அவை ஊளையிடுகின்றன – கலைச்செல்வி சிறுகதை

கலைச்செல்வி

சுவரின் மறுபக்கம் அவை உறும தொடங்கியிருந்தன. ஆரம்பக்கட்ட உறுமல்தான். ஆனால் அந்த ஒலியே அவளை மருள வைத்தது. கைகள் இரண்டையும் மடித்து உடலை குறுக்கி சுவரோரமாக பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தாள். சில சமயங்களில் உறுமலோடு நின்று விடலாம். ஆனால் அது வெகு சில நேரங்களில் மட்டுமே. பெரும்பாலும் அவை பெருங்குரைப்புகளாக மாறி விடும். தொடர்ந்து உறுமல் ஒலி கேட்பது போலிருந்தாலும் சாளரத்தின் வழியே எட்டி பார்க்கும்போது யாதும் தட்டுப்படுவதில்லை. ஆனால் அது கூட வெகு சில நேரங்களில் மட்டுமே. ஒருவேளை இப்போதும் அப்படிதானோ.. சுவற்றோடு காதை நெருக்கி வைத்துக் கொண்டாள். இல்லை.. அவை நடமாடுகின்றன. அவளை கண்காணிப்பதற்கு தோதான இடத்தை தேடி அங்குமிங்கும் அலைகின்றன.  விறுக்கென்று அடி வயிறு குழைந்து பயம் கவ்வி இழுத்தது அவளை.

அவளை கண்காணிக்கவே அவை வருகின்றன. அவளுடையவை அத்தனையும் இப்படிதான் உருவப்பட்டன. இருப்பினும், தொடர்ந்து தான் கண்காணிப்பில்  இருப்பதை அவள் உணர்ந்தேயிருந்தாள். உறுமல்கள் சன்னமாக கூடின. பிறகு குரைப்பாக மாறும். குரைப்பு முதலில் ஒன்றிலிருந்துதான் தொடங்கும். பிறகு அடக்க முடியாததாகி விடும். நாலைந்து.. இல்லையில்லை.. ஏழெட்டு இருக்கலாம்.. அடர் கருப்பில்.. அல்லது திட்டுதிட்டான கருப்பில்.. வெளிர் செம்மண் நிறத்தில்.. நிறம் வெவ்வேறாக இருந்தாலும் எல்லாமே வளர்த்தியாகவும்.. தாட்டியமாகவும்.. இடைவிடாது குலைக்கும் சுபாவத்துடனும் இருந்தன. கலவரத்தோடு கதவை ஏறிட்டாள். தாழிடப்பட்டுதானிருந்தது. ஆனாலும் உளுத்துப் போன தாழ்ப்பாள். எப்படியாக இருந்தாலும் தாழ்ப்பாள் வீட்டுக்கு பாதுகாப்பு.. வீடு அவளுக்கு பாதுகாப்பு.. வீடு என்றாலே பாதுகாப்புதானே.. அதுவும் நிறைந்த வீடென்றால்.. கணவன்.. மூன்று மகன்கள் என நிறைந்த வீடு. பூர்விக வீட்டை இடித்து விட்டு புதிதாய் கட்ட தொடங்கியபோது அகல கால் வைக்கிறோமோ..? அவளுக்கு பயம் வந்தது. கணவன் சொன்னான்.. “வருசம் ஒருக்காவா கட்றோம்..?” பிறகு கணவனுக்கு பயம் வந்தது.. ”மூணு பயலுவன்னு ஆயிடுச்சு.. சின்னதுன்னாலும் ஆளுக்கொரு ரூம்பா தடுத்ததுட்டா நல்லாருக்கும்..” அவள் சொன்னாள். “நல்லாதான் இருக்கும்..” ஆமோதித்தான். இரட்டை கட்டு வீடோ.. முற்றம் வைத்த பெரிய பரப்போ இல்லையென்றாலும் முன்கூடம்.. சமையலுக்கு ஒன்று.. பத்தாயம் வைக்க ஒன்று.. படுக்க ஒன்றுமாக இருந்த அறைகளை புதிதாக்கினார்கள். மிஞ்சிய மணலில் பயல்கள் ஏறி விளையாடுவதும்.. விளையாடிய களைப்பில் அதிலேயே உறங்குவதுமாக நாட்கள் கடந்தபோது அந்த தொழிற்சாலை அங்கு வரப்போவது யாருக்கும் தெரியவில்லை.. அல்லது யாரும் உணரவில்லை.

அவை நடமாடத் தொடங்கி விட்டன. உக்கிரமான நடமாட்டம். பெருங்குரைப்பை உள்ளே அழுத்திக் கொண்டு உறுமலை உயர்த்தியிருந்தன. சன்னல்களை அடைக்க முடியாது. கதவுகள் உளுத்து உதிர்ந்து விட்டன. வெறும் கம்பிகள் மட்டுமே.. அதுவும் துருவேறி.. ஒருமுறை கம்பியை இறுகப்பிடித்த போது அது கையோடு பிடுங்கிக் கொண்டு வந்தது. நல்லவேளை.. அந்த இடைவெளியில் அவற்றின் உடலை புகுத்த முடியாது.. ஆனால் புழுதிக்கு தடையில்லை. தெருப்புழுதி. ஓட்டமும் நடமாட்டமுமாக அவை கிளர்த்தெழுப்பும் புழுதி. வெயிலும் சேர்ந்துக் கொண்டதால் உக்கிரமாக கிளம்பியிருந்தது. மகன்கள் விளையாடும்போதும் இப்படிதான் புழுதிக் கிளம்பும். ஒருவேளை விளையாடச் சென்றப் பயல்கள்தான் புழுதியை கிளப்பி விடுகிறார்களோ..? அய்யய்யோ.. இத்தனை சனியன்கள ஒண்ணா பாத்தா சின்னப்பய பயந்துக்குவானே.. தாழ்ப்பாளை நீக்க எழுந்த போது அவை ஒருசேர பெரு ஒலியில் குலைக்கக் தொடங்கின.  பேரொலி.. குடலை உருவி இழுப்பது போன்று காதில் அறையும் ஒலி.. காதுகளை இறுக பொத்திக் கொண்டு குத்துக்காலிட்டு அமர்ந்தாள். சுவர் பலவீனத்தில் அதிர்ந்துக் கொண்டிருந்தது. எந்நேரமும் விழுந்து விடலாம். உடலை நகர்த்தி நகர்த்தி நடுக்கூடத்துக்கு வந்தாள்.

நடுக்கூடத்தில்தான் அவள் கணவன் படுத்திருப்பான். இறுதியாகவும் இங்கு தான் படுக்க வைக்கப்பட்டிருந்தான். முடிந்து விட்டது.. எல்லாம் முடிந்து விட்டது. அந்த தொழிற்சாலை இங்கு ஆரம்பிக்கப்பட்டபோது எல்லோருக்கும் எல்லாமும் முடிந்து விடும் என்று யாருக்கும் தெரியவில்லை. மண்ணுந்தண்ணியும் வெஷமாப் போச்சுன்னு இப்போது சொல்வது போல அப்போது ஒருவர் கூட சொல்லவில்லை. சொன்னால் மட்டும் என்ன செய்ய முடியும்.. சொற்களை அம்பலம் ஏற்ற பணம் வேண்டும். அது சில்லறையாக கூட இல்லாததால் எல்லோரும் சிதறிப் போனார்கள். சிலர் அதே தொழிற்சாலையில் கூலியாளாய் சேர்ந்தார்கள்.. இவள் பிள்ளைகள் அதற்கும் லாயக்கற்ற வயதில் இருந்தனர். ஆனாலும் பெரியவனுக்கு பத்து முடிந்ததிருந்ததில் கம்பெனியில் வேலை இருக்கும் என்றான் குமார்.  வேலைக்கு ஆள் பிடிக்கும் ஏஜெண்ட். நான்கு வழிச் சாலைப் பணிக்கு சிலர் சென்று விட்டனர். வயதானவர்கள் பிடிவாதமாக நகர மறுத்து விட்டதை போல இவள் கணவனுக்கும் பிடிவாதம் இருந்தது.

காதை பிளக்கும் சத்தம். குரைப்புக்கும் ஓட்டத்துக்கும் ஈடுக் கொடுக்க முடியாமல் வறண்ட பூமி புழுதியாக எழுந்தாடியது. முன்பெல்லாம் மண்ணுக்கு இத்தனை வறட்சியில்லை. பொட்டல்தன்மை இல்லை. ஆற்றை ஒட்டிய மண் இப்படியா வறட்டு விடும்..? ஆனால் அதில் ஆச்சர்யம் இல்லையாம்.. கம்பெனிக்காரன் பொழுதன்னைக்கும் மிசினு போட்டு உறிஞ்சுறான்.. அப்றம் வெள்ளாமைக்கு தண்ணீ எப்டி கெடைக்கும்..? இவளுக்கு மட்டுமல்ல.. எல்லாருக்குமே புரியத் தொடங்கியது. அதிகாரி.. அதிகாரியாக.. அலுவலகம்.. அலுவலகமாக எறி இறங்கியாயிற்று. கையூட்டு பெற்றுக் கொண்ட கள்ளச் சிரிப்பை மறைத்துக் கொண்டு ஆவன செய்கிறோம் என்றார்கள். எப்போங்க.. என்ற போது கோபப்பட்டார்கள். ஆண்டைகளின் கோபத்தை அடிமைகளால் தாங்க முடியாது. எப்போ இதுக்கெல்லாம் விடிவுக்காலம்.. மனசு முழுக்க அரிப்பு. பிறகுதான் உடலிலும் அரிப்பு. ஆலைக்கழிவு கலந்த நீரால் ஏற்பட்ட அரிப்பாம்.. யாராரோ வந்தார்கள்.. ஆவேசப்பட்டார்கள்.. ஆதரவாக பேசினார்கள். ஒவ்வொரு முனையிலும் நம்பிக்கை எழும். பிறகு அது அதிகாரத்தில் அமிழ்ந்து போகும். பிறகுதான் ஊரை விட்டுவிட்டு ஊரே கிளம்பியது.

இவளும் கேட்டாள்.. “ஏங்க நாமளும் போயிர்லாமா..?”

”எப்றீ போறது.. கடனை வாங்கி வீட்ட வேற இடிச்சு கட்டித் தொலச்சிட்டோம்.. எங்ஙன்னு போறது..?”

ஆனாலும் போய் விட்டான்.. ஒரேடியாக.

”தண்ணியில கனிமம் கலந்துப் போச்சு.. அதை குடிச்சதுனாலதான் இந்த சீக்கு..” ஆராய்ந்தவர்கள் சொனனார்கள். ஆனால் பெரியாஸ்பத்திரியில் அதை கூட சொல்லவில்லை. வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

அன்றிரவும் அவை கூடின. ஏழெட்டுக்கு மேலிருக்கும் எண்ணிக்கையில். ஆனால் குரைக்கவில்லை. இரு கால்களை குத்துவசத்திலும் இரு கால்களை நீள்வசத்திலும் வைத்தப்படி தரையிலமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன. நீண்ட நெடிய ஊளையொலி.. சாளரத்தின் கதவை இழுத்து மூடினாள். அப்போது சாளரத்துக்கு கதவிருந்தது. அவளுக்கும் கணவன் இருந்தான். ஆனால் அவன் அவளுக்கு தெம்பு சொல்ல முடியாமல் அல்லது அன்றே இறந்து போக வேண்டிய கட்டாயத்தில் படுக்கையில் முடங்கிக் கிடந்தான். இதே கூடம்தான்.. இதே முன்கூடம்தான். அன்று மகன்கள் சுற்றிலும் நின்றிருந்தது அவளுக்கு ஆதரவாக இருந்தது.

”குடுக்கக்குடாதத துாக்கிக் குடுத்துட்ட.. பேசாம புள்ளங்கள அழச்சுக்கிட்டு நீயும் கௌம்பி வந்துருடீ..” அவள் புருஷன் இழக்கக் கூடாத ஒன்றுதான்.. அதேமாதிரி இந்த பூமியும்.. இந்த நிலமும்.. ஏன்.. இந்த வீடு கூட இழக்க முடியாத ஒன்றுதான்..

”புடுவாதம்டீ ஒனக்கு..”

பிடிவாதம் என்று ஏதுமில்லை. கணவன் இருந்தபோது கிளம்புவதற்கு மனம் ஒப்பவில்லை. கணவன் போன பிறகு தைரியம் வரவில்லை.

வெளியில் சத்தம் அடங்கியிருந்தது. குரைத்து அடங்கி எங்கோ ஓடியிருக்கலாம். இதுதான் அவள் வெளியே கிளம்பும் தருணம். கம்பெனி ஷிப்ட் முடியும் நேரம். நெடுக நடந்து பெரிய சாலையை கடந்து செல்வாள். தொழிலாளிகளுக்கு இவளை தெரியும்.. பைத்தியக்காரியாக.. பிச்சைக்காரக் கிழவியாக. ஆனால் ஒருகாலத்தில் இங்கே பூரிப்பாக வாழ்ந்தவளாக.. பிறகு எல்லாவற்றையும் தொலைத்தவளாக அவர்கள் அறிந்தவர்களில்லை.. எல்லோருமே.. எல்லாமே புதுசு.. அவளுக்கு காசு வாங்கும் பழக்கமுமில்லை.. அப்படியே கிடைத்தாலும் அதை என்ன செய்வதென்றும் புரியவில்லை. மீந்த உணவு போதாதா..?

ஆனால் தன் கையில் விழும் அந்த உணவுக்காக நாய்கள் சண்டையிட்டால் அவளால் தாங்க முடியாது. ஓலமிட்டு அழுவாள். பயந்து வரும். கணவன் இருந்தால் சாய்ந்துக் கொள்ளலாம். மகன்கள் இருந்தால் சாய்த்துக் கொள்ளலாம்.. அவர்களோ இவளின் கதறலை கண்டும் காணாமலுமாக தள்ளி நின்று விடுகிறார்கள். ஓடி ஓடி பிடித்தாலும் கைக்கு அகப்படுவதில்லை. இவளின் பறட்டைத் தலையும் அரைக்குறையான நைந்த ஆடைகளும் சிறுவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும். இவள் மீது கற்களை.. குச்சிகளை விட்டெறிவார்கள்.. சிறுவர்கள்தான்.. ஆனால் அவர்கள் இவளின் மகன்கள் அல்ல.. விளையாட போன மகன்கள் இன்னும் திரும்பவில்லை. திரும்பி வரும்போது வெந்நீர் காய வைத்து புழுதி போக குளிக்க ஊற்ற வேண்டும். ஆனால் குளித்த பிறகும் உடலே பிய்ந்து விடும் போல அரிப்பு.. அரிப்பு..

ஒருமுறை இவளின் பரிதாப நிலையை பார்த்து கணவன் இவளை நோக்கி கைகளை நீட்ட, விம்மியெழுந்த உவகையோடு அருகே ஓடிய போது அவன் கறிவேப்பிலை குச்சியால் அடித்தான்.. அய்யோ.. அய்யோ.. கிழிசலான ஆடையில் சுண்டி விழுந்த அடிகள் அவளை துள்ள வைத்தது. ஆனாலும் திரும்பி பார்த்துக் கொண்டுதான் ஒடினாள்.. அது கணவனல்ல.. கணவனல்ல.. யாரோ ஒருவன்.. யாரோ ஒருவன்.. குச்சியோடு துரத்துகிறான். மூச்சிரைக்க வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழிட்டுக் கொண்டாள்.

அவைகளும் அவளை துரத்தியிருக்கின்றன. மூச்சிரைக்க ஓடியிருக்கிறாள். கூடவே மகன்களும். தாயும் மகன்களுமாக கதவை மூடிக் கொண்டு ஆசுவசிக்க நினைத்த தருணத்தில் திடீரென மகன்களை காணவில்லை. தொண்டை வறள வறள அழுதாள். இத்தனை சத்தமாக குரைக்கும் அவைகளுக்கு தொண்டை வறளாதா..? வறண்டிருந்தது.. ஒரு நாள்.. பின்னும் ஒருநாள்.. பின்னும் ஒருநாள்.. இரு கால்களை குத்துவசத்திலும் இரு கால்களை நீள்வசத்திலும் வைத்தப்படி தரையிலமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன. மகன்கள் ஒவ்வொருவராக கை நழுவிய தினங்கள் அவை.

கனிந்த இரவின் பின்னணியில் தொழிற்சாலை மின்னியது. கழிவு நீரின் துர்நாற்றம் காற்றில் கலந்து குளிராக வீசியது. சிமிண்ட்டும் மணலுமாக காரை பெயர்ந்திருந்த தரையில் படுத்துக் கிடந்த அவளை எதுவோ கடித்தது. செவ்வெறும்புகளாக இருக்கலாம். வெற்று மரச்சட்டங்களாக தொங்கும் கதவை மூடியிருப்பதும் மூடாமலிருப்பதும் ஒன்றுதான். பூரான்.. தேள்.. பாம்பு.. எது வேண்டுமானாலும் வரலாம்.. நாய்.. நரிகள்.. ஏன்.. தொழிற்சாலை ஆட்கள் கூட வரலாம். வீட்டை பிடுங்கிக் கொள்ளலாம்.

திடீரென்று அவளுக்கு உதறலெடுத்தது. அந்த சனியன் பிடித்த கண்காணிப்பு நாய்கள் ஒட்டுமொத்தமாக கூடி இவளை பிடுங்கி.. கடித்து.. கடித்து.. அய்யோ.. எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள். நடுங்கும் கையால் சேலையை கால்கள் வரை இழுத்து விட்டுக் கொண்டபோது கிழிசல்கள் பெரிதாகி விரிந்தன. இரத்தம் வடிந்த புண்களில் ஈக்கள் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்தன. துணியை இழுத்து உதறியதில் யாரோ போட்டு விட்டு போன ப்ரெட் பாக்கெட் பொத்தென்று நழுவி விழுந்தது. சாப்பிட்டு நாலைந்து நாட்களாகி இருக்கலாம். ஆனாலும் சாப்பிடும் உத்தேசமில்லை.  கொஞ்சம் முன்புதான் கருஞ்சாந்தாய் பொங்கி வழிந்த ஆலைக்கழிவு நீரை விசிறிக் கிடந்த பிளாஸ்டி பாட்டிலில் முகர்ந்து குடித்திருந்தாள்.

அவள் கனவிலும் இதே கூடத்தில்தான் உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் அருகில் படுத்துக் கொள்ள கணவன் உட்பட நான்கு பேருக்கும் கடும்போட்டி. அவர்களிடமிருந்து விடுபட்டு விளையாட்டாய் பத்தாய அறைக்குள் ஒளிகிறாள். மூன்றாவது மகன் முந்தானையைப் பிடித்தப்படி துாக்கிக்கோ என்று கைகளை உயர்த்துகிறான். வீடு முழுக்க அலையலையாய் சிரிப்பு.. பேச்சு.. சத்தம்.. விழிப்பு.. துாக்கம்.. விழிப்பு.. குரைப்பொலி வரும் நேரம்தான். ஒன்றா.. இரண்டா.. நான்கைந்தா.. இல்லை.. ஆறேழா.. அத்தனையும்.. அத்தனையும்.. இதோ.. இதோ.. உறுமத் தொடங்கும்.. பிறகு ஒலி.. ஒலி.. குரைப்பொலி.. ஆனால் நிசப்தம்.. எங்கும் நிசப்தம்.. அப்படியானால் அவை வரவேயில்லையா.. சாளரத்தின் திட்டில் வலதுகையை வைத்து எவ்விப் பார்க்க முயன்றாள். எவ்வி.. எவ்வி.. எவ்வ முடியாமல் துவண்டாலும்.. காதுகள் அவற்றின் வருகையை.. காலடியோசையை சொன்னது. நடுகூடத்தில் பம்மிக் கொண்டாள். பிடிப்பில்லாமல் உட்காரவியலாத தேகம் அவளை குப்புற கவிழ்த்தியது.

அந்நேரம் அவை வந்திருந்தன. பிறகு இரண்டு கால்களை குத்துவசத்திலும் இரு கால்களை நீள்வசத்திலும் வைத்தப்படி அமர்ந்து தலையை உயர்த்தி ஊளையிட்டன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s