எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா

பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, பணி, குடும்பம் பற்றி சுருக்கமான அறிமுகம்.

1981-ல் மதுரையில் பிறந்தேன். மூன்று குழந்தைகள் இறந்த பின் வந்தவன் என்பதால் மண்ணில் தங்க வேண்டுமென பெற்றவர்கள் மதுரை பாண்டிமுனி கோயில் மண்ணில் போட்டு எடுத்தார்கள். அதுவே பெயருக்கும் காரணம். பள்ளிப்படிப்பு மதுரையில். வளர்ந்தது அம்மாச்சி வீட்டில். வாழ்ந்து கெட்ட குடும்பம் என்பதால் நிறையவே சிரமம். கல்விதான் காப்பாற்றியது. கோவையில் பொறியியல் பயின்ற காலத்திலும் ஆசிரியர் பணியே என் கனவாக இருந்தது. பணி செய்து கொண்டே தொடர்ந்த மேற்படிப்பு முனைவர் பட்டம் வரை அழைத்து வந்திருக்கிறது. ஓரிடத்தில் அதிகபட்சம் மூன்று வருடங்கள் என்ற கொள்கை காரணமாக திண்டுக்கல், பெருந்துறை, நெல்லை என பல ஊர்கள் சுற்றி தற்போது கோவையில். துணைவியார் பூமாவும் ஆசிரியைதான். கணிதம் பயின்றவர். ஒரு குழந்தை. நகுலன் அவன் பெயர

வாசிப்பு படிநிலை என்ன? பால்யகால வாசிப்பு எத்தகையது, எப்படியாக வளர்ந்தது?

நான் வாசிப்பதற்கு என் அம்மாதான் காரணம். வெகுஜன இதழ்களின் தீவிர வாசகி அவர். இன்று தீவிர இலக்கியமும் வாசிக்கிறார். பிள்ளை வெளியே சென்று விளையாடுகிறேன் என்கிற பெயரில் ஊர் சுற்றாமல் இருப்பதற்காக புத்தகங்களைக் கொடுத்துப் பழக்கியதாகச் சொல்வார். ஆனால் அவரைத் தாண்டியும் குடும்பம் மொத்தமும் வாசிப்பில் எனக்கிருந்த ஆர்வத்தை ரசித்தார்கள் என்று சொல்ல முடியும். 1985-86 காலகட்டம். சிறுவர் மலர் எனக்கு அறிமுகமாகி இருந்தது. வீட்டில் அனைவரும் திருப்பதி செல்லத் திட்டமிடுகிறார்கள். வியாழன் கிளம்பிப்போய் ஞாயிறு திரும்புவதாக ஏற்பாடு. வெள்ளிக்கிழமை சிறுவர் மலர் வாசிக்க முடியாமல் போய்விடும் என்பதால் நான் வர மறுக்கிறேன். யார் என்ன சொல்லியும் கேட்கவில்லை. இறுதியில் தாத்தா எனக்காக வீட்டில் தங்கி விட்டார். மற்றவர்கள் எல்லாம் ஊருக்குப் போனார்கள். அந்த சம்பவத்தை என்னால் இப்போதும் நினைவுகூர முடிகிறது என்பதுதான் ஆச்சரியம். அங்கிருந்து தொடங்கிய வாசிப்பு பிறகு காமிக்ஸின் வழியாக வளர்ந்தது. அவற்றின் பாதிப்பு எப்போதும் என் கதைகளில் காணக்கிடைக்கும்.

பள்ளிக்காலத்தில் சுபாவும் பட்டுக்கோட்டை பிரபாகரும் அறிமுகமானார்கள். மனித வேட்டை, இறந்தாலும் இந்திய மண்ணில் என கல்லூரிக்காலத்தில் சுபாவின் நாவல்களைத்தான் தூக்கிக் கொண்டு திரிந்தேன். மிகுதியான தொழில்நுட்ப தகவல்களைக் கொண்டிருந்தாலும் ஏனோ எனக்கு ராஜேஷ்குமாரை ரசிக்க முடியவில்லை. ஆனால் அமானுஷ்யத்தையும் ஆன்மீகத்தையும் கலந்து தந்த இந்திரா சௌந்திரராஜனின் கதைகள் வேறொரு உலகத்தில் உலாவிட எனக்கு உதவின. அவருடைய ஐந்து வழி, மூன்று வாசல் எப்போதும் மறக்கவியலாத நாவல். கல்லூரியின் இறுதிக்கட்டத்தில் விகடனின் வழியாக அறிமுகமான எஸ்.ராமகிருஷ்ணனின் துணைஎழுத்து என்னை மொத்தமாகப் புரட்டிப் போட்டது. அவருடைய கதாவிலாசம்தான் இலக்கியத்தில் எனக்கான திறவுகோல். வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்க புத்தகங்கள் உதவின. அதன் பிறகு கிடைத்த நண்பர் நேசமித்ரனின் அறிமுகம் புதிய காற்றைக் கொண்டு வந்தது. அதன் வழியாகவே எனக்கான உலகம் புலப்பட்டது

எழுதும் உந்துதல் எப்படி வந்தது? எழுத்தாளர் என்றுணர்ந்த கணம் என்ன?

2008 வாக்கில் நரனை ஒருமுறை மதுரையில் சந்தித்தபோது என்னுடைய வலைப்பதிவுகளை வாசித்திருந்த காரணத்தால் நீ எழுதலாமே என்று சொன்னார். அப்போதும் அதைச் சிரித்தபடி மறுத்தேன். வாசகனாக இருப்பதே போதும் என்பதுதான் என்னுடைய ஆரம்பகட்ட மனநிலை. ஒரு முறை உயிர்எழுத்தில் ஷங்கர ராம சுப்பிரமணியன் “நான் ஒரு தமிழ் பரோட்டா” என்றொரு கவிதை எழுதி இருந்தார். அதன் அரசியலைப் புரிந்து கொள்ளாமல் வாசித்த எனக்கு கடும் கோபமானது. ஏனெனில் ஷங்கர் எனக்கு அத்தனை பிடித்தமான கவிஞர். ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆத்திரத்தில் அவரைக் கிண்டல் செய்து ஒரு பத்தியை எழுதினேன். அதை மட்டும் தனியாகப் பார்த்தபோது நன்றாகயில்லை எனத் தோன்றியதால் முன்பின்னாக சில சங்கதிகளை சேர்த்து எழுதினேன். முடித்த பிறகு பார்த்தால் அந்த பகடியைத் தவிர மற்றவையெல்லாம் நன்றாயிருப்பதாக ஒரு உள்ளுணர்வு. அதை வெட்டி விட்டு மீதப் பகுதியை எல்லாம் திருத்தி எழுதினேன். அதுதான் என் முதல் கதையான நிழலாட்டம். கதை எழுதி விட்டோம் என்பதை விட நமக்கு எழுத வருகிறது என்பதே கொண்டாட்டமாக இருந்தது. நேசமித்ரனோடு இருந்த சமயத்தில் நிறைய உரையாடி இருக்கிறோம், அதன் வழியே எழுத்து பற்றி எனக்குள் ஒரு சித்திரம் உருவாகி இருந்தது – சில மதிப்பீடுகளும் இருந்தன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்றெல்லாம். ஆக, குறைவாக எழுதினாலும் என் மனதுக்கு நிறைவாக உணர்வதை மட்டுமே எழுத வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன்.

என்னுடைய மர நிறப் பட்டாம்பூச்சிகள் கதையை வாசித்து விட்டு போகன் சங்கர் சிலாகித்துப் பேசிய தருணமே எனக்குள் முழுமுற்றாக நானும் எழுதக்கூடியவந்தான் என்கிற நம்பிக்கையைத் தந்தது.

பிரசுரமான முதல் எழுத்து?

வலைத்தளங்களில் விளையாட்டாக எழுதிக் கொண்டிருந்தவனை உன்னால் எழுத முடியும் எனத் தொடர்ந்து உற்சாகமூட்டியவர் பொன்.வாசுதேவன். முடியாத கதை என்றொரு கவிதையை அகநாழிகையில் பிரசுரித்தார். கதை என்று பார்த்தால் நிழலாட்டம். யெஸ்.பாலபாரதி ஆசிரியராக இருந்த பண்புடன் என்னும் இணைய இதழில் வெளியானது. அதே கதை பிறகு மதிகண்ணனின் கதவு சிற்றிதழிலும் வந்தது.

உலக/ இந்திய/ தமிழ் இலக்கிய ஆதர்ச எழுத்தாளர்கள் யார்?

ஏனோ எனக்கும் என் அகவுலகத்துக்கும் ஐரோப்பிய எழுத்தாளர்களே நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். மனிதனின் அகவுலகை மிக விரிவாகப் பேசிய தஸ்தாவ்ஸ்கியை நான் ஒரு வரி கூட வாசித்ததில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? அவரை வாசிக்காமல் இருப்பது ஒருவகை அச்சம் என்று கூட சொல்லலாம். நம்முடைய குரூரங்களையும் ரகசியங்களையும் இழந்து விடுவோம் என்கிற பயம். போலவே லத்தீன் அமெரிக்க கதைகளையும் நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன். ரூல்போ ஒருவர் மட்டுமே எனக்கு சற்று உவப்பாயிருக்கிறார். ஆக வாழ்வை தற்செயல் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்ப்பவன் என்கிற வகையில் எனக்கான உந்துதல் ஆல்பர் காம்யூவிடம் இருந்தே கிடைக்கிறது. அந்நியன் எனக்குள் உருவாக்கிய தாக்கம் அளப்பரியது, இருப்பு சார்ந்த சிக்கலான பல கேள்விகளை மனதினில் விதைத்தது. அவருடைய எழுத்துகள் எனக்குள் கிளர்த்திய உணர்வையே நான் நம்முடைய நிலத்தில் நிகழ்த்திப் பார்க்கிறேன், அதன் வழியாக வாழ்வை விசாரணைக்கு உட்படுத்துகிறேன்.

நானும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக இருக்கும் சூழலில் இதைச் சற்று சங்கடத்தோடுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்திய அளவில் என்று சொல்லும்போது மலையாளமும் வங்காளியும் தவிர்த்து மற்ற மொழிகளில் இருந்து நிறைய மொழிபெயர்க்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அப்படியிருக்க ஆதர்ஷம் என்றெல்லாம் உண்மையில் யாருமில்லை. பஷீரையும் சிதம்பர நினைவுகளுக்காக பாலச்சந்திரனையும் பிடிக்கும். பால் ஸக்காரியாவின் சிறுகதைகளின் மீது மகிழ்ச்சி கலந்த பொறாமை உண்டு.

தமிழைப் பொறுத்தவரை நான் எப்போதும் சொல்வது எஸ்.ராமகிருஷ்ணன். அவர் இல்லையென்றால் எனக்கு இலக்கியம் தெரிந்திருக்காது. எழுத்து மற்றும் சொல்முறை சார்ந்து என்னை மிகவும் பாதித்தவர்களெனில் கோபிகிருஷ்ணனையும் ப்ரேம்-ரமேஷையும் சொல்வேன்.

‘வலசை’ ஒரு முக்கியமான முயற்சியாக பட்டது. அதை நேசமித்திரனோடு இணைந்து முன்னெடுத்தீர்கள். அதில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது? வலசையின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி

2010-ன் பிற்பகுதி. கோவில்பட்டியில் கோணங்கியைச் சந்தித்து விட்டு நானும் நேசமித்ரனும் மதுரை திரும்பிக் கொண்டிருந்தோம். பேச்சு அப்போதிருந்த சிற்றிதழ் சூழல் குறைத்தும் இடைநிலை இதழ்களின் ஆதிக்கம் பற்றியும் திரும்பியது. குழு மனப்பான்மையால் புறக்கணிக்கப்படும் எழுத்துகள், மேலோட்டமான எழுத்துகளை தாங்கிப் பிடித்து இவைதான் இலக்கியம் என நம்பவைக்கப் பாடுபடும் இடைநிலை இதழ்களின் அரசியல் என எங்களுக்கு நிறைய கோபங்கள் இருந்தன. ஏன் இவற்றையெல்லாம் சரி செய்ய நாமே ஒரு சிற்றிதழ் ஆரம்பிக்கக்கூடாது என்று கேட்ட கேள்விக்கான விடைதான் வலசை. உலகம் முழுக்க இருக்கும் இலக்கியப் போக்கை தமிழில் பேசுவதற்கான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என விரும்பினோம். எனவே மொழிபெயர்ப்புகளுக்கு முக்கியத்துவம் தரலாம் என்று முடிவு செய்தோம். பிறகு இதழ்களை வெறுமனே வழக்கமான சிற்றிதழாக இல்லாமல் வேறொரு வடிவத்தில் தருவதற்கான முயற்சியாக ஒவ்வொரு இதழுக்கும் ஒவ்வொரு கருப்பொருள் என்று முடிவு செய்தோம். வலசை மொத்தம் நான்கு இதழ்கள் வெளியானது. உடல் மீதான அரசியல், மூன்றாம் பாலினம், குழந்தைகளின் அகவுலகம், நாடு கடத்தப்பட்டவர்களின் படைப்புகள் என்கிற நான்கு வெவ்வேறு கருப்பொருளைப் பேசிய இதழ்கள். கடைசி இதழ் 2014 ஜனவரியில் வெளியானது. அடுத்ததாக ஓவியங்களைப் பேசுகிற ஒரு இதழைக் கொண்டு வரலாம் என்றெண்ணி பணிகளை ஆரம்பித்தோம். ஆனால் அது கனவாகவே நின்றுவிட்டது. இருவரும் அவரவர் எழுத்துகளில் கவனம் செலுத்திய காலகட்டம். இதழுக்கான நேரத்தைச் சரிவர ஒதுக்க முடியாமல் போக வலசை (தற்காலிகமாக?!!) நிறுத்தப்பட்டது.

வலசையைப் பொறுத்தமட்டில் நேசமித்ரனே அதன் ஆன்மா. நான் வலசையின் உடலாக இயங்கினேன் என்று சொல்லலாம். முதலில் கருப்பொருளைத் தீர்மானித்தபின் அதுசார்ந்த படைப்புகளை நேசன் தேர்ந்தெடுத்து அனுப்புவார். அவற்றை வாசித்து அதிலிருந்து தேவையான பகுதிகளைத் தேர்ந்தெடுப்போம். பின்னர் படைப்பாளிகள் யார் யாரென்பதையும் மொழிபெயர்ப்புகளை யாரிடம் கொடுத்து வாங்கலாம் என்பதையும் முடிவு செய்வோம். ஒவ்வொரு இதழுக்கும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும். இலக்கிய வாசகராக நிறைய எழுத்தாளர்களிடம் அறிமுகம் இருந்ததால் இதழுக்கு படைப்புகள் வாங்க அது பெரிதும் உதவியது. வடிவமைப்பில் எங்களுடைய தோழி தாரணிபிரியா மிகவும் உதவியாயிருந்தார். நான்காம் இதழை நண்பர் வெய்யில் வடிவமைத்தார். இதழை 300 பிரதிகள் அச்சிட ஆகும் பொருளாதாரச் செலவுகளை நேசனே ஏற்றார். அவற்றில் நூறு பிரதிகள் வரை இதழில் பங்கேற்றவர்களுக்கும் முன்னோடி எழுத்தாளர்களுக்கும் அனுப்பி வைப்போம். நூறு பிரதிகள் விற்பனைக்காகக் கடையில் கொடுப்போம். மீதி இருக்கும் புத்தகங்களையும் அவ்வப்போது சந்திக்கும் நண்பர்களிடம் கொடுத்து விடுவோம். இதழைத் தரமாகக் கொண்டு வந்தாலும் அவற்றை எல்லோரிடமும் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க எங்களுக்குத் தெரியவில்லை. என்னிடம் இப்போது நான்கு இதழ்களிலும் ஒரே ஒரு பிரதி மட்டுமே உள்ளது. நேசனிடம் அதுவும் இருக்குமா என்று தெரியவில்லை. வலசை எங்களைப் பொறுத்தமட்டில் ஒரு அற்புதமான கனவு. அதில் பணிபுரிந்த ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து வாழ்ந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வலசை வெளியான காலகட்டத்தில் அது நிறைய பேருக்கு எரிச்சலை உண்டு பண்ணியது. இணையத்தில் இருந்து வந்தவர்களால் சிற்றிதழ் சூழலில் என்ன பெரிதாக செய்து விட முடியும் என்று நேரடியாக எங்களிடமே சொன்னார்கள். இதழைத் தரமாகக் கொண்டு வருவதன் மூலமே அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்று நம்பினோம். ஆசிரியர்கள் என்று குறிப்பிடாமல் வலசையின் முதல் வாசகர்கள் என்று எங்களுடைய பெயரைப் போட்டதுகூட விமர்சனத்துக்கு உள்ளானது. எல்லாவற்றையும் மீறி வலசை அதற்கான நோக்கத்தில் தெளிவாக இருந்தது என்றே நம்புகிறேன். தமிழ்ச்சூழலில் அதிகம் அறியப்படாத படைப்பாளிகளைத் தேடி எடுத்து மொழிபெயர்த்தோம். இஸ்மாயில் கதாரேயின் கவிதைகளை வலசையின் முதல் இதழில் (ஆகஸ்டு 2011) சபரிநாதன் மொழிபெயர்த்தார். ஒவ்வொரு இதழுமே தனித்துவமான சில படைப்புகளைக் கொண்டிருந்தன என்று தைரியமாகச் சொல்வேன். இன்றும் எங்கிருந்தாவது யாராவது அழைத்து குழந்தைகளின் அகவுலகம் பற்றிய இதழையோ மூன்றாம் பாலினம் பற்றிய இதழையோ குறித்து உரையாடும்போது மனம் ஆசுவாசம் கொள்கிறது. காலத்தைப் போல சிறந்த நீதிபதி யாருமில்லை என்பதும் தெளிவாகப் புரிகிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளராக நீங்கள் தமிழுக்கு கொண்டு வரும் கதைகளை எதன் அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்? ஏனெனில் ஒரு புதிய எழுத்தாளனை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் போது அவனுடைய பலவீனமான கதையை வாசிக்க நேர்ந்தால் அவனைத் தேடிச் சென்று வாசிப்பது தடைபடும் ஆபத்து இருக்கிறதே.

மொழிபெயர்ப்பில் எனக்கு நான் வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல்கள் இரண்டு மட்டுமே. 1) தமிழில் அதிகம் அறியப்படாத அல்லது வெறும் பெயராக மட்டுமே அறிமுகம் ஆகியிருக்கக்கூடிய படைப்பாளிகளையே நான் தேர்வு செய்கிறேன். போர்ஹேஸ், மார்க்குவெஸ், கால்வினோ போன்ற மாஸ்டர்கள் அதிகம் மற்றவர்களால் மொழிபெயர்க்கப்படுவதால் எனக்குள் அப்படியொரு கடப்பாடு. உதாரணத்துக்கு, டோனி மாரிசனை எடுத்துக் கொள்வோம். அவரொரு நாவலாசிரியராகத் தமிழில் நன்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால் தன் வாழ்நாளில் அவர் ஒரேயொரு சிறுகதை மட்டுமே எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்தக்கதையைத் தேடியெடுத்து வசனகவிதை என்ற தலைப்பில் நான் மொழிபெயர்த்தேன். 2) கதையின் சொல்முறையிலோ வடிவத்திலோ அல்லது உள்ளடக்கத்திலோ ஏதோவொரு விதத்தில் புதிதாக இருக்கும் கதைகளை மொழிபெயர்க்கிறேன்.

ஒரே ஒரு கதையை வாசித்து விட்டு யாரையேனும் மொழிபெயர்த்தால் நீங்கள் சொல்லக்கூடிய சிக்கல் நேரலாம். ஆனால் நிறைய எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளரை தமிழில் அறிமுகம் செய்யும்போது இயன்றமட்டும் அவருடைய மொத்தத் தொகுப்பையும் வாசித்து அதில் நெருக்கமாக உணரும் கதையைத்தான் தெரிவு செய்கிறேன். தவிரவும், இன்றைக்கு இருக்கக்கூடிய இணைய வசதிகளின் மூலம் ஒவ்வொரு கதையைப் பற்றிய அறிமுகமும் விமர்சனங்களும் எளிதில் கிடைப்பதால் மொழிபெயர்ப்பாளரின் பணி சற்று இலகுவாகிறது. நல்ல கதைகள் என்று குறிப்பிட்டுள்ள கதைகளை எல்லாம் தேர்ந்தெடுத்து வாசித்து அவற்றில் நமக்கான கதையைத் தேர்வு செய்வதும் எளிதாகிறது. என்னளவில், நான் மொழிபெயர்த்த கதைகளில் எனக்கு அத்தனை நிறைவு தராத பணி என்று சொன்னால், எருது தொகுப்பில் இடம்பெற்ற எட்கெர் கீரத்தின் டாட் என்னும் கதையைச் சொல்வேன். அதை மொழிபெயர்த்த பிறகே அதைக் காட்டிலும் நல்ல கதைகள் எனச் சொல்லும்படியான கீரத்தின் கதைகள் கிடைத்தன. அதை ஒரு அனுபவமாக எடுத்துக்கொண்டு இப்போது இன்னும் கவனமாயிருக்கிறேன்.

இன்றைய தமிழ் சூழலில் மொழியாக்கத்தின் தேவை என்ன? நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கம் பெருகியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பன்மடங்கு பெருகி தமிழ் வாசிப்பே அருகிவிடவும் கூடும். தன்னளவில் நீங்கள் ஓர் புனைவெழுத்தாளன் எனும்போது அதற்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவமும் உழைப்பும் நியாயம் எனப் படுகிறதா?

மீட்சி வெளியிட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், காம்யூவின் அந்நியன் அல்லது ப்ரெவரின் சொற்களைப் போல ஒரு காலகட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் மொழிபெயர்ப்புகள் இன்றைய சூழலில் சாத்தியமா எனில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது சிதைவுகளின் காலம். நம்பிக்கைகள் தொலைந்து வேறொன்றாக உருமாறியுள்ளன. ஆனால் நிச்சயம் மொழிபெயர்ப்புகளுக்கான தேவைகளும் இருக்கவே செய்கின்றன. தற்காலப் புனைவுளின் போக்கை ஒப்பு நோக்கவும் நமக்கான பாதையைக் கண்டடையவும் மொழிபெயர்ப்புகள் கண்டிப்பாக உதவும் என்றே நம்புகிறேன். தமிழில் வாசிப்பது அரிதாகி நேரடியாக ஆங்கிலத்தில் வாசிப்பது அதிகரித்திருப்பதாகச் சொல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. மொழிபெயர்ப்புகளை அதிகம் வெளியிடும் எதிர் வெளியீடு பதிப்பகத்தோடு இணைந்து நான் செயலாற்றி வருகிறேன். மொழிபெயர்ப்புகளுக்கு மக்களிடையே இருக்கக்கூடிய வரவேற்பு அதிகரித்திருப்பதாகவே உணருகிறேன், மிகக்குறிப்பாக அபுனைவுகளில்.

தமிழின் மிக முக்கியமான கவிஞர் யவனிகா ஸ்ரீராம் மற்ற எல்லாரையும் விட தான் மொழிபெயர்ப்பாளர்களுக்கு அதிகம் கடமைப்பட்டிருப்பதாகச் சொல்வார். இல்லையெனில் ப்ரெவரும் ஃப்ரெட்டும் தனக்கு ஒருபோதும் தெரியாதவர்களாகவே இருந்திருப்பார்கள் என்று அவர் சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியாயிருக்கும். எங்கோ ஒருவர் வாசித்து அவருக்கு மட்டுமே பயன்பட்டால் கூட மொழிபெயர்ப்பின் நோக்கம் நிறைவேறியதாகத்தானே அர்த்தம்? ஆக மொழிபெயர்ப்புக்கு நான் செலவிடும் நேரம் எனக்கு மன அமைதியையும் மகிழ்ச்சியையும்தான் தருகிறது. ஒரு புனைவெழுத்தாளனாக, வருடத்துக்கு அதிகம் போனால் இரண்டு கதைகள் மட்டும் எழுதக்கூடிய ஒருவனுக்கு, மொழியுடனான தொடர்பு அறுந்து போகாமலிருக்க இந்த மொழிபெயர்ப்புகள் உதவவே செய்கின்றன.

உங்கள் புனைவுகளின் மீது மொழியாக்கத்தின் தாக்கம் என்னவாக இருக்கிறது?

முடிந்தமட்டும் இதுபோன்ற சமயங்களில் இருவேறு மனிதர்களாகவே இருக்க முயற்சிக்கிறேன். என்னுடைய கதைகளை எழுதும்போது எனது வேர்கள் இந்த மண்ணில் ஆழப் புதைந்திருக்கின்றன, சூழல் என்னைச் சுற்றியதாக மட்டுமே இருக்கிறது. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளனாக நான் கூடுவிட்டுக்கூடு தாவ வேண்டியிருக்கிறது. அறிந்திராத நிலத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பேசும்போது இன்னும் கவனமாயிருக்க வேண்டியவனாகிறேன். சொல்லப்போனால், இந்தக் கேள்வியைச் சற்று மாற்றி கேட்டிருந்தால் சரியாயிருக்கும். ஒரு புனைவெழுத்தாளனாக மொழிபெயர்ப்புகளில் என்னுடைய குரல் தலைதூக்கி விடாமல் இருக்கவே நான் அதிகம் சிரமப்படுகிறேன். ஆடியின் பிம்பம் பிசகி விடாமல் தருவது மிக முக்கியமான கடமையாகிப் போகிறது. மற்றபடி, கதைகளை எழுதும்போது, சொல்முறையிலும் வடிவத்திலும் சில பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்து பார்க்க வாசிப்பும் மொழிபெயர்ப்பும் உதவத்தான் செய்கின்றன. Abstract தன்மையிலான கதைகளை எழுதும் என் பெருவிருப்பத்தை பிரெஞ்சு எழுத்தாளரான அலென் ராப் கிரியேவிடமிருந்தே பெற்றேன் எனச் சொல்லலாம்.

‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ பற்றிய உங்கள் முன்னுரை முக்கியமானதாக உணர்கிறேன். மொழிபெயர்க்க நீங்கள் வெவ்வேறு மொழியாக்கங்களை வாசித்து, ஒப்புநோக்குவது உங்கள் தீவிரத்தை காட்டுகிறது. ஒரு கவிதை நூலை மொழியாக்கம் செய்ததன் சவால் என்ன? ஏன் இந்நூலை தேர்ந்தீர்கள்? ஆத்மாநாம் விருது கிடைத்திருக்கும் இந்நூலை மொழியாக்கம் செய்த அனுபவத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?

ரைம்போவை நான் மொழிபெயர்க்கக் காரணம் பிரம்மராஜனே. கோவையில் ஒரு நிகழ்வுக்காக வந்திருந்தவருடன் அவருடைய வீட்டுக்குப் போயிருந்தேன். என்னுடைய சிறுகதைகளை அவர் வாசித்திருந்தார். அதைப் பற்றிய உரையாடலில் கதைகளில் புலப்பட்ட மனித வெறுப்பைப் பற்றிப் பேசும்போது அவர் ரைம்போவைக் குறிப்பிட்டார். நரகத்தில் ஒரு பருவகாலத்தின் கவித்துவத்தை எடுத்துச் சொல்லி நிச்சயம் அதை வாசித்துப் பாருங்கள் என்றும் சொன்னார். வெறும் பெயராக மட்டுமே நான் அறிந்திருந்த ஒரு மகத்தான கவிஞனின் படைப்பை எனக்கு அறிமுகப்படுத்தி அதை மொழிபெயர்க்கவும் சொன்ன பிரம்மராஜனுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலத்தில் நான் வாசித்த ரைம்போவைப் பற்றிய கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டே நரகத்தின் நுழைவாயில் என்கிற அந்த முன்னுரைக் கட்டுரையை எழுதினேன். அவருடைய எழுத்துகளின் வழியே நான் ரைம்போவைப் பற்றி எனக்குள் உருவாக்கிக் கொண்ட சித்திரமும் அதற்கு உதவியது. நரகத்தில் ஒரு பருவகாலம் பற்றிப் பேசும் இந்த சமயத்தில் முக்கியமான இரண்டு சங்கதிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1) Arthur Rimbaud என்பதன் சரியான உச்சரிப்பு ஆர்தர் ரேம்போ என்பதே. ஆனால் வேறொரு திரைப்பட நாயகனை நினைவூட்டியதால் அந்தப் பெயரை நான் பயன்படுத்த விரும்பவில்லை. தமிழ் சிற்றிதழ் சூழலில் பலகாலமாக ரைம்போ என்றே குறிப்பிட்டு வந்த காரணத்தால் அதை அப்படியே இருக்கட்டும் என விட்டு விட்டேன். 2) நரகத்தில் ஒரு பருவம் என்கிற தலைப்பில் நாகார்ஜூனன் ரைம்போவின் சில பகுதிகளை மொழிபெயர்த்து அவருடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதிலிருந்து மாறுபட வேண்டுமென்பதற்காகவே தலைப்பில் பருவகாலம் என்று குறிப்பிட்டேன். ஆனால் பாண்டிச்சேரியில் இருந்த அழைத்த பேராசிரியர் கண்ணன் பருவகாலம் என்பது நம் நிலத்துக்கு மட்டுமே உரியது என்பதைச் சுட்டினார். தலைப்பை மாற்றலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தோடு நண்பன் திருச்செந்தாழையிடம் பேசினேன். தலைப்பின் கவித்துவத்தை பருவகாலம் என்கிற வார்த்தையே தாங்கிப் பிடிக்கிறது என்றான் செந்தாழை. ஆக அறிந்தேதான் இந்தத் தவறுகளை நான் அனுமதித்தேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ரைம்போவின் மொழி மிக இறுக்கமானதாய் இருப்பதோடு பல்வேறு புரிதல்களுக்கான சாத்தியங்களையும் கொண்டது என்பதை வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை வாசித்ததன் மூலம் உணர்ந்தேன். ஒரே வரி மூன்று வடிவங்களில் மூன்று அர்த்தப்பாடுகளைத் தந்ததும் குழப்பியது. ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற சிதறுண்ட ஒரு பிரதியை பின்தொடர்ந்து அதன் நிழலையும் சரியாக மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம். ஆக நான் என் உள்ளுணர்வை நம்பியே இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டேன். மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஒப்புநோக்கி ரைம்போவின் வரிகளுக்கு நெருக்கமென நான் உணர்ந்த வரிகளை மொழிபெயர்த்தேன். உரைநடைக் கவிதைகள் என வரும்போது அவற்றின் கவித்துவத்தை இழந்து வெற்று உரைநடை வரிகளாக மாறிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தேன். வார்த்தைகளைப் புதிதாகத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. நிறைய லத்தீன் மொழிச் சொற்களைப் பயன்படுத்தி இருந்தார் ரைம்போ. அவற்றின் அர்த்தம் தேடியெடுத்து வரிகளில் சரியாகப் பொருத்துவதும் அவசியமாக இருந்தது. வலசையில் சில கவிதை மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டிருந்ததும் ரைம்போவை மொழிபெயர்க்க உதவியது என்று சொல்லலாம். இதற்கு முன்னால் ரைம்போவை மொழிபெயர்த்த நாகார்ஜூனன் சங்ககாலக் கவிதைகளின் தொடர்ச்சியாக அவரைப் பார்த்தார். மொழிபெயர்ப்பிலும் அந்தத் தொனி இருந்தது. அந்த மொழியிலிருந்து வேறுபட்டு ரைம்போவை எந்த மாற்றமுமின்றி நான் வாசித்துணர்ந்த மொழியில் கொண்டு வருவதே ஆகப்பெரிய சவாலாகவும் இருந்ததென்பேன்.

சரியான ஒரு படைப்புக்கான அங்கீகாரம் என்கிற வகையில் ஆத்மாநாம் விருது ரைம்போவை மொழிபெயர்த்ததற்காக கிடைத்ததில் மகிழ்ச்சியே. அதற்கு நான் என் பதிப்பாளர் எதிர் வெளியீடு அனுஷுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பிடித்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து அவை எந்த வடிவத்திலிருந்தாலும் மொழிபெயர்க்க எனக்கிருக்கும் சுதந்திரம் அவரால் கிட்டியதே.

நீங்கள் கவிதை எழுதுவதுண்டா?

நான் கவிஞனில்லை என்பதை நன்கறிவேன். ஆனால் கவிதைகளை வாசிப்பது பிடிக்கும். அவை எனக்குள் வேறொரு மனநிலையை சிருஷ்டிக்கின்றன. ஒரு நல்ல தொகுப்பை வாசித்து முடித்த பிறகு அவற்றால் உண்டான இடைவெளிகளை எழுதி நிறைக்கும் முயற்சியாய் சில கவிதைகளை எழுதிப் பார்ப்பேன். அல்லது சட்டென்று தோன்றக்கூடிய படிமம் ஒன்றை வைத்து எழுதிப் பார்ப்பதும் உண்டு. கொம்பு முதல் இதழுக்கு ஒரு கவிதையை அனுப்பி இருந்தேன். வெய்யில் அதில் சில மாற்றங்களைச் செய்து ஒலிக்கிளர்ச்சி என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். கவிஞர் ஸ்ரீசங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அந்தக் கவிதையை குறிப்பிட்டு நீதான் எழுதியதா என்றார். ஆமாம் என்றேன். இனிமேல் கவிதை எழுதாதே என்று சொல்லி விட்டுப் போனார். அதை எப்போதும் நினைவில் வைத்திருப்பதால் பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதில்லை.

நாவல் எழுதும் யோசனை உண்டா?

நாவல் எழுத வேண்டும் என்கிற ஆவல் நிச்சயம் உண்டு. ஆனால் அதற்கான பக்குவம் இன்னும் எனக்குள் கூடி வரவில்லை என்றே நினைக்கிறேன். நானும் எழுதினேன் என்றில்லாமல் வடிவரீதியாக சற்றுப் புதிதாக எதையாவது எழுத வேண்டும் என்கிற ஆசை. தமிழில் இதுவரை பொறியியல் கல்லூரி வாழ்க்கையை முழுதாகப் பேசிய ஒரு நாவலென்று ஏதும் வந்ததாகத் தெரியவில்லை, அதையும் எழுதுவேன் என்றே எண்ணுகிறேன்.

உலக சினிமா பரிச்சயம் மற்றும் ஆதர்சம் பற்றி? அவை உங்கள் எழுத்தின் மீது எந்த அளவிற்கு தாக்கம் செலுத்தியிருக்கிறது?

சாரு நிவேதிதாவின் சினிமா – அலைந்து திரிபவனின் அழகியல் என்கிற நூலின் வழியாக அறிமுகமான அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கியே என் உலக சினிமா ஆதர்ஷம். காமிக்ஸிலும் அவர் வித்தகர் என்பது என்னுடைய ஈர்ப்புக்கு மற்றொரு காரணம். அவருடைய எல் டோபோவும் ஹோலி மௌண்டைனும் நான் மீண்டும் மீண்டும் பார்க்கும் படங்கள். எனவேதான் மீயதார்த்தப் புனைவாக நான் எழுதிப் பார்த்த சிலுவையின் ஏழு வார்த்தைகள் கதையை அவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். தவிர, ஜி.முருகனின் ஏழு காவியங்களை வாசித்து விட்டு தர்க்கோவெஸ்கியின் படங்களைத் தேடிப் பார்த்திருக்கிறேன். கிம்-கி-டுக்கிடம் வெளிப்படும் வன்முறையின் அழகியல் எனக்கு நெருக்கமான ஒன்று. சமீபமாக அரனோவெஸ்கியின் (பை, ஃபௌண்டைன்) படைப்புகளை அப்படி மனதுக்கு நெருக்கமாக உணருகிறேன். அதிர்ச்சி மதீப்பீடுகளைத் தாண்டி இவர்களின் திரைப்படங்கள் உண்டாக்கும் மன அவசமும் சுயவிசாரணையும் என்னை நிறையவே தொந்தரவு செய்யக்கூடியவை. அப்படியான படைப்புகளையே நான் விரும்பிப் பார்க்கிறேன். ஒரு சில இடங்களில், வெகு குறைவாக என்றாலும், இந்தத் திரைப்படங்களின் தாக்கம் என் எழுத்தில் இருப்பதாகவே உணருகிறேன்.

பயணம், இசை, ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உண்டா?

எழுத்தைத் தவிர்த்து என்னை உயிர்ப்போடு வைத்திருப்பது இசையே. ஹிந்தியில் நிறைய விரும்பிக் கேட்பேன். ரய் (Rai) இசையும் பிடிக்கும். எழுதவோ வாசிக்கவோ செய்யாத சமயங்களில் இசையோடுதான் இருக்கிறேன். பயணம் செய்வது பிடிக்குமென்றாலும் வலிந்து போவதில் உடன்பாடில்லை. மாறாக தனிமையிலிருப்பது ரொம்பப் பிடிக்கும். தேசாந்திரியை வாசித்து விட்டு ஒருமுறை இலக்கில்லாமல் பாண்டிச்சேரி, வடலூர், தஞ்சை என்றெல்லாம் சுற்றினேன். அது மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியான பயண அனுபவம். ஆனால் என் பெரும்பாலான கதைகளில் பயணமும் ஒரு முக்கியமான அங்கமாக இருப்பதை என்னால் உணர முடிகிறது. இயல்பில் என்னால் நினைத்தவுடம் போக முடியாத பயணங்களைத்தான் எழுதிப் பார்க்கிறேனோ என்னமோ? ஓவியங்களில் அவ்வளவாகப் பரிச்சயமில்லை. எனக்கு மிகப்பிடித்த மற்றொரு சங்கதி – கால்பந்து. ஆர்செனல் அணியின் தீவிர ரசிகன் நான்.

உங்கள் சிறுகதைகள் அதிர்ச்சி மதிப்பீட்டை உருவாக்க முனைகின்றன என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி

அதிர்ச்சி மதிப்பீடு எனும் வார்த்தைக்கு இன்னும் அர்த்தமிப்பதாக நம்புகிறீர்களா? புனைவுகளை விட வினோதமான சங்கதிகளை நாளிதழ்களில் தினந்தோறும் வாசித்துக் கடக்கும் வாழ்க்கையில் வெறும் அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டும் வைத்து ஒருவர் கதை சொல்லி விட முடியாது என்றே எண்ணுகிறேன். ரயிலில் பாயும் குழந்தையும் பெருத்த மார்புகளைக் கொண்ட ஆணும் மகளின் வயதொத்தவளைப் புணர்கிறவனும் வாசிப்பவர்களுக்கு வெற்றுக்காட்சிகளாக மட்டுமே கடந்து போவார்களெனில் நான் அதை எழுத வேண்டிய அவசியமில்லை. உடலைத் தாண்டிய வெறுமையையே நான் மீண்டும் மீண்டும்  எழுதுகிறேன். இந்தக் கதைகளில் உடல் வெறும் உடலாக மட்டும் இருப்பதில்லை. இவையெல்லாம் கண்முன்னே தினம் தினம் நிகழும் வாழ்வின் அபத்தத்தையும் செய்வதறியாமல் மூச்சு முட்டி நிற்கும் மனதின் பதற்றத்தையுமே பேச விழைகிறேன். ஒரு இளம் எழுத்தாளர் சில காலத்துக்கு முன் என் கதைகளை வாசித்து விட்டு அவை நன்றாயிருப்பதாகச் சொன்னார். ஆனால் தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக சமீபத்தில் ஒரு குறுந்தகவலை அனுப்பி இருந்தார். மறுவாசிப்பில் வன்முறையைத் தவிர இந்தக் கதைகளில் வேறொன்றுமில்லை என்று உணர்ந்ததாகச் சொன்னார். எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. என் கதைகளை நான் நியாயப்படுத்த விரும்புவதில்லை. எழுதி முடித்தவுடன் அவற்றைக் கைவிடவே ஆசைப்படுகிறேன். என்றாலும், குறைந்தபட்சம் அவை விசாரணைக்குட்படுத்தும் சங்கதிகளைப் பொருட்படுத்தாமல், அவற்றைக் கடந்து போவதற்கான எளிய பாதையைத் தேர்வார்களெனில் நான் ஏதும் செய்ய முடியாது.  நவரசங்களில் அருவருப்பும் ஒன்றுதானே? ஜி.நாகராஜன் சொன்னதைத்தான் நானும் நினைத்துக் கொள்கிறேன்.

நவீன தனி மனிதனுக்கு தொன்மங்கள், நாட்டாரியல்போன்றவை தேவையில்லை என்று எண்ணுகிறீர்களா? அல்லது அதிலிருந்து துண்டித்து கொண்டவன் தான் நவீன மனிதன் என்பது உங்கள் பார்வையா? அரிதாகவே உங்கள் கதைகளில் தொன்மங்கள் கையாளப்படுகின்றன. அப்படி கையாளப்படும்போதும் அவை தலைகீழாக்கம் பெறுகின்றன.

நீ ஒரு அவாண்ட்-கார்டே ஆள் என்று போகன் சங்கர் அடிக்கடி என்னைக் கேலி செய்வதுண்டு. செவ்வியல் படைப்புகளில் எனக்கு அவ்வளவாக ஆர்வமிருப்பதில்லை. அவற்றை சரியாக உள்வாங்கிக் கொள்ளவியலாத என்னுடைய போதாமையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். முழுக்கவே நவீன் தொழில்நுட்ப ஊடகங்கள் சூழந்திருக்கும் நவீன மனிதனின் வாழ்வில் தொன்மங்களும் நாட்டாரியலும் என்னவாக இருக்கின்றன என்கிற குழப்பம் எனக்கிருப்பது உண்மையே. துண்டித்துக் கொண்டவன் எனச் சொல்லுவதை விட துண்டிக்கப்படுகிறான் என்பதே சரியாக இருக்கக்கூடும். எனவேதான் அறத்தைப் பேசுகிற தொன்மங்களை எடுத்துக் கொண்டு அதற்கு நேரெதிர் நிலையில் தலைகீழாக மாற்றுகிறேன். காட்டிக் கொடுத்தவனை இயேசு கொலை செய்திட, கர்ணன் தன் வாக்கை மீறி அர்ஜூனனைக் கொல்வதோடு தன்னயும் மாய்த்து குந்தியைப் பழிவாங்குகிறான். இவையே இன்றைய சூழலுக்குப் பொருந்தும் என்கிற அறம் பேசும் எதையும் நம்பாத எளிய மனம் என்னுடையது. முழுக்க முழுக்க தொன்மங்களை மட்டும் பேசுகிற ஒரு கதையை எழுத வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. அதற்கான மொழியும் மனநிலையும் வசப்படும் காலத்தில் நிச்சயம் எழுதுவேன்.

நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என்னவென எண்ணுகிறீர்கள்?

காற்றுக்குமிழியைப் போல மனிதனைச் சுற்றிச்சுழலும் அவநம்பிக்கைதான் நவீன தனி மனிதனின் மிக முக்கியமான சிக்கல் என எண்ணுகிறேன். உறவுகள் மற்றும் நம்பிக்கைகளின் இடத்தை ஊதிப் பெருக்கப்பட்ட ஊடக பிம்பங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. என்றாவது ஒரு நாள் எதிர்பாராத தருணத்தில் அந்தக்குமிழி வெடித்துச் சிதறும்போது அவன் மொத்தமாகத் தன்னைத் தொலைக்கிறான். அதிலிருந்து ஒருபோதும் மீள முடியாதவனாக இருக்கிறான்.

உங்கள் எழுத்து அரசியலுடன் தொடர்பற்று உள்ளது என்றொரு விமர்சனம் வைக்கப்படுவதைப் பற்றி..

காலம் காலமாகச் சொல்லப்படும் விமர்சனம்தான். தனி மனிதனின் உலகை எழுதும்போதே அவனை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும் சமூகத்தைப் பற்றிய விமர்சனம் மறைமுகமாக வைக்கப்படுகிறதுதானே? அவனுடைய சிக்கல் என்பது அவனுடைய பிரச்சினைகள் மட்டும்தானா? பிரச்சாரம் செய்யும் கதைகளை என்னால் எழுத முடியாது. எனது நம்பிக்கைகளின் பாற்பட்டே நான் இயங்குகிறேன். அரசியலற்றிருப்பதின் அரசியல் என்பதை கோணங்கியிடம் இருந்தே கற்றேன். அதை இன்றளவும் நம்புகிறேன்.

மர நிறப் பட்டாம்பூச்சிக்கு என்னவிதமான விமர்சனங்கள், கவனம் கிட்டின

தொகுப்பை வாசித்தவர்கள் அனைவருமே அந்தக் கதைகளை எளிதில் கடந்து போக முடியவில்லை என்பதையும் ஏதோ ஒரு இடத்தில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்ததாகவும் சொன்னார்கள். ஒருவகையில் என் கதைகளின் நோக்கம் அதுதான் என்னும்போது மகிழ்ச்சியாக உணர்ந்தேன். லக்ஷ்மி சரவணகுமாரும் போகனும் தொகுப்பைப் பற்றிய அறிமுகக் குறிப்புகளை எழுதித் தந்தார்கள். தொகுப்பை வெளியிட்டுப் பேசிய அர்ஷியா கதைகளில் காணக்கிடைத்த புதிய குரலை சிலாகித்தார். முதல் விமர்சனத்தை எழுதிய வாமு கோமுவுக்கு கதைகளில் இடம்பெற்றிருந்த கனவுகள் ரொம்பப் பிடித்திருந்தன. வெளியான இரண்டு மாதத்தில் வாசகசாலையின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது கிடைத்தது. அந்த சமயத்தில் ராஜ சுந்தரராஜன் ஒரு விமர்சனம் எழுதினார். உலகத்தரத்திலான கதைகள் என்கிற அவருடைய வார்த்தை மிகுந்த உற்சாகத்தைத் தந்தது. மதுரையில் புனைவு செந்தி ஏற்பாடு செய்த கூட்டத்தில் கணேசகுமாரன் ஒரு கட்டுரை வாசித்தார். சிறிது காலம் கழித்து நெல்லையில் தமுஎகச சார்பில் நடந்த கூட்டத்தில் தோழர்கள் மணிமாறனும் உதயசங்கரும் தொகுப்பு குறித்துப் பேசினார்கள். இவை இரண்டைத் தவிர வேறு எந்த கூட்டமும் நடைபெறவில்லை. புத்தகம் வெளியான சமயத்தில் கிட்டத்தட்ட முப்பது பேருக்கு தொகுப்பை அனுப்பி வைத்தேன். முகநூலில் ஒரு சில நண்பர்கள் குறிப்புகளாக எழுதினார்கள் என்பதைத் தாண்டி பெரிய சலசலப்பு ஏதும் ஏற்படவில்லை. தொகுப்பு இன்னும் கொஞ்சம் கவனிக்கப்பட்டிருக்கலாமோ என வருத்தமாக இருக்கும்போதெல்லாம் ராஜ சுந்தரராஜன் எழுதிய விமர்சனத்தை எடுத்து வாசிப்பேன். சரியாகச் செய்திருக்கிறோமா என்பதை விடத் தவறாக ஏதும் செய்து விடவில்லை என்பதை எனக்குள் உறுதி செய்து கொள்ளும் வழிமுறையாக அதைப் பின்பற்றினேன். ஆத்மாநாம் விருது இப்போது வேறொரு வகையில் நண்பர்களிடம் என்னுடைய சிறுகதைகளையும் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. சொல்வனத்தில் கிரிதரன் எழுதிய கட்டுரையை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாவற்றையும் விட மகிழ்ச்சியைத் தந்த வேறொரு சங்கதியும் உண்டு. திருச்சியைச் சேர்ந்த வாசக நண்பரொருவர் தொகுப்பை வாசித்து விட்டு கைப்பட எழுதியனுப்பிய இருபது பக்க கடிதம் என்னளவில் ஒரு பொக்கிஷம்.

சிறுகதைகளை எழுத எடுத்துகொள்ளும் நேரம் எவ்வளவு? திருத்தி எழுதும் வழக்கம் உண்டா?

சிறுகதைகளை நான் மனதுக்குள்தான் முதலில் எழுதிப் பார்க்கிறேன். கதைக்கான கரு என்னுள் தோன்றும் சமயத்தில் அதை அப்படியே விட்டு விடுவேன். பிறகு அந்தக்கதைக்கான இன்னபிற சங்கதிகள் மனதுக்குள் சேகரமாகிக் கொண்டே இருக்கும். இதுதான் வடிவம் என்பது எனக்குள் ஒரு மாதிரி உருவாகி நிற்கும் தருணத்தில் வாய் வார்த்தையாக கதையை ந.ஜயபாஸ்கரனிடம் சொல்லிப் பார்ப்பேன். ஒரு முறை கூட அந்தத் தங்கமான மனிதர் நான் சொல்லும் எதையும் நன்றாகயில்லை என்று சொன்னதே கிடையாது. அந்த வடிவத்தில் எனக்கு திருப்தி என்றான மறுகணம் எழுத உட்காருவேன். என்னுடைய கதைகள் எல்லாமே அநேகமாக ஒரு நாள் இரவுக்குள் எழுதப்பட்டவைதான். கணிணியில் நேரடியாக எழுதும் பழக்கம் கொண்டவன் நான். முழுமூச்சாக எழுதி முடித்தவுடன் இரண்டு பேருக்கு அனுப்புவேன். அவர்களில் ஒருவர் போகன், மற்றவர் ஏற்கனவே சொன்னதுபோல ந.ஜயபாஸ்கரன். அவர்கள் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்தபிறகே கதைகளை பிரசுரிக்கத் தருவேன்.

எழுத்து சார்ந்து ஏதேனும் செண்டிமெண்ட்ஸ் உண்டா, இடம், கணினி, காலமென

அது மாதிரி ஏதும் கிடையாது. ஆனால் எழுதும் காலம் இரவாயிருந்தால் சற்று ஆசுவாசமாக இருக்கும்.

உலக இலக்கியங்களை வாசிப்பவர் எனும் வகையில், சமகால தமிழ் இலக்கிய சூழலின் நிலை எத்தகையதாக உள்ளது, அதன் செல்திசை என்னவாக இருக்க வேண்டும், அதன் சிக்கல்கள் என்ன?

நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், என்றாலும் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்தான். சமீபத்தில் சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தின் போது ஜி.முருகனோடு வெகுநேரம் புனைவுகள் குறித்து உரையாட முடிந்தது. எத்தனை பேசினாலும் இறுதியில் நம் புனைவுகள் யதார்த்தத்தளத்தை விட்டு ஏன் வெளியேற மறுக்கின்றன என்கிற முக்கியமான கேள்வியை எழுப்பினார். மிகுபுனைவுகளிலும் வடிவங்களிலும் நாம் வெகு குறைவாகவே எழுதிப் பார்த்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதற்கான அடிப்படைக் காரணமாக உணர்வுகளுக்குப் பழக்கப்பட்டுப்போன தமிழ் மனதைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகுந்த கவித்துவமான சுழல் வரிகளின் வழியாகக் கோணங்கியும் தன் பால்யத்தையும் தொலைந்து போன காலத்தையும்தான் (நாஸ்டால்ஜியா) பேசுகிறார் எனும்போது நம்மால் அதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றிலும் இழந்த வாழ்க்கையையும் அதன் மென்னுணர்வையும் தேடும் மனம். அதிலிருந்து விலகி புதிய நிலங்களில் பாதைகளில் பயணிக்கும்போது தமிழ்ச் சிறுகதைகள் இன்னுமதிக உயரத்தை எட்டக்கூடும். பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், சிவசங்கர் எஸ்ஜே போன்றவர்கள் இன்று அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது சற்று ஆறுதலான சங்கதி.

நவீன தமிழ் எழுத்தாளனின் சவால்கள் என எதைச் சொல்வீர்கள்?

நவீன தமிழ் எழுத்தாளனுக்கு இருக்கக்கூடியவை இரண்டு சவால்கள். முதலில், அவன் எதை எழுதுவது என்பது. எண்பதாண்டு காலம் பல ராட்சதர்கள் நடந்துபோன பாதையில் அவர்களனைவரின் எழுதிச்சென்ற பாரத்தையும் தாங்கிக்கொண்டு நடக்க வேண்டியவனாகிறான். அவர்களை எல்லாம் தாண்டி புதிதாக எதைச் சொல்கிறான் என்பதும் அதனை எத்தனை துல்லியமாகச் சொல்ல முடிகிறது என்பதும்தான் அவன் முன்னாலிருக்கும் ஆகப்பெரிய சவால். இரண்டாவதாக, இன்று உருவாகி இருக்கக்கூடிய வாசிப்புச்சூழல். மிகுந்த வருத்தத்தோடுதான் இதைச் சொல்கிறேன், வாசிப்பு ஒருவகை மோஸ்தராகிப்போன காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். முன்னெப்போதையும் விட கூட்டங்கள் அதிகமாக நடத்தப்படுகின்றன. நிறைய வாசிக்கிறார்கள். ஆனால் அவற்றுள் தரமானவற்றைத் தேடிக் கண்டடையும் வாசகர்கள் உண்மையில் எத்தனை பேர்? தேடல் என்பது அரிதாகி விட்ட சூழலில் அமர்ந்திருக்கும் இடத்தில் கிடைப்பதை வாசித்து விட்டு பெரிதாகப் பேசும் மக்களுக்கிடையேதான் ஒருவன் இன்னும் தீவிரமாக எழுத வேண்டியிருக்கிறது.

இறுதியாக எதற்காக எழுதுகிறேன் என்றொரு வினா எழுப்பினால் என்ன சொல்வீர்கள்

எழுத்து எனக்கான போதை. ஒரே போதை.

One comment

  1. வெகுநாட்களுக்குப் பிறகு நேரில் உரையாடிய நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. அருமை.

Leave a reply to சித்திரவீதிக்காரன் Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.