சரவணன் அபி கவிதைகள்: நிகழும், பம்பை, காலடி

 சரவணன் அபி

நிகழும்
நதி – 1: பம்பை
நதி 2: காலடி

நிகழும்

கருந்திரை கீழிறங்கியது
கண்முன் இருண்டு மறைந்தது ஒளி
சூழ நின்ற
மலையடுக்குகளுக்கிடையே
அலையென மிதந்து வரும்
மென்னீரக் காற்று
கமழும் உன் தோள் வாசம்

எப்போதோ முகர்ந்தது
இன்னும் புலன்களில்
அழியா தடம்
இப்போதும்
முகர்ந்துகொள்ளும் அண்மையில்

விருப்பங்களின் சின்னமென
இடையில் எரியும் கணப்பு
வழியும் ஹரிப்ரஸாதின் குழலிசை
சகியொருத்தி சொன்னது
‘ஒரு குழல்,
ஒரு முணுமுணுப்பு,
ஒரு பெருமூச்சு,
ஒரு முனகல்,
ஒரு மெல்லிய அழுகை,
ஒரு தேன்சிட்டின் சிறகசைவு,
சுவாசம்,
தென்றல்,
மரங்களின் உயிர்ப்பு,
இடையோடும் நிசப்தம்,
சொற்களேதுமற்ற இந்நிலை…’

அநித்யங்களின் காதல்
வலியது

—-

நதி – 1: பம்பை

சாகச பயணம்போலும்
தலையில் கட்டோடும்
இடைநழுவும் முண்டோடும்
நகர்நீங்கி நான்காம்நாள்

கருமையும் பச்சையும் நீலமும்
கலந்தடர்ந்த கானகம்
புள்ளினங்களும் இயம்பா
புலரிளங்காலை

துயிலெழுப்பி விரிநீங்கி
தந்தையின் தோளமர்ந்து
மென்சருகென மினுங்கும்
பம்பையின் கரையோரம்

தோளிறக்கி துண்டுரித்து
அடற்கருமையில் அசைவின்றி
நெளியும் நீரோரம் அமர்த்தி
நிகழ்வதென்ன அறியாதவன்

பனிக்குளிர்நீரில் முதல்முழுக்கு
ஆயிரம் ஊசிகள் ஓராயிரம் துளைகள்
விறைத்துநின்ற சிறுஉடல்
சினம்கண்டு சிரித்த தகப்பன்

—-

நதி 2: காலடி

பற்பல நாட்களில்
பேசிய முதல் வார்த்தை
அங்காமலி சங்கரன் அம்பலம்

துகிலோடு நாணமும் களைந்து
பெரியாறின் படிகளிலிறங்கி
எதிர்கரை காணா
இருளும் தொலைவும்
நினைவில்லாது
மயக்கம்போலும் ஓருணர்வில்
முதலடி ஈரடி
பனிக்குட வெம்மைக்குள்

நாசியின்கீழ் உடலம்தழுவி
நகர்ந்த நீர் பொழிந்ததெங்கு
வழிந்ததென்று
புதைந்தமர்ந்திருந்தது
எத்தனைக் காலம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.