நான் தங்கியிருந்த தனியறையின் பக்கவாட்டு சுவரில் சுவற்றுப் பல்லியைப் போல் ஒட்டிக்கொண்டு அந்த சத்தத்தை தினமும் கேட்டுக்கொண்டிருப்பேன். சுவரின் அந்த பக்கத்தில் ஒரு சிறு பொந்து இருக்கிறது. அந்த பொந்திற்கு அவ்வப்போது ஒரு புறா வந்துகொண்டிருக்கும். அறைக்கு பின்பக்கத்தில் கண்ணுக்கு மறைவாக அந்த பொந்து இருந்தது. ஆகவே புறாவை பார்க்க முடியாது. அதன் ஓசையை வைத்துக்கொண்டு தான் அதனை அறிய முடியும். அது எழுப்பும் குறுகல் ஒலிக்காக தான் நான் காதை சுவரோடு ஒட்டி அப்படி கேட்கும் வழக்கத்தை கொண்டிருந்தேன். முதலில் கேட்ட போது அந்த குறுகல் ஒலி எனக்கு எங்கள் ஊரின் மகமாயி கோயிலின் மாடப்புறாவைத் தான் ஞாபகப்படுத்தியது. சரியாக காலை விடியும் வேளையில் அந்த குறுகல் ஓசை எழும். அதில் அந்த சுவரே முனகுவது போல இருக்கும். அந்த முனகலில் தான் என் கண் விழிப்பு. பின்னர் மாலை அந்தி வேளையில் நான் வேலை முடிந்து திரும்பி வந்ததும் மீண்டும் ஒருமுறை காதை வைத்து கேட்பேன். சுவரே சடசடக்கும். புறா அதன் சிறகு அதிர புறப்பட துடித்துக்கொண்டிருக்கும். கூடடைவதற்கான தன் புறப்பாடை அதன் சிறகுகளைக் கொண்டு அதிர்த்தி தெரிவிப்பது போல. அது சென்ற பிறகும் அந்த சடசடப்பு அந்த சுவற்றில் எஞ்சும்.
நான் எனக்கான சிறகுகளை எப்போது பெறப் போகிறேன்? ஒவ்வொரு நாளும் அந்த சிறகடிப்பின் சடசடப்பில் புறாவோடு புறாவாக அந்த சுவரும், அந்த சுவரோடு ஒட்டிய நானும் பறந்துவிடலாகாதா என்ன?
எனக்கான சிறகுகளைப் பெற்று என கூடடைய எழுந்திருக்கிறேன் இப்போது. எனக்கு வயது முப்பத்தி இரண்டு. இருவதாவது அகவைகளை அரை பாக்கெட் சிகரெட்டிலும், வெட்டப்படாத தாடியிலும், பன்னிரெண்டு மணி நேர உறக்கத்திலும், ஆற்றங்கரை ஒரத்திலுள்ள பாழடைந்த மண்டபத்திலும் கழித்து பொறுப்பின் சலனம் இல்லாத இளைஞர்களுள் நானும் ஒருவன். ஆனால் இன்று அப்படி இல்லை. இன்றோ மாதம் எட்டாயிரம் ரூபாய் வருவாய். சொந்த ஊரை விட்டு வெகு தொலைவில் ஒரு ரசாயன தொழிற்சாலையில் வேலை. ஆறு மாதத்திற்கு ஒரு முறை சொந்த ஊர் செல்ல அனுமதி. அங்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால்… என் வீடு… அப்பா… மனைவி… தங்கை… அவர்களது காலைகள்.
கொல்லைபக்கம் தோட்டத்தில் விழுந்து இறைந்து கிடக்கும் தன் மனைவி வளர்த்த பவழமல்லி செடியின் பூக்களை தன் அரைப் பார்வைக்கொண்டு நேற்றைய பூ எது இன்றைய பூ எது என்று பகுத்து அன்றைய பூக்களை மட்டும் பொறுக்கி எடுத்து வந்து சாமி அலமாரிக்கு முன் தன் மகள் போட்ட அரசி மாவு கோலத்திற்கு மேல் அலங்கரிப்பார் அப்பா. மீதியிருக்கும் பூக்களை பூக்கூடையிலேயே விட்டுவைப்பார். அதனை என் மனைவி எடுத்து பவழமல்லியின் செந்தூரக்காம்புகளில் ஊசியை நுழைத்து கோர்த்து தொடுத்து சரமாக்கி என் அம்மா படத்திற்கும் ஏனைய சாமி படங்களுக்கும் சாத்துவாள். மீதியிருக்கும் அரை முழம் பவழ மல்லி சரத்தை தங்கை பள்ளிக்குச் செல்லும் போது அவளது தலையில் வைத்துவிடுவாள். இந்த பவழமல்லி கதையை எனக்கு எழுதும் கடிதத்தில் அடிக்கடி குறிப்பிடுவார் அப்பா. ஒவ்வொரு நாளும் எப்படி அந்த பவழ மல்லிச் செடி ஓரே எண்ணிக்கையில் பூக்களைத் தருகின்றன என்று அவரது வியப்பு அந்த கடிதத்தில் கலந்து இருக்கும். அங்கிருந்த வரை அவர்களது காலைகளில் எனக்கு பெரிதாக இடம் ஏதும் இருந்தது இல்லை. இன்று அவர்களுடன் என் பிள்ளையும். பிறந்த முதல் இன்று வரை தனது தந்தையவனின் முகம் கூட நுகரா பால் வண்ணம் மாறா ஆறு மாத கைக்குழந்தை. இங்கு இரை தேடி வந்து வீடு திரும்பும் பறவையாய் நான். ஊரிலிருந்து வேலைக்கு சேர்ந்து எட்டு மாதம் ஆகிவிட்டது. இதுவே என் முதல் வீடு திரும்பல். இங்கிருந்து ஊருக்கு எழு நூறு மைல் வரை தொடர்வண்டியில் சென்ற பின் மலைப்பாதை கடந்து சாலை மார்க்கமாய் இரண்டரை நாட்களில் சென்றடையலாம்.
ஒன்றரை நாள் ஆகிவிட்டது. நான் வந்த தொடர்வண்டி மழை காரணமாய் நடுவிலே நிறுத்தப்பட்டது. என்ன செய்வதென்று அறியாது முழித்தேன். மொத்தம் ஏழு நாள் தான் விடுமுறை. ஐந்து நாள் போக வர பயணத்திற்கே சரியாக இருக்கும். மீதி இரண்டு நாட்கள் தான். இந்த எட்டு மாதங்களாய் என் உயிரை ஓட்டி கொண்டிருந்தது இந்த இரண்டு நாட்கள் தான். இரவு பதினோரு மணி. ரயிலை விட்டு இறங்க முடிவு செய்தேன். இன்னும் மூன்று மணி நேரம் பயணம் செய்தால் அருகில் உள்ள பேருந்துகள் இயங்கப்பெறும் ஊருக்கு சென்றடையலாம். அங்கிருந்து என் ஊருக்கு ஐந்து மணி நேரம் தான் என்ற நம்பிக்கையில் நடந்தேன். நிலா வெளிச்சம் நிறையப் பெற்று இருந்தது வழியெல்லாம். மனித நடமாட்டமாய் எதையும் அறிய முடியவில்லை. ஆந்தையின் அலறல். மழை மேகங்கள் மழையை பனியாய் மாற்றிப் பொழியும் குளிரை தாக்குப்பிடிக்க முடியவில்லை.வேலைக்கு செல்வதற்கு முன் என் மனைவி கொடுத்தனுப்பிய ஸ்வெட்டர் நினைவுக்கு வந்தது. பெட்டியில் இருந்து எடுத்து அணிந்துகொண்டேன். கூடவே அவள் சம்பந்தப்பட்ட நினைவுகளும் எழுந்து என்னை அணைந்துகொண்டன.
அன்று என்னையும் என் இயலாமை தெரிந்தும் என்னை ஏற்றுகொண்டு என்னோடு வாழ வந்தவள் தான் என் மனைவி. அவளது மெளனங்களை என் வாழ்க்கை தராசில் நிறுத்தினால் என்னால் ஈடு செய்ய முடியாது. நான் பொறுப்பில்லாமல் இருந்த காலங்களில் அவள் எந்த நம்பிக்கையில் என்னை ஏற்றுகொண்டாள் என்று நான் இன்று வரை அவளிடம் கேட்டதில்லை. திருமணத்திற்கு பின்னான நாட்களில் இரவு படுக்கைக்கு முன் அரைப் பாக்கெட் சிகரெட்டையும் காலி செய்து நெஞ்சு நிறைந்த புகையை தேக்கி வெளியில் விடாமல் அந்த போதையிலேயே திளைப்பேன். ஆரம்ப காலத்திலிருந்தே சிகரெட் புகையை நெஞ்சில் தேக்கி மூச்சை அடக்கும் இந்த பழக்கம் என் நட்பு வட்டத்தின் மூலம் நன்கு பரிச்சயமாகியிருந்தது. கண்கள் சிவந்து பொங்கியெழ வந்து அவள் அருகில் படுப்பேன். படுத்து உறங்கிய சிறிது நேரத்திலேயே அந்த நெஞ்சுப்புகை என் கண்களிலும் காதுகளிலும் மூச்சிலுமாக வெளியே கசியும் ஒரு நிலக்கரி இன்ஜினைப்போல. அருகில் படுப்பவர்களுக்கு குடலையே உமிழும் அளவிற்கு நாற்றம் பிறட்டும். அத்தனையும் தாங்கிக் கொண்டு தன் சேலை முந்தானையால் தன் முகத்தினை மூடிக்கொண்டு சற்று கமறி படுத்துக்கொள்வாள். அவ்வளவுதான். என்னிடம் எந்த புகாரும் அவளுக்கு இருந்ததில்லையா என்ன? இத்தனையும் எதற்கு ஒருத்தி தாங்கிகொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று வரை கூட இருக்கிறது. அதற்கும் அவள் மெளனத்தையே பதிலாய் உரைப்பாள். அவளது மெளனங்களால் என்னை அலட்சியப் படுத்துகிறாளா என்று கூட தோன்றும்.
வேலைக்குப் போக வேண்டிய நெருக்கடி என்னைச் சூழ்ந்த போது என் சொந்த ஊரே என்னை விரட்டியடித்தது. நான் நின்று கொண்டிருக்கிற நிலமே கூசுவது போல் இருந்தது. அப்போது அவள் மட்டும் மெளனம் காத்தாள். அவளது அந்த மெளனத்தை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. “எல்லாரும் என்ன திட்டி தீக்குறாங்க, நீ மட்டும் ஏன் இன்னும் மிச்சம் வச்சுருக்க? ஏதாவது சொல்லு” என்று அவளை உலுக்காத குறையாக கேட்டேன். ‘இல்ல எனக்கு என்ன சொல்றதுனு தெரியல’ என்றாள். நான் அவளது தயக்க எல்லையை கடக்க முற்பட்டு, “என்ன தயங்குற. சொல்றதுகென்ன.” என்றேன்.
“தயக்கம்லாம் இல்ல உண்மையாவே அவ்ளோ தான்” என்றாள்.
இப்படித்தான் தயக்கத்திலேயே முழுமையாய் முடிந்துவிடுவாள் அவள். பின்னர் எதுவென்றோ ஆனவனாகி,
கனத்த குரலில் ‘நீ ஏன் இப்படி இருக்க? எதுவுமே பேசமாட்டேங்குற. என்கிட்ட பேசுறதுக்கு உனக்கு வார்த்தையே இல்லையா?
உனக்கு எம்மேல கொஞ்ச நஞ்ச உரிமைக்கூட இல்லையா என்ன?’
‘ஒருத்தங்கள அப்படியே ஏத்துக்கறதுல உரிமையில்லாம ஆய்டுமா என்ன?’ என்றாள்.
அவளிடம் மேற்கொண்டு சொல்ல என்னிடம் எதுவும் இல்லை. அவ்வார்த்தை என்னை நிறைத்ததா? இல்லை முழுதும் இறைத்ததா? தெரியவில்லை. இலை தளத்தில் நழுவும் பனி நீர் சுடுமணலில் விழுவதைப் போல அவ்வார்த்தையை அப்படியே உறிந்துகொண்டேன். அதிலிருந்த தண்மையும் உயிரோட்டமும் எனக்கு மட்டுமே அணுக்கமானது என்று பின்னர் பல தடவை நினைவு கூறி ஊர்ஜிதபடுத்திக்கொண்டேன். அதன் பின் அவளது மெளனங்களை அளக்க நான் முற்பட்டதில்லை. அதை சார்ந்த எந்த ஐயங்களும் இல்லை. எழுந்தாலும் அவளிடம் கேட்க போவதுமில்லை. அவளது மெளனங்களே எனக்கு காப்பாகவும் மாறியிருந்ததை சில சமயங்களில் உணரமுடிந்தது. அவளது வார்த்தைகளும் புளியமரத்தை உலுக்கி பொறுக்கி எடுக்கப்படும் புளியம்பழங்களைப் போல தான். அடி நாக்கில் எஞ்சும் அந்த இனிப்பு தாண்டிய புளிப்பைப் போல அவள் உகுக்கும் வார்த்தைகளின் சாரத்தை நான் சேகரம் செய்து கொள்வேன். நான் கிளம்பும்போது என்னை அணைத்து “இனிமேல் என் வேலையை இது செய்யும்” என்று கொடுத்தனுப்பிய ஸ்வெட்டர் தான் இது.
இறுகி அணைத்தபடியே நடந்தேன். ஒரு ஐந்தாறு கிலோமீட்டர் நடந்திருப்பேன். சாலையை அடைந்துவிட்டேன். எதேனும் பஸ்ஸோ லாரியோ வருகிறதா என்று பார்த்து கொண்டே நின்றிருந்தேன். எதும் தென்படவில்லை. மணி ஒன்று இருக்கும். கால் கடுக்க நின்றிருந்தேன். தொலைதூரத்தில் ஒரு வெளிச்சம். அருகில் வர வரக் கூடிற்று. ஒரு ஆம்னி வேன் வந்துகொண்டிருந்தது. அதை நிறுத்த கை நீட்டினேன். ட்ரைவர் சற்று தூரம் போய் நிறுத்தினார். என் பெட்டியை எடுத்துக்கொண்டு வண்டியின் அருகில் சென்றேன். ட்ரைவரிடம் நடந்ததை கூறி விவரித்தேன். உள்ளிருந்து கணத்த இருமல் சத்தம் கேட்டது. ஒரு அறுவது வயது அம்மாவும் முப்பது முப்பத்திரண்டு வயது மகளும் இருந்தார்கள். அந்தப் பெண் சால்வையை மூடிக்கொண்டு தொடர்ந்து கத்திக்கொண்டும் இரும்பிக்கொண்டும் இருந்தாள். அம்மா அவளை தடவி கொடுத்து சமாதான படுத்தியவாறே இருந்தாள். ட்ரைவர் என்னை ‘ஏறுங்க சார்’ என்றார். அந்த மகளுக்கு என்ன தோனியதோ தெரியவில்லை என்னை பார்த்து அனத்திக்கொண்டே வந்தாள். “இந்த ஆளும் முகரயுமே சரி இல்ல…ஏன் இந்த ஆள வண்டில ஏத்துனீங்க ..?” என்று அம்மாவிடமும் ட்ரைவரிடமும் அனத்திக்கொண்டே வந்தாள். ஆம், என் முகமும் அப்படித்தான் இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் என் விஷயத்தில் அது தப்பி விட்டது. திருடனும் எளிதாய் கைக்காட்டி திருட்டு பழியை சுமத்தி விட்டு தப்பிவிடுவான். அப்படிப்பட்ட முக அம்சம் பொருந்தியவன் நான். என்னை முதலில் பார்பவர்களுக்கு நான் சந்தேகப்படும்படியாகவும் இழிவாகவும் தெரிவதை நான் பல சமயங்களில் ஊகித்திருக்கிறேன். ஒருவரைத் தவிர – அவள் தான் என் மனைவி. போக போக அந்த பெண்ணின் அனத்தல் உச்சத்தை தொட்டது. இரைச்சலாய் மாறியது. அந்த வேனின் ஓரக்கண்ணாடியில் என் முகத்தை பார்த்தவாறே புழுவினும் இழிந்த நிலையை எண்ணினேன். வாழ்க்கையே இழிவாய் மாறிய தருணம் அது. போக வேற்று வழி இல்லாமல் என் உணர்ச்சிகளை கண்ணீராய் பதிவு செய்த தருணமும் அது தான். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் நிலைமை மோசமாக உரத்தக் குரலில் கத்தினாள். “ட்ரைவர், வண்டிய நிப்பாட்டுங்க, இந்த ஆள எறங்க சொல்லுங்க” என்று சத்தம் போட்டாள். அவள் அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவள் கேட்கவில்லை. ட்ரைவரும், “பக்கத்து ஊர்ல இவர் எறங்கிருவாருமா அது வரை அட்ஜஸ் பண்ணிகோங்க” என்றார். ஆனாலும் அவள் மூச்சுத் திணற திணற சத்தம் போட்டாள். அவள் அம்மா “தயவு செஞ்சு அவர எறக்கி விடுங்க” என்று கேட்டுக்கொண்டபடியே தண்ணீர் பாட்டிலை எடுத்து மகளிடம் தந்து மாத்திரை கொடுத்தாள். ட்ரைவரும் வேறு வழி இல்லாமல் வண்டியை நிறுத்தி என்னை தனியே இழுத்து சென்று, “சார் தப்பா நெனைக்காதீங்க. அந்த பொண்ணுக்கு ஹிஸ்டீரியா கம்ப்ளைண்ட், டிபி வேற அதான் இப்டி நடந்துக்குறாங்க. நீங்க வேற பஸ் லாரி புடிச்சு போய்க்கோங்க” என்று சொல்லி விட்டு சென்றார்.
மறுபடியும் தொலைந்து போனேன். ஒரு கண்ணில் என் குடும்பம். ஒரு கண்ணில் அந்த பெண்ணின் வசை மொழிகள் கணம் கணம் தோன்றி மறைந்தன. கொஞ்ச தூரத்தில் ஒரு லாரி வந்தது தெரிந்தது. மூன்று மணி இருக்கும். கையை நீட்டினேன். வண்டி வேகம் குறைந்து நின்றது. ட்ரைவர் ஒத்துக்கொண்டார். நடந்ததை மனதில் வைத்துகொள்ளாமல் குடும்பத்தை எண்ணியவாறே கண் அயர்ந்தேன். விடிந்தது. கண் முழித்துப்பார்த்தேன். தூரத்தில் ஒரு பெரும் மக்கள் கூட்டம். சாலையை ஆக்கிரமித்துக்கொண்டு நின்று இருந்தது. போலீஸ் ஜீப்பும் அருகில் நின்றது. விபத்து நிகழ்ந்ததற்கான எல்லா அறிகுறிகளும் தெரிந்தது. லாரி ட்ரைவர் வண்டியை நிறுத்தி இறங்க முற்பட்டார். அதற்குள் ஒரு போலீசுகாரர் அவரை தடுத்து “வண்டியலாம் இப்டி தேவ இல்லாம ஓரங்கட்டாத…கெளம்பு…கெளம்பு” என்றார் “என்ன சார் ஆச்சு?” என்று லாரி ட்ரைவெர் அவரை வினவ, ” ஒரு அம்மாவும் பொண்ணும் வந்துருக்கராங்கையா….ட்ரைவர் பனில வண்டி ஓட்டத் தெரியாம தடுமாறி இருக்கான். வளைவுல கல்’ல மோதி ஆக்சிடென்டு. அதுல அம்மாவும் மகளும் ஸ்பாட் ஔட். ட்ரைவெர் அடிப்பட்டு கெடக்குறான்யா” என்று வழியை சரி செய்து அனுப்பினார். இதை கேட்ட எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. லாரி ட்ரைவர் “யாரு செஞ்ச பாவமோ? இப்டி ரத்தம் பட்டு கெடக்குதுங்க” என்று புலம்பினார் என்னிடம். என்னை வண்டியிலிருந்து இறக்கி விட்டதனால் தான் அவர்களுக்கு இந்த கதியா என்ன? என்ற எண்ணம் எழாமலில்லை. ச்ச, என்ன அபத்தம் இது? ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன் நான்? லாரியின் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை நானே தேடி ஒருமுறை பார்த்துக்கொண்டேன். இது மாதிரி தருணங்களில் தான் ஒரு கண்ணாடியின் தேவையை நான் மிகவும் உணருகிறேனோ?
இப்படி பலவித எண்ணப்பரிமாற்றங்களுடன் அந்த ஊர் வந்து சேர்ந்தேன். லாரி ட்ரைவர் “இதான் சார் பஸ் ஸ்டாண்ட். இங்கேந்து உங்க ஊருக்கு பஸ் கெடைக்கும். பாத்து கேட்டு போய்டு வாங்க” என்றார். வண்டியை விட்டு இறங்கிய பின் ட்ரைவரிடம் “இந்தாங்க இத வச்சுகோங்க” என்றேன். ட்ரைவர் “அதலாம் வேணாம். ஒதவி செஞ்சு ஒருத்தன் அடையற விசாலத்த இப்படி பணங்கொடுத்து குறுக்கப் பாக்கறீங்களே சார். நாட்டுல எல்லாத்துக்கு மாத்தா இது இருக்கு. மனுசன் மனசுக்கு மட்டும் வேணாமே. என்ன சொல்றீங்க? ஓயாம லாரி ஓட்டுறவன் நான். எதோ என்னால முடிஞ்சது.” என்று புன்னகையுடன் மறுதலித்தார். “எல்லாரும் இப்படி பண்ணமாட்டாங்கள்ள ணா. அதனால தான்…” என்றேன். “அவங்கள வுடுங்க சார்” என்று லாரியின் கியரை மாற்றினார்.
மணி ஆறு முப்பதுக்கெல்லாம் என் ஊருக்கு பஸ் ஏறிவிட்டேன். அரசங்கொல்லை என் ஊர். மீண்டும் எண்ண ஓட்டங்கள். அந்தப் பெண்ணின் அரற்றல். அந்த வேன் ட்ரைவரின் மன்றாடல். அந்த லாரி ட்ரைவர் புன்முறுவல் என்று மாறி மாறி. ஒரு வழியாக ஊர் வந்து சேர்தல் ஆயிற்று. வீட்டுக்கதவை தட்டியவுடன் அப்பா கதவு திறந்தார். புத்தகத்தை கீழே போட்டு விட்டு ஓடி வந்து தன் கண்ணாடி வலையல்கள் நொறுங்க கட்டி அணைத்தாள் தங்கை, சமையல் வேலையைப் போட்டது போட்டபடி விட்டு வேகமாய் வந்து, தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்து வந்து கையில் கொடுத்து என் தோளில் மெளனச் சாய்வு சாய்ந்தாள் மனைவி. “என்னடா பையன், அசப்புல உன்ன போலயே மூக்கும் முழியுமா இருக்கான் பாரு” என்றார் அப்பா. கையில் இருந்த என் மகன் மெலிதாய் சிரித்தான். நானோ அழுதேன். ஆம் என் முகத்தை தான் நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் எந்த கண்ணாடியும் என் எதிரில் இல்லை இப்போது.
விழித்த என் கண்களின் ஈரத்தை வற்றச்செய்தது பேருந்தின் ஜன்னல் ஓரம் வீசும் எதிர்காற்று. இரண்டு நாட்களுக்குப் பின் மீண்டும் வேலைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். என் உடலில் முளைத்த சிறகுகளை எவரோ பிடுங்கி எறிவதைப் போல ஒரு வலி மிஞ்சியிருந்தது. அறைக்கதவைத் திறந்தபோது, தள்ளிய வேகத்தில் இருந்த காற்றழுத்த வேறுபாட்டினால், திறந்திருந்த ஜன்னலின் அடித்தளத்தில் இருந்து ஒரு இறகு அசைவுற்று கதவின் பின்புறம் வந்து விழுந்தது.