இன்றைய நாளின் பேரதிசயம்- காஸ்மிக் தூசி கவிதை

காஸ்மிக் தூசி

 

இன்று காலை
அலுவலகத்துக்குச் செல்லும் வழியில்
ஒரு பேரதிசயம்.

அது என்ன என்று
என்னால் விளக்கமாகச் சொல்ல இயலாது
அதை நான் ஏன் கண்டேன்,
அதை ஏன் அதிசயம் என்கிறேன்,
அதற்கான வாய்ப்பு
எப்படி ஏற்பட்டது எனக்கு,
இவை எதுவுமே பொருட்டல்ல

ஒரு இமைப்பொழுதில்
எங்கிருந்தோ வந்து
கண்முன் பெருகி நிறைந்து விட்ட
கடல் போல,
ஒரு சிறு மணிக்கூறு
படபடத்து நின்றிருந்தது வானம்.
என் கைகளில்

அதன் உடலில்
சிக்கியிருந்த முள்புதரை
விலக்கி எடுத்தபின்,
என்னைக் கூர்ந்துநோக்கி,
புராண உலகிலிருந்து
தோன்றிய தூதனைப் போல
என் உள்ளங்கையில் வீற்றிருந்தது

கிடைத்தற்கரிய கொடுப்பினை ஒன்று
சிறு பனிக்கட்டியைப் போல
உறைந்திருந்தது
என் கைகளில்.

அந்த அதிசயத்தை
என் கண்களால் அருந்தினேன்
கைகளால் ஏந்தி
விரல்களால் நுகர்ந்தேன்

பிறகு,
ஒரு நொடிப்பொழுதில்
திடீரென வெடித்துக் கிளம்பியது
அதன் சிறகுகளில்
சிக்கியிருந்த வானம்.

அதோ,
என் பிடியை விட்டு
பறந்து சென்று மறைந்தது
பெயர் தெரியாத
ஒரு பறவை.

2 comments

  1. கடைசி வரியை வாசிக்கும் வரை சிட்டு என்று நினைத்திருந்தேன்.இனிய கவிதை

  2. எதையும் கவி உள்ளம்
    தொட்டணைக்கும் போது
    உயிர் பெற்று உறவாடும் அதிசயம்
    நிகழும்
    அத்தகைய ஒன்று இக்கவிதை.

Leave a reply to Kamaladevi Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.