‘அகாலம்’ தொகுப்பிலுள்ள இரு கவிதைகள் குறித்து வான்மதி செந்தில்வாணன்

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு சமயவேல் அவர்களின் அகாலம்எனும் கவிதைத் தொகுப்பை இரண்டாம் முறையாக வாசிக்க நேர்கையில் தொகுப்பின் முதல் கவிதையான வயலின் மனிதன்ஐ சட்டென கடக்க இயலவில்லை.’’வயலின் மனிதன்தலைப்பின்கீழ் இரு கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டுமே இசை சம்பந்தமான கவிதைகள். இக்கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் மனதிற்குப் பிரியமான இசையினை இன்னும் நெருக்கமாய்க் கேட்கத் தோன்றியது. மட்டுமன்றி கவிதை வாசித்தல், இசை கேட்டல் எனும் இரு நிகழ்வுகளும் ஒன்றைத் தொடர்ந்து ஒன்றென இரட்டை மகிழ்வினை ஒருசேர அனுபவிக்க வாய்த்தது மனதிற்கு அலாதியான ஒரு உணர்வினை அளித்தது. அத்தகையதொரு மனநிலையில்தான் மெல்லமெல்ல இக்கட்டுரை உருவாக்கம் பெற்றது.

வயலின் மனிதன்

வயலின்களும் இசைப்பர்களும் மறைந்துவிட
இசை என்னைச் சுருட்டி எறிகிறது
பூமிக்கு வெளியே

குரல்களின் அடுக்குகளுக்குள்
பதுங்கியிருக்கும் வண்டுகள்
பாய்ந்து வெளியேறி
என் தலையை மூடுகின்றன

எந்த வடிவத்திற்குள்ளும் அடங்கமுடியாத
உயிரின் துக்கம்
ஒரு ஒற்றை வயலினிலிருந்து
கறுப்பு வானமாய் பெருகுகிறது.

இன்னொரு உடுமண்டலத்தில்
நானும் பியானோவும் தொங்குகிறோம்
ஒரு புல் நுனியில்
தினசரி வாழ்விலிருந்து
மில்லியன் மைல்களுக்கு அப்பால்
ஓர் அமானுஷ்யப் பரப்பில்
தாளங்களின் காலக்கணக்கு
சிம்பனியின் அடியாழத்தில்ந
ஒரு தனிமனிதனின் விம்மல்

நடத்துனனின் ஒரு சிறு தவறில்
முழு ஆர்க்கெஸ்ட்ராவும்
என்மேல் பாய்கிறது.
ஒவ்வொரு உறுப்பாய் என்னைக் கழற்றி எறிந்துவிட்டு
ஓய்கிறது இசை.

(To – Trivendrum male voice and Tirunelveli chamber orchestra)

ஒரு ஆர்கெஸ்ட்ராவின் அற்புதமான நிகழ்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. டேப்ரிக்கார்டரில் பாடல் கேட்கையில் ஒலிநாடாவில் ஏற்படும் குறைபாடுகளாலோ, பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் மைக் முன் அரங்கேறும் நிகழ்வுகளை மனமொன்றிக் கவனிக்கையில் திடீரென ஏற்படும் உச்சஸ்தாயிலான கீச்சொலியிலோ அல்லது மனதிற்குப் பிடித்தமான பாடல் ஒலிக்கையில் வானொலியில் ஏற்படும் கரகர அதிர்விலோ இப்படி ஏதேனுமொரு நிகழ்வில் இம்மாதிரி மனம் கூசும்படியான அதிர்வினை அனைவரும் சந்தித்திருக்க அநேக வாய்ப்புகளுண்டு. இசையில் இன்புற்றிருக்கும் மனமானது திடுமென இரைச்சலுக்கு உட்படுத்தப்படுகையில் அதுவரை தான் அனுபவித்த, தனக்குப் பிடித்தமான ஸ்பரிசத்தினை முழுமையாக இழந்துவிடும் நிகழ்வே இங்கு கவிதையாக்கம் பெற்றுள்ளது. இந்நிகழ்வானது, கிட்டத்தட்ட காற்றிற்கு அசைந்து இசையெழுப்பும் மரமொன்றை வேரோடு பிடுங்கி எறிவது போலத்தானென எண்ணத் தோன்றுகிறது. கவிஞர்களின் இருப்பானது பூலோகமாக இருப்பினும் அவர்களின் அகவெளியானது அவ்வப்போது பூமிக்கு வெளியிலான சஞ்சரிப்புகளில் திளைத்தூறி தனது விருப்பங்களுக்கும் , அறிவுத் தேடல்களுக்கும் தீனியிட்டுக் கொள்கின்றன என்பதற்கு முதற்பத்தி சான்றாக அமைகிறது. கண்கள் மூடியபடி நாம் ரசிக்கும் இசையானது நம்மைச் சுருட்டி பூமிக்கு வெளியே வீசவேண்டுமாயின் அது மனதிற்கு இசைவானதாகவோ அல்லது ஏற்புடையதாகவோ இருக்க வேண்டும்.் இசையின் மீது அனைத்து உயிர்களுக்கும் மயக்கமுண்டு எனும் நிதர்சனத்தை எண்ணுகையில், ‘இசையால் வசமாகா இதயம் எது?’ எனும் பாடல் வரியானது நினைவில் ஊர்கிறது. இசையும், குரலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து ஒன்றையொன்று தழுவி நம் மனதின் ஆழத்தை வசீகரிக்கும் தன்மை வாய்ந்தவை. உயிரின் துக்கமென வயலினிருந்து கசியும் இசை அரூபமானது. கறுப்பு வானம் என்பது காட்சிப்படிமம். எனவே கறுப்பு வானமாகப் பெருகும் உள்ளுணர் வரிகள் வாசகருக்கு ஒரு அழுத்தமான புறவெளிக்காட்சியை அகத்துள் தோற்றுவிக்கிறது. மனித அறிவானது தெரிந்ததிலிருந்து தெரியாததை நோக்கி நகர்வது போல மூன்றாம் பத்தியின் வரிகள் அரூபத்திலிருந்து மெல்ல ரூபம் நோக்கி நகர்கின்றன.

சில பாடல்கள் சுமையான மனதை சட்டென இலகுவாக்கும் தன்மை வாய்ந்தவை. ஒரு பருப்பொருளோ அல்லது மனிதனோ சிறு புல்நுனியில் தொங்கவியலாதுதான். மனமானது இலேசாகிப் பறக்கும் தருணத்தில் அப்படியொரு அரிதான வாய்ப்பு அவருக்கு கிட்டியதை அறிவதோடு குரலின் ரிதம் குறித்த அவரின் புரிந்துணர்வையும் நாம் அறியப்பெறுகிறோம். எந்தவொரு மனமும் இரைச்சலை விரும்புவதில்லை. ஆர்க்கெஸ்ட்ரா நடத்துனனின் சிறு தவறால் சட்டென தன்னுணர்வு நிலைக்குத் திரும்புவதைத்தான் இறுதிப்பத்தி சுட்டுகிறது. இசை இரைச்சலாக மாறும் தருணம் மனம் சந்திக்கும் அதிர்வில் அவர் ஏதுமற்ற ஒன்றாகி எதுவுமே இல்லாமல் ஆகிறார். The Pianist திரைப்படத்தில் இசையைத் தொடர்ந்துவரும் இரைச்சலும், இரைச்சலினூடான இசையுமென சற்று கனத்த மனஅதிர்வினை உண்டாக்கிய காட்சிகளை அசைபோடுகிறது மனம்.

 

அரங்கை விட்டு வெளியேறுகிறேன்

ஒரு பிரும்மாண்டப் பியானோவின் இசை நகர்மேல் பொழிந்து கொண்டிருக்கிறது.
பஸ் ஸ்டாப், கடக்கும் வாகனங்கள்,
விருட்டென்று வந்து எனை ஏற்றிக்கொண்ட சிட்டிபஸ்; வெளியில் விடைதரும் சிநேகிதி
ஓரத்தில் ஒளி கசியும் கட்டிடங்கள்
வேப்பமரங்கள், கறுப்புச் சாலை, கடைகள்,
வேதக்கோயில், த்யேட்டர், ரிக் ஷா வரிசைகள்
எல்லாவற்றுக்குள்ளும் இருந்து
எட்டிப்பார்க்கிறது ஒரு வயலின்.

எந்த ஸ்டாப்பிலோ இறங்குகிறேன்
எந்தத் தெருவிலோ நடக்கிறேன்
எந்த வீட்டையோ தட்டுகிறேன்
ஓர் உயிருள்ள வயலினாக நான்
எப்பொழுதோ மாறிவிட்டிருந்தேன்.

(To – Trivendrum male voice and Tirunelveli chamber orchestra)

கவிதை என்பதை மௌனம் மலர்த்தும் அலாதியான இசை எனவும் குறிப்பிடலாம். இசையானது எல்லோர் வீட்டின் கதவுகளையும் தட்டக்கூடியது. நாம்தான் செவிமடுக்க மறுத்து அலட்சியமாய் அவைகளைக் காற்றில் உதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இசையானது ஒலியுணர்திறன் கொண்டது மட்டுமன்றி காட்சி மயக்கத்தினையும் உணரப்பெறுவதுமாகும். இக்கவிதையைப் பொறுத்தமட்டில் ஓரத்தில் ஒலி கசியும் கட்டிடங்கள், ரிக் ஷா வரிசை போன்ற காட்சி பிம்பங்களிலிருந்து ஒரு வயலின் எட்டிப்பார்க்கிறது எனும் நேர்த்தியான வரியானது காட்சிமயக்கத்தின் அற்புதத்தை மனதினுள் நிகழ்த்திக் காட்டுகிறது. மிகுந்த மெல்லதிர்வை உண்டுசெய்யும் இக்காட்சியானது ஒரு சிலிர்ப்பான நுண்ணிசையைக் கசிந்து கொண்டே மனம் முழுக்க அடர்வாக விஸ்தரிக்கிறது. ‘ஓரான் பாமுக்’ ன் “பனி” நாவல் முழுக்க விசித்திர நிலமான துருக்கியின் ‘கார்ஸ்’ நகரக் கட்டிடங்கள் பனியினூடாக இப்படியொரு நுண்ணிசையைக் கசிந்துகொண்டே இருக்கும்.

பொதுவாக மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நேர்மறையானாலும் சரி, எதிர்மறையானாலும் சரி சில பொழுதோ, காலமோ தொடர்ந்து அதன் நிழல்களில் சஞ்சரித்தவாறு மற்ற அனைத்தையும் புறந்தள்ளிவிடுகிறது. இங்கு நேர்மறை உணர்வு கவிதையாக்கம் பெற்றுள்ளது. சில நிகழ்வுகளின் பொருட்டு ஒரு புள்ளியில் குவிந்து அங்கேயே நிலைபெறுகிற நம் கவனமானது அதன்பிறகான எவ்வித பிரம்மாண்டங்களின் லயிப்பிலும் ஈர்ப்பு பெறுவதில்லை அல்லது அவ்வாறு இயங்கவென மனம் நம்மை அனுமதிப்பதில்லை. மழை நனைப்பதுபோல் ஒரு நகரை இசை நனைப்பதை உணர்வதென்பதே பேரின்பம். அம்மாதிரியான மனோநிலையில் தன்னைச் சூழ்ந்துள்ள உயர்திணை, அஃறிணை யாவற்றிலும் வயலின் இசை கசிந்துகொண்டிருப்பதை உணர்வதென்பது பேரின்பத்தினூடான மற்றுமொரு பேரின்பம். இசையில் மயங்கிய ஒரு மனமானது இந்த உலகத்தை இசையாகவே காணும் அறிவுமயக்கத்தில் சஞ்சரிப்பதுடன் அதை கொண்டாடிக் களிக்கிறது. ஒரு மனிதனின் இசைவயப்பட்ட மனப்பிரியத்தை வெளிப்படுத்தும் பெருங்கடத்தியாக தன்னை நிறுவிக்கொண்டுள்ளது இக்கவிதை.
உயிரின் வேர்வரை ஊடுருவி ஒரு உணர்வினை முழுமையாய் கவித்துவமாக்க வேண்டுமெனில் தான் அதுவாகவே மாறுவதன்றி வேறெப்படி இயலும்? எந்த ஸ்டாப்பிலோ இறங்கி, எந்தத் தெருவிலோ நடந்து, எந்த வீட்டையோ தட்டினாலும் திறந்துகொள்ளும் எல்லாக் கதவுகளும் அவருடையதாகவே இருக்கிறது என்பதாக விரிகிறது எனது சிந்தனை.

மேற்கூறிய இரு கவிதைகளிலும் வயலின் மற்றும் பியானோ ஆகிய இரு இசைக்கருவிகளின் தாக்கம் தெளிவாகிறது. முதற்கவிதையானது பாழ்பட்ட இசை குறித்த உணர்வையும், மற்றது ஒரு இசையூறிய மனதின் உணர்வுப் பிரவாகத்தினையும் நயமாக எடுத்துரைக்கிறது. முதற்கவிதையில் மன அடுக்குகளைச் சீர்குலைத்தபடி தன்னிலிருந்து விடுபட்டுச் சுழன்றோடி மறையும் இசையானது மற்றதில் அதே வேகத்தில் அவ்வளவையும் சீர் செய்வதெனும் கருத்தானது உணரக் கிடைக்கிறது. வாழ்வின் உன்னத தருணங்களை உயிர்ப்போடு மலர்த்துகிற இதுபோன்ற கவிதைகளை அவ்வளவு எளிதில் கடக்க முடிவதில்லை. சில சமயங்களில், அண்டை வீட்டில் கமழும் தாளிப்பு மணமானது நம் வயிற்றுப்பசியைக் கிள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பதுபோல, கவிஞரின் இவ்விதமான இசைத்தாளிப்பானது மனத்தின் இசைப்பசியைத் தூண்டும் விதமாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

தொகுப்பு _ அகாலம்
ஆசிரியர் _ சமயவேல்
வெளியீடு _ சவுத் ஏசியன் புக்ஸ்
முதல் பதிப்பு _ 1995

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.