வண்ணக்கழுத்து 8 ஆ: பயணம் தொடர்கிறது…

வண்ணக்கழுத்து பகுதி 8ஆ: பயணம் தொடர்கிறது

“விரைவிலேயே என் கண்கள் செயலற்றுப் போயின. ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட கருப்புத் துணிகள் போல இருளின் மேல் இருள், கண்களில் கவிந்தது. என் இனத்தின் கடவுளர்களிடம் பிரார்த்தித்துவிட்டு தூங்க முயன்றேன். ஆனால் இந்த ஆந்தைகளின் அலறலில் யார் தான் தூங்க முடியும்? அந்த இரவெல்லாம் திகில் என்னைப் பற்றிக் கொண்டது. ஏதாவது ஒரு பறவை வலியில் கதறும் சத்தமில்லாமல் ஒரு மணி நேரம் கூடக் கழியவில்லை. வெற்றிக் களிப்பில் ஆந்தைகளும் அலறின. அவ்வப்போது ஒரு ஸ்டார்லிங்கோ புல்புல்லோ மரண ஓலமிட்டபடி ஆந்தையின் கோரப் பிடியில் சாகும். என் கண்கள் மூடியிருந்தாலும், நடந்து கொண்டிருந்த படுகொலைகளை என் காது அறிந்திருந்தது..

ஒரு காகம் கிறீச்சிட்டது. பிறகு மற்றொன்று, பிறகு இன்னொன்று. ஏறக்குறைய ஒரு கூட்டமே பீதியில் மேலே பறந்து மரங்களில் மோதிக் கொண்டன. ஆந்தைகளின் கூர்மையான கொடூரமான அலகுகளாலும் நகங்களாலும் கிழிக்கப்பட்டு கொல்லப்படுவதை விட இப்படிச் சாவது மேல். இந்தக் குழப்பங்களுக்கு இடையே, காற்றில் வீசல்களின் வாசனையை நுகர்ந்தேன். மரணம் கைக்கெட்டும் தூரத்தில் வந்துவிட்டதை அறிந்தேன். அது என்னை பதற்றம் கொள்ள வைத்தது.

என் கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரு பழுப்பு வெள்ளை ஒளி எல்லாவற்றின் மீதும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. என்முன், ஆறடி தொலைவில் ஒரு வீசல் நின்று கொண்டிருந்தது. அப்படிச் செய்வதில் ஆந்தைகள் என்னைக் கொல்லும் வாய்ப்பு அதிகம் என்றாலும் நான் மேலே பறந்தேன். நினைத்தது போலவே, ஒரு ஆந்தை அலறிக் கொண்டும் கிறீச்சிட்டுக் கொண்டும் வந்தது. மேலும் இரண்டு ஆந்தைகள் தொடர்ந்தன. அவற்றின் சிறகடிக்கும் சத்தத்தைக் கேட்டேன். சத்தத்தை வைத்தே நாங்கள் தண்ணீருக்கு மேலே பறக்கிறோம் என்பதை அறிந்தேன். எங்கள் இறக்கைகளின் சிறிய உதறல் கூட எதிரொலித்தது. எந்த ஒரு நேரத்திலும் ஆறடி தூரத்திறகு மேல் எனக்கு எதுவுமே தெரியவில்லை என்பதால் என்னால் எந்தத் திசையிலும் அதிக தூரம் பறக்க முடியவில்லை. அதனால், ஆற்றின் காற்றை உறிந்து ஆற்றுக்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் கிளைகளுக்கு அப்பால் கொண்டு செல்லும் ஒரு காற்றுச் சுழலுக்காக நான் மெல்லச் சிறக்கடித்துக் காத்திருந்தேன். ஐயோ அந்த ஆந்தைகள் நெருங்கிவிட்டன. ஆனால் நான் குட்டிக்கரணம் போட்டு வளைவாகப் பறந்தேன். ஆந்தைகளும் என்னைத் துரத்துவதை விடவில்லை. நான் இன்னும் மேலே ஏறினேன்.

இப்போது நிலவொளி, தண்ணீரைப் போல என் இறக்கைகளிலிருந்து சொட்டியது. என்னால் இன்னும் கொஞ்சம் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அது என்னுடைய தைரியத்தையும் மீட்டுக் கொடுத்தது. ஆனால் என் எதிரிகள் விட்டபாடில்லை. அவர்களும் மேலே வந்தார்கள். இன்னும் கொஞ்சம் வெளிச்சம் அவர்களின் கண்களின் விழுந்து, அவற்றைக் குருடாக்கின. ஆனால், பார்வையை முழுதாகப் பறிக்கவில்லை..

திடீரென்று அவற்றில் இரண்டு ஆந்தைகள் என் மீது பாய்ந்தன. நான் மேலே பறந்தேன். ஆகா!! ஆந்தைகள் என்னைத் தவறவிட்டு, ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. அவற்றின் நகங்கள் ஒன்றோடு ஒன்று சிக்கிக் கொண்டன. காற்றில் இறக்கைகளை அடித்துக் கொண்டும், பேய்களைப் போல அலறிக் கொண்டு, நதிக்கரையிலிருந்த புற்களின் மேல் விழுந்தன.

“இப்போது நான் கவனமாகப் பார்த்தேன். நான் நிலவை நோக்கிப் பறந்து வரவில்லை, விடியலை நோக்கி வந்திருக்கிறேன் என்பது ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே, பீதி நிறைந்த என் கண்கள் இதைக் கண்டிருக்கவில்லை. இப்போது இங்கு ங ஆந்தைகள் இல்லை. வளரும் சூரிய ஒளியிலிருந்து தப்பிக்க அவை மறைவிடங்களைத் தேடத் துவங்கியிருந்தன. நான் பாதுகாப்பாக உணர்ந்த போதிலும், மிகப் பெரிய மரங்களின் நிழல்களிலிருந்து விலகியே இருந்தேன். இப்போதும் அங்கு ஒரு ஆந்தை மறைந்திருக்கக் கூடும். நான் மரத்தில் மேலிருக்கும் ஒல்லியான கிளையில் அமர்ந்தேன். அது சூரியனின் முதற்கிரணங்கள் பட்டு ஆடும் தங்கக் குடை போல உருமாறியிருந்தது. மெதுவாக அந்த ஒளி இன்னும் கீழே படர்ந்து, கீழிருந்த வெள்ளை ஓடை வீசலின் கண்களைப் போல் பல வண்ணங்களில் மின்னியது.

“அப்போது நதிக்கரையில் பயங்கரமான ஒரு காட்சியைக் கண்டேன். நிலக்கரியை விட கருமையான இரண்டு காகங்கள், நாணல்களில் சிக்கிக் கொண்டு முழித்துக் கொண்டிருக்கும் ஆந்தையை தங்கள் அலகுகளால் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன. சூரிய ஒளியில், ஆந்தையால் தன் கண்களைத் திறக்க முடியவில்லை. அந்த இரவுப் படுகொலையில் காக்காய்களுக்கு பாதிப்பு அதிகம் தான். இப்போது ஆந்தைகளை அவற்றின் தவறுகளுக்கு பழிவாங்குவது காக்காய்களின் முறை. ஆனால், சிக்கிக் கொண்ட ஆந்தையை இரண்டும் கொல்வதை காணச் சகிக்கவில்லை. அதனால், அந்தக் கொலைகாரர்களிடமிருந்து விலகி, என் உழவாரக் குருவி நண்பர்களைத் தேடிப் பறந்தேன். என்னுடைய சில அனுபவங்களை அவர்களிடம் சொன்னேன். அந்தப் பெற்றோர், வேதனையில் எழும்பிய பயங்கர ஓலங்களை தாங்களும் கேட்டதாகச் சொன்னார்கள். அந்தச் சத்தம் அவர்களை தூங்கவிடவில்லை. ஆண் உழவாரக் குருவி வெளியில் எல்லா ஆபத்தும் நீங்கி விட்டதா என்று கேட்டார். பத்திரமாக இருப்பதாகவே நினைத்தேன். நாங்கள் வெளியில் வந்த போது, அந்த பாவப்பட்ட ஆந்தை புற்களிடையே இறந்து கிடந்தது.

“அன்று காலை நாங்கள் ஓடையில் வாத்துகளைப் பார்க்கவில்லை என்பது விசித்திரம் தான். அவை அதிகாலையிலேயே தெற்கு நோக்கிப் பறந்திருக்கலாம். நாங்களும் அவ்வாறே செய்ய முடிவெடுத்தோம். எங்கள் வழியோடு போகும் மற்ற பறவைகளோடு சகவாசம் வேண்டாம் நாங்கள் முடிவு செய்தோம். இடம் பெயரும் காலத்தில், எங்கெங்கெல்லாம் புறாக்கள், க்ரொஸ், மற்ற பறவைகள் போகின்றனவோ அவற்றின் எதிரிகளான ஆந்தைகள், பருந்துகள் மற்றும் கழுகுகளும் அவற்றின் பின்னால் போகும். ஆபத்தைத் தவிர்க்கவும், நாங்கள் முன்பு பார்த்த அதிர்ச்சி தரும் காட்சிகளைத் தவிர்க்கவும் நாங்கள் கிழக்கு நோக்கிப் பறந்தோம். ஒரு நாள் முழுக்க கிழக்கு நோக்கிப் பறந்த பிறகு, சிக்கிமில் ஒரு கிராமத்தில் ஓய்வெடுத்தோம். அடுத்த நாள், பகற்பொழுது பாதி காலம் தெற்கு நோக்கிப் பறந்துவிட்டு பிறகு கிழக்கு நோக்கிப் பறந்தோம். இது மாதிரி சுற்றிப் சுற்றிப் போக அதிக நேரம் எடுத்தது. ஆனால் அது எங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியது.

ஒருமுறை ஒரு புயற்காற்று எங்களைத் தடுமாறச் செய்து ஏரிக்கரையில் தள்ளியது. அங்கு நான் ஒரு அற்புதமான காட்சியைக் கண்டேன். நான் மரத்தின் உச்சியில் இருந்தேன். கீழே வளர்க்கப்பட்ட வாத்துகள் நிறைய நீரில் மிதந்து கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் வாயில் ஒரு மீனை வைத்திருந்தது. ஆனால், எதுவும் தன் இரையை விழுங்கவில்லை. வாத்துகள் மீன்களை உண்ணாமல் தங்களை இப்படிக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு போதும் நான் பார்த்ததில்லை. எனவே உழவாரக் குருவிகளையும் இதைக் காண அழைத்தேன். அவை மரங்களின் கிளைகளில் ஒட்டிக் கொண்டு வாத்துகளைப் பார்த்தன. அவைகளால், தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. இந்த வாத்துகளுக்கு என்ன ஆயிற்று? சீக்கிரமே ஒரு படகு கண்ணில் தட்டுப்பட்டது. இரண்டு மனிதர்கள் அதைச் செலுத்திக் கொண்டு வந்தார்கள். தட்டையான மூஞ்சியோடு மஞ்சள் நிற சருமத்துடன் இருந்த. அவர்களைக் கண்டவுடன், வாத்துகள் தங்களால் முடிந்த வரை வேக வேகமாக படகு நோக்கி விரைந்தன. படகை அடைந்தவுடன், அதன் மீது ஏறி தாங்கள் பிடித்த மீன்களை அதிலிருந்த பெரிய மீன் கூடையில் போட்டன. பிறகு ஏறியில் குதித்து இன்னும் சில மீன்களைப் பிடிக்கப் போயின.

உங்களால் நம்ப முடிகிறதா? இது ஒரு இரண்டு மணிநேரங்கள் தொடர்ந்தது. அந்த திபெத்திய பர்மிய மீனவர்கள் வலையே வீசவில்லை. அவர்கள் ஒரு நூலை கிட்டத்தட்ட மென்னியை அடைக்கும் அளவிற்கு, வாத்துகளின் கழுத்தைச் சுற்றிக் கட்டி, மீன்பிடிக்க ஏரிக்கு அழைத்து வந்திருந்தார்கள். வாத்துகள் எதைப் பிடித்தாலும் அதைத் தன் எஜமானர்களிடம் கொண்டு வந்து கொடுத்தன. அவர்களின் மீன் கூடை நிரம்பியதும்தான் வாத்துகளின் கழுத்தில் சுற்றியிருந்த கயிற்றை அழித்து விட்டார்கள். வாத்துகள் மீண்டும் ஏரியில் பாய்ந்து, வயிறு முட்ட மீன்களைச் சாப்பிட்டன..

“இப்போது சிறிது நேரம் ஏரிகளை விட்டு வெகு தூரம் விலகி, விளைநிலங்களைத் தேடிப் பறந்தோம். அங்கு, புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியங்களுக்கு மேலே பறந்த பூச்சிகளை உழவாரக் குருவிகள் தின்றன. நானும் மித மிஞ்சிய அளவுக்கு தானியங்களைத் தின்றேன். தானியங்களை மட்டும் தான் பூச்சிகளை அல்ல. ஒரு நெல் வயலின் வேலியில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, யாரோ எதையோ அடிப்பதைக் கேட்டேன். ஒரு செர்ரி கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்பை எடுக்க, ஒரு சாஃபின்ச் தன் அலகால் உடைக்கும் சத்தம் போலிருந்தது அத்தனை சக்தி. ஒரு பாக்குவெட்டியைப் போன்ற பலம் அந்தச் சின்னப் பறவையின் அலகுக்கு இருப்பது ஆச்சரியமில்லையா? ஆனால், நான் சத்தம் வரும் இடத்தை நெருங்கி கீழே பார்க்கையில், அங்கே வேறொரு பறவையைப் பார்த்தேன். அது ஒரு ஹிமாலய த்ரஷ். அது செர்ரி கொட்டையை உடைத்துக் கொண்டிருக்கவில்லை. மெதுவாக நகரும் ஒரு நத்தையைத் அலகால் குத்திக் கொண்டிருந்த்து. டிக், டாக், டிக், டாக்…. டாக்! அந்த நத்தை அசையாமல் நிற்கும் வரை கொத்திக் கொண்டேயிருந்தது. அந்த த்ரஷ் தலையை உயர்த்தி சுற்றிலும் நோட்டமிட்டுவிட்டு, தத்தித் தத்தி நடந்து, நுனிகால்களில் நின்று, சிறகுகளை விரித்து, விரைவாக குறிபார்த்துவிட்டு டாக் டாக் டாக் என்று மேலும் மூன்று தடவை குத்தியது. ஓடு பிளந்து ருசியான நத்தை வெளிப்பட்டது. தன் அலகால் அதை தூக்கியது. அலகில் கொஞ்சம் ரத்தம் கசிந்தது. அது தன் வாயை கொஞ்சம் அகலமாகத் திறந்து, அதன் ஓரங்களில் புண்படுத்திக் கொண்டுவிட்டது. நத்தையை சரியாக பிடியில் இருத்திக் கொண்டு, இரவு உணவுக்காக தன் துணை காத்துக் கொண்டிருக்கும் மரத்திற்குள் பறந்து மறைந்தது.

”சிக்கிமின் விளைநிலங்களோடே தொடர்ந்த எங்கள் பயணத்தில் நிகழ்வுகள் ஒன்றும் இருக்கவில்லை. நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு மதிப்புள்ளதென்றால், அது காட்டில் மனிதர்கள் மயில்களைப் பிடித்தது தான். இந்தப் பறவைகள் உண்ணும் பாம்புகளும் மற்ற உயிரினங்களும் வடக்கே குளிர்கால உறைவிடங்களுக்குப் போய்விடுவதால், இவை உணவைத் தேடி வெப்பமான தெற்கு சதுப்பு நிலங்களுக்கு வருகின்றன.

“மயில்களும் புலிகளும் ஒன்றையொன்று ரசிப்பவை. மயில்களுக்கு புலிகளின் தோலைப் பார்க்கப் பிடிக்கும். புலிகளுக்கு மயில்களின் தோகையைப் பிடிக்கும். சில சமயம் குட்டையில், புலி ஒன்று கிளையில் மேலிருக்கும் மயிலின் தோகையை நின்று பார்த்துக் கொண்டிருக்கும். மயிலும் தன் கழுத்தை வளைத்து புலியின் வரிவரியான தோலின் அழகை ரசித்துக் கொண்டிருக்கும். இப்போது காலாகாலத்திற்கும் ஆக்கிரமிப்பாளனான மனிதன் காட்சிக்குள் வருகிறான்.

ஒரு நாள், மனிதன் ஒருவன் புலியின் தோல் மாதிரியே வரையப்பட்ட ஒரு துணியைக் கொண்டு வந்தான். எந்தப் பறவையும் அது நிஜமான புலியில்லை என்று பார்த்தமாத்திரத்தில் சொல்ல முடியாது. பிறகு, அருகிலிருந்த மரத்தின் கிளையில் ஒரு சுருக்கை தயார் செய்துவிட்டு அவன் மறைந்துவிட்டான். அந்த துணியின் வாசனையை வைத்தே அது புலி இல்லை என்று நான் சொல்லிவிடுவேன். ஆனால், மயில்களின் மோப்பம் பிடிக்கும் ஆற்றல் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. அவற்றின் கண்களே அவற்றை ஏமாற்றிவிட்டன. சில மணிநேரத்தில் ஒரு ஜோடி மயில்கள் அங்கு வந்து, மர உச்சியிலிருந்து புலி போலிருந்த துணியை பார்த்தன. இன்னும் கீழே கீழே இறங்கின. புலி தூங்குகிறது என்ற நம்பி ஏமாந்து போயின. அதே நினைப்பில் அவை அருகில் வந்து பொறியின் பக்கத்திலிருந்த ஒரு கிளையில் நின்றன. பொறியின் மீது அடி வைக்க அதிக நேரம் ஆகவில்லை. ஆனால், இரண்டுமே ஒரே பொறியில் எப்படிச் சிக்கிக் கொண்டன என்பது எனக்கு விளங்கவில்லை. பிடிபட்ட உடனேயே அவை சோகத்தில் கத்தின. பிறகு பொறி வைத்தவன் வந்து, இன்னொரு தந்திரம் செய்தான். இரண்டு பெரிய கருப்பு நிற கான்வாஸ் முகமூடிகளை அவற்றின் தலையில் போர்த்தி மயில்களின் கழுத்தில் முடிச்சு போட்டு, அந்தப் பாவப்பட்ட பறவைகளின் கண்களை மூடிவிட்டான். கண்கள் இருண்டவுடன் எந்தப் பறவையும் அதிக எதிர்ப்பு காண்பிப்பதில்லை. அவன் அவை நடக்க முடியாதபடிக்கு கால்களையும் கட்டிவிட்டான். பிறகு அவனுடைய மூங்கில் கம்பில், அவற்றை முனைக்கு ஒன்றாக கட்டினான். மெதுவாக அதன் நடுப்பகுதியில் பிடித்து தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு நடக்கத் துவங்கினான். வானவில்லினால் ஆன அருவி போல, மயில்களின் தோகைகள் அவனுக்கு முன்னாலும் பின்னாலும் தொங்கிக் கொண்டிருந்தன.

“என்னுடைய பயணம் இங்கே முடிகிறது. அடுத்த நாள் உழவாரக் குருவிகளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன். அவர்கள் தெற்கு நோக்கிப் போனார்கள். நான், புத்திசாலியான சோகமான பறவையாக வீடு திரும்பி மகிழ்ந்தேன். இப்போது ஒன்றைச் சொல். ஏன் பறவைகள் மற்றும் மிருகங்களுக்கு மத்தியில் இத்தனை கொலையும் துன்புறத்தலும் நடக்கின்றன? மனிதர்கள் நீங்கள் இப்படி ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்வதாகத் தெரியவில்லையே. அப்படித்தானே? ஆனால் பறவைகளும் மிருகங்களும் காயப்படுத்திக் கொள்கின்றனவே. இது எல்லாம் என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்துகிறது” என்றது வண்ணக்கழுத்து.

(தொடரும்…)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s