இன்றைய பொழுதின்
அந்திக்கருக்கலுக்கு முன்னதாக
எழுந்து கொண்டு
உன் நாமத்தை
ஆயிரம் முறை உச்சரித்து
மூச்சுப்பயிற்சியை முடிக்கும்போது,
சற்று தாமதமாய்
விழித்துக்கொள்ளும் கடிகாரம்
உன் பெயரை
பாராயணம் சொல்ல
ஆரம்பிக்கிறது.
வீட்டுடை விட்டு படியிறங்கி
தெருவில் வரும்போது
பெயர் தெரியாத பறவை ஒன்று
உன் பெயர் சொல்லிக் கூவியபடி
வானத்தின் குறுக்கே
கடந்து செல்கிறது.
ஆற்றங்கரையை அடைந்து
படித்துறையில் இறங்கி
கால் வைக்கும்போது
அலையடித்து ததும்பி
பாதம் நனைக்கிறது,
பெருகி நிறையும்
கருணையின் பெருக்கு.
உன் பெண்மையை
நினைத்துக்கொண்டு
நீருக்குள் முங்கி எழுகையில்,
உன் நாமத்தை ஜெபித்தபடி
சலசலத்து செல்கிறது
ஆற்றின் ஒழுக்கு.
உன் நினைவுகளுள்
கரைந்து அமிழ்ந்து
குளித்துக் கரையேறி
துவட்டிக்கொண்டு
நிமிரும்போது
மேனியெங்கும்
சில்லென்னப் படிகிறது
வெறி கொண்ட
உன் உன்மத்தம்
நீ வாழும் அதே கோளத்தில்
நானும் வாழக்கிடைத்த
கொடையில் நெகிழ்ந்து
விழி துளிர்க்கையில்,
உன் காதலுடன்
ஒப்பிடத்தக்க பொருள் ஒன்று
நெருப்பு பந்தாகி
அடிவானத்தின் கீழ்
எழும்பி வருகிறது.
இதோ,
உன் நினைவின்
ஒட்டுமொத்தத்தையும் சான்றாக்கி
உருவாக ஆரம்பிக்கிறது,
இன்னுமொரு நாள்.
அருமையான கவிதை. எதிர்பார்த்த திசையில் சென்றாலும் இறுதியில் எதிர்பார்த்திருக்க முடியாத, ஆனால் கவிதையின் ஆதார காட்சியை துல்லியமாக விவரித்து நிறைவடைகிறது கவிதை.
அருமை