நாம் ஏன் கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும்? – இடாலோ கால்வினோ

துவக்கத்தில் நாம் சில வரையறைகளை முன்வைத்துக் கொள்ளலாம்-

1. கிளாசிக்குகள் என்று அழைக்கப்படும் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது, “….ஐ மீண்டும் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று சொல்வதுதான் வழக்கம், :”… படித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று ஒருபோதும் சொல்வதில்லை.

யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நல்ல வாசிப்பு உள்ளவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் விஷயத்திலாவது இது பொருந்தும்; இளைஞர்களுக்கு இது பொருந்தாது. ஏனெனில், இந்த வயதில் முதல் அறிமுகம் என்ற காரணத்தால்தான் அவர்களுக்கு இவ்வுலகின் தொடுகையும் இவ்வுலகின் அங்கங்களாய் உள்ள கிளாசிக்குகளின் தொடுகையும் முக்கியமாகின்றன.

புகழ்பெற்ற ஒரு புத்தகத்தை வாசித்ததில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வெட்கப்படுபவர்கள் விஷயத்தில், வாசித்தல் என்ற வினைச்சொல்லுக்கு முன் மீள் என்ற அடைமொழி சேர்த்துக் கொள்வது, ஒரு சிறிய போலித்தனமாக இருக்கக்கூடும். ஆனால் வாசிப்பின் இயல்பு தீர்மானிக்கப்படும் இளமைப்பருவத்தில் ஒருவன் எவ்வளவு விரிவாக வாசித்திருந்தாலும், அவன் வாசித்திராத அவசியப் படைப்புகளின் எண்ணிக்கை எப்போதுமே மிகப்பெரிதாகத்தான் இருக்கும். கிளாசிக்குகள் அனைத்தையும் வாசிக்கவில்லை என்று வெட்கப்படுபவர்களுக்கு இந்த உண்மையைச் சுட்டிக் காட்டுவது ஆறுதல் அளிக்கக்கூடும்.

ஹெரோடோடஸ் மற்றும் தூசிடைடஸ் எழுதிய அத்தனையையும் படித்துவிட்டேன் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் கை தூக்குங்கள். அப்படியானால் செயிண்ட்-சைமனைப் படித்தவர்கள்? கார்டினல் ரெட்ஸ்? பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல்களின் மகத்தான தொகுப்புகள் வாசிக்கப்படுவதைவிட குறிப்பிடப்படுவதே அதிகம். பிரான்சில் பள்ளிப்பருவத்தில் பால்ஸாக் வாசிக்கத் துவங்குகிறார்கள்; புழக்கத்தில் உள்ள பதிப்புகளைக் கணக்கில் கொண்டால், பள்ளிப்படிப்பு முடிந்தபின்னும் வெகுகாலம் அவரைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதாகிறது. ஆனால் இத்தாலியில் பால்ஸாக் எவ்வளவு பிரபலமாக இருக்கிறார் என்று ஒரு அதிகாரப்பூர்வ ஆய்வு நடத்தினால், அவரது இடம் பட்டியலில் மிகக்கீழே எங்கோ இருக்கும் என்றுதான் வருத்தத்துடன் சொல்ல வேண்டும். இத்தாலியில் உள்ள டிக்கன்ஸ் வாசகர்கள், மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள எலீட்டுகள், அவர்கள் சந்தித்துக்கொள்ளும்போது, தாம் நிஜமாகவே பேசிப் பழகியவர்களைப் பற்றி பேசுவதுபோல் டிக்கன்ஸ் நாவலின் பாத்திரங்களையும் சம்பவங்களையும் விசாரித்துக் கொள்கிறார்கள். பல ஆண்டுகளுக்குமுன் மிஷேல் பூதோ அமெரிக்காவில் கற்பித்துக் கொண்டிருந்தபோது, எமிலி ஜோலா பற்றி விசாரித்தவர்களின் எண்ணிக்கை அவருக்கு அலுப்பூட்டுவதாக இருந்தது. அதனாலும் அவர் ஜோலாவைப் படித்ததே இல்லை என்பதாலும் Rougon-Macquart நாவல்களின் தொகையை முழுமையாக படித்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டார். ஆனால் அவர் நினைத்துக் கொண்டிருந்ததைவிட அந்த நாவல் முற்றிலும் மாறுபட்டிருப்பதை நேரடியாகப் படித்துப் பார்க்கும்போதுதான் கண்டுணர்ந்தார்- உலகின் துவக்கத்தையும் அதன் வம்சாவளியினரையும் விவரிக்கும் அற்புதமான, தொன்மைத்தன்மை கொண்ட படைப்பு அது என்று உணர்ந்து அருமையான கட்டுரையொன்றில் அதன் சிறப்பை விவரித்தார்..

இது நமக்கு உணர்த்தும் உண்மை- மகத்தான ஒரு புத்தகத்தை நம் வளர்ச்சி முழுமையடைந்தபின் நாம் முதன்முறை வாசிப்பது என்பது அசாதாரண இன்பம் தரும் அனுபவமாக இருக்கக்கூடும். அதே புத்தகத்தை இளமையில் வாசிப்பதைவிட இது மிகவும் வேறுபட்ட அனுபவமாக அமையலாம் (ஆனால் இதனால் கிட்டக்கூடிய இன்பம் அதிகரிக்கிறதா குறைகிறதா என்பதைச் சொல்வது சாத்தியமில்லை). இளமைப்பருவம் ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒவ்வொரு அனுபவத்துக்கும் தனித்தன்மை கொண்ட சுவையும் முக்கியத்துவமும் அளிக்கிறது; ஆனால், மனம் முதிர்ந்த வயதில் ஒருவன் இன்னும் பல நுண்விபரங்களையும், உள்ளடுக்குகளையும், பல்பொருள் விரிவுகளையும் சுவைத்து மகிழ்கிறான் (அல்லது, சுவைத்து மகிழ வேண்டும்). எனவே மேற்கூறிய வரையறையை நாம் இவ்வாறு மாற்றி எழுதிப் பார்க்கலாம்-

2. கிளாசிக்குகள் அவற்றை வாசித்து நேசித்தவர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களின் தொகை நூல்களாக விளங்குகின்றன; ஆனால், அவற்றுக்குத் தக்க ஆகச்சிறந்த மனநிலை உருவாகும்போது வாசித்துக் கொள்ளலாம் என்று எடுத்து வைத்திருப்பவர்களுக்கும் அதே அளவு செறிவான அனுபவம் காத்திருக்கிறது.

ஏனெனில் இது உண்மை- இளமையில் செய்யும் வாசிப்பின் மதிப்பைப் பெரிதாய் பொருட்படுத்துவதற்கில்லை- அது பொறுமையற்ற பருவம், நம் கவனம் குவியாத வயது, நாம் தேர்ந்த வாசிப்பை நிகழ்த்தப் பழகியிருக்க மாட்டோம், அல்லது, நமக்கு வாழ்வனுபவம் போதாது என்ற காரணமும் உண்டு. நம் இளமைப்பருவ வாசிப்பு (அது நிகழும்போதும்கூட) நம் பிற்கால வாசிப்பின் தன்மையை உருவாக்குவதாக இருக்கலாம்- நம் எதிர்கால அனுபவங்களுக்கு அது உருவமும் வடிவமும் கொடுக்கிறது; அவற்றைப் உள்வாங்கிக் கொள்வதற்கான முன்மாதிரிகள் அளிக்கிறது, அவற்றை எதிர்கொள்ளும் வழிகளைக் கற்பிக்கிறது, அவற்றை ஒப்பிட அளவைகள் தருகிறது, நம் அனுபவங்களை வெவ்வேறு பகுப்புகளில் சேர்த்துக்கொள்வதற்கான வரைவுகளை உருவாக்குகிறது, நம் மதிப்பீட்டு விழுமியங்களை அமைக்கிறது, நம் அழகனுபவத்தின் முன்னுதாரணப் படிவங்களைத் தகவமைக்கிறது: நாம் நம் இளமைப்பருவத்தில் வாசித்த புத்தகத்தைப் பற்றி அனைத்தும் மறந்தபின்னும் அல்லது மிகக் குறைவாகவே நினைவில் வைத்திருக்கும்போதும் அவற்றின் படிப்பினைகள் நம்மை இயக்குகின்றன. புத்தகம் ஒன்றை அகம் முதிர்ந்த பருவத்தில் மீண்டும் வாசிக்கும்போது, இப்போது நம் அக இயக்கத்தின் உறுப்புகளாய், அவை எங்கிருந்து வந்தன என்பதை மறந்து விட்டிருந்தபோதும். நிலைத்து நிற்பனவற்றை மீண்டும் கண்டறிகிறோம், தன்னளவில் மறக்கப்பட்ட போதும் தன் வித்தினை நம்மில் விட்டுச் செல்லும் படைப்புக்கு குறிப்பிடத்தக்க ஒரு வீரியம் உண்டு. எனவே, இனி நாம் இப்படி வரையறை செய்து கொள்ளலாம்-.

3. கிளாசிக்குகள் குறிப்பிட்ட ஒரு தாக்கத்தை விட்டுச் செல்லும் நூல்கள், அவை மறக்க முடியாது என்று சொல்லத்தக்க தடத்தை நம் உள்ளத்தில் பதிக்கும்போதும் தனிமனித அல்லது பொது நனவிலி மனதின் நினைவு அடுக்குகளில் ஒளிந்து கொள்ளும்போதும்..

இக்காரணத்தால்தான் நம் இளம்பருவத்தின் மிக முக்கியமான வாசிப்புகளை மீண்டும் கண்டறிய ஆடவப் பருவத்தில் சிலகாலம் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்கிறேன். புத்தகங்கள் மாறாதிருப்பினும் (மாறுதலுக்குட்பட்ட நம் வரலாற்று நோக்கின் வெளிச்சத்தில் அவையும் மாறுகின்றன என்றாலும்), நாம் நிச்சயம் மாறியிருக்கிறோம், எனவே இந்தப் பிந்தைய எதிர்கொள்ளல் முழுமையாகவே புதிய அறிமுகமாகிறது.

இக்காரணத்தால், நாம் வாசிப்பு என்ற வினைச்சொல்லையோ மீள்வாசிப்பு என்ற வினைச்சொல்லையோ, இரண்டில் எதைப் பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமற்றுப் போகிறது. உண்மையில் நாம் இப்படிச் சொல்லலாம்:

4. முதல் முறை வாசித்தபோது அனுபவப்படும் புதிய உணர்வை ஒவ்வொரு மீள்வாசிப்பிலும் அதே அளவு அளிக்கும் புத்தகம்தான் கிளாசிக் எனப்படுகிறது.

5. முதல் முறை வாசிக்கும்போதும்கூட முன்னரே வாசித்துவிட்ட ஏதோவொன்றை மீள்வாசிப்புக்கு உட்படுத்துகிறோம் என்ற உணர்வை அளிக்கும் புத்தகம்தான் கிளாசிக் எனப்படுகிறது.

மேற்கண்ட நான்காம் வரையறையை இதன் கிளைத்தேற்றமாகக் கொள்ளலாம்..

ஆனால் ஐந்தாம் வரையறை இன்னும் விரிவான வடிவமைப்பைக் கோருகிறது, இதுபோல்-

6. தான் வாசகர்களுக்குச் சொல்ல இருப்பதை எத்தனை சொல்லியும் தீராத் தன்மை கொண்ட புத்தகம்தான் கிளாசிக்.

7. முந்தைய பொழிப்புரைகளை ஆலவட்டமாய்த் தாங்கி வரும் புத்தகங்களே கிளாசிக்குகள்; அவை கடந்து வந்த பண்பாடு அல்லது பண்பாடுகளில் (அல்லது மொழிகளிலும் பழக்கவழக்கங்களிலும்) விட்டுச் சென்ற தடங்கள் அவற்றைத் தொடர்கின்றன.

இது பண்டைய கிளாசிக்குகளுக்கும் நவீன கிளாசிக்குகளுக்கும் ஒருசேரப் பொருந்தும். நான் ஒடிஸி வாசிக்கிறேன் என்றால், ஹோமரின் பிரதியை வாசிக்கிறேன். ஆனால் கடந்த பல நூற்றாண்டுகளில் யூலிசிஸின் சாகசங்களுக்கு எப்படிப்பட்ட புரிதல்கள் கூடியிருக்கின்றன என்பதை நான் மறக்க முடியாது. மூலப்பிரதியிலேயே இத்தனை அர்த்தங்களும் உள்ளுறை பொருளாய் இருந்தனவா அல்லது அவை பிற்காலத்தைய சேகரங்களாகவோ திரிதல்களாகவோ விரிதல்களாகவோ இருக்கக்கூடுமா என்று நான் வியக்காதிருக்க இயலாது. நான் காப்காவை வாசிக்கிறேன் என்றால், ஏறத்தாழ எல்லாவற்றையும் விவரிக்கப் பயன்படுத்தப்படும் ‘காப்காத்தனம்’, என்ற அடைமொழி முறையானதுதானா என்று தொடர்ந்து விசாரித்து ஏற்றுக்கொண்டும் நிராகரித்துக் கொண்டுமிருக்கிறேன். .நான் துர்ஜனீவின் “ஃபாதர்ஸ் அண்ட் சன்ஸ்” என்ற புத்தகத்தையோ தாஸ்தாவெஸ்கியின் “தி டெவில்ஸ்” என்ற புத்தகத்தையோ வாசிக்கிறேன் என்றால், இந்தப் புத்தகங்களிலுள்ள பாத்திரங்கள் நம் காலம் வரை தொடர்ந்து மறுபிறப்பு எடுத்து வந்திருப்பது குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது.

ஒரு கிளாசிக்கை வாசிப்பது என்றால் அது குறித்து நமக்கு முன்னிருந்த பிம்பத்தோடு ஒப்புநோக்கையில் நம் வாசிப்பு ஆச்சரியப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதனால்தான் நாம் பிரதியின் நேரடி வாசிப்பை எத்தனை பரிந்துரைத்தாலும் தகும், இயன்றவரை இரண்டாம்நிலை புத்தகங்களையும், விளக்கங்களையும் பிற வாசிப்புகளையும் தவிர்க்க வேண்டும். விவாதிக்கப்படும் புத்தகத்தைப் பேசும் வேறு எந்தவொரு புத்தகமும் மூலநூலைக் காட்டிலும் அதிகம் சொல்லிவிட முடியாது என்ற எண்ணத்தை பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும். ஆனால் கல்வி அமைப்புகளோ, மாணவர்கள் இதற்கு நேர் எதிர் கருத்தை நம்பும் வகையில் அனைத்தும் செய்கின்றன. வாசிப்பு குறித்த மதிப்பீடுகளின் இவ்வாறான தலைகீழாக்கம் பரவலாக நிலவுகிறது. இதனால் பிரதி என்ன சொல்ல வருகிறதோ, பிரதியைக் காட்டிலும் தனக்கு அதிகம் தெரியும் என்று கோரும் இடையூட்டாளர்கள் இல்லாமல் தனித்து விடப்படும்போது மட்டுமே ஒரு பிரதி சொல்லக்கூடியது எதுவோ, அதை மறைக்கும் புகைமூட்டமாய்த்தான் அறிமுகம், விமரிசனக் கருவிகள் மற்றும் பிறநூல் வரிசைகள் பயன்படுகின்றன. எனவே நாம் இந்த முடிவுக்கு வர இயலும்:

8. கிளாசிக் என்பது எப்போதும் தன்னைச் சுற்றிலும் ஒரு மேகமாய் விமரிசனச் சொல்லாடலை உருவாக்கிக் கொள்வதாக இருக்கும், ஆனால் அது எப்போதும் அத்துகள்களைத் துடைத்தெறியும் வல்லமை கொண்டதாகவும் இருக்கும்.

நமக்கு ஏற்கனவே தெரியாத ஏதோ ஒன்றைக் கற்பிப்பதாக கிளாசிக்குகள் எப்போதும் இருக்க வேண்டியதில்லை; சில சமயம் நாம், எப்போதும் அறிந்திருந்த ஒன்றை (அல்லது அறிந்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றை), அந்தச் செந்நூல்தான் முதலில் வெளிப்படுத்தியது (அதையோ அல்லது குறிப்பிட்ட அந்த வகையில் அது அப்பிரதியோடுதான் தொடர்பு கொண்டிருக்கிறது) என்பதை இதுவரை அறியாதிருந்து இப்போதுதான் நம் வாசிப்பில் கண்டறிகிறோம், இவ்வாறு கண்டறிதல் எப்போதும் மிகுந்த மனநிறைவு அளிக்கும் ஆச்சரியமாகவே இருக்கிறது- எந்த ஒரு கருத்தின் மூலத்தையும் அல்லது அதனுடன் ஒரு பிரதி\யில் உள்ள தொடர்பை அல்லது அதை முதலில் கூறியது யார் என்பதையும் கண்டறியும்போது எப்போதும் நாம் அடையும் ஆச்சரியம்தான் இது. இவை அனைத்தையும் கொண்டு நாம் இத்தகைய ஒரு வரைமுறையை உருவாக்கிக் கொள்ளலாம்:

9. கிளாசிக்குகள் எனும் புததகங்களை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு கேள்வி ஞானத்தால் அறிந்திருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அந்த அளவுக்கு மூலத்தன்மை கொண்டதாகவும் எதிர்பாராததாகவும் புதிய நுட்பங்கள் அமைந்ததாகவும் அவை உள்ளதை நாம் நம் நேரடி வாசிப்பில் அறிகிறோம்

ஆம், ஒரு கிளாசிக் பிரதி கிளாசிக்காக உயிர்ப்பிக்கும்போதுதான் இது நிகழ்கிறது, அதாவது, அது வாசகனுடன் அந்தரங்க உறவை நிறுவிக்கொள்ளும்போதுதான் இது நிகழ்கிறது. அவ்வாறாகிய பொறி தெறிக்கவில்லை என்றால் இந்த முயற்சி அர்த்தமற்றுப் போகிறது. கடமைக்காகவோ மரியாதை நிமித்தமாகவோ ஒரு கிளாசிக்கை வாசிப்பதில் பயனில்லை. நாம் நம் நேசத்தை முன்னிட்டே கிளாசிக்குகளை வாசிக்க வேண்டும். இதற்கு பள்ளிப்பருவம் மட்டுமே விலக்கு: பள்ளிக் கல்வி அறிவு புகட்ட வேண்டும், நீ விரும்புகிறாயோ இல்லையோ, குறிப்பிட்ட சில கிளாசிக்குகளை உனக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவற்றினிடையே (அல்லது அவற்றை ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தி) நீ பின்னர் உனக்கான கிளாசிக்குகளை அடையாளம் கண்டு கொள்வாய். நீயே உனக்கான தேர்வுகளைச் செய்து கொள்ளத் தேவையான கருவிகளை உனக்கு அளிப்பது பள்ளியின் கடமை. ஆனால் உன் தேர்வுகளில் கணக்கில் கொள்ளத்தக்கவை பள்ளிக்கல்விக்குப் பின்னர் அல்லது பள்ளிக்கல்விக்கு வெளியே நீ மேற்கொள்பவை மட்டுமே.

கட்டாயமாய் வாசிக்கப்பட்டாக வேண்டிய தேவையால் அல்லாத வாசிப்பால் மட்டுமே உனக்குரிய புத்தகத்தை நீ எதிர்கொள்ள நேரிடும். சிறந்த கலை வரலாற்றாய்வாளர் ஒருவரை நான் அறிவேன், மிகப் பிரமாதமான வாசிப்புக்குரியவர். அவர் வாசித்த அத்தனை புத்தகங்களில் தி பிக்விக் பேப்பர்ஸ்தான் அவருக்கு மிகவும் பிடித்தமான புத்தகமாக இருக்கிறது. எந்த உரையாடலிலும் டிக்கன்ஸின் அந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுவார், தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் பிக்விக்கில் உள்ள சம்பவங்களுடன் தொடர்புபடுத்திக் கொள்வார். சுயத்தை முழுமையாய்ப் பிறிதொன்றுடன் உருவகித்துக் கொள்ளும் போக்கில் மெல்ல மெல்ல அவரும், அவரது உலகும் அதன் உண்மையான தத்துவமும் தி பிக்விக் பேப்பர்ஸின் வடிவம் பெற்றிருக்கின்றன. நாம் இந்தப் பாதையில் செல்வோமானால் கிளாசிக் பற்றிய, மிக உயரிய, கடும் எதிர்பார்ப்புகளைக் கொண்ட கருத்தொன்றுக்கு வந்து சேர்கிறோம்.

10. உலகம் முழுமைக்கும் பிரதிநிதியாய் விளங்கக்கூடிய, பண்டைய தாயத்துகளுக்கு இணையான எந்த ஒரு புத்தகத்துக்கும் கிளாசிக் என்ற பதம் வழங்கப்படுகிறது.

இப்படிப்பட்ட வரையறை முழுநூல் என்ற கருத்தாக்கத்துக்கு, மல்லார்மின் கனவுக்கு நெருக்கமாய் நம்மைக் கொண்டு செல்கிறது, ஆனால் சுய அடையாளத்தைப் போன்ற அதே அளவு சக்திவாய்ந்த உறவொன்றை எதிர் அல்லது மாற்றுநிலையிலும் நிறுவ இயலும். ரூஸோவின் அத்தனை சிந்தனைகளும் செயல்களும் எனக்கு மிகவும் நெருக்கமானவை, ஆனால் அவை ஒவ்வொன்றும் மறுக்கவும் விமரிசிக்கவும் அவரோடு வாதாடவும் என்னைச் செலுத்தும் வகையில், அடக்க முடியாத உத்வேகத்தை என்னில் உருவாக்குகின்றன. என் இயல்புக்குப் பொருந்தாத ஆளுமை கொண்டவராக அவர் இருப்பதாய் நான் உணர்வதற்கும் இதற்கும் தொடர்புண்டு என்பதும் உண்மைதான், ஆனால் அத்தோடு முடிந்து போகிறது என்றால், நான் அவரை வாசிப்பதைத் தவிர்த்தால் போதும்; உண்மையில் அவரை எனக்குரிய எழுத்தாளராய் நான் கருதுவதை என்னால் தவிர்க்க இயலவில்லை. எனில், நான் இப்படிச் சொல்வேன்:

11. உன் கிளாசிக் நீ கண்டுகொள்ளாமல் இருக்க விடாத புத்தகம், அதனோடான உறவில், ஏன், அதனோடான எதிர்ப்பிலும் உன்னை வரையறை செய்து கொள்ள உனக்கு அது உதவுகிறது.

தொன்மை, நடை, அதிகாரம் என்ற வகைகளில் எதையும் சீர்தூக்கிப் பாராமல் கிளாசிக் என்ற பதத்தை நான் பயன்படுத்துவதை நியாயப்படுத்த வேண்டியதில்லை என்று நினைக்கிறேன் (இந்தப் பதத்தின் இப்படிப்பட்ட அத்தனை அர்த்தங்களின் வரலாற்றையும் அறிய, Enciclopedia Einaudiன் மூன்றாம் தொகுதியில் பிராங்கோ போர்டினி, கிளாசிகோ என்ற தலைப்பில் மிக விரிவாக எழுதியிருப்பதை வாசிக்கலாம்). ஆனால் என் வாதத்துக்கு உதவும் வகையில் இப்படிச் சொல்லலாம்- ஒரு கிளாசிக்கைப் பிறவற்றிலிருந்து எது பிரித்துக் காட்டுகிறது என்றால், தொல்நூலோ நவீன படைப்போ, அதில் எழுவதாய் நாம் உணரும் ஒருவகை ஒத்திசைவுதான் அது. எனினும், கலாசாரத் தொடர்ச்சியில் தனக்கென்று ஒரு இடம் கொண்டதாய் அது இருக்கிறது. இப்படிச் சொல்லலாம்-

12. எந்தப் படைப்பு பிற கிளாசிக்குகளுக்கு முனனர் வருகிறதோ, அதுவே கிளாசிக்; ஆனால் பிற கிளாசிக்குகளை முதலில் வாசித்து விட்டவர்கள் செவ்வியல் ஆக்கங்களின் வரிசையில் அதன் இடம் என்ன என்பதை உடனடியாக அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

அவ்வப்போது முரசாகியையும் ஐஸ்லாண்டிய சாகசங்களையும் தொட்டுத் திரும்புவதுவன்றி எப்போதும் லுக்ரீஷியஸ், லூசியன், மான்டைன், இராஸ்மஸ், க்விவீடோ, மார்லோ, Discourse on Method, கதேவின் வில்ஹெம் மெய்ஸ்டர், கூல்ரிட்ஜ், ரஸ்கின், ப்ரூஸ்ட், வலேரி முதலியவர்களை மட்டும் வாசிக்க தன் வாசிப்பு நேரத்தை அர்ப்பணிக்கக்கூடிய அதிர்ஷசாலி வாசகர் இருக்கக்கூடும் என்று வைத்துக் கொள்வோம். சமீபத்திய மறுபதிப்பு குறித்த மதிப்புரையோ, பல்கலைக்கழக பதவி நியமனத்துக்கான தேடலில் கட்டுரைகள் எழுதியனுப்பவோ, கழுத்தை நெரிக்கும் கடைசி கணத்தின் அவசரத்தில் பதிப்பகத்துக்கு எழுதி அனுப்ப வேண்டிய அவசியமோ இல்லாமல் இது அத்தனையையும் அந்த அதிர்ஷ்டசாலி வாசகர் செய்ய முடியும் என்றும் வைத்துக் கொள்வோம். எந்தக் களங்கமுமின்றி இந்தச் நடைமுறை தொடர வேண்டுமென்றால் அந்த அதிர்ஷ்டசாலி வாசகர் செய்தித்தாள்கள் வாசிப்பதைத் தவிர்க்க வேண்டும், மிகச் சமீபத்தில் வெளியிடப்பட்ட நாவல் அல்லது சமூகவியல் ஆய்வை வாசிக்கும் உந்துதலை எதிர்த்து நிற்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட கட்டுப்பாடு எந்த அளவு நியாயப்படுத்தத்தக்கது என்பது மட்டுமல்ல, எவ்வளவு பயனுள்ளது என்பதும்கூட கேள்விக்குரியதுதான். சமகால உலகம் சுவாரசியமற்றதாகவும் மூச்சு திணற வைப்பதாகவும் இருக்கலாம், ஆனால் அதன் சூழமைவில் நம்மை இருத்திக்கொண்டே நாம் பின்னோக்கியோ முன்னோக்கியோ பார்த்தாக வேண்டும். கிளாசிக்குகளை வாசிப்பதானால் நீ எங்கிருந்து அவற்றை வாசிக்கிறாய் என்ற உன் ‘இடத்தை’ துல்லியமாக நிறுவிக் கொண்டாக வேண்டும். இதைச் செய்யத் தவறும்போது வாசகனும் பிரதியும் காலப்பிரக்ஞையற்ற மூட்டத்தில் திசையற்று கொண்டு செல்லப்படுகின்றனர். எனவே, சரியான விகிதத்தில் சமகால விஷயங்களையும் கிளாசிக் வாசிப்பையும் மாறி மாறி நிகழ்த்தக்கூடிய திறன் வாய்க்கப் பெற்றவன்தான் கிளாசிக்குகளின் வாசிப்பில் மிக அதிக அளவில் பயன்பெருவான் என்று நாம் சொல்ல முடியும். அதற்காக, அவனது அகம் அமைதியில் இயைந்திருக்க வேண்டும் என்ற முன்முடிவுக்கு வரவேண்டிய அவசியமில்லை: இத்தகைய வாசிப்பு பொறுமையற்ற, படபடப்பான இயல்பின் விளைவாகவும் இருக்கலாம், எப்போதும் எரிச்சலும் அதிருப்தியும் உள்ளவனின் இயல்பிலும் இது சாத்தியப்படக்கூடும்.

13. கிளாசிக் என்றறியப்படும் ஒரு படைப்பு சமகால சப்தங்களை பின்னணி ஒலியாய் மட்டுப்படுத்தும், அதே சமயம் அதுவன்றி கிளாசிக்குகளும் இருக்க முடியாது..

14. கிளாசிக் என்றறியப்படும் ஒரு படைப்பு எப்போதும் ஒரு பின்னணி ஒலியாய் தொடர்ந்திருக்கும்- அதனோடு கொஞ்சமும் பொருந்தாத சமகாலம் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கும்போதும்.

உண்மையைச் சொன்னால், கிளாசிக்குகளை வாசிப்பது என்பது நம் வாழ்வின் வேகத்துக்கு ஒத்து வராத செயலாக இருக்கிறது. வாழ்க்கையின் துரித கதியில் காலப்பாதையின் நீள்வெளிகளுக்கு இடமில்லை, மானுட தர்மத்துக்குத் தேவையான ஒழிவுக்கு அவகாசமுமில்லை; நம் கலாசாரம் கலவைத்தன்மை கொண்டிருப்பதால் நம் காலத்துக்குத் தக்க செவ்வியல் ஆக்கங்கள் இவை என்றொரு பட்டியல் தொகுப்பதை அது என்றும் சாத்தியப்படுத்தாது.

ஆனால் தன் தந்தையின் கோட்டையில் வாழ்ந்த லெபார்டியின் சூழ்நிலை இதுவாக இருந்தது- அவன் தன் தந்தை மொனால்டோவின் மாபெரும் நூலகத்தைக் கொண்டு கிரேக்க, லத்தின் மொழிகளின் தொல்நூல்களை அறிவது என்ற குறுவழிபாட்டை நிகழ்த்த முடிந்தது. அங்கு அவன் அதுவரை பதிக்கப்பட்ட இத்தாலிய இலக்கியம் முழுமையையும் சேர்த்துக் கொள்கிறான், தன் சகோதரி வசதியாய்ப் படிக்க விளிம்பில் ஒதுக்கப்படும் மிகச் சமீபத்தைய படைப்புகளையும் நாவல்களையும் தவிர (“உன் ஸ்டென்தால்” என்று அந்தப் பிரெஞ்சு நாவலாசிரியர் குறித்து பவோலினாவிடம் சொல்கிறான்) பிற பிரெஞ்சு இலக்கியம் அனைத்தையும் சேர்த்துக் கொள்கிறான். கியாகொமோ தன் மிகக்கூர்மையான அறிவியல் மற்றும் வரலாற்று ஆர்வங்களைக் காலாவதியாகிவிட்ட பிரதிகளின் வாசிப்பில் நிறைவு செய்து கொள்கிறான் புஃப்போனில் குறிப்பிடப்படும் பறவைகளின் பழக்க வழக்கங்கள், ஃபோன்டநெல்லில் பிரடரிக் ரூய்ஷின் மம்மிக்கள், ராபர்ட்சனில் கொலம்பஸின் பயணங்கள்.

இளம் லேபாரடிக்கு வாய்த்தது போன்ற கிளாசிக் கல்வி இன்று கற்பனை செய்ய முடியாதது, அதிலும் குறிப்பாக, அவனது தந்தை கவுண்ட் மொனால்டோவின் நூலகம் தூர்ந்து போய்விட்டது. தூர்ந்து போய் விட்டது என்று சொல்லும்போது, பழைய வரத்துகள் சிதைந்து விட்டன என்று மட்டுமல்லாமல் நவீன இலக்கியங்கள் மற்றும் கலாச்சாரங்கள் அனைத்திலும் புதியவை புகுந்து நிறைக்கின்றன என்றும் பொருள் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமக்கான கிளாசிக்குகளைக் கொண்ட ஆதர்ச நூலகத்தை நாமே கண்டறிவது மட்டும்தான் நமக்குச் சாத்தியப்படக்கூடிய ஒன்று. அதில் ஒரு பாதி நாம் வாசித்து நமக்கு ஏதோ ஒருவகையில் முக்கியமாக இருக்கும் நூல்களைக் கொண்டிருக்க வேண்டும்; மறு பாதி, நாம் வாசிக்கப்போகும், நமக்கு முக்கியமாக இருக்கக்கூடிய புத்தகங்களைக் கொண்டிருக்க வேண்டும். இது தவிர சந்தர்ப்பவசமாய் எதிர்ப்படக்கூடிய கண்டுகொள்ளல்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் வெற்றிடங்கள் கொண்ட ஒரு பிரிவும் இந்த நூலகத்தில் விட்டு வைக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தாலிய இலக்கியத்தில் நான் சுட்டிக்காட்டியிருக்கும் ஒரே பெயர் லெபார்டிதான் என்பதை இங்கு கவனிக்கிறேன். நூலகம் தூர்ந்து போனதன் விளைவு இது. இப்போது நான் இந்தக் கட்டுரை முழுமையையும் திருத்தி எழுதி நம்மை நாம் புரிந்து கொள்ளவும் நாம் வந்தடைந்திருக்கும் இடத்தைப் புரிந்து கொள்ளவும் கிளாசிக்குகள் உதவுகின்றன என்பதைத் தெளிவுபடுத்தி, பிற மொழி கிளாசிக்குகளுடன் ஒப்பிட இத்தாலியர்களான நமக்கு இத்தாலிய கிளாசிக்குகள் இன்றியமையாதவை என்றும் இத்தாலிய கிளாசிக்குகளுக்கு நிகராய் ஒப்பிட்டறிய அந்நிய கிளாசிக்குகளும் அதே அளவு இன்றியமையாதவை என்றும் கூறியாக வேண்டும்.

அதன்பின் நான் இந்தக் கட்டுரையை மூன்றாம் முறை திருத்தி எழுதியாக வேண்டும். ஏதோ ஒரு தேவையை நிறைவு செய்வதால்தான் கிளாசிக்குகள் வாசிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையைப் போக்கும் வகையில் நான் எழுத வேண்டும். கிளாசிக்குகளை வாசிப்பதற்கு ஆதரவான ஒரே பரிந்துரை, கிளாசிக்குகளை வாசியாதிருப்பதைக் காட்டிலும், வாசித்தல் எப்போதும் நன்று என்பதாக இருக்கும்.

கிளாசிக் வாசிப்புக்காக இத்தனை சிரமப்பட வேண்டியதில்லை என்று யாரேனும் ஆட்சேபம் தெரிவிப்பதானால் நான் சியோரன் கூறுவதை மேற்கோள் காட்டுவேன் (இவர் இன்னும் கிளாசிக் என்ற நிலையை எட்டவில்லை, இந்தச் சிந்தனையாளர் இப்போதுதான் இத்தாலிய மொழிக்கு மொழிபெயர்க்கப்படுகிறார்): “ஹெம்லாக் அரைக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது சாக்ரடிஸ் தன் குழலில் ஒரு பாடல் வாசிக்கக் கற்றுக் கொண்டிருந்தார். “இதனால் உனக்கு என்ன பிரயோசனம்?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. “சாவதற்குள் நான் இந்தப் பாடலாவது கற்றுக் கொள்வேன்“.
[1981]
(“நம்பி கிருஷ்ணனுக்கும் அர்விந்த் கருணாகரனுக்கும்” – மொழிபெயர்ப்பு- பீட்டர் பொங்கல்)

4 comments

  1. செவ்வியல் ஆக்கங்கள் ஏற்படுத்தும் முழுமை மட்டுமல்ல எந்த படைப்பையுமே பிறர் எழுதிய வரையரைகளை வாசிக்காமல் நேரடியாக வாசிப்பதே சரியாக இருக்கும் என்பதே என் சொந்த அனுபவமும் கூட.இலக்கிய உலகு கொண்டாடும் படைப்புகள் நாம் வாசிக்கும் போது தரும் விளைவு இதுவரை சொல்லப்படாததாகவே இருக்கிறது.செவ்வியல்களை இளமையில் வாசிப்பதும் நல்ல வாசகனுக்கு புதிய திறப்புகளைத் தரும்.எவ்வாறாயினும் செவ்வியல்கள் சிறந்தவாசிப்பிற்கே அழைத்துச் செல்பவை.மீள் வாசிப்புகள் புதிய திறப்புகளைத் தருவது உண்மையே எனினும் இளமையில் முதன்முதலில் அவை தரும் தாக்கங்கள் வாழ்வையே மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றவை.கிளாசிக்குகள் நேற்றையவை என்ற உணர்வினை மேலோட்டமாகத் தந்தாலும் மீண்டும் மீண்டும் வாழ்வில் நடைபெறுபவை ஏற்கனவே என்றோ நடந்தவேயே என நமக்கு நினைவூட்டுவதால் அவை இன்றைக்கும் ஏற்றவையே.மிக நல்ல கட்டுரை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.