வண்ணக்கழுத்து 5(அ) – வண்ணக்கழுத்தைத் தேடி

5. வண்ணக்கழுத்தைத் தேடி

கீழே இருந்த பள்ளத்தாக்குகளின் ஒளியற்ற பாழில் இறங்கிச் சென்று கொண்டிருக்கையில் நாங்கள் தொடர்ந்து இருட்டுக்குள் ஆழ்ந்து கொண்டிருப்பதை திடீரென்று உணர்ந்தோம்.. ஆனால், மணியோ மதியம் மூன்றுகூட ஆகவில்லை. எங்களுக்கு மேலிருந்த உயர்ந்த சிகரங்களின் நீண்ட நிழல்களால் அந்தப் பகுதியே இருண்டிருந்தது. எங்கள் வேகத்தை அதிகரித்தோம். குளிர்ந்த காற்று சாட்டையால் அடித்தது போல் எங்களை விரட்டிச் சென்றது . இன்னுமொரு ஆயிரம் அடிகள் நாங்கள் இறங்கிய உடனே, மேலிருந்ததை விட காற்று கதகதப்பானது. ஆனால், வேகமாக இரவு கவிந்ததும் மீண்டும் குளிரத் துவங்கிற்று. நட்புடன் எங்களை அழைப்பது போலிருந்த ஒரு மடாலயத்தில் தங்க இடம் கேட்க வைத்தது. அந்தச் சத்திரத்தை அடைந்தோம். அங்கு பெளத்த துறவிகளும் லாமாக்களும் எங்களை பெருந்தன்மையுடன் உபசரித்தார்கள். எங்களுக்கு இரவு உணவு பறிமாறும்போதும் எங்களை எங்கள் அறைக்கு அழைத்துச் செல்லும்போதும் மட்டுமே எங்களிடம் பேசினார்கள். அவர்கள் தங்களுடைய மாலை நேரத்தை தியானத்தில் கழிப்பவர்கள்.

மலையின் பக்கவாட்டில் வெட்டப்பட்ட மூன்று சிறிய அறைகளை எங்களுக்கு கொடுத்தார்கள். அவற்றின் முன்பு, முனைகளில் சீராக வெட்டப்பட்ட புல்வெளி இருந்தது. நாங்கள் கொண்டு போன விளக்குகளால் பார்த்தபோது, அந்தக் கல் அறைகளில் வைக்கோல் படுக்கை மட்டுமே இருந்ததைக் கண்டோம். இருந்தாலும், இரவு விரைவாகக் கழிந்தது. நாங்கள் சோர்வாக இருந்ததால், அம்மாவின் மடியில் தூங்கும் பிள்ளைகள் போலத் தூங்கிவிட்டோம். அடுத்த நாள் காலை நான்கு மணிக்கு, பல காலடிச் சப்தங்கள் என் தூக்கத்தை முழுசாகக் கலைத்து விட்டன. படுக்கையிலிருந்து எழுந்து அந்தச் சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றேன். அங்கு பிரகாசமான விளக்குகளைக் கண்டேன். கீழே இறங்கி பின்னர் உயரமான படிகளில் மேலே ஏறிய பின், அந்த மடாலயத்தின் பிரார்த்தனைக் கூடத்தை அடைந்தேன். மலையில் நீண்டு உயர்ந்த ஒரு பாறைக்குக் கீழ் இருக்கும் ஒரு பெரிய குகை அது. அதன் மூன்று பக்கமும் திறந்தவெளியாய் இருந்தது. அங்கு எனக்கு முன் நின்றிருந்த எட்டு லாமாக்களும் தாங்கள் கொண்டு வந்த விளக்குகளை சத்தமில்லாமல் கீழே வைத்துவிட்டு, தியானம் செய்வதற்காக சம்மணமிட்டு அமர்ந்தார்கள். மங்கலான ஒளி அவர்கள் பழுப்பு நிற முகத்திலும் நீல ஆடையிலும் விழுந்தது. அந்த ஒளி, அன்பும் அமைதியும் அவர்கள் முகத்தில் நிறைந்திருந்ததை வெளிப்படுத்தியது..

இப்போது அவர்களுடைய தலைவர் என்னிடம் ஹிந்துஸ்தானியில், “தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்காக பிரார்த்தனை செய்வது எங்கள் நூற்றாண்டு கால வழக்கம். இரவின் இந்த நேரத்தில், தூக்கமின்மையால் பீடிக்கப்பட்டவன் கூட தூங்கியிருப்பான். தூங்கும்போது மனிதர்கள் தங்கள் பிரக்ஞைப்பூர்வ எண்ணங்களை மறந்திருப்பார்கள் என்பதால், அவர்களை எங்கெங்கும் நிறைந்திருக்கும் கருணை சுத்திகரிக்க வேண்டுமென்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவர்கள் காலையில் எழும் போது, அந்த நாளை தூய்மையான, கனிவான, தைரியமான எண்ணங்களோடு எதிர்கொள்வார்கள். நீயும் எங்களோடு தியானம் செய்வாயா?” என்று கேட்டார்.

உடனடியாக நான் ஒப்புக்கொண்டேன். மனிதகுலம் முழுமைக்கும் தயை கிடைக்க நாங்கள் பிரார்த்தனை செய்ய அமர்ந்தோம். இன்றைக்கும் நான் காலையில் சீக்கிரம் எழும்போதெல்லாம், இன்னும் தூங்கிக் கொண்டிருக்கும் அத்தனை ஆண்களுக்கும் பெண்களுக்குமாக இமாலயத்தில் பிரார்த்தனை செய்யும் அந்த பெளத்த துறவிகள் நினைத்துக் கொள்கிறேன்.

சீக்கிரமாக விடிந்துவிட்டது. இத்தனை நேரம் நாங்கள் மலைப்பிளவில் உட்கார்ந்து கொண்டிருப்பதை அறிந்தேன். எங்கள் காலடியில், கரடுமுரடான செங்குத்தான ஒரு அதலபாதாளச் சரிவு இருந்தது. சூரிய ஒளி படர்ந்திருந்த காற்றில் வெள்ளி மணிகளின் ஓசை மெல்ல எழுந்தது. வெள்ளியும் பொன்னுமாக ஒவ்வொரு மணியாக மெல்ல ஒலியெழுப்பி, இனிமையான இசையை ஒளிநிறைந்த காற்றெங்கும் நிறப்பின. இந்த மணியோசை, ஒளியின் தூதுவனுக்கு துறவிகள் சொல்லும் வணக்கம். இருள் மீது வெளிச்சம் கொண்ட வெற்றியையும் மரணத்தின் மீது வாழ்வு கொண்ட வெற்றியையும் முழங்கிக் கொண்டே சூரியன் உதித்தது.

ரட்ஜாவையும் கோண்டையும் கீழே காலை உணவு சாப்பிடும்போது சந்தித்தேன். அப்போதுதான் எங்களுக்கு உணவு பரிமாறிய துறவி, “உங்கள் புறா அடைக்கலம் தேடி நேற்று இங்கு வந்திருந்தது” என்றார். வண்ணக்கழுத்து எப்படியிருக்கும் என்பதை, அதன் மூக்குச் சதை என்ன நிறம் என்ன அளவு என்பது வர மிகக் கச்சிதமாக அவர் விவரித்தார்.

”நாங்கள் புறாவைத் தேடுகிறோம் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கோண்ட் கேட்டார்.

தட்டையான முகம் கொண்ட அந்த லாமா, கண்ணிமைக்காமல் அதே நொடியில் “என்னால் உங்கள் எண்ணங்களை அறிய முடியும்” என்றார்.

”எப்படி உங்களால் எங்கள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள முடியும்?” என்று ரட்ஜா கேட்டான்.

“இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களின் சந்தோஷத்திற்காக எங்கெங்கும் நிறைந்திருக்கும் கருணையிடம் தினம் நான்கு மணிநேரம் நீ பார்த்தனை செய்தால், பன்னிரண்டு ஆண்டுகளில், அவர் சிலருடைய எண்ணங்களைப் படிப்பதற்கான சக்தியை உனக்குத் தருவார். குறிப்பாக இங்கு வருபவர்களின் எண்ணங்களை வாசிக்கக் கூடிய சக்தியைத் தருவார். எங்களிடம் அடைக்கலம் புகுந்த போது, உங்கள் புறா எங்களால் போஷிக்கப்பட்டு தன் பயத்திலிருந்து மீண்டுவிட்டது.” என்றார் அந்தத் துறவி.

”கடவுளே! அவன் பயத்திலிருந்து விடுபட்டுவிட்டான்!” என்றேன் நான்.

அந்த லாமா மிக எளிமையாக ஆமோதித்தார். “ஆமாம் அவன் ரொம்ப பயந்துபோயிருந்தான். அதனால் அவனை என் கையில் ஏந்தி அவன் தலையைத் தடவிக் கொடுத்து, பயப்படாதே என்றேன். பிறகு நேற்று காலை அவனைப் போக விட்டுவிட்டேன். அவனுக்கு எந்த ஆபத்தும் வராது” என்றார்.

”எப்படி அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று பவ்யமாக கேட்டார் கோண்ட்.

அந்தச் சாமியார் இப்படிச் சொன்னார், “வேடர்களில் உயர்ந்தவரே, நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு விலங்கினமோ அல்லது மனிதனோ, எதிரியைக் கண்டு பயப்படும்வரை, அவனை தாக்கவோ கொல்லவோ முடியாது. பயத்தை விலக்கிய முயல்கள் கூட வேட்டை நாய்களிடமிருந்தும் நரிகளிடமிருந்தும் தப்பித்ததை நான் பார்த்திருக்கிறேன். பயம், ஒருவனின் அறிவை குழப்பம் கொள்ளச் செய்கிறது. பயம் ஒருவனின் நாடிநரம்புகளையும் முடக்குகிறது. எவன் தன்னை பயம் கொள்ள அனுமதிக்கிறானோ அவன் தன்னையே கொன்று கொள்கிறான்.”

“ஆனால், நீங்கள் எப்படி பறவையை பயத்திலிருந்து குணப்படுத்தினீர்கள்?” என்று ரட்ஜா கேட்டான்.

அதற்கு அவர், “நீ பயப்படாமல் இருந்தால், அதோடு தொடர்ந்து சில மாதங்கள் உன் எண்ணங்களை தூய்மையாகவும், தூக்கத்தில் எந்தவொரு பயமுறுத்தும் கனவும் இல்லாமல் பார்த்துக் கொண்டால், நீ எதைத் தொட்டாலும் அதன் பயம் சுத்தமாகப் போய்விடும். இருபது வருடங்கள் எண்ணம், செயல், கனவு என்று எதிலும் பயமே காணாத நான் என் கைகளில் ஏந்தியதால் உங்கள் புறா இப்போது பயம் இல்லாது இருக்கிறது. இப்போது உங்கள் புறா பாதுகாப்பாக இருக்கிறது. அதற்கு எந்தவொரு ஆபத்தும் வராது” என்றார்.

அடித்துப் பேசாமல், அமைதியான உறுதியோடு வந்து விழுந்த அவர் வார்த்தைகளைக் கொண்டு, வண்ணக்கழுத்து நிஜமாகவே பாதுகாப்பாக இருந்தான் என்பதை நான் உணர்ந்தேன். நேரத்தை வீணாக்காமல், புத்தரின் பக்தர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தெற்கு நோக்கி நகர்ந்தேன். லாமாக்கள் சொல்வது சரியென்றே நான் நம்புகிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் மற்றவர்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்தால், அவர்கள் அந்நாளை தூய்மையான, தைரியமான, அன்பு நிறைந்த எண்ணங்களோடு தொடங்க உதவ முடியும்.

இப்போது நாங்கள் டெண்டாம் நோக்கி வேகமாக இறங்கினோம். நாங்கள் போகப் போக இடங்கள் வெப்பமாகிக் கொண்டே வந்தன. அதோடு அவ்விடங்களின் பரிச்சயமும் கூடியது. அலிஞ்சை செடிகள் கண்ணில் படவில்லை. மேலே, இளஞ்சிவப்பு, பொன், குங்குமச்சிவப்பு, தாமிரம் என்று பல நிறங்களில் இலைகளைத் தொட்டிருந்த இலையுதிர்காலம், இங்கே அத்தனை தீவிரமாக இல்லை. செர்ரி மரங்கள், இன்னமும் பழங்களைத் தாங்கியிருந்தன. மரங்களில் பாசி தாட்டியாகப் படர்ந்திருந்தது. ஊதாவிலும் கருஞ்சிவப்பிலும் பூக்கும் ஆர்கிட்களின் மகரந்தங்களை அந்த மரங்களின் மீது காற்று கொண்டு சேர்த்திருந்தது. பாசியில் அவை உள்ளங்கை அளவுக்கு பர்ப்பிள், ஸ்கார்லெட் என்று செவ்வண்ணங்களில் மலர்ந்திருந்தன. கொளுத்தும் வெயிலில் வெள்ளை ஊமத்தைச் செடிகள் பனித்திவலைகளாய் வியர்த்திருந்தன. மரங்கள் உயரமாகவும் பயங்கரமாகவும் தோன்ற ஆரம்பித்தன. மூங்கில்கள் வானத்தைக் கிழிக்கும் ஸ்தூபிகள் போல மேல் நோக்கி உயர்ந்திருந்தன. மலைப்பாம்பைப் போல தாட்டியாக கொடிகள் எங்கள் பாதையில் படர்ந்திருந்தன. சில்வண்டின் ரீங்காரம் பொறுக்க முடியாத அளவிற்கு உயர்ந்தது. ஜே பறவைகள் மரங்களில் உளறிக் கொண்டிருந்தன. அவ்வப்போது பச்சைக் கிளிகள் தங்கள் மரகத அழகை சூரியன் முன் காட்டிக் காணாமல் போயின. பூச்சிகள் பெருகின. கருப்பு நிறத்தில் வெல்வெட் போன்ற, பெரிய பட்டாம் பூச்சிகள் மலர் விட்டு மலர் தாவிப் பறந்தன. எக்கச்சக்கமான சிறிய பறவைகள், ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் பூச்சிகளை, எண்ணமுடியாத அளவுக்கு தின்று தீர்த்தன. புழுக்களின் கூர்மையான கொடுக்குகளால் கொட்டப்பட்டோம். அவ்வப்போது, எங்கள் வழியில் கடக்கும் சர்ப்பங்களுக்காக நாங்கள் நின்று செல்லவேண்டியிருந்தது.

எந்த வழியில் மிருகங்கள் வந்து போயிருந்தன என்பது கோண்டிற்கு நன்கு தெரிந்திருந்தது. நன்கு பழக்கப்பட்ட அவருடைய கண்கள் மட்டும் இல்லையென்றால், பாம்போ எருமையா ஒரு பத்து முறையாவது எங்களைக் கொன்றுபோட்டிருக்கும். சிலசமயம், கோண்ட் தன் காதை பூமியில் வைத்து கேட்பார். பல நிமிடங்கள் கழித்து, “நாம் போகும் வழியில் எருமைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவை நம்மைக் கடக்கும் வரை காத்திருப்போம்” என்பார். சீக்கிரமே அவற்றின் கூர்மையான கால் குளம்புகள் மரங்களுக்கு கீழ் வளர்ந்திருக்கும் செடிகளின் ஊடே வருவதைக் கேட்க முடியும். கொடூரமான ஓசையோடு, அரிவாள் கொண்டு எங்கள் கால்களின் கீழ் இருக்கும் பூமியை வெட்டிக் கொண்டே வருவது போலிருக்கும். இருந்தும், மதிய உணவிற்காக அரை மணிநேரம் மட்டுமே ஓய்வு எடுத்துக் கொண்டு நாங்கள் தொடர்ந்து சென்றோம். கடைசியில் சிக்கிம் எல்லையை அடைந்தோம். அதன் சிறிய பள்ளத்தாக்கு, பழுத்துக் கொண்டிருக்கும் சிவப்பு சிறுதானியங்களுடனும், பச்சை ஆரஞ்சு பழங்களாலும், பொன்னிற வாழைப்பழங்களாலும் ஒளிர்ந்தது. மலையோரங்களில், சாமந்தியும் அதன் மேல் உயரங்களில் மென்மையாகப் பூத்திருக்கும் வயலட் மலர்களும் மினுமினுத்தன.

அப்போது நான் எப்போதும் மறக்கக் கூடாத ஒரு காட்சியைக் கண்டேன். அந்தக் குறுகிய பாதையில் எங்கள் காலடியில், அதிகமான வெப்பத்தால் காற்று பல வண்ணங்களில் ஒளிர்ந்தது. அங்கிருந்து சில கஜங்கள் நகரந்திருப்போம். அப்போது இடிச்சத்தம்போல, இமாலய பெஸண்ட்கள் ஒரு மிகப்பெரிய கூட்டமாய் உயர்ந்தெழுந்து மேலே பறந்தன. பின்னர், அவை சூடான காற்றில் மயில்களின் கொண்டைகள் போல் எரியம் சிறகுகளில் காட்டுக்குள் பறந்து சென்றன. நாங்கள் சென்று கொண்டே இருந்தோம். அடுத்த இரண்டு நிமிடங்களில் மற்றுமொரு பறவைக் கூட்டம் மேலே பறந்தது. ஆனால் இவை சேற்றின் நிறத்தில் இருந்தன. குழம்பிப் போய் கோண்டிடம் விளக்கம் கேட்டேன்.

அவர், “இங்கே சிறுதானியங்களை எடுத்துக் கொண்டு கடந்து போன வண்டிகளை நீ பார்க்கவில்லையா? ஒரு சாக்கு மூட்டையில் ஓட்டை இருந்திருக்கிறது. அது தைக்கப்படுவதற்கு முன், சில கைப்பிடி அளவு தானியங்கள் கீழே இறைந்திருக்கின்றன. பின்னர் இந்தப் பறவைகள் இங்கு வந்திருக்கின்றன, அவற்றைத் தின்று கொண்டிருக்கும்போது நாம் திடீரென்று வந்து, அவற்றை பயமுறுத்தி பறந்தோட வைத்து விட்டோம்” என்றார்.

அதற்கு நான், “ஏன் ஆண் பறவைகள் மிக அழகாகவும் பெண் பறவைகள் சேற்றின் நிறத்தில் சிறகுகள் கொண்டதாகவும் இருக்கின்றன? இயற்கை எப்போதுமே ஆண்களுக்கு சாதகமானதாக இருக்கிறதா?” என்று கேட்டேன்.

கோண்ட் இப்படி விளக்கினார். “இயற்கை அன்னை அனைத்து பறவைகளுக்கும் தங்கள் எதிரிகளிடமிருந்து ஒளிந்து கொள்ளும் வகையில் நிறங்களைத் தருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்தப் பறவைகளைப் பார். என்ன ஒரு அற்புத அழகு கொண்டிருக்கின்றன, ஒரு குருடனால் கூட இவற்றைக் கண்டுபிடித்து கொன்றுவிடமுடியுமில்லையா?”

“அவர்களால் முடியுமா?” என்று ரட்ஜா ஆச்சரியமாகக் கேட்டான்.

”இல்லை, உன் வயதுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வு உனக்கு இருக்கிறது. உண்மையான காரணத்தைச் சொன்னால், அவை எப்போதும் மரங்களிலேயே வாழும். பூமி மிக சூடாகும் வரை கீழே வராது. நம்முடைய உஷ்ணமான இந்தியாவில் பூமிக்கு இரண்டு இன்ச் மேலே காற்று பொரிவதால், காற்று ஆயிரக்கணக்கான வண்ணங்களைக் கொண்டு ஆடும். பெஸண்ட்களின் இறக்கை வண்ணமும் அது போலவே இருக்கும். நாம் அவற்றைப் பார்க்கும் போது, நாம் பறவைகளைப் பார்ப்பதில்லை. மாறாக, பறவைகளை முழுவதும் உருமறைத்துவிடும் பல வண்ணம் கொண்ட காற்றையே நாம் பார்க்கிறோம். அவை சாலையின் ஒரு பகுதி என்று நினைத்துக் கொண்டு தான் சற்று முன்பு கிட்டத்தட்ட அவற்றை நாம் மிதித்திருப்போம்” என்றார் கோண்ட்.

 “அது எனக்குப் புரிகிறது,” என்று பயபக்தியுடன் தொடர்ந்து கேள்வி கேட்டான் ராட்ஜா. “ஆனால் பெண் பறவைகள் ஏன் சேறு போல் இருக்கின்றன, அவை ஏன் ஆண் பறவைகளுடன் இணைந்து பறந்து போகவில்லை?”

கோண்டும் தயங்காமல் பதில் சொன்னார். “எதிரி நெருங்கி வந்து திடுக்கிடச் செய்யும் போது, ஆண் பறவை எதிரியை நோக்கிப் பறக்கும். இதில் வீரம் ஒன்றும் இல்லை. பெண்களின் இறக்கைகள் அத்தனை வலுவானதில்லை. மேலும், அவை மண் நிறத்தில் இருப்பதால், தன் இறக்கைகளைத் திறந்து அவற்றுக்கடியில் தன் குஞ்சுகளை மறைத்துக் கொண்டு, தரையோடு தரையாக படுத்துவிடும். பூமியின் நிறத்திற்கும் அதற்கும் வித்தியாசமே தெரியாது. எதிரி தான் கொன்ற ஆண் துணையின் உடலைத் தேடிப் போகும்போது, பெண் பறவைகள் தம் குழந்தைகளோடு பக்கத்திலிருக்கும் புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டுவிடும். வருடக் கடைசியாக இல்லாதபோது, வளர்ந்த குஞ்சுகள் தங்களுடன் இல்லாதபோதும், அம்மா பறவை தனியாக சிறகுகளை விரித்து, தன் குஞ்சுகளைக் காப்பது போன்ற பாவனையில் படுத்துக் கொள்ளும். தியாகம் என்பது அவற்றுக்கு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. குஞ்சுகள் இருக்கிறதோ இல்லையோ, பழக்க தோஷத்தில் தங்கள் சிறகுகளைத் திறந்து கொள்ளும். அதைத் தான் நாம் அவற்றை நோக்கி வரும்போது அவை செய்து கொண்டிருந்தன. பிறகு திடீரென்று தாங்கள் பாதுக்காக்க யாருமில்லை என்பது உணர்ந்து, நாம் தொடர்ந்து நடந்து வருவதைப் பார்த்து அவை பறந்தன. என்ன இருந்தாலும் பறப்பதில் அவற்றுக்கு சாமர்த்தியம் போதாது.”

அந்தி நெருங்கிவர சிக்கிமின் பெரிய மனிதர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் புகுந்தோம். அவருடைய மகன் எங்களுடைய நண்பன். அங்கு வண்ணக்கழுத்தின் சுவடுகளைப் பார்த்தோம். அவன் பலமுறை அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கிறான். எனவே, அவனுக்கு பழக்கமான இடத்தை கண்டவுடன், அங்கு சென்று சிறுதானியங்களை உண்டு, தண்ணீர் குடித்து, குளித்தும் இருக்கிறான். தன் இறக்கைகளையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருக்கிறான். அப்போது அவன் உதிர்த்த இரண்டு நீல இறகுகளை அவற்றின் அழகுக்காக என் நண்பன் எடுத்து வைத்திருந்தான். அவற்றைப் பார்த்தவுடனே, என் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அந்த இரவு பூரண அமைதியுடனும் மனநிறைவுடனும் தூங்கினேன். நன்றாகத் தூங்கியதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அடுத்த நாள் இரவை காட்டில் கழிக்க வேண்டும் என்பதால், எங்களை நன்றாகத் தூங்கச் சொல்லியிருந்தார் கோண்ட்.

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.