உதிரக் கணு – பானுமதி சிறுகதை

அலுவலகப் பேருந்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து விரையும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென வானில் திரளும் மேகக் கூட்டங்களைப் பார்த்தாள். ஆழியில் புகுந்து விண்ணில் ஏறி வெண்மையை கருக்கொண்டு நிறம் மாற்றி குவிந்து இதோ பெய்துவிடுவேன் என்று முழங்கும் மேகங்கள்.அதில் ஆழ்ந்திருக்கையிலே செல்பேசி ஒலித்தது.’சென்னைக் காவல் துறை’ என்றது எண். அவள் ஏதோ சரியில்லை என்று உணர்ந்தாள். கை நடுங்கியது. ’ தியாகுவிற்கு விபத்து; ஆனால், பயப்படும்படி ஏதுமில்லை,உடனே, புறப்பட்டு அரசாங்க மருத்துவமனைக்கு வரவும் ’ என்று காவல் துறையிலிருந்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட குரல் சொன்னது. கூடவே அவனது புகைப்படமும் காணப்பட்டது.அவள் ஒரு கணம் செயலற்றுப் போனாள்;’ வாணி நீ கோழையில்லை,தைரியமாக இரு’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். சொந்தங்கள் யாருக்கும் சொல்ல வழியில்லை. கூடப் பயணம் செய்த நண்பர் வரதன் உடன் வந்தார். ’தியாகுவிற்கு இரத்தம் ஏற்ற வேண்டும், உயிருக்கோ, உறுப்புகளுக்கோ கவலை வேண்டாம்’ என்ற மருத்துவர் ஏனோ அவளை இரக்கத்துடன் பார்த்தார்.

ஆஸ்பத்திரி, ஆஃபீஸ்,வீடு என்று ஒரு மாதம் ஓயாமல் அலைந்தாள். அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மருத்துவர் மற்றும் காவல் துறையின் அனுமதியோடு மாற்றினாள்.தியாகுவை வீட்டிற்க்கு அழைத்துச் செல்லலாம் என்ற மருத்துவர் ’வாணி,உங்களிடம் பேச வேண்டும், இரகசியமானது ’ என்றார்.

பதட்டத்துடன் பார்த்த வாணியை ’ ரிலாக்ஸ் ப்ளீஸ்; இந்த ஒரு மாத காலமாக உறவென்று யாரும் தியாகுவைப் பார்க்க வரவில்லை. வயதான அல்லது சமவயதுள்ள நெருங்கிய சொந்தங்கள் இருக்கிறார்களா? ’

அவள் இல்லையென்று தலையசைத்தாள்.

‘ உங்களுக்குத் திருமணமாகி எவ்வளவு வருடங்கள் ஆகின்றன? ’

“ ஆறு வருடங்கள், சார் ” என்றாள் அவள்.

‘ உங்கள் உறவு, ஐ மீன், உங்களுக்குப் புரியும், சரியாகத்தானே இருக்கிறது. ‘

அவள் சங்கடப்பட்டுக்கொண்டே தலையசைத்தாள்.

‘ நான் உங்களிடம் சொல்லியாக வேண்டும். அவர் ஹெச் ஐ வி பாசிடிவ். நல்ல வேளையாக அது உங்களுக்குத் தொற்றவில்லை அல்லது நோய் எதிர்க்கும் ஆற்றல் உங்கள் செல்களுக்கு இருக்கிறது ’ என்றார் மருத்துவர் ப்ரமீள்.

தேவையற்றபோதே தனக்கு ஏன் இவர்கள் இரத்தப் பரிசோதனை செய்தார்கள் என்று அவளுக்கு விளங்கியது. ஆனால், தியாகுவைப் பற்றி…இல்லை, இல்லை பொய், அப்படியெல்லாமிருக்காது.

“ இல்லை, இது உண்மையில்லை, யு மஸ்ட் செக் யுவர் ரெகார்ட்ஸ் ”

‘ ஐ அண்டர்ஸ்டேன்ட், வாணி.நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நான் சொல்வது புரிகிறதல்லவா? அவர் உடல் நிலை தேறட்டும். பக்குவமாக நான் அவரிடம் பின்பு சொல்கிறேன். அதற்குமே அவர் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பயப்படாதீர்கள். குணப்படுத்திவிடலாம். ’

தான் உணர்வோடுதான் இருக்கிறோமா எனக் குழம்பினாள் அவள்.எத்தனை இடிகளை இன்னமும் தாங்கவேண்டும்?யாருடைய சாபம் பலிக்கிறது இப்போது? தியாகுவை வளர்த்த அவனுடைய அக்கா விட்ட சாபமா? ” டேய், உனக்காக கல்யாணமில்லாம நிக்கறேன்;நீ துணைய தேடிட்டேன்னு எங்கிட்டயே சொல்ற. நீ நடுவுல பேசாத.அக்காவுக்கும், தம்பிக்கும் நடுவுல வந்துட்ட, பேச உனக்கு வெக்கமாயில்ல? டேய், நீ வீட்ட விட்டுப் போயிடு.நா ஆத்ம புண்டம் போட்டுண்டு அனாதையாப் போறேன்.” என்று அவனுடைய அக்கா அன்று அழுகையும் கூக்குரலுமாகக் கத்தினாள்.

“ அக்கா, இப்டியெல்லாம் சொல்லாத.நான் உன்ன விட்டுடுவேணா ?’

‘ விடமாட்டேன்னா, அவள விட்றா ‘

” அக்கா, அவள எங்க போகச் சொல்ல? அம்மா அப்பாவ பிரிஞ்சு வந்த்ருக்கா, பாவம்க்கா “

‘ அப்ப அவளோட குடுத்தனம் நடத்து. என்ன மறந்துடு ‘

“அக்கா, நாங்க உன்னோடவேதான் இருப்போம்,தனியா போமாட்டோம் “

‘ அதெல்லாம் நடக்காதுடா. எனக்குன்னு எப்ப இல்லயோ அப்றம் என்னடா? ’

“ உன்னோட மட்டுமே இருக்கணுமா? “

‘ ச்சீ வாயக் கழுவு.புழு மாரி துடிக்கப் போறடா. நான் பாத்து கல்யாணம் செய்யணும்னு நெனைச்சேனே, என்னச் சொல்லணும். ’

ஹெச் ஐ வி அப்படித்தான் துடிக்க வைக்குமோ?

வாணியின் பெற்றோர்களும் சளைத்தவர்களில்லை. “பருப்பு சோறுக்கும்,பாட்டுக்கும், வெள்ளத் தோலுக்கும் வீங்கிப் போற.அவன் சீக்கு கோளி போல இருக்கான், அவன போயி புடிச்சாந்த பாரு. போ, போ, கவுண்டரு யாருக்கும் பணிஞ்சதில்ல. ஊருல எம் புள்ளயப் பாருங்கடா என்னா அமிசமின்னு பெரும பேசினவன் நானு;நல்லா மானம் காத்திட்ட அம்மணி, போயிடு இல்ல காட்ல பொதச்சுடுவேன்; இன்னமும் இங்க நின்னியானா கேணியில முங்கிடுவேன் கவுண்டச்சியோட. வராத இனிமே, வத படவ.உன் வமிசம் விளங்காது. ”

எல்லாவற்றுக்கும் மேலாக ஆத்தா இறந்த போது இவர்களாகக் கேள்விப்பட்டு வெள்ளங்கிணறு ஓடினார்கள்.இவர்கள் வண்டியிலிருந்து இறங்கையிலேயே நடு வாசலுக்கு ஓடி வந்து மண்ணை அள்ளித் தூற்றினார்.’ஆத்தா முகத்தப் பாத்துட்டு போயிடறம்ப்பா, ப்ளீஸ்ப்பா’ என்று கதறியவளை எரிப்பது போல் பார்த்தார்.” எண்ணக் குளி போட்டு ப்ரேதம் ஆனதெல்லாம் குடிலுக்கு வரலாமா?கவுண்டச்சி லச்சுமி கணக்கா தூங்கறா, இந்தப் பீ நாறி முண்ட அவளப் பாத்தா கெதி கெடைக்குமா அவளுக்கு? அவளப் பாடையில தூக்கணும்னா இவ அவளப் பாக்கக் கூடாது.இவ மீறி வந்தா பொணம் வெளிய போவாது “ ஊரின் பரிந்துரைகள் ஏதும் அவர் கேட்கவில்லை; தியாகு அவரின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனான். ஒரு குழந்தையைப் போல் அள்ளி அவளைக் காரில் ஏற்றினான்.

ஆறு வருடங்கள் நலமாக இல்லையா என்ன? குழந்தை இன்னமும் இல்லை என்ற குறை தவிர.’ ஐயோ , நாள் தவறிவிட்டதோ? இந்த நேரமா இது நினைவில் வர வேண்டும்? ’

வாணி ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருப்பது தியாகுவிற்கு என்னவோ போலிருந்தது. “ அவள் கொஞ்சமாகவா அலைந்திருக்கிறாள், பாவம், அயர்வாக இருக்கும் ” என்று அவள் தோளைத் தொட்டான் ஆறுதலாக. அவள் சுருங்கி நகர்ந்தது வேதனையாக இருந்தது. அந்த விபத்திற்காகவா இப்படி ஒதுக்குகிறாள்? அதில் தன் ஆண்மை போய்விட்டதா என்ன? காம ஆடுதல்களில் அவளுக்கு அதிக விருப்பம். அவளின் வேகமும், கூடலும் அவனுக்கு இன்ப அதிர்ச்சிதான். அப்படிப்பட்டவள் சாதாரண தொடுகைக்கு விதிர்க்கிறாள். அவன் யோசனையாக ஏறிட்ட போது செயற்கையாகச் சிரித்தாள்.

‘ எப்பொழுது இவன் தவறு செய்திருப்பான்? அவன் உடல் எடை குறைந்து வந்த போதே பார்த்திருக்க வேண்டுமா? அதை ‘ஹெல்த்’ என்றுதானே அவன் பெருமைப்பட்டான்? பதினைந்து நாட்கள் நாசிக் போன போதா, அறிந்த தவறா, அறியாத தவறா? ஏன் இதுவரை இது தெரியவில்லை?முன்னர் தெரிந்திருந்தால் அவனை விட்டுப் போயிருப்பேனா, இன்று அவன் விபத்துக்குள்ளாகி, இரத்தம் இழந்து, முகம் வெளுத்து நிற்பதால் பரிதாபப்பட்டு இருக்கிறேனா? அப்போ, காதல் என்பது பொய்யா? இல்லையென்றால் அவன் வெறுமே தொட்டால் கூட ஏன் சுருங்கிக் கொள்கிறேன்? அவன் அறியாது இந்தத் தவறு நடந்திருந்தால் அவனை மன்னிக்க முடியாதா? மனம் ஏன் இத்தனை கடினமாக இருக்கிறது? எந்தப் புள்ளியில் அன்பு வெறுப்பாகிறது? இப்பொழுதுதான் கருக்கொண்ட பிள்ளையைப் பற்றிய கவலை, இவ்வளவு நாட்கள் கூட வாழ்ந்த மனிதனிடம் எனக்கு இல்லாமல் போய்விட்டதா? எத்தனை நாட்கள் இந்த நிலையை மறைக்க முடியும்? தெறிக்கும் கிண்டல்களுக்கும் பார்க்கும் பார்வைகளுக்கும் மீறி சிரிக்க முடியும்? வீட்டுக்காரர் போகச் சொல்லிவிடுவாரோ? அலுவலகத்தில் அவனுக்கு வேலை தொடராதோ? தன்னையும் விலக்கிவிடுவார்களோ?’

தான் இருளில் அமர்ந்திருப்பது கூட அவளுக்குத் தெரியவில்லை.அவனைப் பார்க்கையில் வரும் அழுகைக்கும், விலக்கத்திற்கும் காரணம் தெரியவில்லை.முப்பது நாட்கள் தாண்டிவிட்ட கவலை வேறு அவளைத் தின்றது. ‘அது எப்படிப் பிறக்கும், நோயுடனா, பழியைச் சுமந்து கொண்டா, பிறப்பிலிருந்தே அதை ஒதுக்கிவிடுவார்களே இந்த சமூகத்தில்?அதை இல்லாமலே செய்துவிட்டால் என்ன? தியாகுவை மருத்துவமனையில் சேர்த்துவிடலாம்;கருக்கலைப்பு செய்துவிடலாம். ‘

‘ த்யாகு,உன்னிடம் பேச வேண்டும். ‘

அவனுக்கு அதுவே மகிழ்ச்சியாக இருந்தது. அவளின் கைகளை எடுத்து மடிமேல் வைத்துக் கொண்டான். அவள் கைகளை விரைவாக இழுத்துக்கொண்டது அவனைக் காயப்படுத்தியது. புருவ நெரிப்பிலேயே என்ன என்று கேட்டான்.

‘ த்யாகு, டாக்டரே சொல்லட்டுமேன்னு நெனைச்சேன். ஆனா, இப்ப நான் கர்ப்பமா இருக்கறதால ..’

அவன் முகம் பரவசத்தில் விரிந்தது. ஏதோ சொல்ல வந்தவன் வார்த்தைகள் வராமல் தவித்தான்.

‘த்யாகு,அந்த கருவ கலைக்கணும்.அதுக்கு உன் கன்சென்ட் கேப்பாங்க.’

“ என்னது, என்ன ஆச்சு உனக்கு, ? நம்மால குழந்தையை வளக்க முடியாதுன்னு பயப்படறியா? எனக்கு நடந்தது ஆக்ஸிடென்ட் தான், சாவு இல்ல “

‘ த்யாகு,சாவு வந்துட்ருக்கு, உன்னால நம்ம குழந்தைக்கு ’

“ என்ன உளறிண்டே போற “

‘ நீ ஒழுங்கா இருந்தா நா ஏன் இப்படிப் பேசணும் ? ‘

“என்னடி, எகிறிண்டே போற. என்ன கெட்டுப் போச்சு எங்கிட்ட.’

‘ நீ தான், மொத்தமா நீ தான் கெட்டுப் போயிருக்க. நீ ஹெச் ஐ வி பாசிடிவ்ன்னு கான்ஃபிடென்ஷியல் ரிப்போட் இருக்கு, காட்டவா? ’

இதைக் கேட்டு அவன் முதலில் சிரித்தான்;அவளைக் கொன்று விடவேண்டும் போலிருந்தது. அவள் கண்ணீருடன் கை நடுங்க அந்தப் பரிசோதனை முடிவைக் காட்டியவுடன் அவன் சோர்ந்து அழுதான். சுவறில் மாட்டியிருந்த காலண்டர் ஆறு நாட்களுக்குப் பின் வரும் தேதியைக் காட்டிக் கொண்டிருந்தது. ஆம், இன்று காலை அவன் தேதியைக் கிழித்த போது ஒட்டிக்கொண்டு பல தாள்கள் கிழிந்தன. பிறப்பதற்கு முன்னரே இறந்த நாட்கள். உருக்கொள்ளத் தொடங்கும் போதே அழியப் போகும் உயிர்; அதற்கு அவன் காரணம்.

அவளை பயந்து கொண்டே ஏறிட்டுப் பார்த்தான்.’ எனக்குத் தொற்றில்லை; கருவுக்கு தொற்றியிருக்கலாம், அழிக்கறதுதான் வழி, ப்ரமீளைப் பாப்போம் ‘

தியாகு தவித்தான்.எங்கு, எப்படி தவறு நடந்திருக்கக் கூடுமென்பது அவனுக்குப் புரியவில்லை. ‘ வேணுவின் பேச்சிலர் பார்ட்டி ஆறு மாதங்கள் முன் நடந்ததே அப்போதா ,முன்னர் ஒருமுறை தவறான போதையில் மாட்டிக்கொண்ட போதா எப்போது தன்னைத் தான் இழந்தோம், சுவடே இல்லாமல். தன்னை பீடத்திலிருந்து எட்டி உதைத்துத் தூளாக்கும் அவளின் வெறி பயமுறுத்தியது. ஒரு விபத்தின் தொடர்ச்சியாக எத்தனை விபத்துக்கள்? எனக்கு ஹெச் ஐ வி யா, என் குழந்தை அதனால் பாதிக்கப்படுமா,வாணி ஏன் பிடிவாதமாக கலைக்கப் பார்க்கிறாள்? என்னை விட்டுப் பிரிந்துவிடுவாளோ?ஒரு உயிரை அழிக்க அவள் எப்படி துணிகிறாள்? இல்லை, நான் டாக்டரிடம் பேசத்தான் போகிறேன் .’

அவளை இரு நாட்களில் மீண்டும் மருத்துவமனையில் பார்த்த மருத்துவர் முதலில் வியந்தார்.”மருத்துவம் மிக முன்னேறியுள்ளது. அவரை குணப்படுத்திவிடலாம் அதுதான் அன்றே சொன்னேனே, ஒரு வாரம் போகட்டும்.” என்றார்

அவள் கருவுற்றிருப்பதும், குழந்தைக்கும் தொற்று வரும் எனப் பயப்படுவதும், அதை கலைக்கும் முனைப்போடு அவள் வந்திருப்பதும் , அவர்களுக்கு இது முதல் குழந்தை என்பதும் அவரை சிந்திக்க வைத்தன.

‘கருவிற்கும் இதற்கான மருந்து உண்டு. அதில் அது கர்ப்பத்திலியே குணமாகிவிடும்.இல்லையெனில் பிறந்தவுடன் சரி செய்ய முடியும். ஆனாலும்,நீங்கள் பயப்படுவதால் ஒரு வழி சொல்கிறேன்.நீங்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர் திருமதி. நிர்மலா குணசேகரைப் பாருங்கள்” என்றார்.

நிர்மலா வாணியைப் பார்த்து அன்புடன் சிரித்தார். அவர்களைப் பற்றி, படிப்பு, தொழில்,குடும்பம் எல்லாவற்றையும் கேட்டார். இரகசியங்களைக் காப்பாற்றுவீர்களா என்று அவர் கேட்ட போது வாணிக்கு அழுகை வந்தது;’ அதற்காகத்தானே வந்திருக்கிறேன். கருவை கலைத்துவிடுங்கள்.தியாகு சம்மதிப்பார் .’ என்றாள்.

மருத்துவரும் கருக்கலைப்பு வேண்டாம் என்றவுடன் தியாகுவிற்கு தன்னுடைய இழினிலை கூட மறந்து சிரிப்பு வந்தது. சொல்வதை கவனமாகக் கேளுங்கள் என்ற மருத்துவர் ‘வாணி, நீங்கள் ஒரு மாதம் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.உங்கள் கருவை வெளியிலெடுத்து…’

“என்ன சொல்கிறீர்கள், மேம்? “

‘’எதுக்கு இத்தனை பதட்டம்? அமைதியாகக் கேளுங்கள். உங்களுக்கு குழந்தை வேண்டாம், தியாகுவிற்கு வேண்டும். உங்கள் வயதை வைத்துப் பார்க்கையில் தியாகு சொல்வது சரி “

‘மேம்,கருவை வெளியிலெடுத்து என்கிறீர்களே?’

‘நான் தானே எடுப்பேன், அழித்துவிடுவேனா? ‘

“ அப்படின்னா? ”

‘ கருவறைச் சூழலை லேப்ல அமைச்சிருக்கோம். உங்க கரு அதுல ஒரு வாரம் இருக்கும். அப்புறம் உங்க கருவறைக்கு வந்துடும் ’

“ மேம்,மாயாஜாலம் மாரி சொல்றீங்க ”

‘ இது ஜாலமில்ல, சைன்ஸ் ’

“ புரியல்ல மேம் ”

‘ சிம்பிள்.ஹெச் ஐ வி தொற்ற வாங்கிண்டு நல்ல செல்களையும் அதப் போல மாத்தி நோய அதிகரிக்கற’ சி சி ஆர் 5 ’ என்ற மாலிக்யூல உங்க குழந்தையிடமிருந்து ‘க்ரிஸ்பர் ‘ டெக்னாலஜி மூலம் நீக்கிடுவோம் சுருக்கமா இது ஜீன் எடிடிங்.’

“ அப்ப, என் கருவுக்கு எந்தக் காலத்திலும் இந்த நோய் வராதா? ”

‘ உங்க குழந்த அந்தத் தொற்றில்லாம பொறக்கும்;அப்படியேதான் வளரும். ‘

தியாகு கேட்டான், “டாக்டர், பொறந்த பிறகு செய்ய முடியாதா? ப்ரமீள் முடியும்னு சொன்னாரே? “

‘ மொளையிலேயே கிள்றதுன்னு கேள்விப்பட்டதில்லையா? நீங்க, சாரி, கவனமா இருந்திருந்தா இதுக்கே தேவயில்லயே ‘

அவன் எது சொன்னாலும் நுட்பமாகவாவது அவமானப்படுத்துவார்கள் என்று உணர்ந்தான்.

” கருவை வெளியே எடுக்கறப்போ செதைந்துடுத்துன்னா ’ சாரி ‘ என்று சினிமாவைப் போல் சொல்லிடுவா ” என்றான் அவன்.

‘ சரி, பொறந்தப்றம் குழந்தையால ட்ரீட்மென்ட்டை தாங்கமுடியலன்னா என்ன செய்வ? ‘என்றாள் அவள்

“ அது முழுசா வெளில வரட்டுமே ,அப்பப் பாத்துக்கலாமே. “

‘ என்னால முடியாது, புரிஞ்சுக்க, அத சுமக்கறத நெனைச்சாலே குமட்டுது ‘

“ சரியாயிடும் வாணி. நாம ப்ரமீள பாப்போமே “

‘ அவசியம் பாப்போம், ஆனா, உனக்கான ட்ரீட்மென்டுக்காக மட்டும் ‘

“ சொல்றதக் கேளு,வாணி. டாக்டர் நிர்மலாவோட மெத்தேட எம் மனசு ஒத்துக்கல “

‘அப்ப ஒரு வழி தான் இருக்கு. நாம விவாகரத்து செஞ்சுக்கலாம். என்ன நம்ம கத கந்தலாகும். உங்க அக்காவும், என்ற ஐயனும் கை கொட்டி சிரிப்பாங்க.நம்மல வேலய விட்டுக் கூட நீக்குவாங்க. நல்லது, பொல்லாததுக்கெல்லாம் நம்மள மட்டுமில்ல, பொறக்கப் போற புள்ளயையும் சேர்த்துத்தான் விலக்குவாங்க ‘

“ இல்ல வாணி, நீ அதீதமா கவலப்படற. இது வெளயாட்டில்ல. ஒரு மாரி நிழலாஸ்பத்ரின்னு தோணுது. நம்ம கேசு அவங்களுக்கு ஒரு பரிசோதன. நாம இதுல மாட்டிக்க வேணாம். உன் உயிருக்குக் கூட ஆபத்து வரலாம் “

‘ நல்லதாப் போச்சு. எனக்கு அவமானம் மிச்சம்.’

“ என்ன அவமானம்,அவமானம்னுட்டு. எனக்கே தெரியலன்றேன்.சும்மா பேசிண்டே போற “

‘ நான் வழி தவறலேன்னு உன்னால சொல்ல முடியல இல்ல, அப்றமென்ன வெட்டி கௌரவம். விட்டுடு என் வழில. ஆனா, ப்ரமீளப் பாக்கலாம் உனக்கும் வ்யாதி போகணுமில்ல’

‘ இது சரியில்லை. ஜீன் எடிடிங் அது இதற்கெல்லாம் இப்போ தேவையில்லை.ஆர் என் ஏ காப்பி செய்து பெருக்கிவிடும் அத்தனை சி சி ஆர் 5 மாலிக்யூலையும் ‘க்ரிஸ்பர்’ அழித்துவிடும் எனச் சொல்ல முடியாது. ஒருக்கால் தொற்று ஏற்படாத நிலையில் இந்த சி சி ஆர் 5 ஐ அழிப்பது சிறு ‘ஃப்ளூவைக்’ கூட குழந்தை தாங்க முடியாமல் மரணம் வரை கொண்டு போகலாம் .’ என்றார் டாக்டர்.

“ சார், நீங்கதானே நிர்மலாவ பாக்கச் சொன்னீங்க;இப்ப வேணாம்ன்னா எப்படி?”

‘ மிஸஸ். வாணி.கருவுல தொற்று இருக்கான்னு அவங்க பாப்பாங்கன்னு அனுப்பிச்சேன்.அதை ஊசி மூலமாகக் கூட சரி செய்யாலம்னு சொன்னேன்.அந்த ஸ்டேஜ் தாண்டிடுத்தாம்; சரி, பொறந்த பிறகு சரி பண்ணுங்கன்னு சொன்னா, அவங்க புதுசா இப்படிச் செய்றாங்க. இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு? நீங்க தான் முடிவெடுக்கணும் ‘

“டாக்டர் நீங்களே செஞ்சுடுங்களேன், கருவ வெளியில எடுக்காம’ என்றான் தியாகு

“சாரி, தியாகு, எனக்கு அதுல அனுபவம் இல்ல”

“அதை அழிக்க நெனைச்சேன்.அதுக்கு நீங்க யாரும் சம்மதிக்கல.அதை உள்ள வச்சிருக்கறதே என்னக் கொன்னுடும். நான் டாக்டர் நிர்மலாவை நம்பறேன். என்னை மாத்தப் பாக்காதீங்க. “

One comment

  1. முடிவை யூகத்துக்கு விட்டிருக்கார் கதாசிரியர். ஆனால் கதையைப் படிக்கையில் தம்பதிகள் மேல் பரிதாபம் வருவது தவிர்க்க முடியலை! இன்னொரு பெண் உறவில்லாமல் கூட எச் ஐவி வரும் என்பது வாணிக்குத் தெரியாமல் போயிற்று. என்றாலும் இதை அவரவர் நிலைமையில் வைத்துத் தான் பார்க்க வேண்டும். மிகக் கடுமையான விஷப் பரிக்ஷை! வாணி நல்லபடி குழந்தையைப் பெற்றெடுக்கப் பிரார்த்தனைகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.