இப்போது திடீரென்று பல வீடுகளின் மாடியிலிருந்து ‘வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து!’ என்ற கூச்சல் எழுந்தது. புறா விரும்பிகள் பலர் அவனுடைய பெயரைக் கூவிக் கொண்டிருந்தார்கள். இப்போது என்னால் கொஞ்சம் கூடப் பிழையில்லாமல் காண முடிந்தது. தலைவர்களுள் தலைவனாய் என்னுடைய புறா ஒரு பெரிய கூட்டத்தின் முன்னின்று, அவர்களுடைய பயணத்தை வழிநடத்தியது. எத்தனை பெருமிதமான தருணம் அது! அவன் அவர்களை இந்த அடிவானத்திலிருந்து அந்த அடிவானம் நோக்கி வழிநடத்தினான். ஒவ்வொரு முறையும் புறாக்கள் சீரான இடைவெளையில் சில அடிகள் மேலே உயர்ந்தன. காலை எட்டு மணியளவில் வானத்தின் எந்த மூலையிலும் ஒரு புறாவைக்கூட காணமுடியவில்லை. இப்போது எங்கள் கொடிகளை சுருட்டிவைத்துவிட்டு, பாடங்களைப் படிக்க கீழே சென்றுவிட்டோம். மதியம் நாங்கள் மீண்டும் மாடிக்குச் சென்றபோது, புறாக்கூட்டம் மொத்தமாக இறங்குவதை அனைவராலும் பார்க்க முடிந்தது. வண்ணக்கழுத்துதான் இன்னமும் வழிநடத்திக் கொண்டிருந்தான். மறுபடியும் “வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து! வண்ணக்கழுத்து!” என்ற சத்தம் உயர்ந்தது. புறாக்களுக்கு தலைவனாக நான்கு மணிநேரத்திற்கு மேல் நிலைத்திருந்ததால், அவன் பரிசை வென்றான். மேலே சென்றது போலவே கீழே இறங்கிக் கொண்டிருந்தான் அவன்- இப்போது தலைவன்!
பறப்பதன் அபாயகரமாக நிகழ்வு இப்போது வந்தது. அந்தப் பெரிய கூட்டத்தின் தளபதி கலைந்துச் செல்ல ஆணையிட்டான். பெரிய கூட்டத்திலிருந்து ஒவ்வொரு கூட்டமாகப் பிரிந்து, தங்கள் வீடு நோக்கிச் சென்றன. ஆனால், மிக வேகமாகச் செல்லவில்லை. அவர்கள் வீடு நோக்கிச் செல்லும்போது, அவர்களுக்கு மேலே வானத்தில் யாராவது காவல் காக்க வேண்டும். மற்ற போட்டியாளர்களின் புறாக்கள் கீழிறங்க, அவர்களைப் பின்னிருந்து காவல்காக்க, வண்ணக்கழுத்து என்னுடைய சிறிய புறாக்கூட்டத்தை ஒரு குடையாய் வியூகம் அமைத்து நிறுத்தினான். இதுதான் தலைமைக்குக் கொடுக்கும் விலை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் தியாகம்.
ஆனால், இப்போது கோரமான முடிவொன்று துவங்கியது. இந்தியாவில் குளிர்காலங்களில், பெரும்பருந்து இனத்தில் ஒன்றான ராஜாளி தெற்குப் பக்கம் வரும். அவை இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்ணாது. கழுகையும் பருந்தையும் போல, ராஜாளியும் தான் தன் நகங்களால் கொன்றதை மட்டுமே உண்ணும். அவை மோசமானவை, கபடம் நிறைந்தவை. கழுகுகளில் கொஞ்சம் தாழ்வானவை என்று நினைக்கிறேன். அவற்றின் இறக்கைகள் ஓரத்தில் கிழிந்திருக்காது என்றாலும், அவை பருந்தைப் போல இருக்கும். ஜோடியாக பருந்துக் கூட்டத்திற்கு கொஞ்சம் மேலே பறக்கும். இதனால், இவற்றின் இரையின் பார்வையிலிருந்து தப்பித்துவிடும். ராஜாளிகள் தங்கள் இரையைப் பார்க்க முடியும். ஆனால், இரைகளால் அவற்றை பார்க்க முடியாது.
வண்ணக்கழுத்து தலைமைக்கான போட்டியில் வென்ற சற்று நேரத்தில், பருந்துக் கூட்டத்திற்கு மேலே ஒரு ராஜாளி ஜோடி பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த நொடியிலேயே, விரல்களை என் வாயில் வைத்து கிறீச்சென்று சீட்டியடித்தேன். வண்ணக்கழுத்து என்னுடைய சமிக்ஞையைப் புரிந்து கொண்டான். தான் மையத்தில் நின்று கொண்டு, மற்றவர்களின் இடத்தை மாற்றியமைத்தான். இப்போது அந்தக் கூட்டம் ஒரு பிறையைப் போன்ற வடிவத்தில் பறந்து கொண்டிருந்தது. ஜகோரேவையும் ஹிராவையும் பிறையின் இரண்டு முனைகளை பார்த்துக் கொள்ளப் பணித்தான். மொத்த கூட்டமும் ஒரு பெரிய பறவையைப் போல ஒன்றாகப் பறந்தன. வேக வேகமாக கீழே இறங்கத் துவங்கின. அவை எதற்காக வானத்தில் ஏறினவோ அந்த வேலை இப்போது முடிந்திருந்தது. அவர்களோடு காலையில் விளையாடிக் கொண்டிருந்த புறாக்கூட்டங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டன.
இவை வேகமாக இறங்குவதைக் கண்டு ஒரு ராஜாளி, இமாலய விளிம்பிலிருந்து விழும் பாறை போல அவர்கள் முன்னால் விழுந்தது. என் பறவைகள் இருக்கும் நிலைக்கு வந்தவுடன் தன்னுடைய இறக்கையை விரித்து அவர்களை நேருக்கு நேர் எதிர் கொண்டது. இதுவொன்றும் புதிதல்ல. ஒவ்வொரு ராஜாளியும் புறாக் கூட்டத்தைப் பயமுறுத்த இதையே செய்து வந்திருக்கிறது. அதில் பதினொன்றுக்கு பத்து முறை வெற்றியும் பெற்றுவிடும் என்பதை மறுக்க முடியாது. அவை புறாக்களின் முன்னால் வரும் போது, புறாக்கள் தங்கள் உறுதி இழந்து, பீதியில் ஓர் ஒழுங்கில்லாமல் எல்லாத் திசைகளிலும் பறக்கும். இப்போதும், அந்த ராஜாளி அதைத்தான் எதிர்பார்த்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தந்திரமான நம் வண்ணக்கழுத்து, கொஞ்சம் கூட அசராமல், இறகுகளை அடித்துக் கொண்டு, மொத்த கூட்டத்தையும் எதிரிக்கு ஐந்தடிக்குக் கீழே பறக்கச் செய்தது. எதிரி ஒருபோதும் ஒற்றுமையாக இருக்கும் கூட்டத்தை தாக்காது என்பதை அறிந்தே அவன் இப்படிச் செய்தான். ஆனால் அவன் சில நூறு அடிகள் பறந்திருக்க, இரண்டாவது ராஜாளி, பெண் ராஜாளியாக இருக்கலாம், புறாக்களின் முன்னால் விழுந்து தன் கணவனைப் போலவே இறக்கையை விரித்தது. ஆனால், வண்ணக்கழுத்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. மொத்த கூட்டத்தையும் அந்த ராஜாளியை நோக்கி நேராகச் செலுத்தியது. இதை நினைத்துப் பார்க்கவும் முடியாது. எந்தப் புறாவும் இதுவரை இது போலச் செய்யத் துணிந்ததில்லை. பெண் ராஜாளி, பறந்து ஓடிவிட்டது. அது கொஞ்சம் திரும்பியிருக்கும், உடனே வண்ணக்கழுத்தும் மற்ற புறாக்களும் தங்களால் முடிந்த அளவுக்கு வேகமாக கீழே இறங்கின. எங்கள் கூரைக்கு மேலே அறநூறு அடிக்குக்குப் பக்கத்தில் அவை வந்துவிட்டன. ஆனால் விதி. ராஜாளி வடிவில் ஒரு ஒரு வெடிகுண்டைப் போல மீண்டும் விழுந்தது. இந்த முறை பிறை வடிவத்திற்கு நடுமத்தியில் விழுந்து, தன் இறக்கைகளையும் அலகையும் தீப்பொறிகள் போல விரித்தது. கூடவே அலறலும் கிறீச்சிடுதலும். இது தாக்கத்தை ஏற்படுத்தியது. உறுதியான ஒரே கூட்டமாக இருந்த புறாக்கள் இப்போது இரண்டு பாகமாகப் பிரிந்துவிட்டன. ஒரு பாதி வண்ணக்கழுத்தைப் பின் தொடர்ந்தது. இன்னொரு பாதி பயத்தால் பீடிக்கப்பட்டு எங்கெங்கோ பறந்தது. ஒரு நல்ல தலைவன் ஆபத்துக் காலத்தில் என்ன செய்வானோ, அதை வண்ணக்கழுத்து செய்தான். பயத்தால் சிதறிய கூட்டத்தைப் பின் தொடர்ந்து, அதை முந்திச் சென்று, மீண்டும் இரண்டு பாதியையும் ஒரு பெரிய கூட்டமாக இணைத்துக்கொண்டான்.
இப்போது பெண் ராஜாளியின் முறை. இரண்டு பாதியும் இணைந்த சற்று நேரத்திற்கெல்லாம் பெண் ராஜாளி வண்ணக்கழுத்திற்கும் மற்ற புறாக்களுக்கும் நடுவே விழுந்தது. கிட்டத்தட்ட அவன் வால் மேலேயே விழுந்து, அவனையும் மற்ற புறாக்களையும் பிரித்துவிட்டது. தங்களுடைய வழிகாட்டியை இழந்த புறாக்கள், எதையும் கணக்கில் கொள்ளாமல் பாதுகாப்பைத் தேடிப் பறந்தன. எந்தப் பக்கத்திலிருந்தும் தாக்கக் கூடிய வகையில் வண்ணக்கழுத்து தனித்துவிடப்பட்டான். இப்போதும் அசராமல், கீழே இறங்கிக் கொண்டிருக்கும் தன்னுடைய கூட்டத்தை நோக்கிச் செல்ல முயன்றான். ஒரு டஜன் அடிகள் கீழே இறங்கியிருப்பான், ராஜாளி அவன் முன்னால் பறந்து வந்தது. இப்போது எதிரி கிட்டத்தில் வர, அவனுடைய தைரியம் அதிகமானது. ஒரு கரணம் போட்டான். அவனது அதிர்ஷ்டம், நல்ல காரியம் செய்தான். இல்லையென்றால், அவனுக்குப் பின்னால் நகங்களை நீட்டிக் கொண்டு வந்த பெண் ராஜாளி அவனை அங்கேயே அப்பொழுதே பிடித்திருக்கும்.
இது நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் என்னுடைய மற்ற புறாக்கள் வேகமாக பறந்து கிட்டத்தட்ட என் வீட்டை அடைந்துவிட்டன. கனிந்த பழங்கள் மரத்திலிருந்து விழுவதைப் போல வேக வேகமாக அவை கூரையில் விழுந்தன. ஆனால், அவற்றில் ஒன்று மட்டும் கோழையல்ல. மாறாக முழுக்க முழுக்க வீரத்தின் உருவம் அது. அவன்தான் கருமுத்து ஜகோரே. மொத்தக் கூட்டமும் எங்கள் கூரையில் இறங்கிவிட, ஜகோரே மட்டும் கரணம் போட்டு உயரே பறந்தான். அவனுடைய நோக்கம் என்னவென்பது தெளிவாகத் தெரிந்தது.. அவன் வண்ணக்கழுத்துக்கு துணையாக இருக்கப் பறக்கிறான். அவன் மீண்டும் கரணம் போட, ராஜாளி தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டுவிட்டது. வண்ணக்கழுத்தைத் துரத்துவதை விட்டுவிட்டு, ஜகோரேவை நோக்கிப் பறந்தது. உங்களுக்குத் தான் வண்ணக்கழுத்தைப் பற்றித் தெரியுமே, அவன் ஜகோரேவைக் காப்பாற்ற கீழே இறங்கினான். மின்னலைப் போலே வேகமாக வட்டமடித்துக் கொண்டும் வளைந்து கொண்டும் இறங்கினான். அவன் பின்னால் வந்த பெண் ராஜாளிக்கு மூச்சுவாங்கியது. வண்ணக்கழுத்து போட்ட அத்தனை வளைவுகளையும் அதனால் போட முடியவில்லை. எண்ணிக்கையில் கிட்டக்கூட வரமுடியவில்லை. ஆனால் அனுபவசாலியான ஆண் ராஜாளி குறிவைப்பதற்காக மேலே மேலே ஏறியது. இதனால் ஜகோரேவுக்கு ஆபத்து வந்தது. ஒரே ஒரு தவறான முடிவு போதும், ராஜாளி, ஜகோரேவைப் பிடிக்க. பாவம் இந்தப் பறவைகள்; எதைச் செய்திருக்கக் கூடாதோ, ஜகோரே அதைச் செய்தான். ஆண் ராஜாளிக்கு கீழே, நேர்க் கோட்டில் பறந்தான். ராஜாளியோ தன் இறக்கையை முடுக்கிக் கொண்டு, மெளனத்தின் இடியைப் போல விழுந்தது. எந்தச் சத்தமும் கேட்கவில்லை. ’சத்தத்தின் நிழல்’ கூடக் கேட்கவில்லை. கீழே, கீழே, கீழே மரணத்தின் உருவமாக அது விழுந்தது. அப்போதுதான் மிகக் கொடுமையான அந்த விஷயம் நடந்தது. எப்படி என்றே தெரியவில்லை, ஆனால் ஜகோராவைக் காப்பாற்றவும் எதிரியை சலிப்படையச் செய்யவும் வண்ணக்கழுத்து, ஜகோரேவுக்கும் ராஜாளிக்கும் நடுவே நுழைந்தான். தாக்குதலை நிறுத்துவதற்கு பதில், ராஜாளி தன் நகங்களை முடுக்கிக் கொண்டு, நடுவே நுழைந்தவனைப் பிடித்துவிட்டது. இறுக்கிப் பிடிக்கவில்லை தான், ஆனால் காற்றெங்கும் இறகுகள் பொழிந்தன.
எதிரியின் பிடியின் வண்ணக்கழுத்தின் உடல் துடிப்பதைப் பார்க்க முடிந்தது. பழுக்கக் காய்ச்சிய ஒரு இரும்புக் கம்பி என்னில் நுழைந்தது போல் நான் என் பறவைக்காக வலியால் துடித்து அலறினேன். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. வட்ட வட்டமாக, உயரே உயரே அந்த ராஜாளி வண்ணக்கழுத்தை தூக்கிச் சென்றது. கூடவே, தன் நகங்களால் இன்னும் இறுகப் பிடிக்க முயன்றது. இங்கே நான் வெட்கப்பட வேண்டிய ஒன்றைச் சொல்லியாக வேண்டும். வண்ணக்கழுத்தைக் காக்க மிகத் தீவிரமாக இருந்த நான், பெண் ராஜாளி விழுந்து ஜகோரேவைப் பிடித்துவிட்டதைக் கவனிக்கவில்லை. வண்ணக்கழுத்து பிடிபட்ட உடனேயே இது ரொம்ப வேகமாக நடந்திருக்க வேண்டும். இப்போது காற்று முழுக்க ஜகோரேவின் இறகுகள். எதிரி அவனை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்த்து. அவனும் தன்னை விடுவித்துக் கொள்ள அசையக் கூட இல்லை. ஆனால், வண்ணக்கழுத்து அப்படியில்லை. அவன் ஆண் ராஜாளியின் பிடியில் இன்னமும் துடித்துக் கொண்டிருந்தான். தன் துணை இரையை மேலும் இறுக்கமாக பிடிக்க உதவி செய்யப் போவதைப் போல, பெண் ராஜாளி தன் துணைக்கு வெகு அருகில் பறந்தது. அப்போது பார்த்து ஜகோரேவும் விடுபடப் போராடினான். அது பெண் ராஜாளியை ஆடச் செய்ததால், அதன் இறகு துணையின் இறகு மீது மோதியது. ஆண் ராஜாளி தன் சமநிலையை இழந்தது. அது காற்றில் கிட்டத்தட்டக் கவிழ்ந்துவிட, மீண்டும் ஒரு இறகு மழையோடு வண்ணக்கழுத்து அதன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான். அவன் கீழே விழுந்தான். அடுத்த முப்பது நொடிகளில் மூச்சிறைத்துக் கொண்டு ரத்தம் வடிய ஒரு பறவை எங்கள் கூரையில் கிடந்தது.
அவனுடைய காயத்தின் தீவிரத்தை அறிய அவனைத் தூக்கினேன். அவனுடைய இரண்டு பக்கங்களும் கிழிந்திருந்தது. ஆனால், அத்தனை மோசமாக இல்லை. உடனடியாக அவனை புறா மருத்துவரிடம் கொண்டு போனேன். அவர் அவனுடைய காயங்களுக்கு கட்டு போட்டார். இதற்கு ஒரு அரைமணி நேரம் ஆனது. நான் வீடு திரும்பி, வண்ணக்கழுத்தை அவன் கூண்டில் விட்டுவிட்டுப் பார்த்தால், ஜகோரேவை எங்கும் காணோம். அவனுடைய கூண்டும் காலியாக இருந்தது. நான் கூரைக்குப் போன போது, ஜகோரேவின் துணைப் பெடை விளிம்பில் உட்கார்ந்து கொண்டு, அவனைத் தேடி ஒவ்வொரு திசையையும் அளந்து கொண்டிருந்தது. அன்று மட்டுமல்ல,. அடுத்த இரண்டு மூன்று நாட்களும் அப்படியே தன் துணையத் தேடிக் கொண்டிருந்தது. தன் துணை ஒரு தைரியமான வீரனுக்காக தன்னையே தியாகம் செய்திருக்கிறது என்பதை அறிந்து அது ஆறுதல் அடைந்ததா என்ன என்று எனக்குத் தெரியவில்லை.
(தொடரும்…)