அந்தரங்க துணை

சிகந்தர்வாசி 

இன்று காலை நடைபழகும்போது நடராஜன் எதிரில் வந்தார். என்னுடன் நடக்க ஆரம்பித்தார்.

நடராஜன் உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்று சில வருடங்கள் ஆனாலும் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பவர். தினமும் ஷட்டில் ஆடுவார். காலையில் வாக்கிங்.

“லைப் எப்படி போயிண்டிருக்கு சார்?” என்று கேட்டேன்.

“என்னத்த சொல்ல சார், ஒரே தனிமையா இருக்கு. ரொம்ப லோன்லியா பீல் ஆறேன். அவ போயி அடுத்த மாசம் அஞ்சு வருஷம் ஆறது. அப்பா போன வருஷம் போயிட்டார். ஆபிசும் கிடையாது. ரொம்ப போர் சார்”

“ஏதாவது என்ஜிஓல சேருங்களேன் சார்”

அவர் உரக்க சிரித்தார், “நம்ப ஆபிஸ் பாலிடிக்ஸ் விட அங்க பாலிடிக்ஸ் ஜாஸ்தி இருக்கு. அதெல்லாம் முடியாத விஷயம்”

அவர் தனிமையைப் போக்க எதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். “உங்க அண்ணா நம்ப காம்ப்ளெக்ஸ்லதானே இருக்கார், அவர் வீட்டுக்கு போலாமே சார். அவரும் சும்மாதானே இருக்கார்?”

நடராஜன் விரக்தியாகச் சிரித்தது போல் இருந்தது. “அதெல்லாம் சொல்லுஷன் இல்ல சார்”

“சீரியல் பாக்கலாமே சார்” என்று சொல்ல வந்து அந்த எண்ணத்தைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.

ஒரு சுற்று மௌனமாகவே இருந்தோம். திடீரென்று அவர், “என்னதான் சொல்லுங்க சார், வாழ்க்கைல நமக்குன்னு ஒரு துணை வேணும்” என்றார்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.

“உண்மைதான் சார்” என்று சொல்லி வைத்தேன்.

உடனே அவர், “நான் ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் சார்” என்றார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “ஒ அப்படியா சார்? பெஸ்ட் விஷஸ்”

“தாங்க்ஸ்”

கை கொடுக்கும்போது எனக்குச் சிரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு கேட்டேன், “என்ன சார் லவ்வா?”

அவர் வெட்கப்பட்டார். சிரித்துக்கொண்டே, “அப்படியும் சொல்லலாம்” என்றார்.

“யார் அந்த லக்கி லேடி?”

“ஹ ஹ ஹ. எங்க தூரத்து சொந்தம்”

“இது எப்படி ஆச்சு சார்?”

“மெதுவா ஆச்சு. எனக்கு அவங்கள ரொம்ப நாளா தெரியும். அவங்க ஒரு விடோ. அவ ஹஸ்பெண்ட் சின்ன வயசுலேயே போயிட்டார், பாவம். இவதான் ரெண்டு பசங்களையும் வளர்த்து ஆளாக்கினா. பெரியவன் பரவாயில்ல. ஏதோ வேலைல இருக்கான். சின்னவன்தான் ரௌடித்தனம் பண்ணிண்டு போலீஸ்ல மாட்டிண்டான். முதல் முறையா போலிஸ் அடின்னா என்னன்னு அவனுக்கு தெரிஞ்சுது. அவ தஞ்சாவூர்ல இருந்தா. நாந்தான் அங்க போயி, தெரிஞ்சவா மூலமா அந்தப் பையன வெளில கொண்டு வந்தேன். அப்புறம் ஒரு வேலைல வெச்சேன். இப்போ சமத்தா வேல பண்றான். இதெல்லாம் நடக்கறப்போ எங்களுக்கு ஒருத்தர ஒருத்தர்க்கு பிடிக்க ஆரம்பிச்சுது. பசங்களுக்கு இத பத்தி சொன்னோம். அவங்களுக்கு சந்தோஷம். பேஷா கல்யாணம் பண்ணிக்கோங்கோன்னு சொல்லிட்டா”

“சூப்பர் சார். உங்க பொண்ணு என்ன சொன்னா?”

“அவளுக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை”

“எப்போ சார் கல்யாணம்?”

அவர் முகம் இருண்டது. “நாம சந்தோஷமா இருந்தா எல்லாருக்கும் பிடிக்காது. யாராவது ஏதாவது பண்ணுவா”

“யார் அப்ஜெக்ட் பண்றா?”

“வெளி ஆளு யாரும் இல்ல சார். கூட பொறந்த எங்க அண்ணன்”

“விஷ்வேஷ்வரன் மாமாவா?”

“அவரேதான்”

“அவரு எதுக்கு வேணாம்னு சொல்றார்?”

“யாருக்கு தெரியும் சார். எல்லாம் ஒரு வயத்தெரிச்சல் தான். எங்கடா இவன் சந்தோஷமா இருக்க போறானேன்னு அவனுக்கு பொறுக்கல. அவன் வருஷா வருஷம் பையன பாக்க அமெரிக்கா போயிட்டு வரான். ஆனா இப்போவும் நாரோ மைண்டெட்டாவே இருக்கான்”

“என்ன சொல்றார்?”

“நீங்களே அவர கேளுங்க சார். உங்க மேல அவருக்கு ஒரு மரியாதை இருக்கு. நீங்க வயசுல சின்னவர்தான், ஆனா நீங்க நல்லவர், இந்த அபார்ட்மெண்ட் ப்ராப்ளம்லாம் நல்லா சால்வ் பண்றீங்கன்னு அண்ணா அடிக்கடி சொல்லுவான். அதுனால ஒரு தரம் அவரோட பேசி இதுக்கு ஒத்துக்க வையுங்க சார்”

என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்தேன். அவர் என் கைகளை பற்றிக்கொண்டு, “ப்ளீஸ் சார். ஒரு முறை அவரோட பேசிடுங்க”, என்றார்.

“உங்களுக்கு வேற வேலையே இல்லையா? எதுக்கு ஊர்க்கார பிரச்னையெல்லாம் உங்க தலைல போட்டுக்கறீங்க? அவா அண்ணா தம்பி அடிச்சிப்பா, ஒண்ணா சேந்துப்பா. நீங்க எதுக்கு நடுவுல” – இதே தோரணையில் இன்னும் சற்று நேரம் எனக்கு என் மனைவி புத்திமதி கூறினாள். அன்று ஆபிஸ் செல்வது தாமதமாகியது.

அடுத்த நாள் காலை நான் நடைபயிற்சிக்குச் செல்ல சற்று தாமதமாகக் கிளம்பினேன். அப்பொழுதுதான் விஷ்வேஷ்வரன் மாமாவைப பிடிக்க முடியும் என்று எனக்கு தெரியும். நான் நினைத்தது போல் அவர் அப்பொழுது நடந்து வந்து கொண்டிருந்தார்.

“வணக்கம் சார்”

“வாங்க சார், வாங்க சார். என்ன இன்னிக்கு லேட்?”

“உங்களோட நடக்கலாம்ன்னுதான்”

உரக்கச் சிரித்தார். “நீங்க ரொம்ப தைரியசாலி. இந்த காம்ப்ளெக்ஸ்ல எவன் என்ன பாத்தாலும் ஓடறான். நீங்க என்னடான்னா என்னோட நடக்க வரேன்றீங்க. ஏதோ விஷயம் இல்லாத இதெல்லாம் நடக்காது. சொல்லுங்க என்ன விஷயம்?”

“எப்படி சொல்லறதுன்னு தெரியல. இது உங்க பர்சனல் விஷயம். அதான் கொஞ்சம்…”

“ஓஹோ. புரிஞ்சு போச்சு. அவன் உங்களோட நடக்கறப்போ இத சொல்லியிருப்பான். யார் கிட்டயாவது சொல்லுவான்னு எதிர்பார்த்தேன். மஞ்சுநாத்கிட்ட சொல்லுவான்னு நினைச்சேன். உங்ககிட்ட சொல்லிட்டானா, சரிதான்”

என்னைப பேச விடாமல் அவரே தொடர்ந்தார். “சார், நான் அடிக்கடி அமெரிக்கா போயிட்டு வரவன். அங்க ரெண்டாவது, மூணாவது கல்யாணம்லாம் சர்வ சாதாரணம். அது எனக்கு தெரியும். இருந்தாலும் நான் எதுக்கு இந்த கல்யாணம் வேணாம்னு சொல்றேன்? சொல்லுங்க பார்ப்போம்?”

அவர் கேள்வி கேட்பது நம் பதிலை எதிர்பார்த்து அல்ல. அது அவருடைய ஸ்டைல் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் எதுவும் பேசவில்லை.

“இதுல பல விஷயங்கள் இருக்கு. இவனுக்கு ரெண்டு வீடு இருக்கு. நல்ல பணம் இருக்கு. இத தவிர ஒரு பிளாட் வேற இருக்கு. ஷேர் நெறைய இருக்கு. எங்க அப்பாகிட்டேர்ந்து வேற நெறைய பணத்த கறந்திருக்கான். கடைசி காலத்துல அவன்கூடதானே இருந்தார் அவர்? இப்படி எக்கச்சக்கத்துக்கு அவன்கிட்ட பணம் இருக்கு. இப்போ புரியறதா உங்களுக்கு அந்த லேடி ஏன் இவன செலெக்ட் பண்ணான்னு?”

“அதுலயும் பாருங்க, அந்த லேடிக்கு ரெண்டு உருப்படாத பசங்க. ஒருத்தன் ஜெயிலுக்கு வேற போயிட்டு வந்திருக்கான். அன்னக்காவடி குடும்பம். பாத்தா. இவன கல்யாணம் பண்ணிண்டா அவளுக்கு நல்லது, அவ பசங்களுக்கும் நல்லது. வலைய விரிச்சா. இவனும் விழுந்தான். லேடீஸ் வலைய விரிச்சா ஆம்பளைகள் விழாம இருக்க முடியுமா? எனக்குதான் யாரும் விரிக்க மாட்டேங்கறா” என்று சொல்லிவிட்டு சிரித்தார். “ஒரு ஜோக்குக்கு சொன்னேன். போயி என் வைப்கிட்ட சொல்லிடாதீங்க” என்று சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தார்.

“இப்போ இவன் அவள கல்யாணம் பண்ணிண்டா சொத்து பூரா அவ ஸ்வாஹா பண்ணிடுவா. அப்புறம் இவன் பொண்ணுக்கு வரவேண்டியது? எங்க அப்பகிட்டேர்ந்து இவனுக்கு அந்த பிளாட் வந்திருக்கு. அது எங்க எல்லாருக்கும் சொந்தம். அத இவன் அவளுக்கு தாரை வார்த்துட்டான்னா? சொல்லுங்க சார். யாரோ ஒரு மூணாவது மனுஷி வந்து எங்க சம்பாத்தியத்தை எல்லாம் சுருட்டிண்டு போக விடமுடியுமா? நீங்களே சொல்லுங்க சார்”

“இந்த விஷயத்த பேசி தீர்த்துக்கலாமே சார்”

“எப்படி தீர்ப்பீங்க சார்”

“உங்களுக்கு தெரியும், நான் ஒரு சி.ஏ.ன்னு. அவர அவரோட சொத்து டீடைல்ஸ் எடுத்துண்டு வர சொல்லுங்க. நீங்களும் வாங்க. எங்க வீட்லயோ, இல்ல உங்க தம்பி வீட்லயோ உட்கார்வோம். டீடைல்ஸ் எல்லாம் பாத்து செட்டில் பண்ணிடுவோம். இது செட்டில் ஆனா உங்களுக்கும் நல்லது. அவரும் அவர் ஆசைப்படி கல்யாணம் பண்ணிக்கலாம்”

“ம்.ம். பார்ப்போம். சரி சார். இந்த ரவுண்டோட நான் முடிச்சிக்கறேன்” என்று சொல்லிவிட்டு அவர் கழண்டு கொண்டார்.

நான் நடை முடித்துவிட்டு வரும்பொழுது மஞ்சுநாத் எதிரில் வந்தான். “விஷேஸ்வரனுடன் அவர் தம்பி நடராஜன் கல்யாண விஷயம் பேசிக்கொண்டிருந்தாயா?” என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

“ஒ. உனக்கும் தெரியுமா?”

“எனக்கு ரெண்டு நாள் முன் அவர் சொன்னார். என்னை விஷ்வேஸ்வரனுடன் பேசச் சொன்னார். நான் மறுத்துவிட்டேன். அவர்கள் குடும்ப சண்டை நமக்கெதற்கு? என்ன சொன்னார் விஷ்வேஷ்வரன்?”

“அவருக்கு சொத்து பத்தி கவலையாக இருக்கிறதாம். நான் தீர்த்து வைப்பதாக சொன்னேன்”

“யூ ஆர் எ பூல்” என்று ஆரம்பித்து கால் மணி லெக்சர் கொடுத்தான். வீட்டுக்கு சென்று மனைவியிடம் நடந்ததை சொன்னேன். அவள் தலையில் அடித்துக்கொண்டாள். அன்றும் ஆபிஸ் செல்வது தாமதமாகியது.

மாலையில் நடராஜனைப் பார்த்தேன், “என்ன சார். பேசினீங்களா அவனோட?” என்று ஆர்வமாகக் கேட்டார். நடந்ததை விவரித்துவிட்டு “சண்டே எல்லா பைல்லோடயும் வாங்க சார். நாம இதுக்கு ஒரு முடிவு கட்டிடலாம்” என்றேன். ஏனோ “சரி” என்று சொன்னபோது அவர் குரலில் சுரத்தே இல்லை.

அடுத்த நாள் காலை நடக்கும்பொழுது என் எதிரில் நடராஜனும் விஷ்வேஸ்வரனும் ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டு வந்தார்கள். என்னை அவர்கள் கவனிக்கவில்லை. நானாக “ஹெலோ சார்” என்றேன். என்னைப் பார்த்தவுடன் இருவர் முகமும் மாறியது. ‘ம்’ என்று முகத்தை வைத்துக்கொண்டு தலையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு என்னை வேகமாக கடந்து சென்றார்கள். என் மனைவி இந்த காட்சியை பால்கனியிலிருந்து பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. இன்றைக்கும் ஆபிசுக்கு தாமதமாகும்.

ஒளிப்பட உதவி- caroleeclark.wordpress.com

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.