இணை இராகம்
இருபதாம் நூற்றாண்டில் தமிழில் மிகவும் வாசிக்கப்பட்ட, விமர்சிக்கப்பட்ட இரு மாபெரும் எழுத்தாளர்கள் திரு. ஜானகிராமன் (தி ஜா.) திரு. லா.ச.ராமாமிர்தம்(லா.ச ரா)
இருவரும் ஆழ்ந்த கவனம் உடையவர்கள்.. சொல்லிலே அணி செய்தவர்கள்.- ஒருவர் அதன் மீது மட்டும் பார்வை மிகுந்தவர். மற்றவர்அதை வெளிப்படையாகச் சொல்லவில்லை.
எத்தனை பெரிய மாளிகை ஆனாலும் கதவும் ஜன்னலும் திறந்திருக்கும் – அது தி ஜா . ஒரு சிறு ஜன்னல் திறந்திருந்தால் அது லா ச ரா.
லா.ச ரா அக்டோபர் 30, 1916-ல் பெங்களூரில் பிறந்தார். அவரது ”சிந்தா நதி” சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல். தன்னைப் பற்றி சொல்கையில், “நான் ஒரு “சரித்திரிகன்”” என்கிறார்.
தி ஜா. ஜூன் 28,1921-ல் தேவங்குடியில் பிறந்தார்.இவரது”சக்தி வைத்தியம்” சிறுகதை தொகுப்பு சாகித்ய அகாதெமி விருது பெற்றது.இவருக்கு நல்ல இலக்கியம் என்பது, உண்மையை ஒரு படைப்பாளன் தேடும் தவம்.
“தருணத்தின் தவப் பெருமையைப் பாடும் கீதமாய்… நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர்விட்டு, விஷயம் மெருகேறி, பிறகு நம் இரத்தத்தில் தோய்ந்து, நம் மனதையும், மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியமாகிவிடுகிறது.” லா.ச ராவின் சொல் காட்டும் நிறப்பிரிகை– இது
நெருடாத நடை. இயல்பான நிகழ்வுகள், பழக்கத்தில் உள்ள வார்த்தைகள், அழகை ஆராதிக்கச் செய்யும் நளினமான நாகரிக வர்ணனைகள். ஊடு பாவாக மனச் சிக்கல்கள், அந்தரங்க ஆழங்கள், தவிப்பும் தவிர்ப்புமாய் மனிதர்கள், அவர்களின் வெளிவேஷங்கள், நிமிடங்களில் யுகத்தின் தவிப்பும்,தொலைவிலோ, அருகிலோ இணைந்து பரவும் சங்கீதமும் தி ஜா.
அழகைச் சொல்லும்போதெல்லாம் நடப்பும், கனவும் இணையும் ஒரு ரசவாதம். குறிப்பாகக் கூட சொல்லாமல். உணர்வைக் கடத்தும் அதிசயம். “பால்கனியில் நின்று தலைமுடியைக் கோதும் பெண் “ என்ற சொல்லாடலில் லா.ச.ரா அழகை நம்மிடமே விட்டு விடுகிறார். ஈரப் புடவையுடன் படியேறும் பெண்கள் அவர் கதைகளில் அழகின் வீச்சு.
எழுத்தில் அப்பட்டமான வர்ணனைகளை தவிர்த்த நாகரிகம்.
தாகம், மனித மனத்தை பாதித்துக்கொண்டே இருக்கிறது. இந்த உளச்சிக்கல்கள் மானுட நியதிகளை மீறி நம்மை அந்த கதாபாத்திரங்களை நெருங்க வைக்கிறது அவர்கள் வெற்றி பெறாவிடில், அழ வைக்கிறது. கதைகள் காவியங்களாகும் நொடி அது
இக் கட்டுரையில் இருவரின் இரு பெண் கதாபாத்திரங்களை எடுத்துக் கொள்வோம்.
வசந்த பைரவி
வசந்தம் இனிமை . பைரவியோ கம்பீரமானவள். இரண்டுமே உருக்கொண்டு திரண்டு எண்ணங்களின் வடிவாய்த் தவழ்ந்து தளிர் நடையிட்டு, பார்க்கும்போதே வளர்ந்து, நெக்குருக்கி, நம்மை அலைக்கழித்து ஒரு மோனப் பரவசத்தில் சொல்லில்லா திகைப்பில் கொண்டு சேர்த்துவிடும்
முதலில் அபிதா!
அக்ஷரங்களைப் பிரித்து, நீட்டி கற்பனைக்கும், கனவிற்கும், நனவிற்குமான எழுத்தாளரின் லாகிரி. உள்ளே இருப்பதே தெரியாமல் , அதன் நினைப்பே இல்லாமல், ஒட்டாமல் ஒட்டியும், இணையாமல் இணைந்தும் தன் மனைவியுடன் வாழும் கதாநாயகன்..
அவர்களுக்குக் குழந்தை இல்லை. இருவரும் ஒருவரையொருவர் சகித்து வாழும் நிலை. இதிலும் அவன் மனைவி அவனிடத்தில் தன்னை முழுமையாக ஒப்படைக்கிறாள் . அவன் அவளுக்கென அமைந்தாகிவிட்டது. இதை ஒப்புக்கொள்ள அவள் தன்னை பக்குவப் படுத்திக் கொண்டு விட்டாள். தன்னை மட்டம் தட்டும்போது சிலிர்த்துக் கொள்கிறாள்; பிறகு சகித்துக் கொள்கிறாள் . ஆனால் இவளல்ல கதையின் நாயகி. அவள் இவன் மனதின் ஆழத்தில் புதைந்து இருக்கும் சகுந்தலா. செல்லமாக சக்கு. பெயர் வைப்பதில் என்ன ஒரு தேர்வு! உள்ளே மறைந்து பின்னரே வெளிப்படும் காளிதாச மகாகவி காவியம், கன்னி சகுந்தலை அல்லவா?
எதையும் உணர்ந்தும், உணராமலும் இருக்கும் பருவத்தில் நட்பும், காதலுமாக (சொல்லா) கதையின் அடிநாதம். அதன் அலைக்கழிப்பில் நாயகி தன் உயிரையும் துறக்கிறாள். நாயகனோ ஊரை விட்டு சிறு வயதில் ஓடி விடுகிறான். அவன் இளமை பணியில், அதன் வழியே ஏற்பட்ட கல்யாணத்தில், மனைவியுடன் மோதலில், சொல்லமுடியாத வெறுமையில் கழிகிறது. தன் இள முதுமையில் மனைவியுடன் பிறந்த ஊருக்கு வருகிறான். இவ்விடத்தில் எழுத்தாளர் மறைந்து போகிறார். வர்ணனைகள், நிகழ்வுகள் எல்லாம் தாமே நடத்திச் செல்கின்றன.
லா .ச. ரா மொழியில் இது காட்சிமொழி, தனியானது, சுவை மிக்கது.
தன் உறவுகளை சந்திக்கிறான், சிந்திக்கிறான், பின்னர் திகைக்கிறான்- இள வயது சக்குவைப் பார்த்து. காலம் மாற்றாத இளமை என வியக்கிறான். பின்னர் புரிந்து கொள்கிறான் இவள் அபிதா என்று; சக்குவின் பெண் என்று. மயக்கம் தரும் மனது. வானமும், பூமியும் சரி இரு பாதியாய் பிரிந்து ஒன்றையொன்று கவ்வப் பார்க்கின்றன அவனளவில் மட்டுமே. அபிதா, அவனிடத்தில் மரியாதை கொள்கிறாள், உபசரிக்கிறாள்,. தன் அழகை உணராத பேதை என இருக்கிறாள். நம் நாயகன், அபிதாவிடம் பிறர், குறிப்பாக, இள வயுது ஆண்கள் பேசுவதை பொறுப்பதில்லை .தனக்கு எவ்விதத்திலும் பொருத்தம் இல்லாத, கைகூட முடியாத அந்த நினைப்பு மனிதர்கள் சந்திக்கும் ஒரு மகத்தான விபத்து. அறிவு மறைந்து மனம் மேலெழும் தருணம். இதைக் காமம் என்று சொல்வதைவிட உயிர் வாதை எனச் சொல்லலாமோ?
அபிதா திருவண்ணாமலை அம்பாளின் திருப்பெயர். அவள் உண்ணாமுலையாள். ஆனால் அவளேதான் “தோடுடைய செவியன்” என்று சிறு குழந்தை பாடுவதற்கு முன் சீர்காழியில் பால் ஊட்டிய அன்னை.பெயரிலே கதை சொல்லத் தெரிந்த லா.ச ரா. அதன் ரகசியத்தை குறிப்பால் உணர்த்துவதில் வல்லவர். கதையும், நடையும், மொழியும் பாத்திரங்களும், கன்னியாகுமரியைச் சுட்டுவதோ?
இனி, மோகமுள் யமுனா. புன்னைகையின் மர்மம், பேசாத பொருள். எங்கோ தூரத்தில் கேட்கும் இசை. இரவும் பகலும் சந்திக்கும் சாயறக்ஷை(சாயறட்சே). பெயர் தெரியாத ராகம். மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீர். யமுனையின் அடர்த்தியாய் மடுவும், ஆழமும். அப்பா இருக்கும் வரை செல்வாக்கு. பின்னர் நடைமுறை யதார்த்தம். பெண் பார்க்க யார் வந்து போனாலும் பற்றின்மை. ஆனாலும் எந்தப் பெட்டியில் இடம் கிடைத்தாலும் அவள் ஏற்றுக் கொள்வாள்., ஏறிக் கொள்வாள். மனதை மறுக்கும் நிஜம் புரிந்தவள் அவள். ஆனால் அவள் மனதில்——— தான் ஒன்றுமில்லையே. இங்கே தான், இந்த முரண்பாட்டில் தான் தி. ஜா. வெற்றி பெறுகிறார்
பாபு மட்டுமே காதலிக்கிறான். அதை அவன் புரிந்து கொள்ளவே வருடங்கள் ஆகின்றன. மனம் லயிக்கும் மோகத்தினைப் புரிந்து கொள்ள அவனுக்கு ஏற்படும் அனுபவம். அதை எழுத்தாளர் சொன்ன விதம் உள்ளே பிசைந்து கொண்டே இருக்கிறது.
விரசம் இல்லாத ரசம். விரகம் தொட்ட ரகம். மாங்கனி போல் சுவையும், மணமும், திரளும் பொருந்திய நடை. தூரிகையில்லாது வரைந்த ஓவியம். வாசகனை இலக்கியச் சுவையில்ஆழ்த்தி, ரசானுபவத்தை அளித்து, நுண்ணிய பார்வையால்அவன் யூகத்தை வழிநடத்தி, யமுனாவைப் போன்ற பெண்களைப் படைத்து அவளை நிஜ வாழ்வில் வாசகர்கள் தேட வைத்த தி.ஜா.வை மறக்க முடியுமா?
நாவலின் சுனாதமே யமுனா தானே ! உயிர் இசைந்த ஒத்திசைப்பில் பாபுவின் நாதமே மீண்டதல்லவா? பாபுவின் அவஸ்தைகளை யாரும் அறியலாம். ஆனால், தன்னைக் கொடுத்த யமுனா –அதிலும் குற்ற உணர்ச்சி இல்லை, தியாக மனப்பான்மை இல்லை, தன்னை உயர்ந்தவள் எனக் காட்டிக் கொள்ளவில்லை. செஞ்சோற்றுக் கடன் என்ற கடமையில்லை, சரியா, தவறா என்று வாதிடவில்லை .
யமுனா ஒரு வகையில் அபிதா; அபிதா ஒரு வகையில் யமுனா.
இவள் கன்னிகா பரமேஸ்வரி, அவள் கன்னியாகுமரி.
இவள் எதையும் விளைவிக்கும் பூமி; அவள் அள்ளித் தரும் ஆழ்கடல்.
வசந்தா: ச ம க ம த நி ச ச நி த ம க ரி ச
பைரவி: ச க ரி க ம ப த நி ச ச நி த ப ம க ரி ச
வசந்தபைரவி: ச ரி க ம த நி ச ச நி த ம ப ம க ரி ச
லா ச ராவின் மொழியில் முடிக்க நினைக்கிறேன்.
“உணர்ச்சிகளைத் தனித்துப் பார்க்கையில் ஆசைகள், குரோதங்கள், கோபங்கள், தாபங்கள், நிறைவுகள், பங்கங்கள், சஞ்சலங்கள், அமைதிகள் எனப் பலப் பல கோணங்கள் தென்பட்டாலும், உண்மையில் அவை லோகஸ்ருதியின் இடையறா, முடிவிலா இயக்கத்திலும், அதனின்று தோன்றித் தெரிந்து, திரும்ப அதிலேயே மூழ்கிவிடும் அதனுடைய பிம்பங்களே”
இந்த இருவருக்காக அந்த இருவரையும் வணங்குகிறேன்.
7 comments