பொம்மலாட்டம் – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்

1

மனக்குளத்தில் கல்லெறிந்துவிட்டு வேடிக்கை பார்ப்பது யார்
சஞ்சலமுடைய மனம் வாழ்க்கையின் ஒளிக்கீற்றை காண விடாது
என் மனவானை எண்ண மேகங்கள் சூழ்ந்த வண்ணமே இருக்கின்றன
ஏதோவொன்றை நினைத்து ஏங்கியே என் தூக்கம் தொலைகிறது
உறக்கம் ஓய்வைத் தராதபோது பகல் எனக்கு நரகமாகிறது
இரையை ருசித்த மீன் தூண்டிலின் ரணத்தை அனுபவித்துதானே ஆகவேண்டும்
எனது வேட்கையைத் தூண்டும் உடலும் ஒருநாள் சிதையில் எரியப் போவதுதானே
மோக வலையை கிழித்தெறியும் சூலாயுதம் சிவனிடம் மட்டுமே இருக்கிறது
வசீகரிக்கக்கூடிய அழகுடையவர்களெல்லாம் ஒருநாள் நெருப்புக்கு இரையாகத்தானே போகிறார்கள்
ஊசலாடும் மனது மாய உலகினை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறது
எனக்கு நிம்மதியான உறக்கத்தை கல்லறை ஒன்றே கொடுக்கும்
இயற்கையின் சட்டதிட்டங்கள் கடுமையானவை என எனக்குத் தெரியாது
நடப்பவை அனைத்தும் என்றோ முடிவு செய்யப்பட்டவை என்பது உண்மைதான்
இந்த உலகம் அசாதாரண மனிதர்களை பைத்தியம் என்றுதான் அழைக்கிறது
இந்தச் சிறைச்சாலையில் விடுதலை உணர்வுக் கொண்டவர்களே தங்களைக்
கைதிகளாக உணருகிறார்கள்
இந்த அலைகளின் மோகம் தணிவதாகத் தெரியவில்லை
எனது ஆன்மாவின் ஏக்க கீதங்களைக் கடவுள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்
இன்று வரை மன்னிப்பின் ஒளி என்மீது படவில்லை
கடவுளின் கைக்கூலிகளுக்கு கருணையென்றால் என்னவென்று தெரியாது
கடவுளின் பிரதிநிதி இன்னும் இந்த உலகை வந்து அடையவில்லை
சாத்தான் ஒருவனால்தான் கடவுளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற முடிந்தது
நியாயத் தீர்ப்பு நாளில் இந்தப் பாவியால் கடவுளின் கண்களை நேரிடையாக சந்திக்க இயலுமா
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையே நடக்கும் சதுரங்க விளையாட்டில்
நகர்த்தப்படும் காய்கள்தான் மனிதர்கள்
சாத்தானுக்குப் பணிவிடை செய்யும் என்னால்தான் கடவுளின் மகத்துவத்தை உணர முடியும்
இந்த வாழ்க்கை கடவுளுக்கு விளையாட்டாக இருக்கலாம்
எனது துயர்மிகு வரிகளில் ஏதோவொரு உண்மை ஒளிந்திருக்கலாம்
துயரச்சிலுவையை சுமப்பவர்கள் எல்லோரும் கடவுளின் குமாரரர்களாக ஆகிவிட முடியாது.

2

ஆழ்கடலின் சலனங்களே அலைகளாகின்றன
வானமண்டலத்தின் கண்களே விண்மீன்கள்
வாழ்க்கை சிலருக்குப் பரிசாகவும் சிலருக்கு தண்டனையாகவும் ஆகிவிடுகிறது
வந்துபோகும் மனிதனால் கடவுளின் இருப்பைக் கண்டுகொள்ள முடியுமா
இந்த உடற்கூட்டிற்குள் சிறைப்பட்டிருப்பது இம்சையல்லவா
படைப்பு பூரணமடையும்வரை இந்த உலகம் இங்கு இருந்துகொண்டுதான் இருக்கும்
நடப்பவைகளை கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலை எனக்கு
ஆசாபாசங்களை வைத்து கடவுள் மனிதனை பலவீனப்படுத்தி இருக்கிறான்
மரணம் சற்றே நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இடமளிக்கிறது
இயற்கை கடினமான ஆசிரியராக என்னிடம் நடந்து கொள்கிறது
என்னிடம் மட்டும் ஏன் பறித்துக்கொண்டாய் என்று உன்னிடம் நான் காரணம் கேட்க முடியாது
உனது குமாரனுக்கே சிலுவையை பரிசளித்தவன்தானே நீ
நீ கருணையுடையவனாய் இருந்திருந்தால் என்னை இங்கே அனுப்பியிருக்க மாட்டாய்
உன்னைப் பற்றிய ஒரு உண்மையை நான் சொல்லாமல் இருப்பதற்கு நீ காரணமல்ல
சத்தியத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களுக்கெல்லாம் நீ நரகத்தைத்தானே பரிசாக அளித்தாய்
உன்னால் வஞ்சிக்கப்பட்டவர்களின் மரண ஓலம் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது
பரிசோதனை எலிகளிடம் ஆராய்ச்சியாளனுக்குப் பரிவு ஏற்படுமா என்ன
எங்கே தொலைத்தேன் என்று தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறேன்
உன்னைப் மறுப்பவனுக்கு வாழ்வில் ஏற்றம் தருவதுதானே உன் திருவிளையாடல்
உன்னைத் தேடுபவர்களிடம் நீ திருவோட்டைத்தானே பரிசாகத் தருகிறாய்
விலைகொடுத்து எதையும் வாங்கக் கூடிய தனவந்தர்கள் உனக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்
அன்பிற்கு என்ன விலையை நிர்ணயிக்க முடியும்
வாழ்வுப் புத்தகத்தில் என் பக்கம் மட்டும் வெற்றிடமாக இருக்கட்டும்
ஒவ்வொரு விடியலும் வேதனையைத்தான் தாங்கி வருகிறது
அமைதியான இரவு என்று எனக்கு வாய்க்கும்
நிசப்தமான அந்திப்பொழுதில் மலைப்பிரசங்கத்தை கேட்கும் ஜனத்திரள்களில்
நானும் ஒருவனாக நின்று கொண்டிருக்கிறேன்
பாழடைந்து கிடக்கும் எனது மனக்குகையில் பிரார்த்தனை ஒலி கேட்கிறது
வேதனைக் கிடங்குகளுக்கு உரிமையாளனாகத்தான் என்னை ஆக்கிவைத்திருக்கிறது இந்த வாழ்க்கை
எந்த வாதப்பிரதிவாதத்தையும் செவிமடுக்காமல் எதேச்சதிகாரமாய்
அவன் எடுக்கும் முடிவுகளுக்கு நான் எத்தனை நாள் ஆதரவளிப்பது.

3

இரவுப்பொழுதை நான் வாவென்று அழைப்பதற்கு கனவுகள்தான் காரணம்
இந்த நெடிய வாழ்வில் கனவுகள்தான் இளைப்பாறுதல் தருகின்றன
நீரோட்டத்தின் திசையில் செல்பவர்களை நதி தாங்கிக் கொள்கிறது
இந்த வெண்மேகங்கள் ஒன்று மாதிரி மற்றொன்று இருப்பதில்லை
இயற்கையின் உந்துதலுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன
மரணத்தை விழைவிப்பவர்களுக்கு நீயாரென்பது முக்கியமல்ல
அந்திப் பொழுதில்தான் என்மனவிருட்சம் பூத்துக் குலுங்குகிறது
வெயிலில் வெறுங்காலுடன் நடப்பவர்களின் பாதங்கள் நிழலை நாடித்தானே செல்லும்
வார்த்தை தவறிவிட்டதற்காக உன்மீது எனக்கு வருத்தமில்லை
ஆட்டுவிப்பவனுக்கு மட்டும்தான் தெரியும் இங்கு நடப்பது பொம்மலாட்டம் என்று
செடியிலிருந்து பறிக்கப்பட்ட மலரிடம் மனிதன் நன்றியினை எதிர்பார்க்கலாமா
நிராகரிப்பின் வலி மரணத்தைவிடக் கொடியதென்று நீ உணரமாட்டாயா
குற்றம் புரிந்த என்னை என் நிழல்கூட வெறுத்து ஒதுக்குகிறது
நிமித்தங்கள் செய்த எச்சரிக்கையை நான் அலட்சியப்படுத்திவிட்டேன்
வார்த்தைகள் என்னைக் காயப்படுத்துகின்றன
எனது சுமையை வேறு யார் சுமப்பார்கள்
சுவர்க்கத்தின் கடவுச்சீட்டுக்காக இந்த உலகத்தில் உள்ளோரை நரகத்தில் என்னால் தள்ள இயலாது
எனது சக்திக்கு மீறிய செயலை என்னிடமிருந்து நீ எதிர்பார்க்காதே
என்னைச் சோதனைக்கு உள்ளாக்கும் முன்பு எனது தரப்பு நியாயத்தையும் நான் சொல்லிவிடுகிறேன்
நான் கதறி அழும்போது ஆறுதலாய் தலைகோதிவிட எனக்கென்று எவருமில்லை
எல்லாவற்றையும் என்னிடமிருந்து பறித்துக் கொண்டவர்கள் கடைசியாக என் உயிரையும் கேட்கிறார்கள்
ஆபிரகாமுக்கு முன்பிருந்த உனக்கு என்னைப் பற்றியும் தெரிந்திருக்குமே
திருச்சபைக்கு வரும் பாவிகளை நீ இரட்சிக்க மாட்டாயா
பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து நீ மட்டும் எப்படி தப்பினாய்
துயரக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கிழக்குக்கு ஒரே ரட்சகன் நீயல்லவா
உனது வருகையை நான் இந்த உலகுக்கு தெரிவிக்கிறேன்
ஏனெனில் மெசியாவுக்கு சாட்சியாக இங்கிருப்பது நான் ஒருவன் மட்டும் தானே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.