“சேவல் களம்”– பாலகுமார் விஜயராமன்.
“எல்லோருக்கும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. ஆனால் (நல்ல வேளையாக ) எல்லோரும் எழுத்தாளர்களாகிவிடுவதில்லை,” என்று சுஜாதா தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிடுவார். அண்மையில்கூட ஓவியர் ஜீவா இதே போல ஒரு வரியை சொல்லியிருந்தார். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!!
நம்முடைய வாழ்க்கை அனுபவங்கள் எல்லாமே நமக்கு சுவாரசியமாக, சுவையாகத்தான் தெரியும். ஆனால் அவற்றை பதிவு செய்யும்போது பிறருக்கும் சுவாரசியமாகவும், சுவையாகவும் தோன்ற வேண்டுமென்றால், ஒருவர் அதுவரை எழுத்தில் பதிவாகாத ஒரு மாற்று வாழ்வை விவரிக்க வேண்டும். அல்லது, ஏற்கனவே அவ்வாறு அறியப்பட்ட வாழ்வின் ஒரு புதிய கோணத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்படியுமில்லாமல், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட கதைக்களமாக இருந்தாலும்கூட, அந்த வாழ்வின் சில பகுதிகளிலாவது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச வேண்டும். இது போன்ற கூறுகள்தான் டயரிக் குறிப்புகளை இலக்கியமாக மாற்றுகின்றன.
அண்மையில், பாலகுமார் விஜயராமன் அவர்கள் எழுதிய சேவல் களம் (சேவற்களம் என்பதுதானே சரி?) நாவலை படித்தபோது, மேலே சொன்ன உணர்வைத்தான் நான் அடைந்தேன். நாவல், மூன்று திரிகளாக பிரித்து சொல்லப்பட்டு இறுதியில் இணைகிறது. ஒன்று, சேவல் சண்டையும் அதன் சித்திரமும். இரண்டு, அதன் நாயகரான ராமர் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை, மூன்றாவதாக ராமரின் தங்கை ஆண்டாள் மற்றும் அவரது பிள்ளைகளின் வாழ்க்கை.
முதல் திரி, இதுவரை தமிழ்ப் புனைவின் பரப்பில் அதிகம் சொல்லப்படாத சேவல் கட்டு எனும் ஒரு விஷயத்தை தனது பேசுபொருளாக எடுத்துக் கொண்டதில் ஒரு புதுமை இருக்கிறது.சேவல் சண்டையை,சேவல்களின் பல்வேறு வகைகளை, சண்டைக்கான முன் தயாரிப்புகளை, சண்டைக்கு இடையே சேவல்களுக்கு செய்யப்படும் சிகிச்சை முறைகளை, எழுதியிருப்பது எல்லாம் மிக சுவாரஸ்யமாகவே இருக்கிறது. அதில் இருக்கும் ஒரு சரளத்தன்மை வாசிப்பை லகுவாக்கவும் செய்கிறது. அந்த விளையாட்டின் நுட்பங்களை அறியாத வாசகனுக்கு இது இயல்பாகவே ஒரு நல்ல சுவாரசியமான சித்திரத்தைத் தருகிறது. இந்தத் திரியின் கிளைமாக்ஸ் போல வரும் ராமர் பார்ட்டியின் உள்நாட்டு சாம்பல் வளவி சேவலுக்கும் ஹைதராபாத் பார்ட்டியின், நூரி வெள்ளைச் சேவலுக்குமான போட்டி மிக நன்றாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சேவல்களின் இயல்பான அறிவுக் கூர்மை, ஆபத்திலிருந்து தப்பும் வழிகள், தாக்குதல் முறைகள் எல்லாம் படிக்க சுவாரசியமாக இருக்கின்றன.
ஆனால், இந்த நாவலின் மற்ற இரண்டு திரிகளில் சொல்லப்படும் ராமரின் குடும்ப வாழ்க்கை மற்றும் அவரது தங்கையின் குடும்பத்தினர் வாழ்க்கை மிகச் சாதாரணமாக இருக்கிறது. உண்மையில் தீவிர இலக்கிய பரப்பில் இம்மாதிரியான எழுத்துக்கு என்ன இடம் என்றுதான் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லோரும் நல்லவராக விளங்கும் இந்த விக்ரமன் சினிமா பாணி கதையில் ராமரின் இரண்டாவது பிள்ளை கம்ப்யூட்டர் விற்பன்னராக வந்து சில வில்லத்தனங்களை செய்கிறான். அதுவும் அப்படியே விட்டுப்போய்விடுகிறது. இதெல்லாம் அந்தக் கால, ராணி முத்து, மாலை மதி போன்ற புத்தகங்களில் வரும் ஒரு கதை போலத்தான் இருக்கிறது. முன்னுரை எழுதியுள்ள பெருமாள் முருகன் இதையே வேறு வார்த்தைகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு 200 பக்க நாவலில் பாதிக்குப் பாதி, சேவல் சண்டை பற்றியது என்றால், இந்த குடும்பக் கதை மீதி. அதில் ஆசிரியருக்கு காத்திரமாக சொல்வதற்கு அதிகமில்லை என்பதாலேயே அந்த கடாவெட்டுக்கு ஆடு தேர்ந்தெடுக்கப் போகும் காட்சியும், காதுகுத்து கடா வெட்டு கொடுக்க குல சாமி கோவிலுக்குப் போகும் காட்சியும் அவ்வளவு நீளமாக படித்து சலித்துப் போகும் வண்ணம் எழுதுபட்டுள்ளது தெரிகிறது. பொறுமையையும் சோதித்துவிடுகிறது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த வாசகர்களுக்கு வேண்டுமானால், அது அட, நம்ம வூட்ல நடக்கறத அப்டியே எழுதியிருக்காம்பா, என்ற வியப்பையும் மகிழ்ச்சியையும் தரலாம். அவ்வளவுதான். பின் இதில் ஒரு ஆச்சரியமான விஷயம், இந்தப்படைப்பில் எங்கும் சாதி குறிப்பிடப்படாதது. இதுவே இதை ஒரு தொலைகாட்சி தொடராகவோ திரைப்படமாகவோ எடுப்பதற்கு மிகவும் தோதாக மாற்றுகிறது. இன்று தீவிர இலக்கியம் என்ற போர்வையில் வரும் பெரும்பாலான படைப்புகளுக்கு இந்த ஒரு நோக்கம் இருப்பதாக தோன்றுகிறது.
இம்மாதிரியான ஒரு படைப்பு ஒரு வணிகப் படைப்பாக, நான் மேலே சொன்ன மாதாந்திர வெளியீடுகளில் வந்திருக்குமானால், நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. காலச் சுவடு போன்ற தீவிர இலக்கிய படைப்புகளை வெளியிடும் ஒரு பதிப்பகம் வழியாக வரும்போது, பெருத்த ஏமாற்றமே ஏற்படுகிறது. அவர்களது தேர்வில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.
மீண்டும் முதலில் சொன்ன விஷயத்துக்கு போவோம். எல்லாரிடமும் சொல்வதற்கு ஒரு கதையாவது உண்டு. பலர் அதை சொல்லவும் சொல்வார்கள். ஆனால் அது எல்லாமே ஒரு நல்ல இலக்கிய படைப்பாகி விடாது.