தீராநதி ஜனவரி 2015 இதழில் ‘வாடாமல்லி’ கண்மணி குணசேகரனின் கதை ஒரு நடுவயது பெண், ( மணமாகி மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை வாழ்ந்தாலும்) தான் பதின்களில் காதலித்துக் கைப்பிடிக்க முடியாமற் போனவனுக்கு அவனது மரணத்துக்கு பின் மாலை போடும் உருகலோ உருகலான கதை.
வாசித்த பின் மிகவும் மனச் சோர்வே ஏற்பட்டது. ஏன் ‘அஞ்சலை’ என்னும் ஆழமும் நுட்பமும் உள்ள நாவலைத் தந்த கண்மணி குணசேகரன் இப்படி ஒரு சிறுகதையை எழுதினார் என்று மனம் அசை போடுவதை வெகு நேரம் நிறுத்தவில்லை. இப்போதெல்லாம் எதிர்மறை விமர்சனம் இருந்தால் எழுதாமல் நல்ல படைப்பு என்று விமர்சிக்கத் தக்கதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு சுயகட்டுப்பாடு வேறு வைத்திருக்கிறேன். அதில் யாருக்கு விதி விலக்கு என்றால் மூத்த எழுத்தாளர்ளுக்கு. அவர்கள் புனைவின் நுணுக்கங்களில் அல்லது உள்ளடக்கத்தின் செறிவில் சமாதானம் செய்யும் போது படைப்புக்களை எதிர்மறையாகவே விமர்சிக்க வேண்டி இருக்கிறது. புதிதாக எழுத வருவோருக்கு ஒரு சுய தணிக்கை செய்ய அது வாய்ப்பாக அமையும்.
மீண்டும் சிறுகதைக்கு வருவோம். கண்மணி குணசேகரன் மூத்த எழுத் தாளர் தான். ஆனால் விமர்சனம் எப்படி எழுதப் போகிறேன் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது சக எழுத்தாளர் தொலைபேசியில் வந்தார். என்னையுமறியாமல் ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ மற்றும் ‘வாடாமல்லி’ சிறுகதையை ஒப்பிட்டுப் பேசினேன்.
‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ 40 ஆண்டுகளுக்கு முன்பு நாவலாக வெளிவந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பீம்சிங் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது. நிறையவே வரவேற்பைப் பெற்றன இரண்டுமே. இருந்தாலும் கதையை சுருக்கமாகக் கீழே தருகிறேன்:
முதிர்கன்னியான ஒரு நாடக நடிகை, கறாரான ஒரு நாடக விமர்சகர் இருவரும் காதல் வயப்படுகிறார்கள். உடலாலும் மனதாலும் நெருங்கி, திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள். திருமணத் துக்குப் பின் வீட்டில் ரோஜா வளர்ப்பது தொடங்கி பல விஷயங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு. மனைவி அடங்கிப் போனாலும் கணவன் “அந்தத் திருமணம் போதும் விவாகரத்து பெறலாம் ” என்று முடிவெடுக்கிறான். வழக்கறிஞர் உடனடியாக விவாகரத் து கிடைக்காது ஓரிரு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்து பிறகு விவாகரத்துக்கு முயல வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார். ஒருவருக்கு ஒழுக்கக் குறை அல்லது உடற் கோளாறு இருந்தால் மட்டுமே உடனடி விவாகரத்து கிடைக்கும் என்பது மாற்று வழி என்றும் கூறுகிறார்.. இருவரும் பிரிந்து வாழும் கால கட்டத்தில் ஒரு நாள் அவன் அவளைப் பார்க்க வரும் போது இந்த உரையாடல் நடக்கிறது:
“நான் இப்போ வந்தேனே சந்தோஷமா?”
” சந்தோஷம் தாங்க”
“அப்படின்னா இத்தனை நாள் நான் வரவே இல்லையே. அதில வருத்தமில்லையா?”
“அப்பிடி இல்லீங்க. நீங்க வந்தப்போ சந் தோஷமா இருப்பேன். நீங்க வராதப்போ வந்தத நினைச்சு சந்தோஷமா இருப்பேன்”
கதையின் முடிவில் வழக்கறிஞர் குறிப்பிட்ட மாற்றுக் காரணம் கிடைக்கிறது. மனைவிக்கு காலில் நடமாட முடியாத படி முடக்குவாதம் வருகிறது. “இதைக் காரணம் காட்டி விவாகரத்துக்கு முயலலாம்” என்கிறாள் மனைவி உற்சாகமாக. ‘உன்னுடனேயே இனி வாழ்வேன்” என கணவன் முடிவாகக் கூறுகிறான்.
‘வாடாமல்லி’ கண்மணி குணசேகரனின் சிறுகதைக்கு மீண்டும் வருவோம். கதாசிரியர் முதலில் இந்த மாதிரியான் ஆணை வழி படும் பெண் என்னும் பிம்பத்தையே கதை விட்டுச் செல்லப் போகிறது என்று எண்ணியிருந்தாரா? ஏனெனில் வேறு ஒரு சரடு கதைக்குள் இருக்கிறது. பிணமாகக் கிடக்கும் ஒரு நடு வயது ஆள் பற்றி அவரது ஒழுக்கம் பற்றித் தவறான விமர்சனங்கள் வருகின்றன. அந்தப் பிணத்தை உண்மையான அன்பு மட்டும் மரியாதையுடன் வணங்க யாரும் இல்லை என்று துவங்கி கடந்த காலம் பக்கம் போயிருந்தால் ? கதாநாயகன் தரப்பு நாயகி தரப்பு இரண்டுமே பெரிதும் வாசகனின் புரிதலின் வழி அவன் சென்றடையும் படி நுட்பமாகச் சொல்லப்பட்டிருந்தால்? மரணத் தருவாயில் கூட அவனை நேசித்தவள் மட்டுமே அவனைப் புரிந்து கொண்டாள் என்னும் மையத்தைக் கதை கொண்டிருந்தால்? அப்போது இந்தக் கதையின் தளம் வழிபடும் நாயகி, குடிகார நாயகன் என்பதைத் தாண்டி இருக்கும். மனித உறவுகள் சகமனிதர்கள் ஒருவரை ஒருவர் பற்றிக் கொள்ளும் புரிதல் அல்லது புரிதலின்மையின் உள்ளார்ந்த அரசியல் இவை எல்லாமே பின்னப்பட்டு வேறு ஒரு தளத்தில் கதை மேற்சென்றிருக்கும்.
ஜெயகாந்தனின் நாவல் மற்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதை இரண்டிலுமே கதாநாயகன் மிகுந்த ஆண்மை அம்சம் உள்ள ஆளுமையுள்ளவன். நாயகி தள்ளி இருந்தே அதை கவனித்துக் காதல் வயப்பட்டாள் இத்யாதி உண்டு.
நம் முன் நிற்கும் பெரிய கேள்வி இது. ஏன் இப்படி பெண் ஆணிடம் அப்படியே அடைக்கலம் தேடி சமர்ப்பணம் ஆகும் (மனோரீதியாக) வழிபடும் மனநிலை கொண்டாடப்படுகிறது? அது அவளின் பெண்மையின் சிறப்பு அம்சமாக நாம் ஏன் கொள்கிறோம்? நாம் என்பது இந்த இடத்தில் ஆண்களை மட்டுமே குறிப்பிடுகிறது என்பதை நான் சொல்லத் தேவையே இல்லை. எல்லா சூழ்நிலையிலும் எல்லா இடத் திலும் நாம் என்பது ஆண்கள் மட்டுமே. ஆணுக்கு அடங்கிய பெண் அதற்குள் ஐக்கியமானவள் தானே?
பெண் படைப்பாளிகளில் குறைவானோரே இந்த நாமில் ஐக்கியமாகாமல் இந்த வழிபடும் நிலை பெண்கள் மீது திணிக்கப்பட்டது என்று பதிவு செய்தவர்கள்.
பெண்ணின் உலகம் ஆணின் உலகை விட மிகவும் விரிந்தது. உணர்வு நிலையில் ஆணை விடப் பெண் உறுதியானவள். குடும்பம் என்னும் அமைப்பு பெண்ணுக்கு மிகவும் பிரியமானது. அதைக் காக்க அவள் செய்யும் முதல் தியாகம் அல்லது ஒரு புரிதல் ஆணை அவனது ஆதிக்க நிலையுடனேயே ஏற்று மேற்செல்லல்.
ஆணைச் சார்ந்தே நான் இருக்கிறேன் என்று எந்தப் பெண்ணும் அடிபணிய விரும்பவில்லை. மறுபக்கம் ஆண் இல்லாமல் என் வாழ்க்கை முழுமையானதே அல்ல என ஏறத்தாழ எல்லாப் பெண்களுமே ஆழமாக நம்புகிறார்கள். அவன் தன்னைப் பயன்பாட்டின் அடிப்படையில் மட்டுமே அணுகிறான் என்று தெரிந்தும் அப்படி நம்புகிறார்கள். ஒரு ஆணால் நிராகரிக்கப்படுவது தனது பெண்மைக்கு இழுக்கு என்னும் பிரமையை காலங்காலமாகச் சுமக்கிறார்கள்.
அதனாலேயே ஜெயகாந்தன் காலமோ சமகாலமோ என்றும் அவர்கள் ஆணின் உலகை அமைதியாக சகிக்கிறார்கள்.