வண்ணக்கழுத்து பகுதி 3 – திசை அறிதல்

மாயக்கூத்தன்– 

கடலாழத்தில் நீந்த புதிதாக பயிற்சி பெற்றவன் போல, காற்றில் இறங்குவது குறித்து வண்ணக்கழுத்துக்கு இருந்த பயம் போய்விட்டது. அவன் நீண்ட நேரமும், அதிக உயரத்திலும் பறக்கத் துவங்கினான். ஒரே வாரத்தில் விடாமல் அரைமணிநேரம் அவனால் பறக்க முடிந்தது. வீட்டுக் கூரைக்குத் திரும்பும்போது, அவன் தன் அப்பா அம்மாவைப் போலவே அழகாகத் தரையிறங்கினான். கால் கூரையில் பதியும்போது, தன்னை சமநிலைக்கு கொண்டு வர, படபடவென்று இறக்கைகளை பீதியில் அடித்துக் கொள்வது அதற்குப் பிறகு இல்லை.

தொடக்கத்தில் அவனோடு கூடவே பறந்த அப்பாவும் அம்மாவும், இப்போது அவனை விட்டுவிட்டு அவனைவிட அதிக உயரத்தில் பறக்கத் தொடங்கினார்கள். பையன், தன் பெற்றோர்கள் பறக்கும் உயரத்திற்கு எப்போதும் முயற்சி செய்து கொண்டிருந்தான் என்பதால், அவனை இன்னும் மேலே பறக்க வைக்கத்தான் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் என்று சில காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். குட்டிப் பயலுக்கு அவர்கள் அருமையான  முன்னுதாரணமாக இருக்க நினைக்கிறார்களாக இருக்கும். ஆனால் கடைசியில் ஜூன் மாத தொடக்கத்தில் ஒருநாள், ஒரு கெட்ட சம்பவத்திற்குப் பிறகு என் எண்ணம் மாறியது.

வண்ணக்கழுத்து உயரத்தில் பறந்து கொண்டிருந்தான். கீழிருந்து பார்க்க தன் உருவத்தில் பாதி அளவுதான் இருந்தான். அவனுக்கு மேல் உயரத்தில் அவன் பெற்றோர்கள், ஒரு மனிதனின் கைப்பிடியளவு போலச் சின்னதாக இருந்தார்கள். ராட்டினத்தைப் போலே சீராக அவனுக்கு மேல் வட்டமடித்துக் கொண்டிருந்தார்கள். அது காண்பதற்கு அர்த்தமற்றதாகவும் சலிப்பூட்டுவதாகவும் இருந்தது. ரொம்ப நேரம் மேலே பார்த்துக் கொண்டிருக்க முடியாமல், என் பார்வையை அவர்களிடமிருந்து விலக்கினேன். அடிவானத்தை நோக்கி என் பார்வையைத் தாழ்த்தும்போது, விரைந்து நகரும் ஒரு கரும்புள்ளி கண்ணில் பட்டது. ஒவ்வொரு நொடியும் அது பெரிதாகிக் கொண்டேயிருந்தது. நேர்க்கோட்டில், அத்தனை வேகத்தில் வருவது என்ன பறவையாக இருக்கும் என்று யோசித்தேன். ஏனெனில், இந்தியாவில் பறவைகளையே துர்யக் அல்லது ’வளைவு-போடுகிறவன்’ என்றுதான் சமஸ்க்ருதத்தில்  சொல்வாகள்.

ஆனால், இது அம்பு போலே நேரே வந்தது. அடுத்த இரண்டு நிமிடங்களில் என் சந்தேகம் மறைந்தது. குட்டிப்பயல் வண்ணக்கழுத்தை நோக்கி ஒரு பருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது மேலே பார்க்கும்போது ஓர் அற்புதமான காட்சியைக் கண்டேன். வண்ணக்கழுத்தின் உயரத்தை அடைய, அவன் அப்பா பல்டியடித்துக் கொண்டே கீழே விரைந்தார. அதற்காகவே, அவனுடைய அம்மாவும் வேகமாக வட்டமடித்துக் கொண்டே கீழே இறங்கினார். கொலைகாரப் பருந்து அப்பாவி குட்டிப் பயலுக்கு முப்பது அடி அருகில் வருவதற்குள், இரண்டு பக்கமும் அப்பாவும் அம்மாவும் பாதுகாப்பாக வந்து விட்டார்கள். இப்போது மூவரும் தங்கள் எதிரியின் பாதைக்கு கீழ் திசையில் செங்குத்தாகப் பறந்தார்கள். அதற்கெல்லாம் அசராமல், பருந்து தாக்கிற்று. அப்போது ஒரே நேரத்தில் மூன்று புறாக்களும் தாழக் கீழிறங்க, பருந்து ஏமாந்துவிட்டது. தாக்க வந்த பயங்கர வேகத்தில், புறாக்களை விட்டுத் தொலை தூரம் போய்விட்டது. புறாக்கள் தொடர்ந்து காற்றில் வட்டமிட்டுக் கொண்டே வேக வேகமாக கீழே இறங்கின. அடுத்த அரை நிமிடத்தில், எங்கள் கூரைக்கு பாதி தூரத்தில் வந்துவிட்டன.

இப்போது பருந்து தன் மனத்தை மாற்றிக் கொண்டது. வானத்தில் இன்னும் மேலே மேலே பறந்தது. உண்மையில், இறக்கைகளின் சிறகுகள் காற்றில் எழுப்பும் ஓசையை புறாக்கள் கேட்கமுடியாத உயரத்திற்குச சென்றுவிட்டது. அது அவர்களுக்கு மேலே பறப்பதால், அவர்களால் தங்கள் எதிரியை பார்க்கவும் முடியவில்லை. எனவே, பாதுகாப்பாக இருப்பதாக நினைத்து, நிம்மதியானார்கள். முன்பு போல் வேகமாகப் பறக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அப்போது அவர்களுக்கு மேலே பார்த்தேன். உயரே, பருந்து தன் இறக்கைகளை மடித்துக்கொண்டு, கீழே விழத் தயாராக இருந்தது. சடாரென்று, ஒரே நொடியில் அவர்கள் மீது ஒரு கல்லைப் போல் விழுந்தது. விரக்தியில், அவர்களை எச்சரிக்க என் வாயில் விரல்களைவிட்டு, கீச்சென்று சீட்டியடித்தேன். வீசிய வாள் போல புறாக்கள் கீழ்நோக்கிப் பாய்ந்தன. பருந்தும் விடாமல் தொடர்ந்தது. ஒவ்வொரு நொடியிலும் ஒவ்வொரு இன்ச் இன்சாக அவர்களை நெருங்கிற்று. வேக வேகமாக இறங்கிற்று.

இப்போது பருந்துக்கும் அதன் இரைக்கும் நடுவே இருபது அடிகூட இடைவெளி இல்லை. அது வண்ணக்கழுத்தைத் தான் குறி வைத்து வருகிறது என்பதில் சந்தேகமே இல்லை. அதன் கொடூரமான நகங்களை என்னால் பார்க்க முடிந்தது. அந்த வேதனையில் ”இந்த முட்டாள் புறாக்கள், அதுங்களக் காப்பாதிக்க எதுவும் செய்யாதா?” என்று தோன்றியது. இப்போது, அவனுக்கு ரொம்ப நெருக்கமாக வந்துவிட்டது- இப்போதுதான் இவர்கள் பதட்டப்படாமல் இருக்க வேண்டும். மூவரும் திடீரென்று மேல் நோக்கி உயர்ந்து நீண்ட வட்டமிட்டனர். பருந்தும் அவர்களைத் தொடர்ந்தது. பிறகு, அவர்கள் இன்னும் பெரிதான நீள்வட்டப் பாதையில் பறந்தார்கள். ஒரு பறவை வட்டமிட்டுப் பறக்கும்போது, ஒன்று வட்டத்தின் மையத்திற்கு வரும், அல்லது அதிலிருந்து விலகிவிடும். புறாக்களின் எண்ணத்தை அறியாத பருந்து, வட்டத்தின் மையத்தை நோக்கிச் சென்று, அவர்களுடையதைவிட சிறியதாக ஒரு வட்டமடித்தது. அது தன் வட்டப்பாதையில் திரும்பியதும் மூன்று புறாக்களும் இன்னுமொரு பல்டி அடித்து எங்கள் கூரையைத் தொடும் அளவுக்கு இறங்கிவிட்டனர்.

ஆனால், அந்தக் கொடூரன் இதனால் பின்வாங்கவில்லை. கருப்பு மின்னலின் நாக்கு போல் அதுவும் தொடர்ந்தது. அதன் இரை, வளைந்து பல்டி போட்டு கூரைக்கு வந்துவிட்டார்கள். அங்கே என்னுடைய விரிந்த கைகளுக்கு கீழே பத்திரமாக இருந்தார்கள். அந்த நொடியில், காற்றே அலறுவது போன்ற ஒரு சத்தத்தைக் கேட்டேன். என் தலைக்கு ஒரு அடிக்கு மேலே, மஞ்சள் நெருப்பு கண்களில் தெறிக்க, நகங்கள் சர்ப்பங்களின் நாக்கு போல் நடுங்க, பருந்து பறந்து சென்றது. அது என்னைக் கடந்தபோது, காற்றைக் கிழித்துகொண்டு அதன் சிறகுகள் பறந்து செல்வதை என்னால் கேட்க முடிந்தது.

இவ்வாறாக என் பறவைகள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று போன உயிரை மீட்டுக் கொண்ட பிறகு, ஒரு நாள் வண்ணக்கழுத்துக்கு திசை உணர்வை கற்றுக்கொடுக்கத் துவங்கினேன். அன்று மூன்று பறவைகளையும் ஒரு கூண்டில் வைத்து, எங்கள் நகருக்கு கிழக்கு பக்கம் கொண்டு சென்றேன். சரியாக காலை ஒன்பது மணிக்கு அவர்களை திறந்துவிட்டேன். பத்திரமாக வீடு திரும்பிவிட்டார்கள். அடுத்த நாள், மேற்கு பக்கம் அதே அளவு தூரம் கொண்டு சென்றேன். ஒரு வாரத்திற்குள், குறைந்தது பதினைந்து மைல்கள் தொலைவில் எந்த திசையிலிருந்தும் வீட்டுக்குத் திரும்பி வரும் வழி தெரிந்துவிட்டது.

இந்த உலகில் எதுவும் பிரச்சனையில்லாமல் முடிவதில்லை. வண்ணக்கழுத்தின் பயிற்சியும் அப்படியொரு தடங்கலைச் சந்தித்தது. அவனையும் அவன் பெற்றோரையும் கங்கை நதியில் ஒரு படகில் கொண்டு போனேன். நாங்கள் கிளம்பும்போது, காலை ஆறு மணி இருக்கும். வானத்தில் மேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடந்தன. தென்றல் மிதமாக வீசிக் கொண்டிருந்தது. எங்கள் படகில், வெண்பனி போல அரிசி குவிக்கப்பட்டு, அதன் மேல் செம்மையும் பொன்னுமாக மாம்பழங்கள் குவிக்கப்பட்டிருந்த காட்சி. அஸ்தமன நேரத்தில் ஜ்வலிக்கும் வெள்ளைச் சிகரம் போல இருந்தது.

சிறுவனாக இருந்தாலும், எனக்கும் ஜூன் மாத பருவ மழையின் சேட்டைகள் கொஞ்சம் தெரியும். அருமையான இந்த வானிலை, திடீரென்று மோசமான புயலாக மாறக்கூடுமென்று நான் ஊகித்திருக்க வேண்டும்.

நாங்கள் இருபது மைல்தான் பயணித்திருப்போம், பருவத்தின் முதல் மழை மேகங்கள் வானின் குறுக்கே விரைந்தன. வேகமாக வீசிய காற்றில் எங்கள் படகின் பாய்மரத் துணியில் ஒன்று கிழிந்துவிட்டது. வீணடிக்க நேரம் இல்லாததை உணர்ந்து, கூண்டிலிருந்து மூன்று புறாக்களையும் திறந்துவிட்டேன். காற்றை எதிர்கொண்டதும், அவர்கள் வளைந்து, தண்ணீரில் முங்கிவிடும் அளவிற்கு தாழ்வாகப் பறந்தனர். இப்படியே நதியின் மட்டத்திற்கு நெருக்கமாக ஒரு கால் மணிநேரம் பறந்தார்கள். பலமான காற்றை எதிர்த்து அவர்களால் மிகக் கொஞ்சமாகவே முன்னேறிச் செல்ல முடிந்தது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து பறந்தார்கள். அடுத்த பத்து நிமிடங்கள், அவர்கள் வளைந்து நெளிந்து நிலத்தை அடைந்தார்கள். எங்களுக்கு இடப்பக்கம் இருக்கும் கிராமங்களை அவர்கள் நெருங்கும்போது, வானம் இருண்டு, முகிற்பேழை உடைந்து அடைமழை கொட்டியது. மைபோல் இருண்ட தண்ணீர் அடுக்குகளைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை. அதனூடே குறுக்கும் நெடுக்கும் மின்னல் வெட்டி, சாவுக் களியாட்டம் போட்டது. என் புறாக்கள் திரும்ப வரும் என்ற நம்பிக்கையே இல்லை. கிட்டத்தட்ட எங்கள் கப்பலும் உடைந்துவிட்டது. நல்லவேளையாக, ஒரு கிராமத்துக் கரையில் தரை தட்டி நின்றது.

அடுத்த நாள் நான் ரயிலில் வீடு வந்து நேர்ந்த போது, மூன்றுக்கு பதில், நனைந்த புறாக்கள் இரண்டு மட்டுமே இருந்தன. வண்ணக்கழுத்தின் அப்பா, புயலோடு போய்விட்டார். இதெல்லாம் என்னுடைய தவறுதான் என்பதில் சந்தேகமில்லை. அதைத் தொடர்ந்த நாட்களில், எங்கள் வீடே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. மழை கொஞ்சம் வெரித்தாலும், நானும் இரண்டு புறாக்களும் மொட்டை மாடிக்குச் சென்று, அப்பா எங்காவது தென்படுகிறாரா என்று வானத்தை அலசுவோம். ஆனால், அவர் திரும்பி வரவே இல்லை.

(தொடரும்)

One comment

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.