‘மத்திய ஜாவாவின்’ என்று துவங்கும்போதே கவிதையில் ஒரு புதிய குரல் வந்து விடுகிறது. அங்கு சிறிது இடைவெளி கொடுத்து, ‘யோக்யகர்த்தா நகரில்’ என்று அடுத்த வரியைப் படிக்கும்போது, முந்தைய வரிக்கு இணையானதாகவே இதையும் படிக்கிறோம். ஆனால் அடுத்த வரியும், ‘விரைந்து சாயும்’ என்று இரு சொற்கள் மட்டும் கொண்டிருந்தாலும், அதற்கும் ‘முன்மாலைப் பொழுது’ என்ற வரிக்கும் இடையே ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது நம் வாசிப்பில் ஒரு தடை ஏற்படுகிறது. ‘விரைந்து சாயும் முன்மாலைப் பொழுது’ என்ற இயல்பான சொற்களுக்கு நடுவில் ‘மழை அந்திகளின்’ என்று வரும்போது அது தனித்து நிற்கிறது. நம் மனம் மழை பெய்யும் அந்திப் பொழுதுகளை நினைத்துப் பார்க்க கட்டாயப்படுத்தப்படுகிறது.
அடுத்து, ‘தொலைவில் எரிந்தடங்கும் ஒளியின் முன்’ என்பது இயல்பாக உள்ள வாக்கிய அமைப்பு. ஆனால் ‘தொலைவில் எரிந்தடங்கும்/ ஒளியின் முன்’ என்ற என்ஜாம்ப்மெண்ட், தொலைவில் எரிந்தடங்கும்’ என்ற இடத்தில் நாம் தயங்கி அடுத்த வரிக்கு விரைந்து ‘ஒளியின் முன்’ என்று பொருள் சேர்த்து நிறைவு செய்து கொள்ளச் செய்கிறது. நான்கு சொற்களும் தொடர்ந்து வந்திருந்தால், ஒளியின் மீது அழுத்தம் விழுந்திருக்கும். ஆனால் இரண்டாய் பிரியும்போது ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெற்று ஒளியால் துலக்கம் பெருகிறது.
இப்படி ‘எரிந்தடங்கும்’ என்ற சொல் அழுத்தம் பெருவதால்தான், ‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்/ மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘எரிகலன்களில்’ நம் கவனம் செல்கிறது. பிரம்பனான் கோவிற் சிகரங்கள் நிலையானவை, அதன் கோபுரங்கள் வானுயர்ந்து நிற்பவை என்ற எண்ணத்துக்கு மாறாய், அவை எரிகலன்கள் போல் உயர்ந்து வீழக்கூடியவை என்ற தோற்றம் காண்கிறோம்.
‘விண்ணைத் தீண்டக் கிளம்பும்’ என்பதில் ‘கிளம்பும்’ என்ற இடத்தின் அழுத்தம், ‘ஒளியின் முன்’ என்று தாமதித்துத் தொடர்ந்து, ‘மூன்று எரிகலன்கள்போல் நிற்கும்’ என்பதில் ‘நிற்கும்’ என்ற இடத்தில் அழுத்தம் பெற்று, ‘பிரம்பனான் கோவிற் சிகரங்களை’ என்று தீர்மானமில்லாமல் நின்று, ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லில் உடைந்து, ‘மது அருந்திக் கொண்டிருக்கிறேன்’ என்று முடியும்போது, கவிதை பெரும்பாலும் அர்த்தமில்லாமல் உடைக்கப்பட்ட கவிதை வரிகளாய் ஆகிறது. ‘நோக்கி’ என்ற ஒற்றைச் சொல்லால் ஆன வரிக்கு கவிதையில் அதற்குத் தேவையில்லாத அழுத்தம் கிடைக்கிறது.
அதன் பின் வரும், ‘கருமையும் அடர்த்தியும்/ கலந்து சாயும் மழைத்தீற்றலினூடே’ என்பதில் இரண்டு வரிகளுக்குமிடையில் எந்த இசைவும் இல்லை. ஆனால், இதில் கருமையும் அடர்த்தியும் என்ற சொற்கள் துல்லியமான வண்ணங்களை உணர்த்தி, சாயம் என்பதை எதிரொலிக்கும், ‘கலந்து சாயும் மழைத்தீற்றல்’ ஒரு ஓவியத்துக்குரிய நுட்பம் கொண்டிருக்கிறது. இங்கு ஓசையால் கவிதையாகாதபோதும் கற்பனையைக் கிளர்த்துவதால் கவித்துவம் கொள்கிறது. அடுத்து, ‘தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இயல்பாக இருக்க வேண்டிய வரிகள், ‘மழைத்தீற்றலினூடே/ தெருவின் இரைச்சலைப் பின்விட்டு/ விடுதியின் சாளரத்தில்/ தனித்து அமர்ந்திருக்கும்/ என்னெதிரில் அமர்கிறாள் அவள்’ என்று இருப்பதில் ஒரு துல்லியம் இருக்கிறது. மழைத்தீற்றல், தெருவின் இரைச்சல் எல்லாம் விடுதியின் சாளரப் பின்னணியில் இருக்கின்றன, இந்தத் தனிமையில் துணையாய் அவள் வந்து அமர்கிறாள்.
அதைத் தொடர்ந்து, ‘சிறகை சிலிர்த்து நீர்த்துளிகள்’, ‘உதிர்க்கும் பறவைபோல்’, ‘நீவிக்கொள்கிறாள்’, என்ற மூன்று தனித்தனி வரிகள் ஒரு பெண்ணை நினைக்க வைப்பதில்லை, நம் முன் ஒரு பறவைதான் நிற்கிறது.
அதன் பின் வரும், ‘இந்தியனா என்கிறாள்/ எனக்குத் தெரியும்/ இதையும் இதற்கடுத்த/ எந்த இரு கேள்விகளையும்/ நான் எதிர்பார்க்கலாமென’ என்ற ஸ்டான்ஸாவோ, அதையடுத்து வரும், ‘ஆமோதிக்கும் புன்னகைக்குப் பிறகு/ பிரம்பனான் கோவில் வளாகம் பார்த்தேனா/ என்று வினவுகிறாள்/’ என்பதுவோ கவிதைக்குத் தேவையாகத் தெரியவில்லை.
இது எதுவும் இல்லாமல், ‘மழையின் ஓசை/ ஒரு சுதியேறி சீரான கதியில் பெய்கிறது’ என்று தொடர்ந்திருக்கலாம். இடையூடாய் வரும், ‘பதிலாக அவள் அருந்த/ என்ன வேண்டுமெனக் கேட்கிறேன்’ என்பதைத் தவிர்த்து மௌனத்தில் முடித்திருக்கலாம்:
இரு கோப்பைகள்
நிறைந்தும் குறைந்தும்
மழைச்சாரலில் நனைந்த
புன்னகைகள் கடந்தும்
இருவரும் தத்தம்
கோப்பைகளை ஏந்திக்கொண்டு
கவியும் இருளில்
கரைந்து கொண்டிருக்கிறோம்.
oOo
வாழ்க்கை என்று பார்த்தால் பெரும்பாலான பொழுது அர்த்தமில்லாமலும் முக்கியமில்லாமல் அலுப்பூட்டும் வேலைகளில் கழிந்து கொண்டிருக்கிறது, எதுவும் செய்யாமலும் ஏதோ ஒன்றைச் செய்து கொண்டும் சும்மா இருக்கும் பொழுதுகளைப் பற்றி கதை கவிதைகள் எழுத முடியாது. அசாதாரண கணங்கள், அசாதாரண மனிதர்கள், அசாதாரண காட்சிகள், அசாதாரணச் செயல்களை நம்மாலும் விவரிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவை மட்டும்தான் கவிதைத் தருணங்கள் என்ற நிலையைக் கடந்து வந்தாயிற்று. எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் அர்த்தமுள்ளதை, முக்கியமானதை, அழகானதைத் தேர்ந்தெடுக்கும் செயலாக கவிதை ஆகிறது- உலகும் மனமும் உறைநிலையிலிருந்து அசையும் ஒரு ஆற்றுகைத் தருணம் என்று சொல்லலாம்.
இந்தக் கவிதையில் எதுவெல்லாம் தேவையில்லை, கவிதைக்கு உரியவையாக இல்லை என்று நினைக்கிறோமோ, அதுவெல்லாம் banal என்று சொல்லக்கூடிய விஷயங்கள் (‘so lacking in originality as to be obvious and boring‘). இங்கு எதுவெல்லாம் கவித்துவ மொழியில் வெளிப்படுகிறதோ, அதுவெல்லாம் sublime என்று சொல்லக்கூடியவை (‘elevated or lofty in thought, language, etc‘).
உயர்ந்த கவிதை, உயர்ந்த கதை, உயர்ந்த இலக்கியம் என்று நாம் சொல்வது இந்த ”elevated or lofty‘ என்ற அர்த்தத்தில்தான். சராசரியிலிருந்து அந்த அளவுக்காவது மேலெழும்பி நிற்பதால்தான், அதன் உயரத்துக்கு ஏற்ப, ‘excellence‘, ‘grand‘, ‘outstanding‘ முதலிய வியப்புணர்வுக்கு sublime என்ற சொல் இடம் கொடுக்கிறது. இந்த அர்த்தத்தில் எல்லா கவிதைகளும் சப்லைமாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், நம் அனுபவ வாழ்வில் எதுவொன்று மிகச் சாதாரணமாக, செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதாக இருக்கிறதோ, அதிலிருந்து உயர்ந்த இலக்கியத்துக்கு உரிய விஷயங்களை கடைந்தெடுக்க வேண்டியதாக இருக்கிறது. அது சில சமயம் சாதாரண விஷயங்களை அசாதாரண வண்ணங்களில் காணச் செய்வதாக இருக்கிறது, சில சமயம் அசாதாரண கணங்கள் நம் சாதாரணத்துவத்தில் காணாமல் போகிய பின்னர் நினைவின் துணையோடு மீட்டெடுக்கப்படுவதாகவும் ஆகிறது.
தொடர்புடைய பதிவு-