எஸ் சுரேஷ் – தாக்கம் ஏற்படுத்திய பத்து கவிதை நூல்கள்

  எஸ். சுரேஷ் –

“கவிதை வாசிப்பதுதான் நல்ல இலக்கிய ரசனையை வளர்த்துக் கொள்ளும் வழி|”- ஜோசப் பிராட்ஸ்கி

புத்தகங்கள் எப்போதும் அந்தரங்கமானவை, ஒருவர் தேர்ந்தெடுக்கும் “சிறந்தவை” வேறொருவரின் தேர்வைப் போலிருக்காது. கவிதை விஷயத்தில் இதற்கான வாய்ப்புகள் மேலும் குறைகின்றன. பல கவிஞர்களை நான் ரசித்து வாசித்திருக்கிறேன், ஆனால் வெகு சிலரிடம் மட்டுமே மீண்டும் மீண்டும் திரும்புகிறேன். இந்தப பட்டியல் நான் திரும்பத் திரும்ப வாசிக்கும் கவிதை நூல்களின் பட்டியல். இதில் மாபெரும் கவிஞர்கள் சிலர் இல்லாதிருக்கலாம், ஆனால் எனக்குப் பிடித்தவர்கள் இவர்கள்:

1. குறுந்தொகை

சங்கக் கவிதைகளில் அகம், புறம் என்ற இரு பிரிவுகள் உண்டு. அகக்கவிதைகளின் மிகச் சிறந்த தொகுப்பு குறுந்தொகை. அகநானூறு சற்றே நெடியதாக இருக்கிறது, ஐங்குறுநூறு மிகக் குறுகியதாக இருக்கிறது. குறுந்தொகைதான் கச்சிதமான உருவம் கொண்டிருக்கிறது. இந்தக் கவிதைகளில் காணப்படும் நவீனத்துவம் என்னை மிகவும் இம்ப்ரெஸ் செய்ததால் இவற்றை ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். ஏறத்தாழ 70 கவிதைகளை ஆங்கிலப்படுத்தினேன், அவற்றில் 13 சாகித்ய அகாதெமி பிரசுரமான ‘Indian Literature’ என்ற பத்திரிக்கையில் பிரசுரமாயின. தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் இவை. ஏ கே ராமானுஜம் சரியாகவே சொன்னதுபோல், இவற்றைக் காட்டிலும் சிறந்த கவிதைகள் இன்னும் தமிழ் இலக்கியத்தில் எழுதப்படவில்லை.

2. கம்ப ராமாயணம்

நான் கம்ப ராமாயணத்தில் சில பகுதிகள் மட்டுமே வாசித்திருக்கிறேன். ஆனால் படித்த அளவில் அது மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேரடியாக கம்ப ராமாயணம் வாசித்தது போக, வெவ்வேறு இடங்களில் கம்பன் எதிர்ப்பட்டுக் கொண்டிருக்கிறான்- கம்பன் குறித்து நாஞ்சில் நாடன் எழுதிய புத்தகம், பங்களூருவில் சொக்கனின் கம்பன் வகுப்புகள், ரா. கிரிதரன் எழுதிவரும் சில கட்டுரைகள் என்று இன்றும் இது தொடர்கிறது. கம்பனில் புதிதாய் வாசிக்கும் ஒவ்வொரு பாடலும் மதிப்பை அதிகரிப்பதாக இருக்கிறது. இது ஒரு தேய்வழக்காக இருக்கலாம், ஆனால் கம்பனுக்குக் கச்சிதமாகப் பொருந்தும்: கம்பன் ஒரு ஆற்றைப் போன்றவன். அவன் சொற்களுக்கு இயற்கையான ஒரு வேகம் இருக்கிறது, பாடல்கள் இயல்பாய், தன்னிச்சையாய் வெளிப்பட்டவை போலிருக்கின்றன. சங்கப் பாடல்கள் போலல்லாமல், இவற்றோடுகூட, கம்பனின் தமிழ் நமக்கு இன்னும் நெருக்கமாக இருக்கிறது. கம்பனால் தமிழ் மேலும் இனிதாகிறது.

3. Collected Poems of Wislawa Szymborska (Polish) :

என் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கவிஞர் பெயரைச் சொல்ல வேண்டுமென்றால், எந்த தயக்கமும் இல்லாமல் விஸ்லாவாவின் பெயரைச் சொல்வேன். அவரது கவிதைகளைக் கொண்டு வாழ்வைப் பேசும் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். அவரது உலகப் பார்வையையும் வாழ்வு நோக்கையும் ரசிக்கிறேன். மானுடத்தின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனித்தன்மை கொண்ட ஒரு பார்வையை வைத்திருக்கிறார் அவர். இவற்றோடு அவரது அருமையான நகைச்சுவை உணர்வையும் சொல்ல வேண்டும். வாசிக்குந்தோறும் நேசிக்கச் செய்யும் கவிஞர்.

4. Poems of Charles Bukowski (English):

இன்று ஜெயமோகன் எவ்வளவு எழுதுகிறாரோ, அந்த அளவுக்கு எழுதியவர் புகோவ்ஸ்கி. இது அவரை வாசித்தவர்களுக்குத் தெரியும். அவரது ஆறு கவிதை நூல்கள் என்னிடம் உள்ளது- அவை ஆறும் ஓரே மாதிரிதான் இருக்கின்றன. எல்லாவற்றிலும் ஓரே நடைதான். “நீ என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டால் எனக்கு என்ன?” “நான் எழுதியிருப்பது உனக்குப் பொருந்தாவிட்டால் வேறு எங்காவது பொறுத்திப் பார்,” என்கிற மாதிரியான பேச்சு நடையும் பார்வையும் அவருக்கு ஒரு தனிக்குரல் தருகின்றன. அவரது கவிதைகள் அனைத்தும் தன்னனுபவத்தை விவரிப்பவை, சில கவிதைகள் வாசகர்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம். கவிதைகள் வாழ்க்கையின் அர்த்தம் இன்னதென்று சொல்வதாகத் தெரிகிறதோ இல்லையோ, அது ஒரு பிரச்சினையில்லை. சுவையான கவிதைகள், அவர் மட்டுமே எழுதக்கூடிய கவிதைகள்.

5. Masterpieces of Urdu Ghazals (Urdu) : Translated by K C Kanda:

கஜல் என்னும் இனிய இசை வடிவத்தை எனக்கு அறிமுகப்படுத்திய புத்தகம் இது. அதுவரை, பலரைப் போல் நானும் கஜல் என்பது பசித்தவர்களால் பாடப்படும் ஒரு பாடல் வகை,என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தை வாங்கியதும் புரட்டிப் பார்க்கும்போது ஒரு கஜல் கண்ணில் பட்டது- முதலில் படித்த அந்த கஜல் காலிப் எழுதியது-

‘yeh na thi hamari kismet ke wisal-e-yaar hota
Agar aur jeete rahte, yahi intzar hota’

இதைப் படித்ததும் அதிர்ந்து நின்றேன், கஜல் வடிவத்தின் அடிமையானேன்.

இந்தப் புத்தகத்தின் வடிவமைப்பு மிக அழகாக இருக்கிறது. இடப்புற பக்கத்தில் உருது மொழியில் கஜல்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன, வலப்புறம் மேற்பகுதியில், அதே வரிகள் ஆங்கில எழுத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன, அதன் கீழ் ஆங்கில மொழிபெயர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. உருது பேசினால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும், ஆனால் படிக்கத் தெரியாது என்றிருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு வரம். இந்த கஜல்களை முழுமையாய் ரசிக்க நிச்சயம் மொழிபெயர்ப்பு மட்டும் போதாது.

உருது கஜலின் மிகச்சிறந்த கவிஞர்களை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது – கஜல் வடிவத்தில் கரைகண்ட Wali, Dard, Ghalib, Mir Taqi Mir, Momim, Faiz Ahmad Faiz, Iqbal, Firaq Gorakhpuri முதலானோர் இவர்களில் சிலர். இதன் பின் இன்னொரு தொகை நூலில் Sauda, Sahir முதலானோரின் கஜல்கள் பதிப்பிக்கப்பட்டன.

நான் காலிப்பின் கஜல்களை மிகவும் ரசிக்கிறேன், அவருக்கு அடுத்தபடியாக மீர் எழுதிய கஜல்களைச் சொல்ல வேண்டும். காலிப், மீர், இவர்களோடு கபிலர், ஔவையார் போன்ற சங்கக் கவிஞர்களை தொல்மரபு நமக்கு அளித்த மிகவும் நவீன கவிஞர்களாகக் கருதுகிறேன். இவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள், அவற்றை வெளிப்படுத்தும் விதம, கவிதை வடிவம் மீதுள்ள ஆளுமை இன்றும் முக்கியமாக இருக்கின்றன. சமகால கவிஞர்களைக் காட்டிலும் வெகுவான உயரத்தில் இன்றும் நிற்கின்றனர் இவர்கள்.

காலிப் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரது குரல் நகைமுரணை வெளிப்படுத்தும் குரல், நவீன கவிதைகள் கைக்கொள்ளும்முன் காலிப் நகைமுரணை தேர்ந்த முறையில் கையாண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் நான் காலிப்பை வாசிக்கக் காரணாம் அவர் வாழ்வை ஒரு சூபித்தன்மையுடன் அணுகுகிறார் என்பதுதான்- எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான பஷீரின் பார்வைக்கு இணக்கமான பார்வை காலிப்பிடம் உண்டு.

6. Collected Poems by Tomas Transtormer (Sweden) :

‘Contemporary World Poetry’ என்ற தொகைநூலில்தான் முதன்முறை இவரை அறிந்து கொண்டேன். இவர் கவிதைகளில் உள்ள ஆற்றல்மிகுந்த படிமங்கள்தான் முதலில் மனதில் பதிகின்றன. இவரது படிமங்கள் ஆழமானவை எனினும் தனித்தன்மையுடன் வெளிப்படுகின்றன. இந்த நூலில் உள்ள கவிதைகளால் திருப்தியடையாமல் இவரது கவிதைத் தொகுப்பை விலை கொடுத்து வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். எப்போது வாசித்தாலும் இவரது கவிதைகளில் உள்ள படிமங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. படிமங்களின் கவிஞர் இவர், வாழ்வைப் பற்றி ஆழமாக யோசிக்க வைக்கும் படிமங்கள் இவை.

உதாரணத்துக்கு இது (ராபர்ட் ஃபுல்டன் மொழிபெயர்ப்பு)

National Insecurity
The Under Secretary leans forward and draws an X
and her ear-drops dangle like swords of Damocles.
As a mottled butterfly is invisible against the ground
so the demon merges with the opened newspaper.
A helmet worn by no one has taken power.
The mother-turtle flees flying under the water.

7. Collected Poems by Constantine Cavafy (Greece):

Cavafy காமத்தை எழுதியவர் என்று சொல்லலாம். முதுமையைப் பேசும்போதும் அவர் புலனின்பம் குறித்தே தியானித்தார். பாடலுக்குரிய இசைத்தன்மை கொண்ட கவிதைகள், எளிமையானவை, கண்ணாடி போல் மென்மையானவை. கிரேக்க தொன்மங்களின் தாக்கத்தை இவரது கவிதைகளில் காணலாம்.

உதாரணத்துக்கு இது (Edmund Keeley/Philip Sherrard மொழிபெயர்ப்பில்)

An Old Man

At the noisy end of the café, head bent
over the table, an old man sits alone,
a newspaper in front of him.

And in the miserable banality of old age
he thinks how little he enjoyed the years
when he had strength, eloquence, and looks.

He knows he’s aged a lot: he sees it, feels it.
Yet it seems he was young just yesterday.
So brief an interval, so very brief.

And he thinks of Prudence, how it fooled him,
how he always believed—what madness—
that cheat who said: “Tomorrow. You have plenty of time.”

He remembers impulses bridled, the joy
he sacrificed. Every chance he lost
now mocks his senseless caution.

But so much thinking, so much remembering
makes the old man dizzy. He falls asleep,
his head resting on the café table.

8. Dream Songs by John Berryman (English):

உரைநடைக்கு பாக்னர் என்றால் கவிதைக்கு பெர்ரிமேன் என்று நான் சொன்னால் எத்தனை பேர் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. இந்தக் கவிதைகளைப் படிக்கும்போது பாக்னரின்‘Sound and the Fury’ என்ற நாவலில் வரும் பாத்திரமே நினைவுக்கு வருகிறது. தனித்தன்மை கொண்ட கவிஞர் இவர், ஒரு கவிதையை மேற்கோள் காட்டுவதோ இவர் கவிதையில் என்ன சாதித்தார் என்று விவரிப்பதோ சரியாக இருக்காது. நீங்களே படித்துப் பார்த்தாக வேண்டும். பாக்னர் உரைநடை போல் கடினமான கவிதைகள் இவை. பாக்னர் போல் குறையாமல் அளிப்பவையும் இவை.

9. Present Hour by Yves Bonnefoy (French):

நான் இவரது கவிதைகளின் விசிறி. ஏன் என்று கேட்டால் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். இவர் எழுதுவது அத்தனையும் புரிகிறதா என்று கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று என்னை ஈர்ப்பதாக இருக்கிறது. புகோவ்ஸ்கிக்கு எதிரிடையான குரல் இவரது. கனவு போன்ற கவிதைகள். புரிந்தும் புரியாத ஏதோ ஒன்றைப் பேசுவது போன்ற கவிதைகள். தடுமாற்றமில்லாத நடை, துல்லியமான மென்படிமங்கள். ஏதோ ஒரு சுவர்க்கத்துக்குச் சென்று திரும்பியது போன்ற வாசிப்பனுபவத்தை அளிக்கும் கவிதைகள். எத்தனை வாசித்தாலும் திகட்டுவதில்லை. தொலைவில் நின்று கொண்டு பேசுகிறார், ஆனால் மிகவும் நெருங்கி வருகிறார்.

10. Awater by Martinus Nijhoff (Dutch) :

கவிதை பற்றிய ஒரு கட்டுரையில் ஜோசப் பிராட்ஸ்கி, வாசிக்கப்பட வேண்டிய கவிஞர்களைப் பரிந்துரைத்திருந்தார். அதில், ‘stunning Awater by Martinus Nijhoff’ என்று கூறியபோதுதான் நான் இவரை அறிந்து கொண்டேன். இந்தப் புத்தகம் எளிதில் கிடைக்கவில்லை, ஆனால் ஃப்லிப்கார்ட் வசதியுடன் ஒரு வழியாய் வந்தது. உண்மையாகவே திகைத்து நிற்க வைத்த கவிதை. ஒரு கதை போன்ற வடிவம் கொண்ட நீண்ட கவிதை இது, அந்தக் கதை என்ன என்று இங்கே சொல்லப் போவதில்லை. யதார்த்த தளத்தில் துவங்கும் இந்தக் கவிதை மெல்ல மெல்ல தன்னை மாயத்தன்மை கொண்ட ஒன்றாக மாற்றிக் கொள்கிறது. நான் வாசித்த கவிதைகளில் மிகச் சிறந்த நீள்கவிதைகளுள் இது ஒன்று.

பிராட்ஸ்கி கட்டுரைக்கு ஒரு அறிமுகம் இங்கிருக்கிறது- Brainpickings

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.