விடுப்பு – கிஷோர் ஸ்ரீராம்

(சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை, எழுதியவர் கிஷோர் ஸ்ரீராம்)

வெங்கடேசன் பத்து வருடங்களாக சமைத்து வந்தாலும், காலையில் தான் சமைத்த உணவை டப்பாவில் கட்டிக்கொண்டு போய் கல்லூரியில் திறந்தால் ஒரு ஊசிப் போன வாடை கண்டிப்பாக வந்துவிடும். உணவு நன்றாகவே இருந்தாலும் அந்த வாடை தினமும் அடிப்பதாக உணர்ந்தார். அதற்காகவே சக பேராசிரியர்களுடன் சாப்பிடாமல் தன் இருக்கையிலேயே சாப்பிடுவார்.

மனைவி ராஜி விபத்தில் கால் போனதிலிருந்து படுத்த படுக்கையாகவே இருந்தாள். இவர் தினமும் காலை எழுந்து, கோலம் போட்டு, வாக்கிங் செல்பவர்கள் பறிக்கும் முன் பூக்கள் பறித்து, பால் காயவைத்து  இருவருக்கும் காப்பி போட்டு பேப்பர் படித்துவிட்டு சமைக்க ஆரம்பிப்பார். சமையலில் அவர் வல்லுநர் இல்லையென்றாலும் சாப்பிடும்படி சமைத்து வந்தார். கல்லூரி கிளம்பும் முன் தன் மனைவியை எழுப்பி குளிப்பாட்டி, புது நைட்டி அணிவித்து காலை உணவை மெத்தைக்கு அருகே அமைக்கப்பட்ட டேபிளில் வைத்துவிட்டு, மதிய உணவையும் ஹாட் பேக்கில் அதே மேசையில் வைத்துவிட்டுத் தானும் எடுத்துக்கொண்டு போவார். மேசையில் டிவி ரிமோட், செல்போன், தட்டு, ஹாட்பேக், அன்றைய பேப்பர் வைக்கவே இடம் இருக்கும். மருந்து மாத்திரைகள் வைக்க தலைமாட்டில் தனியாக ஒரு டிராயர் இருந்தது.

எட்டு மணிக்கு கல்லூரிப் பேருந்து வந்துவிடும். நகரத்தை விட்டு இருபத்தைந்து கிலோமீட்டர்கள் தள்ளி இருந்தது கல்லூரி. கல்லூரி செல்லும் வரை எதையாவது படித்துக்கொண்டு வருவார். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அந்தக் கல்லூரியில் பணி புரிந்து வருகிறார் . புள்ளியியல் துறை பேராசிரியர். துறைத் தலைவர் பதவி தள்ளிப் போய் அவருக்கு அந்த வருட முடிவில் கிடைக்க வாய்ப்புள்ளதாக மற்றவர்கள் பேசி வந்தனர். வாரத்திற்கு எட்டு வகுப்புகள் எடுப்பார். பழகிப் போன கணக்குகள். முன்பு போல அந்தக் கணக்குகள் அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதில்லை. கரும்பலகையின் இடது ஓரத்தில் கை வைத்தால் மள மளவென்று கை வழியாக கணக்கு பாயும். எந்த இடத்தில் புள்ளி வைப்போம், பிரதான கணக்குக்குத் தேவையான உதவிக் கணக்குகள், எங்கு மாணவர்களை கேள்வி எழுப்ப வேண்டும் என்று எல்லாம் தடம் பழகிய காளைகள் போல் அடுத்து அடுத்து வரிசை மாறாமல் நடந்தன. புதுக் கணக்குகள் எடுப்பதை எப்போதோ கைவிட்டிருந்தார்  வழமைக்கு மாறாக புதிதாக செய்யவேண்டிய காரியங்கள் போல் அவரை எதுவும் அச்சுறுத்துவதில்லை. சாதுர்யமாக அவைகளை தவிர்த்து வந்தார்.

மதிய இடைவேளையில் ராஜிக்கு போன் செய்வார். ‘ஒன்னும் பிரச்சனை இல்லையே?’ என்று கேட்பார். உணவு எப்படி இருந்தது என்று கூட கேட்க மாட்டார். பதில் வந்ததும் போனை வைத்துவிடுவார். கல்லூரியில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது. துறையில் எடுக்கும் முக்கியமான முடிவுகளுக்கு பெரியவர் என்ற முறையில் ஆலோசனை கேட்பார்கள். வாக்குவாதங்களோ, சண்டைகளோ போட்டதில்லை. தனக்கு ஒரு வேலை வந்தால் செய்வார். அவராக எதையும் இழுத்துப் போட்டுக்கொள்ள மாட்டார்.

மாலை பேருந்தில் பெரும்பாலும் தூங்குவார். வீடு போக ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும். வீட்டுக்கு வந்தவுடன் காப்பியும் பிஸ்கெட்டும் ராஜிக்குத் தருவார். இரவு உணவுக்குத் தேவையான காய்கறிகள் நறுக்குவார். தொலைக்காட்சியில் ஏதாவது விவாதம் ஓடிக்கொண்டு இருக்கும். பார்த்துக்கொண்டே வேலை செய்வார். இரவு உணவு ராஜியின் படுக்கைக்குப் பக்கத்தில் சேர் போட்டுக்கொண்டு ராஜியுடனேயே சாப்பிடுவார். ‘இன்னும் கொஞ்சம் சாம்பார் விடட்டுமா?’, ‘நாளைக்கு ஷட் டவுன், கரண்ட் இருக்காது.’,‘ பக்கத்து அப்பார்ட்மெண்டுக்கு புதுசா பேச்சுலர்ஸ் குடி வந்திருக்காங்க, அதான் ஒரே சத்தம்’ என்று துணுக்குச் செய்தியாகத்தான் சம்பாஷணைகள் இருக்கும். ராஜி பெரும்பாலும் பேசுவதில்லை.

ராஜி பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை செய்து வந்தவள் . சிறு வயதிலிருந்தே துறுதுறுவென இருந்த பெண். பள்ளிக்குத் தன் அப்பாவின் பார் வைத்த ஹெர்குலிஸ் சைக்கிளைத்தான் ஓட்டிச் செல்வாள். செயினுக்கு எண்ணெய் ஊற்றுவது, காற்றடிப்பது எல்லாம் பார்த்துப் பார்த்து செய்வாள் . எட்டாவது வகுப்பு வந்ததும், அம்மா திட்டித்தான் வீதியில் இருந்த மற்ற பெண்கள் போல நடந்து பள்ளிக்குச் சென்றாள். தன் வேலையைத் தானே எப்போதும் செய்து கொள்பவள். துணி வைப்பு அலமாரியிலும், புத்தக மேசையிலும் அவள் அடுக்கி வைக்கும் ஒழுங்கை அம்மா எல்லோரிடமும் காட்டி பூரித்துக்கொள்வாள். வெங்கடேசன் அவளைப் பெண் பார்க்க வந்தபோது அவர் கை நகக்கண்களில் இருந்த அழுக்கு தான் அவளுக்கு முதலில் பார்வைக்குப் பட்டது.

‘காலேஜுல வாத்தியாராம். எல்லாருமே நல்லவங்களாத் தெரியறாங்க. நகத்துல அழுக்கு இருக்கறதெல்லாம் உனக்கு ஒரு காரணமா?’ சமையல் கட்டில் அம்மா அவளைத் திட்டினாள். இது என்ன மற்ற நாட்களைப் போன்ற ஒரு சாதாரண நாளா?, பெண் பார்க்கும்போதாவது ஒழுங்காக வரவேண்டாமா. அப்படி என்ன ஒரு அசட்டையான பாங்கு? ராஜியின் காரணங்கள் யாருக்கும் புரிந்திருக்கவில்லை.

கல்யாணம் ஆகிய சில வருடங்களிலேயே ராஜிக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. வெளியே வந்து வேலை செய்வதே அவளுக்கு மிகப்பெரிய விடுவிப்பாக இருந்தது. வெள்ளிக் கிழமைகளில் வெங்கடேசன் ராஜியின் அலுவலகத்திற்கு வந்துவிடுவார். இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வருவர். வெங்கடேசன்தான் வழி நெடுக பேசிக்கொண்டே வருவார்.

‘உன்னை பொண்ணு பாக்க வந்தப்ப என் நகத்துல அழுக்கு இல்லாமல் இருந்தா என்ன பண்ணி இருப்ப?’

‘தலை முடி கலைஞ்சுருக்கான்னு பாத்திருப்பேன்’. இருவரும் சிரித்தனர்.

‘ஆனா பாருங்க. இன்னிக்கு வரைக்கும் உங்களுக்கு அதையெல்லாம் சரி பண்ணிக்கணும்ன்னு தோணினதே இல்ல’

‘ஐ ஹாவ் பெட்டர் திங்க்ஸ் டு வொர்ரி அபவுட்’

‘பொடலங்கா’

‘ஒரு உதாரணத்துக்கு நான் இதையெல்லாம் நான் சரி செஞ்சுகிட்டேன்னு வச்சுக்கோயேன், அப்பவும் உனக்கு குறை சொல்ல ஏதாவது இருக்கும்’

‘அப்படி நீங்க நெனச்சுக்கிட்டா நான் என்ன பண்றது’?

சில நேரம்தான் அது உரையாடலாக இருக்கும். பிறகு இருவரும் மாற்றி மாற்றி கல்லெறிவது போல ஆகிவிடும். வெங்கடேசனுக்கு ராஜியை புரிந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கம் எப்போதுமே உண்டு. அடியாழத்திலிருந்து எழும் சிறியதொரு சொல்லும் நேரம் போகப் போக எரிகற்களாக வந்து விழும். ராஜியின் திமிர் அனைத்தையும் கட்டுடைத்து உள்ளே என்ன தான் உள்ளது என்று பார்க்கும் பொறுமையெல்லாம் அவர் இழந்துவிட்டிருந்தார். கடைசி வரை ராஜியின் பிரச்சனைதான் என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமும் நின்று போனது. அதற்குள் ராஜியும் படுத்துக்கொண்டு விட்டாள்.

ராஜிக்கு விபத்து ஏற்பட்டது பத்து வருடங்களுக்கு முன்னால். வெங்கடேசனுடன் ஸ்கூட்டரில் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு போனபோது பின்னால் வந்த கார் இடப்புறமாக முந்த முயன்றது. அந்நேரம் எதிரே பஸ் வந்ததால் வெங்கடேசன் கார் வந்ததை கவனிக்காமல் இடப்புறம் சற்று ஒடிக்க, கார் ஸ்கூட்டரை இடித்தது. பிடி கிடைக்காமல் கீழே விழுந்ததில் ராஜியின் கால் மேல் கார் ஏறி இழுத்துப் போனது. வெங்கடேசன் தோள்பட்டையில் காயத்துடன் தப்பித்தார். ராஜியின் கால்கள் சரி செய்ய முடியாத அளவு பிளவுண்டு போயின. ராஜியைப் பார்த்துக்கொள்ள கொஞ்ச நாட்கள் அவளின் அம்மா வந்தாள். பிறகு வெங்கடேசனே பார்த்துக்கொண்டார்.

விபத்து ஏற்பட்டதிலிருந்து ராஜி பேசி வந்த வெகு சில வார்த்தைகளும் நின்று போயின. இரவில் அவள் விசும்புவது கேட்டு வெங்கடேசன் பேச முயன்றாலும் ‘ஒன்னும் இல்லை. வலிக்குது. நீங்க தூங்குங்க’ என்று கூறி விடுவாள். வீல் சேர் வைத்துக் கொண்டு சில மாதங்கள் வீட்டுக்குள் நடமாடி வந்தாள். அவ்வப்போது வெங்கடேசனுக்கு சமைக்க உதவுவாள். பொதுவாக டீவி பார்ப்பதில்லை என்றாலும் டிஸ்கவரியில் வரும் மிகப் பிரம்மாண்ட கட்டிடங்கள் தகர்க்கப்படுவது, ஒரு அடர் வனத்தில் தனியாக உயிர் பிழைப்பது போன்ற நிகழ்ச்சிகள் நன்றாக இருப்பதாகக் கூறுவாள். சில வாரங்களில் உலகில் உள்ள அத்தனை வகையான காடுகளும் அவளுக்கு அத்துப்படியாகி இருந்தது. முந்தைய இரவு பார்த்ததையே மறுநாள் மதியமும் பார்த்து வந்தாள்.

ஒரு நாள் அவர் கல்லூரி சென்றிருந்த போது ராஜி வீல் சேரிலிருந்து பாத்ரூம் கம்போடில் உட்காரப் போகும்போது கை இடறி வழுக்கி விழுந்துவிட்டாள். திரும்ப ஏறி உட்காரவும் கையில் பலம் இல்லை. கீழே விழுந்ததில் கையில் அடி பட்டுவிட்டது. வெங்கடேசன் மதியம் செல்போனில் திரும்பத் திரும்ப அழைத்த போது எடுக்காததால் மதியம் பெர்மிஷன் போட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது ராஜி பாத்ரூமில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். அவர் மெதுவாக அவளை எழுப்பி வீல் சேரில் உட்கார வைத்து தண்ணீர் கொடுத்து படுக்க வைத்தார்.

‘ கீழ விழுந்தா சத்தம் போடலாமில்லே ?’

‘ போட்டேன். யாருக்கும் கேக்கல’

கீழே விழுந்ததும் ராஜிக்கு படுக்கையை விட்டுப் போகவே பயமாக இருந்தது. எவ்வளவு வற்புறுத்தியும் படுக்கையை விட்டு சற்றும் நகர மறுத்துவிட்டாள். உள்ளூர பயம் ஒரு விருட்சம் போல படர ஆரம்பித்திருந்தது. அவளுக்கு ஏற்படும் சிறு தொய்வும் அவளின் மனோபலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து வந்தது. பாத்ரூமில் வழுக்கி விழுந்ததிலிருந்து பாத்ரூம் போய் வர, குளிக்க, வெங்கடேசனின் துணை வேண்டியிருந்தது. கல்லூரி செல்லும் போது டயப்பர் கட்டிவிட்டுப் போவார். அவரும் மனம் கோணாமல் எல்லாம் செய்து வந்தார். பூ பறிப்பது, பேப்பர் படிப்பது போல ராஜியின் சிசுருஷைகளும் அவருக்கு மற்றொரு வேலையாயின.

ராஜிக்கு உடம்பும் உப்பிக்கொண்டே வந்தது. உடம்பு மெலிந்து போவதை விட அவள் உடல் பருமனாவது ஒரு பெரிய நோய்மையின் கூறாக அவர் எண்ணினார். ராஜியின் பிடிவாதமே அவளை அப்படி ஆக்குவதாக அவருக்குப் பட்டது . அவளின் உடனடி தேவை முழுமனதாக ஒரு அழுகை. அவர்களுக்கு குழந்தை இல்லாத குறை அவரை விட ராஜிக்கு அதிகமாக இருக்குமென்று அவர் நினைத்ததுண்டு . அவள் மனது கண்டிப்பாக அந்த இரவு விசும்பலை விட ஆழமானது .

அவருடைய ஒரே வருத்தம் தனக்கு சலிப்பு வந்து அவளை அப்படியே விட்டுவிடுவேனோ என்பதுவாகத்தான் இருந்தது. ஆனால் இவ்வளவு வருடங்கள் இந்த உறவை பிணைத்திருக்கும் ஒரு மறைமுகமான கயிறு அவர் மட்டும் தான். தன் வாழ்வில் இது தனக்கு உவப்பானதல்ல என்று அவர் எதையுமே ஒதுக்கியதில்லை. வாழ்க்கை தன்னை இட்டுப்போன திசைக்கு அம்மாவின் விரல் பிடித்து நடக்கும் குழந்தை போலவே நடந்து வந்துள்ளார். நடக்கையில் கடக்கும் காட்சிகள் தன்னையே மறக்கடிக்கச் செய்யுமளவு அழகாக இருந்தால் அவ்விரலை மேலும் கெட்டியாகப் பிடித்து நடந்துள்ளார். தன் சந்தோஷங்கள், துக்கங்கள், அவமானங்கள், வெற்றிகள் அனைத்துமே தம்பூராவில் மீட்டும் ஒரே சுருதியைப் போலத்தான் அவரால் மீட்டெடுக்க முடிந்தது. இது அத்தனையிலிருந்தும் ஓய்வு என்பதை அவர் அடிக்கடி கற்பனை செய்து பார்ப்பதுண்டு. அந்த மனநிலை என்பது எப்படித்தான் இருக்கும் என்று அறிய ஆசையாக இருந்தது.

கல்லூரியில் இருந்து அன்று வந்த போது மாலை வழக்கத்துக்கு மாறாக பேருந்தில் டிரைவர் பாட்டு போட்டுக்கொண்டு வந்தார். இளையராஜா வந்த புதிதில் போட்ட பாட்டுக்கள் . பேருந்தில் வந்த மாணவர்கள் உச்சுக்கொட்டிக்கொண்டு வந்தார்கள். பாட்டுக்கள் எல்லாமே யாரோ நல்ல இசை ரசனை உள்ளவர் தேடித் தேடிச் சேர்த்தவை போல இருந்தது. அனைத்தும் முத்துக்கள். அடித் தொண்டையில் முனகிக்கொண்டே சீட்டில் தாளம் போட்டுக்கொண்டு வந்தார். அந்த மாலை அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஜன்னலுக்கு வெளியே இளஞ்சிவப்பாக இருந்த அந்தச் சூரியனை முதல்முறை பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டு வந்தார். பேருந்து நிறுத்தத்திலிருந்து வீடு வரை பாடிக்கொண்டே நடந்து வந்தார். வீட்டைத் திறந்து உள்ளே வந்ததும் எதுவோ சரி இல்லை என்று பட்டது. ஹாலில் மேசையின் இடம் சற்று மாறி இருந்தது. சந்தேகம் ஏற்பட்டு ராஜியின் அறைக்குச் சென்று பார்த்தார். அங்கே எல்லாம் சரியாகத் தான் இருந்தது. ராஜி எதிர் சுவற்றை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த அறைக்குச் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. பழைய காலத்து மர பீரோ. அதை உடைப்பதற்கு பெரிய சிரமமெல்லாம் தேவையில்லை . இடுக்கில் ஒரு சன்னமான இரும்புக் கம்பியை உள்ளே கொடுத்து ஒரு நெம்பு நெம்பினால் வந்துவிடும் நிலையில் தான் இருந்தது. திருடனும் அதையே தான் செய்திருந்தான். அந்த அறைக்குள் வர ஜன்னல் கம்பிகளை ரம்பத்தைக் கொண்டு அறுத்திருக்க வேண்டும். பீரோவில் உள்ள துணிகளெல்லாம் கீழே வீசி எறியப்பட்டிருந்தன. ராஜியின் நகைகளை லாக்கரில் வைத்திருந்தார். பணம் ஒரு முப்பதாயிரம் வைத்திருந்தார். அதுவும், வெள்ளி சாமான்கள் சிலதும் திருடப்பட்டிருந்தன. பீரோவில் ஒரு டிராயரில் அவர், தான் கல்லூரியில் பொழுதுபோக்காக சேர்த்த ஸ்டாம்புகள், பல தேச நாணயங்கள், பழைய புகைப்படங்கள் எல்லாம் வைத்திருந்தார் அதெல்லாம் கீழே கொட்டப்பட்டிருந்தன.

அவர் செய்வதறியாது ஒரு நிமிடம் திகைத்தார். எண்ணங்கள் கோர்வையாக ஓடவில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசிக்காமல் அவருக்கு பழைய நினைவுகளெல்லாம் திரண்டு கண் முன் விரிந்தன. சமயோசிதமில்லாமல் வாகனத்தை ஒட்டி ராஜியை படுத்த படுக்கையாக்கியது, பாடத்தில் பெயில் ஆக்கியதால் ஒரு மாணவன் மருந்து குடித்தது, அறிமுகமில்லாத ஆளிடம் கடன் குடுத்து அதை வாங்க முடியாமல் அலைந்தது, ராஜியை பெண் பார்க்கச் சென்றது.. ராஜி.. அவருடைய நினைவுகள் எல்லாம் அவளைச் சுற்றியே வந்துகொண்டிருந்தன. தன்னுடைய இயலாமையின் மிகப் பெரிய ஊற்றாக ராஜியைப் பார்த்தார். அணு அணுவாக அவரின் வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் ஒரு மிகப் பெரிய முடிவிலி. அவள் பற்கள் பொதுவாகவே துருத்திக்கொண்டு வெளியே தெரியும். சிரிக்கும் போது கோரமாக அது தெரியாதிருக்க கையை வாய்ப்பொத்தித் தான் சிரிப்பாள். இவ்வளவு வருடங்களாக வெள்ளந்தியாக அவள் ஒரு முறை கூட வாய் விட்டுச் சிரித்தது இல்லை. அவள் மனதில் அப்படி என்ன உள்ளது? எதைப் பூட்டி வைக்க வேண்டும் ? அதை சற்றும் தெரிந்து கொள்ள முற்படாமல் தட்டிக்கழித்து, தோற்று, இப்படி அவளுக்கு வேண்டியதெல்லாம் மறுபேச்சு பேசாமல் பண்ணிப் பண்ணி அவள் அடுத்த அறையில் ஒரு பூதகியைப் போல் படுத்துக்கொண்டிருக்கிறாள்.

அவர் காலுக்குக் கீழ் அவர் தன் பள்ளி ஆண்டு விழாவில் பெண் வேஷம் போட்டு ஒரு நாடகத்தில் நடித்த போட்டோ விழுந்து கிடந்தது. கன்னத்தில் கை வைத்து வசனம் பேசும் போது எடுத்த போட்டோ. நாடகம் முடிந்து அவரை அள்ளிக்கொண்டு எல்லோரும் கொஞ்சினர். மாலை வீடு திரும்பியதும் அவரின் அம்மா திருஷ்டி கழித்தாள். அதைப் பார்த்துக் கொண்டே இருந்தார். தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. கண்களில் கண்ணீர் வழிந்ததை துடைத்துக்கொண்டு ராஜியின் அறைக்கு விரைந்தார்.

‘நம்ம வீட்டுல திருடு போயிருக்கு’

‘ஓ அப்படியா. எப்ப?’

‘இல்ல தெரியாமத் தான் கேக்கறேன். நீ என்னத்தப் புடுங்கிட்டு இருந்த. ஜன்னல அறுத்து பீரோவ பிரிச்சு இருக்கான் பக்கத்து ரூமுல, நீ மயிரே போச்சுன்னு படுத்துட்டு இருந்துருக்க.’

ராஜி பேசவே இல்லை.

‘திங்க வேண்டியது. தூங்க வேண்டியது. பேள வேண்டியது. நீயெல்லாம் ஒழிஞ்சு போயேண்டி சனியனே’ – திட்டி முடிக்கும் முன்னரே உதடு துடித்தது. குரல் கூட கணீரெண்று ஒலிக்காத ஒரு நசநசத்த கோபம். அந்த நொடியின் கனத்தைத் தாள முடியாமல் சர சரவென்று வீட்டை விட்டு வெளியே சென்றார்.

மாலை ரசித்த பாட்டெல்லாம் எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. மனது ஏதேதோ எண்ணங்களை அசை போட்டது. வீட்டுக்குத் திரும்ப எரிச்சலாக இருந்தது. அவருக்கு யாரிடமாவது பேசி அழவேண்டும் போல இருந்தது. திடீரென்று பேருந்தில் எங்காவது செல்லவேண்டும் என்று தோன்றி அப்போது அங்கே வந்த பேருந்தில் ஏறிக்கொண்டார். இரண்டு நிறுத்தங்கள் தாண்டி பேருந்து நிலையம் வந்தது. கண்டக்டர் இறங்கச் சொல்லியதும் இறங்கி வெளியே நடந்தார்.

ரோட்டின் மறுபுறம் ஒரு மதுபானக்கடை இருந்தது. அதுவரை அவர் மதுவை தொட்டதே இல்லை. அன்று வரை அது ஏனோ தோன்றியதும் இல்லை, வாய்ப்பும் அமையவில்லை. அந்த மதுக்கடை நோக்கி நடந்தார். வெளியே கூட்டமாக இருந்தது. ஒரு இரும்பு சட்டத்தின் சிறு ஓட்டையில் அனைவரும் பணத்தை நீட்டி பாட்டிலை வாங்கிக்கொண்டு அருகிலிருந்த சந்துக்குள் சென்றனர். அவர் அங்கு சிறிது நேரம் விழித்துக்கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் கூட்டம் சேர அவர் முன்னுக்குத் தள்ளப்பட்டார். இரும்புச் சன்னல் அருகே நின்று சுற்றிப் பார்த்தார். பின்னால் நின்றிருந்தவர்கள் எல்லாரும் கத்த ஆரம்பித்துவிட்டிருந்தார்கள்

‘இந்தா சார் என்ன வேணும்’ என்று உள்ளே இருந்தவன் அலறினான்.

‘அது வந்து’ என்று இவர் இழுத்துக் கொண்டே பர்ஸைத் துழாவினார்.

‘சரி இருநூறு ரூபா எடு’ என்று ஒரு விஸ்கி பாட்டிலை அவர் முன் தள்ளினான். அவர் பணத்தை கொடுத்துவிட்டு அந்த சந்தின் முன் நின்றுகொண்டிருந்தார். உள்ளே இருந்து லுங்கி அணிந்த ஒரு சிறுவன் அவர் கையைப் பிடித்து ‘வா சார் உள்ள வா’ என்று அழைத்துப் போனான். நீளமான ஆஸ்பெஸ்டாஸ் சீட் வேயப்பட்ட ஒரு கொட்டகையில் பத்து டேபிள்கள் போடப் பட்டிருந்தன. எல்லா டேபிளிலும் ஆட்கள் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். அந்த இடமே ஒரே கூச்சலாக இருந்தது. டேபிளில் தண்ணீர் சிந்தி, கொட்டகையின் ஓரத்தில் ஒருவன் கண்கள் சொருகி தலையைப் பிடித்துக்கொண்டு வாந்தி எடுத்துக்கொண்டிருந்தான். மூத்திர நாற்றமும், மது வாடையுமாக அந்த இடமே குமட்டிக்கொண்டு வந்தது.

ஓரளவு சுத்தமான டேபிளில் அமர்ந்து கொண்டார். சிறுவன் பிளாஸ்டிக் கப்பும் தண்ணீர் பாக்கெட்டுடனும் வந்தான். கடலை வேணுமா என்று கேட்டு ஒரு சிறிய கடலை பாக்கெட்டை லுங்கி மடிப்பிலிருந்து எடுத்து வைத்தான். முப்பது ரூபாய் வாங்கிக்கொண்டு ‘சிக்கன் எதுனா வேணும்னா சொல்லு சார்’ என்றான். வெங்கடேசன் வேண்டாம் என்பது போல் கையசைத்தார். ராஜியின் மருந்து பாட்டில்கள் போல அந்த பாட்டிலை திறக்க சிரமப் பட்டார். முகர்ந்து பார்த்தபோது வீச்சம் தலைக்கேறி ஒரு முறை சிலிர்த்துக் கொண்டார்.

எதிரே ஒருவன் பாட்டிலை உடைத்து மதுவை கப்பில் ஊற்றி தண்ணீரை அதில் பீச்சி அடித்து ஒரே மடக்காகக் குடித்துக் கிளம்பினான். அதை பார்த்துக்கொண்டிருந்த வெங்கடேசன் தன் பாட்டிலில் இருந்த முக்கால்வாசி மதுவை ஊற்றி கொஞ்சம் தண்ணீரை பீச்சி வாயில் ஒரேடியாகக் கவிழ்த்தார். மதுவின் வீச்சம் ஒத்துக்கொள்ளாமல் புரையேறி இருமினார். உணவுக் குழாய் நெடுக கதகதப்பாக அந்தத் திரவம் பயணிப்பதை உணர்ந்தார். குமட்டிக்கொண்டு வந்தது. வாய் எதையாவது மெல்ல வேண்டும் போல இருந்தது. கடலையை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். மிச்ச மதுவையும் ஊற்றி தண்ணீர் கலக்காமல் கண்களை மூடிக்கொண்டு குடித்து முடித்தார்.

லேசாக தலை கிறுகிறுத்தது. வெளியுலகமே சற்று நேரத்திற்கு பரிச்சயமற்றுப் போனது. எழுந்து நிற்க முடியவில்லை. முயன்று எழுந்தபோது தள்ளாடி கீழே விழப் போகையில் சிறுவன் பிடித்துக்கொண்டான். வாந்தி வருகிறது என்று சொன்னதும் சிறுவன் அதே மூலைக்கு அழைத்துச் சென்றான். மதிய உணவெல்லாம் வெளியே வாந்தியாக வந்தது. வீட்டுக்குப் போகணும் என்று முனகினார். பார்த்துக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் அவர் சொன்ன பேருந்துக்கு கைத்தாங்கலாக அழைத்துச் சென்று டிக்கெட்டையும் எடுத்துக்கொடுத்தார்கள்.

அவரால் உட்காரவே முடியவில்லை. கண்கள் இருட்டிக்கொண்டு மயக்கமாக வந்தது. பேருந்தில் தூங்கிக்கொண்டே வந்தார். தன் சீட்டின் முன் சாய்ந்த போது கைகள் முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணின் தோள் மீது சரிந்தன. அந்தப் பெண் சத்தம் போட்டதும் பேருந்தில் இருந்தவர்களெல்லாம் அவரை அடிக்கத் தொடங்கினர். கைகளால் தடுத்துக்கொள்ள வேண்டும் என்ற பிரக்ஞை கூட அவருக்கு அப்போது இல்லை. பேருந்தை நிறுத்தி அவரை குண்டுக்கட்டாக தூக்கி படியிலிருந்து தள்ளி விட்டனர். அவர் காதில் மாட்டிக்கொண்டிருந்த ஒரு கால் செருப்பு கீழே விழுந்ததும் சாக்கடையில் அடித்துச் சென்றது . மைல்கல்லில் சாய்ந்து விழுந்து கிடந்தார். இரவு முழுதும் அங்கேயே கிடந்தார்.

மறுநாள் காலையில் அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவன் ஒருவன் அவரை எழுப்பி, தண்ணீர் வாங்கிக்கொடுத்து ஆட்டோவில் கொண்டு வந்து விட்டான். தன் வியர்வை வாடை தன்னுடையது போலவே இல்லை.பிசுக்காக ஒட்டியது. சட்டையெல்லாம் அழுக்காக இருந்தது. கால்சராய் மடிப்பு முழுதும் மணலாகக் கொட்டியது. நெற்றியிலும் முதுகிலும் காயம் ஏற்பட்டிருந்தது. ராஜியின் அறைக்கு வந்து பார்த்த போது அவள் கண்ணெல்லாம் சிவந்து வீங்கி இருந்தது. முன்தினம் டயப்பர் கட்ட மறந்திருந்தார். ராஜியின் ஆடை, மெத்தை முழுதும் சிறுநீர் நாற்றம் அடித்தது. ராஜியை அலுங்காமல் வீல்சேரில் அமர வைத்து பாத்ரூமுக்கு கூட்டிச்சென்றார். அப்போதும் விசும்பினாள். பிறகு தானும் குளித்து நெற்றிக்கு பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டார். காலை உணவை சில நிமிடங்களில் தயார் செய்து ராஜியின் ஹாட்பேக்கில் போட்டு வைத்து தானும் தன் டப்பாவில் போட்டுக்கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டார்.

காலை வகுப்பில் கணக்குகள் வழக்கம் போல் வந்தன. மாணவர்களும் பழைய மாணவர்கள் கேட்ட அதே சந்தேகங்களைக் கேட்டனர். இவரும் மனப்பாடமே ஆகிப்போன பதிலைக் கூறி தெளிவு படுத்தினார் . மதிய உணவை தனியாகவே சாப்பிட்டார். டப்பாவைத் திறந்ததும் அதே ஊசிப்போன வாடை அடித்தது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.