பெண்டுல மனசு கவிதை குறித்து கோபி சரபோஜி-
புலம் பெயர்ந்து வேலைக்காகச் செல்லும் வாழ்க்கை என்பது மாயக் கூண்டுக்குள் நுழைவது மாதிரி. ஒரு வருடமோ இரண்டு வருடமோ மட்டும் அந்த வாழ்க்கையை வாழ்ந்து கொஞ்சம் சம்பாதித்து வந்து ஊரில் குடும்பத்தோடு இருந்து விட வேண்டும் என்றும், தான் செய்ய நினைத்ததைச் செய்து விட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விமானம் ஏறுபவர்கள் அதன் பின் தன் வாழ்நாளின் பாதியை அப்படியான வாழ்க்கை முறையிலேயே வாழ்ந்து தீர்க்க வேண்டியதாகிப் போவது மிகப் பெரிய துயரம்!
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நுனிப்புல்லாய் சில வசதிகளை அந்த வாழ்க்கை கொடுத்திருப்பதாய் தெரிந்தாலும் இளமையின் பெரும்பகுதியைத் தொலைத்து விட்ட சூழலில் வேலை இல்லை என தான் வேலை செய்யும் நிறுவனங்களால் திடுமென ஊருக்குத் திருப்பி அனுப்பப்படும் சூழலில் அவர்கள் படும் மனவேதனையும், மனக்குழப்பங்களும் சொல்லி மாளாதவைகள்!
ஆரம்பகாலத்தில் தான் செய்து பார்க்க நினைத்த விருப்ப, தொழில் சார்ந்த முயற்சிகள் எல்லாம் கால ஓட்டத்தில் காலத்திற்கு ஒவ்வாதவைகளாகவும், போட்டித்தன்மை மிக்கதாகவும் மாறி விட்ட நிலையில் எழும் அச்ச உணர்வும், குடும்பத்தின் தேவைகள், குழந்தைகளின் கல்வி போன்ற கட்டாயப் பொருளாதாரத் தேவைகளும் அவர்களை மீண்டும் அதே வாழ்க்கை முறைக்கே பயணப்பட வைக்கிறது.
என்ன செய்வது? எனத் தெரியாத குழப்ப நிலையில் தற்காலிகத் தீர்வாய் இப்படி வாழ்நாள் முழுக்கப் பயணிப்பவர்களின் மனமானது அவர்கள் தங்களின் ஆரம்பகாலத்தில் செய்ய நினைத்த விசயங்கள், தொழில்கள் பற்றிய சிந்தனைகளைத் தாங்கி. குடும்பத்தோடு தொடர்ந்து இருக்க முடியாத துயருடனே நீள்கிறது,
இந்த நாட்டில் இன்னும் இரண்டு வருடம் மட்டும் தான் இருப்பேன், அதன் பின் ஊருக்குச் சென்று குடும்பத்தோடு இருந்து நினைத்த தொழிலை, விசயத்தைச் செய்வேன் என ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர்கள் நினைக்கும் எண்ணங்கள் அனைத்துமே கானல் நீர் போல வெறும் நினைப்பாக மட்டுமே அமைந்து விடுகிறது, பொருளீட்டல் சார்ந்த புலம் பெயர்தலின் ஊடாக ஒரு பெண்டுலம் ஆரம்பத்திற்கும், முடிவுக்குமாய் நிற்காது அசைவதைப் போல அவர்களின் மனம் வாழ்நாள் முழுக்க இரண்டு நிலைகளுக்கும் அசைந்த படியே இருக்கிறது.
அவர்களில் ஒருவராய் நானும் இருக்கிறேன்.
கோபி சரபோஜியின் கவிதை இங்கே