கார்ல் ஓவ் நாஸ்கார்டுடன் ஒரு நேர்முகம் – மெடயா ஓகர்

உங்கள் தொடர் நாவல்கள் பற்றி அறிந்திராத வாசர்களுக்காக, இதெல்லாம் எப்படி துவங்கியது, என்பதைச் உருவானது என்று சொல்ல முடியுமா?

சரி, நினைத்துப் பார்த்தல் என்றும் மீண்டும் கட்டியெழுப்புதல் என்றும் இதைச் சொல்லலாம். இதைத் துவக்கும்போது இது என் அப்பாவைப் பற்றியும் அவருடன் எனக்கு இருந்த உறவைப் பற்றியும் அவரது மரணத்தைப் பற்றியும் இருக்கப் போகிறது என்ற அளவில்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருந்தார். அது எனக்கு ஒரு வலி நிறைந்த அதிர்ச்சியாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனால் அது… அது என் வாழ்க்கைக் கதை போலிருந்தது, அதை நான் சொல்லியாக வேண்டும் என்று நினைத்தேன். நீண்ட காலமாக அதை ஒரு புனைவு வடிவில் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், நான்கு ஆண்டுகளாக அதை முயற்சித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. இப்படி இருந்ததே ஒரு சுவையான விஷயம், ஏனென்றால், ஏன் எழுத முடியவில்லை என்ற கேள்வி எழுதுகிறது. ஒரு புனைவாக என்னால் அதனுள் நுழைய முடியவில்லை. நான் அந்தப் புனைவை நம்பவில்லை.

அப்புறம் வடிவத்தில் புனைவாகவும் உள்ளபடி நடந்ததை உள்ளடக்கமாய்க் கொண்டும் எழுதலாம் என்று ஒரு எண்ணம் எழுந்தது. அது கொஞ்சம் விவரமில்லாத நினைப்புதான், ஆனால் அப்படிதான் நினைத்தேன். அதை என்னால் இப்போதும் சரியாக நினைவுகூர முடிகிறது. அதன்பின் பத்து பக்கமோ என்னவோ எழுதி அதை என் எடிட்டருக்கு அனுப்பினேன். அவர் எதிர்மறைப் பொருளில், அதை வெறித்தனமான வாக்குமூலம் என்று அழைத்தார். அவ்வளவு அதிகம் இருந்தது. யாரிடமும் சொல்லாத விஷயங்களை எழுத முயற்சி செய்து கொண்டிருந்தேன்- சங்கடமான, யாருக்கும் தெரியாத, அச்சுறுத்தும் விஷயங்கள். ஆனால் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன், துவக்கியதை மேலும் மேலும் விரித்து எழுதிக் கொண்டிருந்தேன், நான் எழுதுவதற்கிருந்த விஷயங்களை ஒரு நாவலாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் என் அப்பாவின் மரணத்துக்கு வரும்போது அதை எழுதுவது கடினமாக இருந்தது. மரணத்தைப் பற்றி எழுதுவது கடினம், எனவே அடிப்படையில் ஒன்றுமில்லாததைப் பற்றி நூறு பக்கங்கள் எழுதியபின்தான் என்னால் மரணத்தை எழுத ஆரம்பிக்க முடிந்தது. அப்போதுதான் எனக்கு அதற்கான் மொழி கிடைத்தது, நாவல்களில் வழக்கமாகப் பேசாத விஷயங்களை, இதுவுமல்லாமல் அதுவுமில்லாமல் இருக்கும் விஷயங்களைக் கையாள்வதற்கான குரல் கிடைத்தது. அதன்பின் எழுதிக் கொண்டே போனேன், அவ்வளவுதான்.

ஆயிரத்து இருநூறு பக்கங்கள் எழுதி முடித்ததும் அவற்றை என் எடிட்டரிடம் கொடுத்துவிட்டு, “என்ன செய்யலாம்? ஒரு புத்தகமா, இல்லை இரண்டா?” என்று கேட்டேன். “பன்னிரெண்டு புத்தகங்கள்”, என்றார் அவர். மாதம் ஒன்று. வாசகர் சந்தா கட்டி மாதா மாதம் ஒவ்வொரு பகுதியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். தி வெட்டிங் பிரசண்ட் என்ற இங்கிலீஷ் இண்டி இசைக்குழு இது போல் ஒன்று செய்தார்கள், ஒவ்வொரு மாதமும் ஒரு பாடல் வெளியிட்டு ஆண்டு இறுதியில் அவற்றை ஒரு ஆல்பமாய் தொகுத்தார்கள். அதன்பிறகு, “சரி, ஆறு புத்தகங்கள் வரட்டும்”, என்று முடிவானது. இது போன்ற முடிவுகள் பலவும் நம் சக்தியையும் மொழியையும் சார்ந்த விஷயங்கள்.

கலைக்கும் விபத்துக்கும் உள்ள உறவைப் பேச முடியுமா?

ஆமாம், என் முதல் நாவல் எழுதும்போதே இதைப் பற்றி யோசித்திருக்கிறேன். என் எந்த நாவலையும் இரண்டு நாட்கள் தள்ளி துவங்கியிருந்தால் அவை வேறு வகை நாவல்களாக இருந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். எனக்கு அந்த எண்ணமே பிடித்திருக்கிறது, அந்த கருத்தே சுவாரசியமாக இருக்கிறது. எழுதுவதில் ஒரே விஷயம்… அது முழுக்க முழுக்க விபத்தாய் இருக்கிறது. நீங எழுதும்போது என்ன நடக்கிறது என்பது ஒரு விபத்து. இது ஏதோ ஒரு ஆழ்மன தளத்தில் நடக்கிறது என்று நினைக்கிறேன். அப்படிதான் அது என் விஷயத்தில் நடப்பதைக் இருக்கிறது; இப்படி இருப்பதுதான் சாத்தியம்… என்ன எதிர்பார்ப்பது என்பதை அறியாமல் இருப்பது. இப்படிச் செய்யும்போது உலகில் நடக்கும் எதை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ள முடியும்.

மூன்றாம் பகுதியில் உள்ள இனிய பகுதிகளில் நீங்கள் வாசிப்பையும் இலக்கியத்தையும் கண்டுகொள்ளும் இடம் ஒன்று. உங்கள் அம்மா காமிக்ஸ் படிப்பதை நிறுத்தச் சொல்கிறார். உங்களுக்கும் வாசிப்புக்கும் உள்ள உறவு இப்போது எப்படி இருக்கிறது? நீங்கள் இப்போது எப்படிப்பட்ட வாசகர்?

படித்துக் கொண்டிருக்கும்போது நான் யோசிப்பதில்லை. நான் கவனமாக உள்வாங்கி வாசிப்பவனும் அல்ல. இலக்கியத்தைப் பற்றி எழுதும்போதுதான் அது பற்றிய எண்ணங்கள் வரும், ஆனால் வெறுமே படித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு எல்லாம் மறந்துவிடுகிறது.

என்னிடம் அதிகம் சொல்வதற்கில்லாத கடினமான விஷயங்களைப் படிக்கவும் விரும்புகிறேன், படிப்பதற்கு கஷ்டமான எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. உதாரணத்துக்கு, இப்போது நான் ரசாயனம் பற்றி படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ரசாயனம் பற்றி எதுவும் தெரியாது., அது ஆறுதலாக இருக்கிறது. அதேபோல்தான் ஹெய்டக்கர் வாசிப்பதுவும். சுத்தமாக எதுவுமே புரியாது, ஆனாலும் அது ஏதோ ஒன்று… எனக்கு இந்த நிலையில் இருப்பது பிடித்திருக்கிறது.

விதி பற்றி எழுதுவதால் நான் நோர்ஸ் சாகசங்கள் பற்றி படித்துக் கொண்டிருக்கிறேன்…. ஒரு முறை நான் பயங்கரமான கனவு கண்டேன். மண்ணிலிருந்து எருது ஒன்று வெளியே வந்து கொண்டிருக்கிறது; அது முழுசாக வெளியே வருவதற்குள் நான் அதைக் கொன்றாக வேண்டும் அதன் தலையை வெட்ட வேண்டும் ஆனால் அது மேலே வந்து கொண்டே இருக்கிறது. முழிப்பு வந்துவிட்டது, இன்றைக்கு என்னவோ நடக்கப் போகிறது என்பது எனக்குத் தெரிந்துவிட்டது, அப்படிதான் நடந்தது. அன்றைக்கு மிக மிக மோசமான ஒரு விஷயம் நடந்தது, “இதுதான் ஆரம்பம், இதுதான் விதி” என்று நான் நினைத்துக் கொண்டேன். விதி என்ற கருத்து காலாவதியாகிவிட்டது என்றும் யாருக்கும் விதியில் நம்பிக்கை இல்லை என்றும் நினைக்கிறேன். கடவுள் என்ற கருத்துருவாக்கம் போல்தான், சுத்தமாகக் காணாமல் போய் விட்டது. சமயம், தெய்வாதீனம்- இது எதுவும் இல்லை. ஆனால் இரண்டு, மூன்று, பத்து தலைமுறைகளுக்கு முன்னால் எப்படி இருந்தோமோ அப்படிப்பட்ட மனிதர்களாகதான் நாம் இப்போதும் இருக்கிறோம். அதற்கெல்லாம் என்ன ஆயிற்று? இப்போதும் உள்ளவையா, எந்த வகையில் இருக்கின்றன? நவீனத்துக்கும் காலம் சென்றவைக்கும் இடையிலுள்ள வேறுபாட்டில் எனக்கு ஆர்வம் இருக்கிறது.

My Struggle பற்றி இன்னும் சிறிது பேசுவோம். முதல் புத்தகத்தில் மரணம், மற்ற விஷயங்கள் இருக்கின்றன. அதன்பின் இரண்டாம் புத்தகத்தில் உக்கிரமான காதல். மூன்றாம் புத்தகத்தில் ஏன் குழந்தைப் பருவத்துக்குச் சென்றீர்கள்? முதல் இரண்டு போல் இல்லாமல் இது ஏன் வேறு வகை அமைப்பு கொண்டிருக்கிறது?

ஆனால் எனக்கு இது ஒரு நாவல்தான், இவை எல்லாம் ஒரே புத்தகத்தின் அத்தியாயங்கள்.

குழந்தைப்பருவம்தான் வாழ்க்கையின் அர்த்தம், நாமெல்லாம் அதன் சேவகர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏன், எப்படி நாம் குழந்தைப்பருவத்துக்கு சேவை செய்கிறோம்?

ஆமாம், குழந்தைகள்தான் வாழ்க்கையின் அர்த்தம் என்றால், செக்ஸ்க்கு என்ன அர்த்தம், காமம், குறிக்கோள், வாழ்க்கையின் பெரிய விஷயங்களுக்கு என்ன அர்த்தம்? குழந்தைகள் எதையும் உற்பத்தி செய்வதில்லை. அவர்கள் எதையும் உருவாக்குவதில்லை. ஆனால் வாழ்வின் தீவிர நிலைகள் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறது என்றால், நீங்கள் ஒரு குழந்தையாக இருக்கும்போது இந்த உலகை அறிந்ததையும் அது இப்போது இருப்பதையும் ஒப்பிட்டே பார்க்க முடியாது, என்னைப் பொருத்தவரை அதுதான் என் அனுபவமாய் இருக்கிறது. அப்போது இருந்த அளவு தீவிரமாகவோ உக்கிரமாகவோ என்னால் உணர முடியும்போது, எப்போதும் என்னால் அந்த நிலையில் இருக்க முடியவில்லையே என்ற ஒரு மாபெரும் சோகம் எழுகிறது. எல்லாம் இப்போது உயிர்ப்பு குன்றிவிட்டன. ஆனால், பத்து வயதைவிட நாற்பத்து ஐந்து வயதினனாய் வாழ்வது எளிதாக இருக்கிறது.

… ஆறாம் புத்தகத்தில் ஹிட்லர் பற்றி எழுதுவது என்று ஏன் தீர்மானித்தீர்கள்?

தலைப்புதான் காரணம். தலைப்பு அப்படி இருப்பதால் அதைப் பற்றி கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்தேன், அப்புறம் அதில் சுவாரசியம் பிடித்ததால் நிறைய எழுதிவிட்டேன்.

அன்றாட அனுபவங்களை எழுதுவதற்கும் கோட்பாடுகளைப் பற்றி எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு பற்றி பேசியிருக்கிறீர்கள். நீங்கள் ஏன் அன்றாட அனுபவங்களை எழுதுவதை நிறுத்தாமல் கோட்பாட்டு எழுத்தை நிறுத்த முடிவு செய்தீர்கள்?

நான் அன்றாட விஷயங்களை முடித்து விடுகிறேன். புத்தகத்தின் நடுவில்தான் கட்டுரைகள் வருகின்றன. ஏதோ ஒரு வழியில் எவ்வளவு முழுமையாக எழுத முடியுமோ அதைச் செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். ஹிட்லர் தன் தனிவாழ்வு பற்றி பொய் சொல்கிறார், அது சுவாரசியமான விஷயம். பொய்கள் அவரது அகத்தைப் பிரதிநிதிப்படுத்துகின்றன, அவர் தான் என்னவாக வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம் இருக்கிறது என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். புத்தகத்துக்கு வெளியே, ஒரு மனிதனாக அவர் எப்படி இருந்தார் என்று யோசித்துப் பார்ப்பது எனக்கு சுவாரசியமாக இருந்தது.

அதைப் புத்தகத்தில் சேர்ப்பது என்று ஏன் முடிவு செய்தீர்கள்?

புத்தகம் எழுதிக் கொண்டிருக்கும்போது என் மனதில் தோன்றியதை எல்லாம் அதில் சேர்த்து விட்டேன். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட தர்க்கம் இருக்கவும் செய்கிறது. என் தாத்தா-பாட்டி வீட்டின் வாசல் அறையில் மெய்ன் காம்ப் வைத்திருந்தார்கள், அவர்கள் இறந்தபின்தான் அதைக் அறிந்தோம். நார்வேயில் இது ஒவ்வொருவரின் குடும்ப வரலாற்றிலும் உண்டு. இதை விவாதிப்பதில்லை, யாரும் இதைப் பேசுவதேயில்லை. ஆனால், உங்களுல்க்கே தெரியும், ஜெர்மானியர்கள் இங்கு ஐந்து ஆண்டுகள் இருந்தார்கள் எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது, ஒரு பிரச்சினையும் இல்லை. எனவே ஏறத்தாழ எல்லாருமே அவர்களுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளியில் நாம் படிக்கும் கதை எதிர்த்துப் போராடியதாகச் சொல்கிறது, நாஜியிஸத்துக்கு எதிரான வீரப் போர் நடந்ததாகச் சொல்கிறது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஹிட்லரின் மெய்ன் காம்ப் நார்வேயில் பரவலாக வாசிக்கப்பட்டது, அடிப்படியில் ஐரோப்பாவெங்கும் வாசிக்கப்பட்டது. அதன் கருத்துகளை மக்கள் விரும்பினார்கள். இது நன்றாக இருக்கிறது என்று நினைத்தார்கள். இதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது, ஐரோப்பிய தேர்தல்களில். இப்போது வலது சாரி தீவிரவாதிகள் ஏராளமாய் இருக்கின்றனர், எனவே இதெல்லாம் முக்கியமான பிரச்சினைகள் நாசியிசம் மீண்டும் ஹெல்மெட்டுகளும் பூட்ஸ்களும் லெதர் யூனிபார்ம்களும் போட்டுக்கொண்டு திரும்புகிறது என்று நீங்கள் நினைத்தால் அது மிப்பெரிய தவறாக இருக்கும். அப்படி எல்லாம் இல்லை… ஆனால் அது வரத்தான் போகிறது.

நன்றி –  Medaya Ocher interviews Karl Ove Knausgaard, Los Angeles Review of Books

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.