விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பு – ரிச்சர்ட் லூரி

(ந்யூ யார்க் டைம்ஸ் தளத்தில் ரிச்சர்ட் லூரி (Richard Lourie) எழுதியுள்ள மதிப்பீட்டின் தமிழாக்கம்)

தோரோ சொல்வதுபோல் பெருந்திறள் மக்கள் “நம்பிக்கையற்ற மௌன வாழ்வு வாழ்கின்றனர்” என்பது உண்மையாய் இருக்கலாம், ஆனால் 1923 முதல் 2012 வரை வாழ்ந்த போலிஷ் கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா அதற்கு முற்றிலும் எதிரிடையாக நடந்து கொண்டார். மௌன வியப்பு நிறைந்த வாழ்வு அவருக்குரியது, அதன் வெளிச்சம் அலங்காரமற்ற, ஆனால், சுடராய் ஒளிரும் அவரது கவிதைகளில் பிரதிபலிக்கிறது. அவற்றில் பலவும் தற்போது, “Map: Collected and Last Poems” என்ற நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கிராமப்புறத்தில் பிறந்த சிம்போர்ஸ்கா 1931ஆம் ஆண்டு அரசர்களுக்கும் உயர்பண்பாட்டுக்கும் உரிய கிராகோவ் நகரில் குடி புகுந்தார், தன் மரணம் வரை அங்கு வாழ்ந்தார். மாபெரும் நிகழ்வுகள் மிகுந்த வாழ்வு அவரது அகத்துக்கே உரியது எனினும் வரலாற்றை விட்டுத் தப்புவது என்பது போலந்தில் சாத்தியமல்ல. இன்னும் சொல்லப்போனால், சிம்போர்ஸ்கா நான்கு வெவ்வேறு போலந்துகளில் வாழ்ந்தார்: ஐரோப்பிய வரைபடங்களிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் தொலைந்திருந்து பின் 1918ல் சுதந்திரம் பெற்று இரு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தின் கவலை நிறைந்த போலந்து; அவருக்கு பதினாறு வயது நிரம்பிய போது, நாஜி ஆக்கிரமிப்பு, மரண முகாம்கள், கிளர்ச்சிகள் நிறைந்த போலாந்து; பின்னர் போருக்குப் பிந்தைய ரஷ்ய அதிகாரம் நிறைய போலாந்து. அச்சமயத்தில், 1966ல் கட்சியிலிருந்து வெளியேறும் வரை அவர் கம்யூனிஸ்டாக இருந்தார். அதே சமயத்தில் தான் ஒரு கவிஞராக தனக்கான குரலை அடையாளம் கண்டார்; இறுதியில், சோவியத்-கடந்த போலந்து, சுதந்திரமானது, வெற்றிகரமானது, சாதாரணத்தன்மை அருளப்பட்டது.

சிம்போர்ஸ்கா தன் தேசத்தின் துயர்களைத் தப்பிப்பதுமில்லை, ஒரு நோயமைக் கூறெனக் கொண்டாடுவதுமில்லை. “ஜாஸ்லோ அருகே ஒரு பட்டினி முகாம்” என்ற கவிதையில் உள்ளது போல் அவர் தன் தேசத்தை நோக்கி இரக்கமற்ற கறார்க்குரலில் பேசக்கூடியவரகவும் இருந்தார்- அந்த முகாமின், “புல்வெளி மௌனம் காக்கிறது, விலைபோன சாட்சியைப் போல்” என்று எழுதினார் அவர். ஆனால் சிம்போர்ஸ்கா எப்போதும் தனிமனிதனின் மீது ஆர்வம் கொண்டவராகவே இருக்கிறார். “எலும்புக்கூடுகளைச் சூனியத்துக்குச் சுழிக்கிறது சரித்திரம்/ ஆயிரத்தொன்று என்றாலும் ஆயிரம்தான்” என்று கூறியபின், கவிதை, எண்ணிக்கையில் விட்டுப்போனவனைப் பற்றிய வியப்பை வெளிப்படுத்துகிறது. “கள்ளமின்மை” என்ற கவிதையில், “மனித மயிராலான மெத்தையில் சூல் கொண்டதை” அறியாத இளம் ஜெர்மானிய பெண்களின் ஆனந்த அறியாமையை எண்ணிப் பார்க்கிறார். “ஹிட்லரின் முதல் புகைப்படம்” என்ற கவிதையில் ஹிட்லருக்கு எதிராய் கொஞ்சம் பைசாச விளையாட்டு விளையாடிப் பார்க்கிறார்- “இத்துனூண்டு துண்டு அணிந்த இந்தக் குட்டிப் பையன் யார்?/அதுதான் குட்டிப் பாப்பா அடால்ப், ஹிட்லர்களின் குட்டிப் பையன்!”. ஆம், எந்தக் குழந்தையைப் போலவும், இவனது எதிர்காலமும் எப்படி இருக்குமோ என்று நினைத்துப் பார்ப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. “யாருடைய வயிறு நிறைய பால் இருக்கிறது, என்பது நமக்குத் தெரியாது/ அச்சகம் வைத்திருப்பவன் வயிறா, மருத்துவன் வயிறா, வணிகன் அல்லது, மதகுருவின் வயிறா?”

இதெல்லாம் பேசப் பெரிய விஷயங்களாக இருந்ததாம், சிம்போர்ஸ்காவுக்கு இவை போதாது- பூமியிலுள்ள எல்லாமே அவருக்கு வசீகரமாக இருக்கின்றன. “வட்டார நட்சத்திரங்களின் ஒன்றின் கீழ்”- நடந்தது மட்டுமல்ல, நடந்திருக்கக் கூடியது மட்டுமல்ல, கிட்டத்தட்ட நடக்கத் தவறியது மட்டுமல்ல, எல்லாமே இவரை ஈர்க்கின்றன. “வியப்பில்லாமல் நான் நானாய் இருந்திருக்க முடியும்/ அதாவது முற்றிலும் மாறுபட்ட வேறு யாரோவாக”. இந்த வியப்பே அவரை நாலா திசைகளிலும் விரைந்தோட வைக்கிறது, “மதிப்புக்குரிய பை எண்”ணில் திளைக்கவும், மனித கலாசார வடிவங்களில் ஏஞ்சல்களுக்கு உவப்பானது எதுவாக இருக்கும் என்று நினைக்கவும் (விடை: ஸ்லாப்ஸ்டிக்), “ஏகோபித்த பரமநிர்வாணம்” கொண்ட வெங்காயத்தின் “தூய வெங்காயத்துவத்தில்” ஆழவும் செய்கிறது. சமகால கொண்டாட்ட மனநிலையை அவர் நிராகரிக்கிறார். “உன்னைப் பற்றி மோசமாக நினைத்துக் கொள்ளுதல்” என்ற கவிதை இப்படி துவங்குகிறது: “வல்லூறுகள் என்றும் தாம் குற்றம் புரிந்ததை ஏற்பதில்லை/ சிறுத்தைகளுக்கு நியாய அநியாயம் தெரிவதற்கில்லை/ தாக்கும்போது பிரான்ஹாக்கள் வெட்கப்படுவதில்லை./ பாம்புகளுக்குக் கையிருந்தால், கறைபடாத கரங்களைக் காட்டும்.” கவிதை இப்படி முடிகிறது- “சூரியனின் இந்த மூன்றாம் கோளில்/ மிருகத்தனத்தின் அடையாளங்களில்/ சுத்தமான மனசாட்சிக்கே முதலிடம்.”

எதையும் முழுதாய் நம்ப மறுக்கும் சிம்போர்ஸ்காவின் ஐயப்பாடு, அவரது சந்தோஷமான, குறும்பு நிறைந்த விளையாட்டுத்தனம், புதிய புரிதலின் வியப்புக்கான தாகம்- இவை அவரை எதேச்சாதிகார உறுதிப்பாடுகளுக்கு எதிரியாக்குகின்றன. மேற்கத்திய மனதின் சிறந்த வெளிப்பாடு இவருக்குரியது- கட்டற்றது, நிலைகொள்ளாதது, கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பது. நம் காலத்தின் நாகரிக வாழ்வுக்கு ஒரு வைசூரயாய் வந்திருக்கும் பயங்கரவாதிக்கு எல்லா வகையிலும் எதிரான மனப்போக்கு இது. ஆனாலும் அவர் பயங்கரவாதியின் மனநிலையை அறிந்து கொள்ள முற்படுகிறார், அவனது உளவமைப்பை அறிய முடியாத போதும் அவனது புரிதல்களுள் புக நினைக்கிறார். தான் வைத்த குண்டு வெடிப்பதற்கு முற்பட்ட நிமிடங்களில் அவன் அந்த கபேவுக்கு வந்து செல்பவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறான், அதில் தலையிலுள்ள முடி கொட்டிப் போன ஒருவன், “தன் அழுக்குக் கையுறைகளுக்காக திரும்பிச் செல்கிறான்” (சிம்போர்ஸ்காவின் குறைபட்ட பகுதிக்கு இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டு. அவருக்கு, அப்போதைய தலைப்புச் செய்திகளைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருப்பது போன்ற தொனியில் எழுதும் பழக்கமிருக்கிறது. இப்படிப்பட்ட கவிதைகளை ஒரு முறை வாசிக்க முடிகிறது, ஆனால் இரண்டாம் வாசிப்புக்கு எதையும் விட்டு வைக்காத மேம்போக்குத்தன்மை கொண்ட கவிதைகள் இவை).

உயிரோட்டமுள்ள இருப்பும் அதன் தற்காலிகத்தன்மையுமே சிம்போர்ஸ்காவுக்கு முக்கியமான பேசுபொருளாய் இருக்கின்றன. “கடந்து செல்லும் இக்கணமே போயாகி விட்டது”. காகிதத்தில்கூட இதை அவர் நிகழ்த்திக் காட்டுகிறார்: “எதிர்காலம் என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே/ அதன் முதல் அசை கடந்த காலத்துக்கு உரியதாகி விடுகிறது”. அசைகளுக்கு நேர்வதுதான் அவற்றைப் பேசுபவர்களுக்கும் நேர்கிறது. “நாமற்ற மறுநாள்” என்ற கவிதையில் அவர் எழுதுகிறார், “மறுநாள்/ பிரகாசமாய் இருக்கும்போல் தெரிகிறது/ என்றாலும் இன்னும் உயிரோடிருப்பவர்கள்/ குடைகள் கொண்டு வர வேண்டும்”

காதலைப் போல் தோன்றி மறைவது எதவுமில்லை என்பதால் அது சிம்போர்ஸ்கா பேசுவதற்கான இயல்பான விஷயமாகிறது. ஆடன் போன்ற கவித்துவத்துடன் அவரால் எழுத முடியும்: “ஆக, இதோ இங்கே இருக்கிறோம், நிர்வாண காதலர்கள்,/ அழகாய் இருக்கிறோம் என்று இருவரும் ஒப்புக் கொள்கிறோம்/ கண்ணிமைகள் மட்டுமே நம்மைப் போர்த்திருக்க./ இருளில் படுத்திருக்கிறோம், கண்ணுக்குத் தெரியாமல்”. ஆனால் ஆடன் போல் இவரும் நம்பிக்கை வறட்சியை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தக்கூடியவர், “உண்மைக் காதல்” என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்- “குறையற்ற நல்ல குழந்தைகள் அதன் துணையின்றி பிறக்கின்றன/ கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இக்கோளை அதனால் ஜனத்திரளால் நிறைக்க முடியாது/ அது அத்தனை அபூர்வமாய் வருகிறது/ உண்மைக் காதலை என்றும் அறியாதவர்கள்/ அப்படி ஒன்று இல்லவேயில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கட்டும்/ அந்த நம்பிக்கை அவர்கள் சாகும்வரை வாழ்வை எளிதாக்கிக் கொண்டிருக்கும்”.

இறுதியாகச் சொன்னால் சிம்போர்ஸ்காவின் பார்வையில், திகைப்பு என்பது அபூர்வமான கவித்துவ நிலைப்பாடல்ல- எப்போதும் புத்துயிர்ப்பு கொண்டதாய் பற்பல வகைகளாய் விரைந்தோடும் உயிர்ப்புக்குத் தக்க ஒரே சுவாதீனமான, சுபாவமான எதிர்வினை திகைத்து நிற்றலாகவே இருக்க முடியும். அது ஒத்திகைக்கான அவகாசம் தருவதில்லை, ஒவ்வொரு இரவும் முதற்காட்சியாய் இருக்கிறது. “வாழும் சலுகைக்கு தயாராய் இல்லாதவள்/ காட்சிகளின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை/… , மேடை அணி அலங்காரங்கள் ஆச்சரியப்படத்தக்க துல்லியம் கொண்டிருக்கின்றன…./ நான் என்ன செய்தாலும்/ எது எப்போதும் நான் செய்தவையாகவே இருக்கும்”.

நோபல் பரிசு போன்ற ஒன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் – அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நமக்கு எப்படி தால்ஸ்தாய், காப்கா, கார்சியா மார்க்கேஸ், விவிலியம் முதலானவை அறியக் கிடைக்கும்? அப்படியொரு பரிசு இருக்குமென்றால் சிம்போர்ஸ்காவின் மொழிபெயர்ப்பாளர்கள், ஸ்டானிஸ்லாவ் பரான்க்ஸக்கும் கிளேர் கவனாக்கும் உடனே பெற்றிருப்பார்கள். இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள எந்த வரியையும் படித்துப் பாருங்கள் – ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் பிறந்தது போலிருக்கின்றன.

அவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களும் ஸ்வீடிஷ் மொழிபெயர்ப்பாளர்களும் மிகப் பிரமாதமான மொழிபெயர்ப்புகளைச் செய்தது தான் 1996ஆம் ஆண்டு சிம்போர்ஸ்கா நோபல் விருது பெற உதவி செய்தது என்று சொல்லப்படுகிறது. அவர் புகழின் ஆர்ப்பரிப்பை வெறுத்தார். முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்த்தார், நோபல் ஏற்புரைகளில் மிகக்குறுகிய உரைகளில் ஒன்றை அவரே அளித்தார் – ஆனால் அதிலும்கூட சூரியனுக்குக் கீழுள்ள இந்த உலகில் புதிதாய் எதுவுமில்லை என்று சொன்ன பிரசங்கிகளைக் கண்டித்தார். உலக கவிதையின் கிரேட்டா கார்போ என்று பத்திரிகைகள்  அவரை அழைக்கத் துவங்கின, ஆனால் சிம்போர்ஸ்கா ஒதுங்கியிருப்பதற்கான காரணம் அவரது பெரியமனித தோரணையல்ல. மாறாய், அவருக்குத் தன் வியப்புணர்வைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது- பத்திரிக்கையார்கள், ரசிகர்கள், புகழ்வெளிச்சப் பண்பாட்டின் ஒட்டுண்ணிகள் போக  உரத்து ஒலிக்கும் பிற விரக்தி வாழ்வாளர்கள் அனைவரும் என்று  ஒரு பெருங்கூட்டத்திடமிருந்து அவர் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

MAP

Collected and Last Poems

By Wislawa Szymborska

Translated by Clare Cavanagh and Stanislaw Baranczak

447 pp. Houghton Mifflin Harcourt. $32.

நன்றி – நியூ யார்க் டைம்ஸ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.