறு பற்றிய பிரமாதமான அறிவை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு செவிவழி மரபுக் கதைப்படி, பேரரசர் பர்போஸா நகரத்தினுள்ளே பிரவேசித்த போது, வாய்நிறைய ரொட்டியை மென்றுகொண்டிருந்த, இளம் விவசாயப் பெண்ணை சந்தித்தார். அவளை அழைத்து ‘கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். இந்த ஊரின் பெயர் என்ன?’ என்றுக்கேட்க, அந்த விவசாயப் பெண்ணும் ‘அதே உங்களுக்கும்’ என்றாள். அப்புறம் அவள் வாய் நிறைந்திருப்பதால் நிறுத்திக் கொள்ள, பேரரசர் சிரித்துக்கொண்டே ‘ஹோ, ஹோ!, அப்பொழுது இந்த ஊரின் பெயர் ‘அதே’தானா?’ என்றார். அப்புறம் பல வருடங்களுக்கு அவர் புருன்ஸ்விக் எனக் குறிப்பிடாமல் அதே பெயரைக் கொண்டுதான் அழைத்து வந்தார். [திரும்பி தன் சகாக்களைப் பார்த்து, நிம்மதியாக கண்ணடிக்கிறார்] விடை அபாரமானது. தேர்வர் புவியியலில் ‘அபாரம்’ என்ற மதிப்பீட்டிற்கு உரியவராகிறார்.

[அவருடைய இருக்கைக்கு திரும்ப, வாழ்த்துகளால் குளிப்பாட்டப்படுகிறார்]

முத [எழுதியபடி]:- ‘புவியியல்: அபாரம்’. இதுவரை, தேர்வர் எல்லா தேர்வுகளிலும் ஆரவாரமான வெற்றியுடன் கடந்து வந்திருக்கிறார். கணிதத்தில் தேர்வு மட்டும்தான் மீதம் இருக்கிறது. அதிலும் தேர்ச்சிப் பெற்றுவிட்டால், அவர் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றுவிட்டார் எனலாம்.

வாஸ [பதட்டமாக] நான் கவனமாக இருக்க வேண்டும். [கணித ஆசிரியர் வாஸர்கோப்ஃபிற்கு எதிரான இருக்கையில் அமர்கிறார். பிற ஆசிரியர்கள் கவலையுடனிருக்க, கணித ஆசிரியர் அவர்கள் தன்னை நம்பலாம் என்பது போல சைகையால் உறுதியளிக்கிறார்] ஓ! நீ வந்துவிட்டாயா? அதே பழைய குட்டையில் ஊறின மட்டை. உங்களுக்கு பின்னால் ‘பழைய குட்டையில் ஊறின மட்டை’ என்று நாங்கள் அழைப்பது தெரியுமா உங்களுக்கு? என்னிடம் கேள்வி கேட்பது என்றால் உங்களுடைய திறனை கூர்மையாக்கிக் கொள்ளுங்கள். கணிதத்தை பற்றி சிலவற்றை சொல்லி தொடங்கிவைக்கிறேன்: இரண்டும் இரண்டும் ஐந்து, போகப்போக நானே எனக்கான வாய்ப்பாடுகளை உருவாக்கிக் கொள்வேன். மேலும் எட்டு ஆப்பிள்களையும், இரண்டு பேரிக்காய்களையும் கூட்டினால் இருபத்தேழு பாதாமி பழங்கள் வரும். இதுதான் என்னுடைய முறைமை. நீங்கள் பார்க்கத்தானே போகிறீர்கள். கணிதம் பாழாய்ப் போயிற்று! ‘விடை அபாரம்?’ ‘விடை மிக நன்று?’ ‘விடை சரி?’ எதுவுமில்லை இப்போது. நீங்கள் தயாராக இல்லை என்று சொல்லி என்னை தோல்வியடையச் செய்தால் சுலபமாக முடிந்துபோகும்.

கணி ஆசி [தீவிரமாக]:- சீரிய தேர்வுகளை இப்படி பகடி செய்யக்கூடாது. நான் உங்களை இரண்டு கேள்விகள் கேட்பேன். ஒன்று சுலபமானது. மற்றொன்று கடினமானது.

வாஸ [அவரை பகடி செய்தபடி]:- ஒன்று சுலபமானது. மற்றொன்று கடினமானது. அதே பழைய குட்டை மட்டைதான் நீங்கள். உங்களைப் பற்றி நாங்கள் போர்டில் வரைந்த படங்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது —

கணி ஆசி [குறுக்கிட்டு]:- இது கலையைப் பற்றிய தேர்வு என்றால் உங்களுக்கு ‘அபாரம்’ என்று மதிப்பெண் அளித்திருப்போம். [அவர் நிறுத்த, வாஸர்கோப்ஃப் அமைதியாகின்றான்] ஆனால் இங்கு கணிதம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். சுலபக் கேள்வி: ஒளியின் வேகத்தை x என்று வைத்துக் கொண்டால், சிரியஸ் நட்சத்திரத்திற்கும் சூரியனுக்குமான இடைவெளியை y என்று வைத்துக் கொண்டால்,, ஹுஸ்ஸார் படையணியின் சார்ஜெண்ட் மேஜருடன் சேர்ந்து இரண்டு வருடங்கள் பதினொரு மாதங்களாக தன் கணவனை ஏய்த்துக்கொண்டிருக்கும் பெண்ணின் கணவனான மாநில இரயில்வே ஊழியரின் இடுப்பு பையை ஒத்த பரப்பை கொண்டிருக்கும் நூற்றி ஒன்பது கரம் கொண்ட பன்முகத்தின் (polyhedron) சுற்றளவு என்ன?

ஆசிரியர் [வெகுவாக நொந்துபோய்] இங்கே பாருங்கள், புரஃபசர்! புரஃபசர்!

முத: புரஃபசர்!

வாஸ:- அவரை குறுக்கிடாதீர்கள் [கணித ஆசிரியரைப் பார்த்து] கேள்வியை திருப்பக் கேட்க முடியுமா?

கணி ஆசி:- இல்லை. ஒன்று நீ கவனம் செலுத்தியிருந்தாய் அல்லது செலுத்தவில்லை. ஒன்று உனக்கு விடை தெரியும் அல்லது தெரியாது. எனக்கு விடையைச் சொல், ஏனென்றால் உனக்கு விடை தெரியாது என்றால் ==

வாஸ:- சந்தேகமில்லாமல் எனக்குத் தெரியும். இயல்பாகவே எனக்குத் தெரியும். நான் சொல்கிறேன். இரண்டாயிரத்து அறுநூற்றி இருபத்தொன்பது லிட்டர். துல்லியமானது. பின்னங்கள் ஏதும் கிடையாது. உங்களுக்கு சரியான விடை கொடுத்தேனா [சிரிக்கிறான்] நம்பமுடியாத பதிலை கொடுத்துவிட்டேன் போல.

கணி ஆசி:- இல்லை. விடை தவறு. சரியான விடை இரண்டாயிரத்து அறுநூற்றி இருபத்தெட்டு லிட்டர். இருபத்தி ஒன்பது இல்லை. [முதல்வர்பக்கம் திரும்பி] தேர்வரை வெற்றிபெற்றவராக சொல்ல இயலாது. ‘தோல்வி’ என்று குறித்துக் கொள்ளுங்கள்.

வாஸ: [துள்ளிக்கொண்டு]:- நான் சொன்னேனே! நான் சொன்னேனே!

முத [இடிவிழுந்தவராக]:- புரஃபஸர்!

கணி ஆசி:- மன்னிக்கவும். அவருடைய பிழையானது மொத்தத்தின் ஒரு சதவிகிதத்திலும் பத்தில் ஒரு பங்குக்கு குறைவானது என்பது உண்மை. ஆனாலும் அது பிழைதான். அவர் தோற்றுப்போய்விட்டார்.

வாஸ:- என் கல்விக் கட்டணம்! என் கல்விக் கட்டணம்!

கணி ஆசி:- என்னுடைய கணிப்புப்படி தேர்வரின் கோரிக்கை நியாயமானது. நம்முடைய தேர்வை அவரால் வெல்ல முடியாது என்று எனக்கே திருப்தி ஆகிவிட்டதால், நமக்கு கட்டிய பணத்தை அவர் திரும்பப் பெற்றுக் கொள்வது அவருடைய உரிமை.

வாஸ:- அதுதான்! அது சரிதான்! பணத்தை கொடுங்கள். [வானமே இடிந்து விழுந்தது போல ஆசிரியர் கூட்டம் திகைத்து பார்க்கின்றனர்]

முத [கணித ஆசிரியரை கோபமாகப் பார்த்து]:- அதுதான் நீங்கள் நினைப்பதா?

கணி ஆசி:- மிகச்சரி. இதொரு நல்ல பள்ளிக்கூடம். எதனாலும் இதன் புகழ் மாசுபடாது பார்த்துக்கொள்வது நமது கடமை. நாங்கள் உங்களுக்கு எவ்வளவு தரவேண்டும் மிஸ்டர் வாஸர்கோப்ஃப்?

வாஸ [பேராசையுடன், எல்லாவற்றையும் மறந்தவனாக]:- மிகச் சரியாக சொல்கிறேன். மொத்தம் ஆறு வருடங்கள் இந்தப் பள்ளியில் பயின்றிருக்கிறேன். முதல் மூன்றாண்டுகளுக்கு காலாண்டு கட்டணம் 150 கிரௌன்கள். மூன்றாண்டுகளுக்கு மொத்தம் 1800 கிரௌன்கள். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அரையாண்டு கட்டணம் 400 கிரௌன்கள். மொத்தம் 2,,400 மற்றும் 1,800 சேர்ந்து 4,200 கிரௌன்கள். தேர்வுக்கட்டணம் 250 கிரௌன்கள் 95 ஹெல்லர். சான்றிதழ்கள், ஆவணங்கள், புத்தகங்கள், ஸ்டாம்பு வரிகள், 1,241 கிரௌன்கள் 43 ஹெல்லர்கள். மொத்தம்: 5,682 கிரௌன்கள் 38 ஹெல்லர்கள். நோட்டுபுத்தகங்கள், சில்லறை விஷயங்கள், இடைப்பட்ட செலவுகள், 786 கிரௌன்கள் 12 ஹெல்லர்கள். ஆக மொத்தம்: 6,450 கிரௌன்கள் 50 ஹெல்லர்கள். சொச்சங்களை தள்ளிவிட்டு மொத்த கிரௌன்களையே வைத்துக் கொள்வோம்.

கணி ஆசி [வாஸர்கோப்ஃப் சொல்லும் ஒவ்வொன்றையும் தன் கையிலிருக்கும் பேப்பர் பென்சிலால் சரிபார்த்துக் கொண்டே வந்தவர்]:- மிகச் சரி!

வாஸ:- மிகச் சரி! நீங்கள் இதை நம்பலாம்.

கணி ஆசி:- ஆமாம். அதைப் பற்றிக் கேள்வியே இல்லை. மிகச்சிறு விவரங்கள்வரை சரியாக இருக்கிறது. [வாஸர்கோப்ஃபிடம் கையை நீட்டிக் குலுக்குகிறார்] வாழ்த்துகள். அதுதான் என்னுடைய கடினமான கேள்வி.

வாஸ [புரியாமல்]:- என்ன?

கணி ஆசி [முதல்வரிடம்]:- இந்த தேர்வர் கணிதத்தில் தேர்ச்சி பெற்றார் என்று சான்றளிக்கிறேன். சுலபமான கேள்விக்கு அவருடைய பதில் சற்று மாறிப்போயிருந்தது; கடினமான கேள்விக்கு அவர் பதில் – திருப்பிக் கொடுக்கவேண்டிய பணம் எவ்வளவு – மிகச்சரியாக இருந்தது. மிஸ்டர் வாஸர்கோப்ஃப் ஒரு கணித மேதாவி.

வாஸ [நெற்றியில் அடித்துக்கொண்டு]:- நீங்கள் என்னை மாட்டிவிட்டீர்கள்!

முத [எழுந்தபடி]:- தேர்வின் முடிவை அறிவிக்கிறேன். மிஸ்டர் வாஸர்கோப்ஃப் அனைத்து பாடங்களிலும் மேன்மையுடன் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். மேலும் அவருடைய பட்டமளிப்பின் போது நாம் அளித்த சான்றிதழுக்கு உரியவராகிறார். மிஸ்டர் வாஸர்கோப்ஃப் , உங்களுக்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் – அதில் பெரும்பகுதியை, உங்களுக்கு சிறப்பாக கற்பித்ததற்காக நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். இப்பொழுது உங்கள் அறிவையும், திறனையும் சோதித்து முடிந்ததால் – [நயமான சைகை செய்து] உங்களை தூக்கியெறியுமுன்னர் வெளியேறுங்கள்.

[பணியாளருக்காக மணியடிக்கிறார். அடுத்து வரும் வசனங்கள் எல்லாம் ஒரே சமயம் பேசப்படுகின்றன]

வர ஆசி:- ஆக, நானொரு மந்தபுத்திக்காரன். நானா? இன்னொருமுறை சொல்லு. உனக்கு யாரென்று நான் காட்டுகின்றேன்.

இய ஆசி:- நான் நரமாமிசத்தின்னியா? என்ன? நீதான் நடைபாதைக்கு குறுக்கே கயிறுகட்டி விட்டவனா? —

புவி ஆசி:- பாசாங்குக்காரன்? முட்டாள்? கழுதை? நானா?

கணி ஆசி:- பழைய குட்டையில் ஊறிய மட்டை?

பணி [நுழைந்தவாறு]:- சொல்லுங்கள் ஐயா?

முத [வாஸர்கோப்ஃபை சுட்டிக்காடியபடி]:- இந்த ஜந்துவை அகற்றுங்கள்! [பணியாளர் வாஸர்கோப்ஃபின் காலரையும் கால்சராயின் பின்புறத்தையும் சேர்த்து பற்றி அவனை வெளியேற்றுகிறான். முதல்வர் தன்னுடைய ஆசிரியர் கூட்டம் பக்கம் திரும்பி பெரிதாக புன்னகைக்கிறார். ] நன்றி, கனவான்களே, சிறப்பான கூட்டுமுயற்சிக்கு, இந்தப் பள்ளியில் ஒரு மாணவனும் சுலபமாக தோல்வியடைய முடியாது என்பதே எதிர்காலத்தில் நம்முடைய பெருமையான பீற்றுதலாக இருக்கும்.

[அவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டு முதுகைத் தட்டிக் கொள்கின்றனர்]

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.