மனக் காற்று
சிற்றகல்களில் தீபங்களேந்தி சுழிக் கோலத்தில்
வைத்த கோணத்தை எதிர் நின்று பார்த்தாள்
நிமிர்ந்து நிலவைப் பார்த்ததில் ஒரு முறுவல்
திரும்பி காற்றிடம் ஏதோ சொன்னாள்
அணைக்காமல் போய்விடு என்பதாகத்தான் இருக்கும்
சிற்றடி எடுத்து அவள் உள்ளே செல்லும் முன்பே
ஓடிய நிழல் கைகளில் பிடித்த காற்று.
விழைவு
நூலறுந்த பட்டம் ஒன்று
தென்னங் கீற்றின் நுனியில் தொக்கி
இன்னமும் பறந்து கொண்டிருப்பதாய்
காற்றின் அலைக்கழிப்பில் மயங்கி
வாலைத் தேடித் தேடி தேற்றிக் கொள்கிறது.
புதை மணல்
முகம் மெது மெதுவாய்
அமிழ்ந்து தேடிப் பார்த்தது
இதுவல்ல என்று ஓய்ந்து
அதுவோ என அரற்றியது
வான் பார்த்த பாதங்கள்
சொன்னதென்னவோ
தலைகீழான வாழ்க்கை.