கடந்த ஆறு ஆண்டுகளாக, அநேகமாக நான் படித்த புத்தகங்கள் குறித்த பதிவையே எழுதி வந்திருந்த நிலையில் (சில பொது கட்டுரைகளும் உண்டு), திடீரென்று ஒருநாள், ஒரு ஆசிரியரை எடுத்துக் கொண்டு, பதிமூன்று வாரங்கள் அவர் எழுதிய ஒரு சிறுகதை குறித்து ஒவ்வொரு வாரமும் எழுத முடியுமா என்று கேட்டார் நண்பர் நட்பாஸ். அப்படி எழுதி பழக்கமில்லை என்பதால் முதலில் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. பிறகு, எழுதி விடலாம் என்று முடிவு செய்தபின் எந்த எழுத்தாளருடைய கதைகள் என்று அதிகம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. உடனடியாக எனக்கு ஆதவனின் சிறுகதைகள்தான் என்று தோன்றிவிட்டது.
வேறு எந்த எழுத்தாளருடைய எழுத்துக்களைவிடவும், என் மனதுக்கு மிகவும் நெருக்கமாக நான் உணர்ந்தவை ஆதவனின் எழுத்துக்கள்தான். என் சஞ்சலங்கள், சந்தேகங்கள், ஊகங்கள், கேள்விகள், முடிவுகள் அனைத்தையும் ஆதவனின் கதாபாத்திரங்களும் வெவ்வேறு அளவில் கொண்டிருந்தார்கள். தன்னைப் பற்றி ஆதவன் ஓரிடத்தில் இப்படி சொல்கிறார்- “ஒரு பெண் தன் கணவனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் சென்று விட்டால் என்றால், யாரைத் திட்டுவது என்பதில் பலருக்கு சந்தேகமேயில்லை. ஆனால், எனக்கு அப்படியில்லை” .இந்த மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதே போல, அறிவுப்பூர்வமான விவாதங்களும் தர்க்கப்பூர்வமான பார்வைகளும் எந்த அளவுக்கு தன்னைக் கவர்கிறதோ அதே அளவுக்கு உணர்வுச் சுழிப்புகளும், எளிதில் வரையறுத்துவிட முடியாத நியாயங்கள் பற்றிய தடுமாற்றங்களும் தனக்கு உண்டு என்கிறார் ஆதவன். அது எனக்கும் அப்படித்தான்.
அடுத்த கவலை எந்தெந்தக் கதைகள் என்பது பற்றி. என்னிடமே ஆதவனின் 5 சிறுகதைத் தொகுப்புகள் இருந்தாலும், கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும், ஆர்.வெங்கடேஷ் அவர்கள் தொகுத்த ‘ஆதவன் சிறுகதைகள்,’ புத்தகத்திலிருந்தே கதைகளை தெரிவு செய்தேன், ஒரே புரட்டலில் அத்தனையையும் பார்க்கும் ஒரு சௌகரியத்துக்காக. மேலும், அதில் உள்ள ஆர். வெங்கடேஷ் அவர்களின் முன்னுரையும் முக்கியமான ஒன்று.
கதைகளைப் பொறுத்தவரை ஒரு பாதகமான விஷயம், ஆதவனின் கதைகளில் மிகச் சிலவற்றைத் தவிர பிற கதைகள் வலையேற்றப்படவில்லை என்பதுவே. அதனால் நான் தேர்ந்தெடுத்த கதைகளைப் புத்தகங்களன்றி வேறு எங்கும் படிக்க முடியாது என்பது ஒரு இழப்புதான். இருந்தாலும், இவற்றைப் படிப்பவர்கள், புத்தகங்களை வாங்க இது ஒரு கிரியா ஊக்கியாக இருக்கட்டுமே என்ற ஒரு நப்பாசையும் இருந்தது. ஆனால், கிழக்கு வெளியிட்டிருக்கும் தொகுப்பில் 60 கதைகள் இருந்தாலும், “இரவுக்கு முன் வருவது மாலை” தொகுப்பில் உள்ள கதைகள், விடுபட்டுள்ளன என்பதையும் இப்போதுதான் கண்டுபிடித்தேன் இதில் ஒரு முக்கியமான விடுபடல் , “கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன் ” கதை. ஆதவனின் சிறந்த கதைகளில் ஒன்று அது..
அவரது சிறுகதைகளில் மிகப் பிரபலமானவை என்றால் நானறிந்து, ‘முதலில் இரவு வரும்’, மற்றும் ‘ஓர் பழைய கிழவரும் புதிய உலகமும்’ தான். ஆகவே இந்த இரண்டு கதைகளை சேர்க்கவில்லை. எழுத்தாளர்களை பற்றியது என்பதால் முதல் கதையாக, புதுமைப்பித்தனின் துரோகம் சிறுகதையை தேர்ந்தெடுத்தேன். அதற்குப்பின் தானாகவே ஓரு வரிசை உருவாகி வந்துவிட்டது.
பொதுவாக ஆதவனின் எழுத்துக்களை நகர்ப்புற எழுத்து என்று வகைப்படுத்தல் தமிழக விமர்சகர்களிடம். உண்டு. இந்த ஒரு சொற்றொடர், அவரது விரிந்த படைப்புலகத்துக்கு நியாயம் செய்வதது அல்ல. அதிகமும் நகரத்து, பெருநகரத்து மனிதர்கள் குறித்தே எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், அதில் அவர் எடுத்துக் கொண்ட பிரச்னைகள் பலதரப்பட்டவை. 70களின் மிக முக்கிய பிரச்சனைகளான வேலையில்லாத் திண்டாட்டம், அடையாளச் சிக்கல்,தனி யார் நிறுவனங்களின் வளர்ச்சி அவ்வளவாக இல்லாத சோஷலிச யுகத்தின் உச்ச காலகட்டத்தின் அரசு வேலைகள் தரும் அலுப்பு, பெண்கள் குறித்த குறுகுறுப்பு, காதலின் ஆர்வம், காதல் திருமணத்தில் முடிவதின் நிறைவின்மை, மணவாழ்க்கையின் விரிசல்கள், பொதுவாகவே வாழ்வின் மீதான அதிருப்தி, நண்பர்களிடையேயான பரஸ்பர போட்டி பொறாமை, இன்னொருவரிடம் அனுசரித்துப் போக முடியாத குணங்கள், தனி மனிதன் தன் மிக நெருங்கிய மனிதர்களிடையேகூட வேடங்கள் புனைய வேண்டிய அவசியம் ஏற்படுத்தும் தருணங்கள், பெண்களின் பிரத்தியேகப் பிரச்சைனைகளை பரிவுடன் அணுகும் கதைகள், என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு அம்சத்துக்கும் குறைந்தபட்சம் இரண்டு கதைகளாவது தேர்ந்தெடுக்கலாம்.
இந்த தொடரில் நான் சேர்க்காத காதல், திருமணம், அதன் நிறைவு அல்லது நிறைவின்மை ஆகியவற்றைப்பற்றி பேசும் ஒரு சிறுகதை வரிசையினைக்கூட தனியே தர முடியும். அவை இப்படி அமையக் கூடும், “ சிவப்பாக உயரமாக மீசை வெச்சுக்காமல், நிழல்கள், கால் வலி, காதலொருவனைக் கைப்பிடித்தே, புகைச்சல்கள், நூறாவது இரவு, சினிமா முடிந்தபோது” என்று தொடங்கி தனியே எழுதலாம்., தவிர, ‘புறா, இந்த மரம் சாட்சியாக, நானும் இவர்களும்,அப்பர் பர்த், போன்ற இன்னும் சில கதைகள் குறித்தும்,எழுத ஆவலாகத்தான் இருந்தது.பிறிதொரு சமயம் பார்ப்போம்.
இந்தியா சோஷலிச சாம்ராஜ்யமாக இருந்த காலத்தின் உச்சத்தில் அன்றைய காலகட்டத்து இளைஞர்களின் அபிலாஷைகளை, தடுமாற்றங்களை, உளக் கொந்தளிப்புகளை உள்ளவாறே சித்தரித்த ஆதவன், பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்ட காலத்தின் மிக துவக்கத்திலேயே மறைந்துவிட்டார். திறந்த அமைப்பின் பொருளாதார தாராளமயமாக்கலும், உலகமயமாக்கமும், அது தந்திருக்கும் ஏராளமான வாய்ப்புகளும் சவால்களும், வித்தியாசங்கள் மழுங்கடிக்கப்பட்டு ஒற்றை தரப்படியாக்குதலும் கொண்ட இந்தக் காலகட்டத்து இளைஞர்களை ஆதவன், எந்த வகையில் தன் கலையில் கொண்டு வந்திருப்பார் என்ற ஆர்வமூட்டும் வினாவுக்கு நாம் விடை காணவே முடியாத வகையில், காலம் அவரைப் பறித்துக் கொண்டுவிட்டது.
இத்தொடரில் பேசப்பட்ட சிறுகதைகள்:
‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’
oOo
ஒளிப்பட உதவி – Archive.org
One comment