ஆதி
ஒரு நிர்மல வெளியின் விளிம்பிலமர்ந்து
அதிகாலை வானம் உற்றுக்கொண்டிருந்தேன்.
மெதுமெதுவாய் கீழிறங்கி
கையெட்டும் உயரத்தில் நின்றுவிட்ட வானத்தை
மயிலிறகாய் வருடுகையில்
விசுக்கென கடலைப் பொழிந்துவிட்டது.
விசைதாளாது நிர்தாட்சண்யமாய்க் கிடத்தப்பட்டேன்
பெருவெளியொன்றில்.
கழன்றவிழும் மரத்தின்
கடைசி வெண்சிறு மலர்போல்
தற்போது எனைநோக்கிக் கீழிறங்கும்
இக்கடைசி துளியில்
என் ஆதியைக் காண்கிறேன்
நானற்ற ஒரு நானாய்
இந்நிலத்தின் பெரும்பேராய்.
புதிர் உலகம்
பூ வரையச் சொல்லி கேட்டாள்
இரண்டரை வயது மகள்.
எனக்குத் தெரிந்த மாதிரி
வரைந்து தந்தேன்.
முட்டைபோல் ஏதோவொன்றை வரைந்து
பூவெனக் காட்டினாள்.
சிரத்தையோடு சில நேர்க்கோடு வரைந்து
அதன்மேல் அச்சு தீட்டச் சொன்னேன்.
அசட்டையாக
எண்ணற்ற வளைகோடுகளை
சளைக்காது வரைந்து தள்ளினாள்.
பின்பு
பல்பம் தேய்ந்துவிட்டதென
மீண்டுமொன்றைப் பெற்றுக்கொண்டு
கண்கள் மூடுமாறு கட்டளையிட்டாள்.
அரைநிமிடம் கழித்தே காண வாய்த்தது
அவள் தீட்டிய ஒரு அற்புத உலகம்.
அவள் மட்டுமே விடையறிந்த
அப் புதிர் உலகினுள் நுழைய இயலாமல்
வெறுமனே ஒருமுறை
எட்டிப்பார்த்துவிட்டு மட்டும்
நகர்ந்துவிட்டேன்.