குன்றத்தின் முழுநிலா – கமலதேவி சிறுகதை

மூவேந்தரின் எரி நின்ற பறம்பு மலையை சூழ்ந்து சாம்பல் புகை பறந்து கொண்டிருந்த அந்தி மறைந்து இருள் எழுந்திருந்தது.அவர்கள் நிலவுதித்து ஔி சூழ்ந்திருந்த வெளியில் சென்று நின்றார்கள். சிறுகாட்டிலிருந்து நிமிர்ந்து நோக்குகையில் தொலைவில் என்றாலும், பறம்பு இங்கு இதோ நான்கடிகளில் என்றே அவர்களுக்குத் தோன்றியது.

பரந்து கைவிரித்திருந்த கரும்பாறையில் அமர்ந்த கபிலர், “இன்றிரவு இங்கு துயின்று கருக்கலில் செல்லலாம்,”என்று கால்களை நீட்டிக் கொண்டார்.

அங்கவையும் சங்கவையும் ஒன்றும் நவிலாமல் பாறையில் அமர்ந்து கொண்டனர்.இலைகள் குறைந்த கிளைகளுக்கு இடையில் நிலவொளி மேலும் தெளிவு கொண்டது.

ஒருத்தி,“பறம்பின் தொலைதூர தோற்றம்,” என்றாள்.

மற்றவள் பாறையைத் தடவி, “ஆம்,” என்றாள்.

கபிலரின் துவண்ட முகத்தில் மென்நகை மலர்ந்து சுருங்கியது. எங்கு சென்று இந்த மகள்களை சேர்ப்பிப்பேன். உன் மகள்கள் என்று ஒப்படைத்துவிட்டான். என் செய்வேன்? என்று தன்னுள் தன்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.

வேங்கைமரத்தின் பாலை தென்னம் ஓட்டில் ஊற்றி ஆதவன் சூட்டில் காய்த்தெடுத்த நெற்றிப்பொட்டின் மேல்பரப்பென, நிலவொளியில் அவர்கள் முகம் ஔிர்ந்தது. சோகத்தால் அழுந்திய சோபை. மூன்று மின்மினிகள் சேர்ந்தமர்ந்த இரு நாசிகள் நிலவொளியில் மேலும் ஔிகொண்டன.

சங்கவை கைமூட்டையிலிருந்து அவலை எடுத்தாள். சுரைக்குடுக்கை நீரால் அவலை நனைத்து சிறுமூட்டையாகக் கட்டிவைத்தாள். சுரைக்குடுக்கையுடன் கபிலர் நீருக்காக எழுந்து சென்றார்.

அங்கவையும் சங்கவையும் ஒருவரை ஒருவர் முகம்பார்த்து அமர்ந்திருந்தார்கள். சிறுபொழுதிற்குப் பின் அறியாத உணர்வால் வேறுபுறம் நோக்கி உரையாடத்தொடங்கினார்கள். சிலசருகுகள் காற்றுக்கு தங்களைக் கொடுக்காமல் பாறைகளின் சந்துகளில், அடிமர வளைவுகளிலும் அடைந்தும் காற்றின் விசையால் அதே இடத்தில் துடித்துக்கொண்டிருந்தன.

நம்மிடம் அவலைத் தவிர ஒன்றுமில்லை”

அறிந்தது தானே”

உணர்ந்து நினைத்தால் உள்ளே ஆழத்தில் வேல்முனை தைத்து அசைகிறது”

பேடிக்கிறாயா?”

உனகில்லையா?”

அனைத்துமிழந்தப்பின் என்ன?”

அதற்காக உன்னை மாய்த்துக்கொண்டாயா?”

ஏன் மாய்த்துக்கொள்ள வேண்டும்?”

தானிருக்கையில், தன் பசியிருக்கையில், தன் உணர்விருக்கையில், மனமிருக்கையில், பெண் என்னும் உணர்விருக்கையில், அனைத்திற்கும் மேலென சூழ்ச்சி வீழ்த்திய காயமிருக்கையில் அனைத்துமிழந்தவளாவாயா?”

புறத்தில் நான் என்பதன் அடையாளம் அழிந்து சிலபொழுதாகிறது. அகத்தில் நான் என்பதன் குழப்பம்”

உடல்களை நனைத்திருந்த வியர்வை ஈரத்தை காற்று எடுத்துக்கொண்டது. மெல்ல அதை உணர்ந்த அவர்கள் எழுந்து நின்றார்கள்.

நாளை நாமிருவரும் ஒன்றாக இருப்போமா?”

“…..”

கையில் கடிவாளமில்லாத பொழுதில்போக்கை எண்ணி ஆவது என்ன?”

நாமிருவரும் தனித்துவிடப்படலாம் என்று எண்ணி தானோடி தாதை இத்தனையும் கற்பித்தார்”

கற்பது என்பது இந்தப் பாரினில் மரணத்தில், இழப்பில் உதவக்கூடுமா?”

தெளிவில்லை. என்றாலும் இங்கமர்ந்து சிதறாமல் எண்ணியிருக்க அதுவே கைப்பிடித்திருக்கிறது”

படைத்தலைவன் நன்னன் குறித்து…”

மாண்டிருக்கக்கூடும்”

அவனை ஏன் நீ ஏற்கவில்லை?”

திறல்வீரன்…அவன் படைத்தலைவன் மட்டுமே”

ஆம்.அது மட்டுமே அவன். பயிற்றுவிக்கப்பட்டவன். வேந்தனின் வேல்”

இன்று எதற்கும் உடன்பட வேண்டியநிலை”

புலவருக்கு மேலும் சுமையென்றாகாமல்…”

ஆம்” என்றபின் சொல்லிழந்து எண்ணுதலின்றி வெறும் நோக்குக்கொண்டிருந்தனர்.

சுரைக்குடுக்கையில் நீரோடு வந்த கபிலர் பாறையில் அமர்ந்தார்.

உண்ணலாம் மகள்களே,” என்றார்.

மூங்கில் குழாயில் இருந்த தேனை அவலில் சேர்த்து சங்கவை அளித்தாள். அவர் அளித்த விரிந்த அரசிலையில் வைத்து உண்டார்கள். நீர் அருந்தும் பொழுது அங்கவை தன்நாட்டில் அரிதெனக் தேங்கும் பனிச்சுனை நீரை நினைத்துக்கொண்டாள். கால்நடையாய் வந்த ஒரு புலவர் கால்சோர்ந்து அமர்ந்து, நீர்தேடிக் கண்டடைந்த பனிச்சுனை, அவர் பாட்டில் ஏறி தன் இல்லம் சேர்ந்த காலைவேளை நெஞ்சத்தில் எழுந்தது. பின்னர் தேங்கிய நீர் காண..அருந்த என்று இவர்கள் சென்ற நாட்கள் எங்கிருந்தோ என்று எழுந்து வந்தன.

காற்று மரஇலைகளுக்குள், புதர்களுக்குள் புகுந்து செல்லும் ஓசை கேட்டுக்கொண்டேயிருந்தது. ஈரப்பதமில்லாத காற்று. நெருக்கமில்லாத மரங்கள். இலையுதிர்த்துக் கொண்டிருந்த மரங்கள். காற்றால் அனைத்து திசைகளில் இருந்தும் சருகுகள் மெல்ல எழுந்து பறந்து நகர்ந்தன.

இந்த பொழுதில் இளவெயினி இருந்தால்? என்ற நினைவு இருவருக்கும் தோன்ற வாய்ச்சொல்லால் பகிராமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். இருவருக்கும் அங்கமென இருந்தவள். இந்த உடன்பிறந்தாரின் சிணுக்கங்களுக்கிடையில் ஓடிக் களைத்தவள்.

புலவருடன் இவர்கள் புறப்படுகையில் பின்னால் வந்த அவளை, இருவரும் ஆளுக்கொரு கைப்பிடித்து அவள் தாதையிடம் தள்ளிவிட்டு, திரும்பிப்பார்க்காமல் வந்த பொழுதை நினைத்து தொண்டையைச் செருமினார்கள். அவலில் இருந்த சிறுஉமி தொண்டையில் நின்று வாய்க்கும் வராமல், வயிற்றுக்கும் செல்லாமல் உறுத்தித் தொலைத்தது. சங்கவை நீரை எடுத்து மடியில் வைத்தபடி அமர்ந்திருந்தாள்.

கபிலர்,“சற்று தலைசாயுங்கள் மகள்களே.கருக்கலில் நடக்க வேண்டும்,” என்றபடி பாறையில் வான்பார்த்துக் கிடந்தார்.

காற்றில் எழுந்த அறியா மணத்தை உணர்ந்த சங்கவை தன்நாட்டில் எங்கோ என மகளீர் எரிக்கும் சந்தனக்கட்டைகளின் மணத்தோடு இணைந்து எழும் அந்திமலர்களின் மணத்தை ,மனத்தால் உணர்ந்து நாசியைத் தேய்த்துக்கொண்டாள்.

கபிலர் வான் பார்த்துக்கிடந்தார்.ஆற்ற வேண்டிய காரியம் குறித்த சொற்களால் நிறைந்திருந்தார்.எத்தனை வேந்தரிடம் கேட்பது? மூவேந்தருக்கும் அச்சம்கொண்டு, அனைவரும் இவர்களை புறம் தள்ளுகிறார்கள். என் வேந்தனுக்கு கொடுத்த உறுதி என்னாவது? அதை பிழைத்து எங்ஙனம் உயிர்விடுவது? நாளை எப்படியும் இவர்களுக்குரியரிடம் சேர்ப்பித்துவிட வேண்டும்.

கபிலர் மனதை எங்கு திருப்பினும் அது வேந்தனையே சொற்களாக்கிக் கொண்டிருந்தது. முழுநிலவைக் கண்டால் மனம்பொங்கும் வேந்தன். மகள்களுடன் நாளும் கவிதை பேசியவன்.. இருப்பதைப் பகிர்ந்து நாட்டின் நிலங்காத்த அளியான். புல்காய்ந்த கோடையில் கிழங்கு அகழ்ந்தும் ,பெருமாரிக்கு திணை தேன் காத்து குலம்காத்த அவன் குடியை, எங்கு கொண்டு சேர்த்துக்காப்பேன்.

அனைத்தையும் கண்டு கடந்துக் கொண்டிருந்தது நிலவு. எத்தனை காலம்,எத்தனை வேந்தர்கள்,எத்தனை போர்கள்,எத்தனை குருதிக்களங்கள்,எத்தனை எரிகள் பார்த்த நிலவு.எத்தனை கனவுகள், எத்தனை வசந்தங்கள்,எத்தனை விழாக்கள் பார்த்த நிலவு. இன்று என்னை கண்டு கடக்கும் நிலவு.எவ்வளவு பேதை நான்… நிலையில்லை என்று அறிந்தும் பாரியுடன் இவ்வண்ணம் இருந்து கவிதை பேசலாம் என்று நினைத்த நான் எத்தனை எளியவன்.

தலையைத் திருப்பி இருவரையும் நோக்கினார்.ஒருபுறமாக படுத்திருந்த சங்கவையின் முகம் தெரிந்தது. எண்ணெய்யில்லாமல் காய்ந்து கலைந்த பின்னல் நீண்டு பின்னிய கொடியென முன்னால் கிடக்க அதைப் பற்றியபடி படுத்திருந்தாள். தனக்குத் துணையென தன்னையே கொள்ளும் கன்னியின் துணைப்படையில் இதுவும் ஒன்றென்று. அவர் கவி உள்ளம் தனியே சென்றது. அது ஒருகணமும் ஓயாதது என்று நினைத்து அதைத் தவிர்க்க திரும்பிப்படுத்து கைகால்களை நீட்டி மடக்கினார்.

மலைமகள்கள் என்றாலும் மன்னனின் மகள்கள் அல்லவா? புனம் காத்து வளர்ந்தவர்கள் என்றாலும் கவிதை பேசும் கலைமகள்களை எங்கு சேர்ப்பேன். மகன்கள் என்றால் தலைகொய்திருப்பார்கள். குலம் அழிக்க வேண்டும் என்றே, எந்த வேந்தனும் மாலையிடலாகாது என்று ஓலையனுப்பிவிட்டனர். ஒரு வேவுக்காரன் கூட கண்ணிற்கு தென்படவில்லை. எனில் ஒவ்வொரு வேந்தனிடமும் அவனறியாமல் எவனோ இருப்பான். பாணர்களாய் உள்நுழைந்து பாரியின் களமழித்தவர்கள் தானே… இனி நினைத்தென்ன?

சிலம்புகள் அசையும் மெல்லிய ஒலிகள் எழுந்து நின்றன.அவர்களின் துயிலாத கண்கள் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தன.

காண்பவர்கள் கண்நிறைக்கும் நிலைத்த முறுவலுடன் வந்தவர்களுக்கு தன்னிடமுள்ளதை அளித்து உவந்து நிறையும் உள்ளம் அவனுடையது .தன் குன்றத்தில் தனித்தது என்று எதுவுமில்லை என்றாண்ட வேந்தன். தவிக்கும் எதற்கும் தன்னிடமுள்ளதை தந்தவனின் கொழுந்துகள் என் கையில்.

அன்றொரு நாள், தனித்த நேரத்தில் கபிலர் பாரியிடம்“பிறந்தது முதல் கொடிகளைக் காணும் மலைநாடன் உனக்கு சிறு முல்லைக் கொடி புதியதென அன்று தோன்றியது எங்ஙனம்!” என்றார்.

ஐயனே…என் மக்கள் இரண்டும் கைநீட்டி தளிர்நடையிடும் பருவம் அது. காற்றில் தவித்து கைநீட்டும் இளம் தளிர் காண பேதலித்துப்போனேன்,” என்ற பாரி மேலும் சொற்கள் அற்றவனானான்.

அன்று ஈரம்படர்ந்த விழிகள் நினைவில் தோய்ந்திருக்க ,புன்னகைக்கும் இதழ்களுடன் மீசையைத்தடவியபடி பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்த அவன், மண் ‘தான்’ என எழுந்து நிற்கும் குன்றத்தின் பெருந்தாதை .கபிலர் எண்ணங்கள் துரத்த நெடுந்தொலைவு பின்னால் ஓடிக்கொண்டிருந்தார்.

அங்கவையும் சங்கவையும் வான்பார்த்த கண்களை இமைக்காமலிருந்தார்கள். அமுது என பொழியும் நிலா.இத்தனை வாஞ்சையா? ஔி இத்தனை ஆழமாய் உள்நிறைக்குமா?! ஔி…ஔி…என்று மனம் நிறைந்து வழிகையிலேயே அனைத்தும் கைநழுவும் ஏக்கம்.நெஞ்சம் நிறைக்கும் ஒன்று நெஞ்சம் குலைக்குமா ? கைகால்கள், விரல்கள் ,உடல் ,கன்னம் ,செவி, நாசி என்று நெற்றித்தொட்டு கண்நிறைக்கும் ஔி….

அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவில்

எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்..” என்று ஒருகுரல் மெல்லத்தேய்ந்தது.

தன் மென்கன்னத்தில் படியும் வன்மார்பின் ஒலிக்கேட்டு, நாசிக் காற்றின் வெப்பம் உச்சி உணர, தன் தாதையின் கதைகள், கவிதைகள் கேட்டு குன்றத்தின் கீழ் பரவும் அமுதை வழிவிரியப் பார்த்திருந்த இதே நிலா நாட்கள்…

இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்

வென்று எரிமுரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார் ! யாம் எந்தையும் இலமே” என்று மற்றொரு குரல் அதை நிறைவுசெய்தது.

நிலவை மேகப்பொதிகள் சூழ்வதும் விலகுவதுமாக கலைந்தழுந்தன. எரிந்தகாட்டின் புகைசாம்பல் பறக்கும் வெளி போல அவ்விடத்தை மெல்ல மெல்லிருள் சூழ்ந்தது. நிமிர்ந்து படுத்திருந்த கபிலர் இடக்கையை எடுத்து கண்களின் மேல் வைத்துக்கொண்டார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.