வா, சகோதரி, என்னை நீ அறிய மாட்டாய். உன்னையும் நான் இதற்கு முன் அறிந்ததில்லை.கொலைகள் செய்யத் துணிந்த மகன்களைப் பெற்ற அன்னையருக்கு முன்பின் தெரிந்திருக்க என்ன அவசியம் உண்டு?நான் இறந்து போய் அவனை என் சாவிற்க்கு வரவழைத்தேன்.அதன் பிறகு வெம்மையால்,ஈடற்ற புரிபடாத கருத்துச் சிதறல்களால்,செல்லும் திசையின் விசை புரியாது எண்ணங்கள் என்றே அறியப்படாத எண்ணங்களால் கொலை செய்தவன் என் மகன்.உன் மகனோ தன் மகனைக் கொன்றிருக்கக்கூடும் எனக் கருதுபவனை, உன்னால் தான் கொன்றதாகச் சொல்லித் திரியும் ஒரு கொலைகாரன்.சம்சயமற்ற, முகாந்திரமற்ற கொலைகள்.
வீட்டின் உபயோகமற்ற பழைய பொருட்கள் தான் முதிய அம்மாக்கள்.பணம் இருப்பவன் ஆளை அமர்த்துகிறான். இல்லாதவன் கருணையுடன் முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுகிறான்.உனக்குத் தெரியுமா,அல்ஜேயிலிருந்து எண்பது கிலோ மீட்டர் தூரத்தில் மாரங்கோவில் ஒரு முதியோர் இல்லத்தில் என்னை விட்டுவிட்ட பிறகு அவன் என்னைப் பற்றி ஒரு பழைய மேஜையை அப்புறப்படுத்திவிட்டதாகத்தான் நினைத்திருந்தான்.சவப்பெட்டியின் மூடியைத் திறந்து என் முகத்தைப் பார்க்கக்கூட அவன் நினைக்கவில்லை.ஊராருக்காக அவன் அணிய வேண்டியிருந்த கறுப்பு டையும், கையில் கட்டிய கருப்புப் பட்டையும், அந்தக் கொளுத்தும், வியர்க்கும் வெய்யிலும்,மதிய நேரப் பயணமும் அவனிடம் இருந்த கொஞ்ச நஞ்ச ஈரத்தையும் உறிஞ்சியிருக்கலாம்.சவப்பெட்டியில் இருந்தது அவன் உடலையும், உயிரையும் சுமந்த அவனை முடிந்த வரைக் காப்பாற்றிய ஒரு அன்னை என அவனுக்குத் தோன்றவேயில்லையே!மாறாக மாலை நேரத்தின் அழகிய வெளிச்சம் சிறிய சவ அறையில் பரவியிருந்ததை, இரண்டு பெரிய வண்டுகள் கண்ணாடிக் கூரை மீது ரீங்கரித்துக் கொண்டிருந்ததை அவன் பார்த்தான்.சிறு சங்கடத்தைக்கூட தாங்க விரும்பாதவனாக, வெள்ளைச் சுவரில் பிரதி பலித்த வெளிச்சத்தைப் போக்க, விளக்குகளை அமர்த்தச் சொல்லி காவல்காரனை அவன் கேட்டபோது பிரிந்த உயிர் போக வெளிச்சப் பாதை தேவை என்றே அவனுக்குத் தோன்றாதது அவன் தன்னை மட்டுமே மையம் கொண்ட உயிராக இருந்திருக்கிறான் என்பதை இப்போதும் கசப்புடன் நினைவு கொள்ள முடிகிறது.அவன் காப்பியை ருசித்துக் குடித்தான்;அவனால் இயற்கையை இரசிக்க முடிந்தது.மாரங்கோ நகரத்தைக் கடலிலிருந்து பிரித்த குன்றுகளுக்கு மேல், வானம் இளம் சிவப்பாக இருந்ததாம்.அழகான பகல் உருவாகிக்கொண்டிருக்க கடல் காற்றில் உப்பின் வாடை இருந்ததாம்.மண் உண்ணும் உப்பென்று என்னையும் அவன் நினைத்திருக்கக் கூடும்.திருமதி மெர்சோவாகிய என்னிடத்தில் தோமா பெரெ,என் அன்பு நண்பர், நேசத்துடன் பழகினார் என்பது அவன் மனதில் ஒரு சீற்றத்தை உருவாக்கியதோ என்னவோ?சவ ஊர்வலம் தொடங்கி நகர நேரம் எடுத்தது அவனுக்குச் சலிப்பைத் தந்தது. என்னை அவன் குன்று வரை வானோக்கி வளர்ந்த சைப்ரஸ் மரங்களின் ஊடாகப் புரிந்து கொண்டானாம்.வெளிறிய நீல நிற ஆகாயம்,சுற்றிலும் இருந்த சலிப்பைத் தரும் கருமை,வண்டியின் அரக்குக் கருமை, கொளுத்தும் வெயில்,தோல், குதிரைச் சாணம்,வார்னிஷ், தூபம் இவற்றால் அவன் எண்ணங்கள் குழம்பத்தொடங்கின என நான் அறிவேன்.
என் கல்லறையின் மீதிருந்த ஜெரேனியப் பூக்கள்,சவப் பெட்டியின் மீது பரவியிருந்த ரத்தச் சிவப்பான மண்ணின் நிறம்,அதோடு கலந்திருந்த வேர்களின் வெண்மையான சதை இதையெல்லாம் பார்த்த அவனுக்கு நான் விரும்பிய லில்லிப் பூக்களைக் கல்லறையில் வைக்கத் தோன்றவில்லையே!வெல்வெட் ரோஜாக்களைப் போட்டு ஒரு சொட்டு கண்ணீர் விடவில்லையே!அவனுக்காக நான் தூங்காமல் விழித்த நாட்களைவிட இப்போது பன்னிரண்டு மணி நேரம் நன்றாகத் தூங்குவானாம்!
சகோதரி,எந்த ஒரு இறப்பும் எந்த ஒரு நிகழ்வையும் நிறுத்திவிடுவதில்லை அல்லவா? பசி, வயிற்றிலோ,உடலிலோ,அற்றுப் போய் விடுவதில்லை.கடலில் மாரி கார்தோனாவுடன், அதுதான்,அவனுடைய ஒரு காலத்திய காதலியோ எனக் கருதத்தக்கத் தோழியுடன் சல்லாபித்துக்கொண்டே ‘நேற்று என் அம்மா இறந்து விட்டாள்’ என்று இவன் சொல்கையில் சற்றே பின் வாங்கினாள் அந்தப் பெண்.மிகை உணர்ச்சி இல்லாமல் போகலாம்; இனி பார்க்கவே முடியாத தாயை இழந்த மறு நாள் கடலில் காதலியுடன் உல்லாசமாடுவது மனப்பிறழ்வில்லாமல் வேறென்ன?இதெல்லாம் அவன் குற்றத்தை திட்டமிட்டுச் செய்ததாக அல்லவோ கொள்ளப்படும்?
சாப்பிடுவதில் என்ன ஒரு சோம்பேறித்தனம்?ஒழுங்கில்லாத, நியமங்கள் அற்ற வாழ்க்கை அவனை தூக்கு மேடைக்குத்தானே கொண்டு போயிற்று.அவனை இதற்க்காகவா சுமந்தேன்? என்ன நான் அழுகிறேனா, இன்னுமா கண்ணீர் வற்றவில்லை?பார்க்கப் போனால் எனக்கு அன்பைத் தந்திருக்க வேண்டிய இரு மனிதர்கள் அவனும், என் கணவருமே!விதி யின் விளையாட்டைப் பார் தோழி, பெரெ காண்பித்த அந்தப் பாலைவனச்சோலை அன்பு அவனுக்கு உறுத்தியிருக்கிறது.
நான் இரு பிள்ளைகளை இழந்தவள் திருமதி மெர்சோ.அதிகாரத்தால், இனத்தின் பெயரால்,மதங்களின் பெயரால், மொழியால், நிலப் பிரிவினைகளால், சிதைக்கப்படும் ஒரு பெண் நான், தாயும் நான்.ஸூஜ் என்ற மூசா முதல் மகன், ஹரூன் இரண்டாமவன்.நாடக அரங்கம் காலியாகிக் கொண்டிருக்கும் போது மேடைக்குப் பின்னால் நிலவும் மௌனத்தை விற்கும் சில்லறை வியாபாரியைப் போல் ஹரூன்.உலகில் எவருமே மூசாவை ‘மதியம் இரண்டு மணி’ எனச் சொல்லலாம்.ஆனால், அவனுடைய உடன்பிறப்புஅந்த நேரத்தையே உயிர்ப்பித்துக் கொண்டு அதற்காகவே வாழ்ந்தானே,அம்மா.அதென்ன ‘மதியம் இரண்டு மணி’ எனக் கேட்கிறாயா, திருமதி மெர்சோ? உன் மகன், மூசாவைக் காரணங்களற்று கொலை செய்த நேரம்.எங்கள் வாழ்வின் போக்கை மாற்றி என்னையும், என் இரண்டு மகன்களையும், இன்னும் ஒர் உயிரையும் காவு கேட்க வித்திட்ட நேரம்.உன் மகன், அந்தப் பிரெஞ்சுக்காரன், உணர்த்தியது போல் எனக்கு மகள் , அதுவும் நடத்தை கெட்ட மகள் இல்லை.வஞ்சிக்கப்பட்டவர்கள் காலம் காலமாகச் சுமந்த அத்தனைக் கோபங்களையும், கேள்வி கேட்டு முஷ்டி உயர்த்தும் பெரிய கைகளையும், வான் முட்டும் உயரத்தையும் கொண்டவன் மூசா.வதந்திகளை நம்பி மூசா என்னிடம் கடுமையாகச் சண்டை போட்ட போதெல்லாம், காணாமல் போன என் கணவனை நான் நினைப்பதுண்டு; என்னுடைய வாழ்க்கை தன்னுடைய விருப்பப்படி இருக்க விழைந்த என் மகனிடத்தில் பெராவை மறைமுகமாக விமர்சித்த உன் மகனை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.ஹரூனிற்கு என் நேர்மையின் மீது சந்தேகமாம்!இந்தப் பிள்ளைகளுக்கு என்னதான் வேண்டும்,திருமதி. மெர்சோ?தந்தையை, பிரான்ஸில் பார்த்ததாகச் சொல்லப்பட்ட அவரை, எங்கள் வாழ்விலிருந்து எப்படியோ காணாமல் போன அவரை, இவன் கற்பனையில் கறுப்பு ஜெல்லபா என்ற நீண்ட அங்கிக்குள் ஒளிந்து கொண்டு, வெளிச்சமற்ற மூலையில் சுருண்டு கொண்டிருப்பதாகப் பார்ப்பதை என்னவென்று சொல்வேன்?
என் மகனைப் பொறுத்த வரையில் மொழி ஒரு வெறியாகத்தான் புலப்பட்டிருக்கிறது.அண்ணன் இவனுக்குத் தந்தையானானாம், இவன் அவனது இடத்தை எடுத்துக்கொண்டானாம்,விந்தையாக இல்லை?இதில் என் இடம் எது, ஏன் அந்தச் சிந்தனையே தோன்றவில்லை?என்ன சொல்ல, ஒவ்வொருவரும் அவரவர் பாதையில்.ஆனால்,பயணத்திற்கு நாம் காரணமாம், சிரிப்பாக இல்லை?என்ன கேட்கிறாய், நாங்கள் வாழ்ந்த ஊரா?எந்த ஊர் யாருக்குச் சொந்தம் என்று கேட்கப்பட்ட ஊர்.கடலை நோக்கித் தன் கால்களை விரித்தபடி இருக்கும் நகரம்.பழைய பேட்டைகளான ஸிதி–எல்–ஹூவாரியை நோக்கி, காலேர் டெஸெஸ்பான்யோல் வழியாக இறக்கத்தில் செல்கையில் துறைமுகம் தெரியும்.நடைபயிற்சிப் பாதைகள் உள்ள லெதாங்கில் மது அருந்த, குற்றவாளிகளுடன் பழக இவன் செல்லும் பாதை எனக்குப் பரிச்சயமே.
அல்ஜேயிலிருந்து,கடலிலிருந்து, பாப்–எல்–உவெத் என்ற எங்கள் பேட்டையிலிருந்து நான் ஹரூனையும் இழுத்துக்கொண்டு வெளியேறினேன்.ஏன் என அவனுக்குப்புரிந்த பாடில்லை; அவனையும் விதி கடற்கரையில் புதைத்துவிடுமோ எனப் பயப்பட்டேன். மூத்த மகன் இறந்த சோகத்தை,உயிரின் மதிப்பற்று அவன் மறைந்து போக நேர்ந்ததை எங்கேயோ போய் தொலைக்க நினைத்தேன்.நாங்கள் கிளம்புகையில் வந்தவளிடத்தில், அதுதான், அந்த சுபைதா, எனக்கென்ன வைத்திருக்கிறது?ஹரூன் அவளில் மூசாவின் இறப்பிற்க்கான கொச்சையான காரணம் தேடியதை நான் எப்படிப் பொறுப்பேன்?உயர்ந்த கட்டிடங்கள்,நசுக்கப்பட்ட மக்கள், சேரிகள்,அழுக்கான பொடியன்கள்,முசுட்டுக் காவலர்கள்,அராபியர்களைச் சாகடித்த கடற்கரைகள்–இவற்றை விட்டுப் பிரிவது நல்லதுதானே?இந்த ஓரான் நகரப் பாடலைக் கேட்டிருக்கிறாயா?-‘பீர் அராபியப் பானம், விஸ்கி ஐரோப்பாவிலிருந்து, மதுக்கூட ஊழியர்கள் கபீலியாவிலிருந்து, தெருக்கள் பிரான்ஸிலிருந்து,வாசல் முற்றங்கள் ஸ்பெயினிலிருந்து..’
வருத்தப்படாதே,உலகு என்னவோ ஒன்றுதான்;காலால் நிலமளந்து பிரித்தவன் மனிதன். பின் தோலால்,மொழியால்,இயற்கைச் செல்வங்களால், பின்னும் எவ்வெவற்றாலோ பிரித்தவன் மனிதன், அதில் மூடப் பெருமைகள் வேறு.என் மகன் மெர்சோ இருக்கிறானே அவனுக்கு எல்லாவற்றிலும் அலுப்பு மட்டும்தான் இருக்கிறது.இல்லாவிட்டால் தோழனுடன் சேர்ந்து கொண்டு புகை கக்கும் வாகனங்களின் வாலைப் பிடித்துக் கொண்டு ஓடுவானா? தன்னை உத்வேகம் கொள்ள வைக்கும் முயற்சி அது என்பது கூட அறியாதவன்.தன் குடியிருப்பில் இருக்கும் முதியவர் சலாமானோவை அவருடைய ஸ்பானியல் நாயுடன் ஒப்பிட்டுப் பேசும் போது அந்த வார்த்தைகளால் என் காதுகள் கூசின.அவருக்கும், அதற்கும் இடையில் இருப்பது ஒரு விதத்தில் எனக்கும், அவனுக்குமான உறவோ அல்லது அவனுக்கும் எனக்குமான உறவா?வெறுப்பும் பயமுமாக ஒருவரை ஒருவர் அண்டி வாழ்வதும் தண்டனை தான்.இவனது விருப்பங்களைப் பார்த்தாயா,ரேமோன் சேந்தேஸ்,அவனும் அதே குடியிருப்பில் இருப்பவன், பெண்களை வைத்துப் பிழைப்பு நடத்துபவன்,யாருக்கும் பிடிக்காத அவனை இவனுக்குப் பிடிக்கும்;அவன் பேச்சு இவனைக் குழியில் வீழ்த்தும் என அறியாத மமதை.நான் நினைக்கிறேன் ,மெர்சோ தானே அறியாமலேயே நிழலுலகிற்க்கு ஆசைப்பட்டிருக்கிறான்.ஒரு பெண்ணை வைத்துப் பராமரிப்பதால் அவள் தன்னிடம் மிக மதிப்போடும், உண்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் ஆண் மேலாதிக்க மனோபவம் கொண்டவன் அந்த ரேமோன்.அவள் அவனுக்கு மனைவியில்லையே?அவளும் வேண்டும் அவனுக்கு, ஆனால், அவள் சம்பாதித்து தன் குறைந்த செலவுகளையாவது பார்த்துக்கொள்ள வேண்டுமாம்,எத்தனை ஆசை!அவளும் டாம்பீகத்திற்க்காக செலவு செய்பவள் தான்;அடி வாங்கியும் அவள் மாறுவதாக இல்லை.அவர்கள் விஷயம் எப்படியோ போகட்டும்.அந்த ரேமோனுடன் இவனுக்கு ஒன்றும் ஆழ்ந்த நட்பு கிடையாது;ஒரு வேசிக்கும், அவளை வைத்திருப்பவனுக்கும் இடையில் இவன் எதற்காக நுழைய வேண்டும்?அதனால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்–இவன் நிழலுலகிற்க்கு ஏங்கினானோ என்னவோ?வாழ்வின் சமூக வரையறைகளை நல்லவற்றிற்காக இவன் தாண்டவில்லை.அந்தப் பெண்ணைத் தண்டிப்பது சரிதான் என்று ஒரு பட்சமாக இவன் எப்படிச் சொன்னான்?அந்த ரேமோன் கொடுக்கும் கட்டம் போட்ட காகிதம், இவனை மேலும் இக்கட்டில் தள்ளும் செயல்,அதில் ஊதா நிற மையினால்,சிவப்பு நிற மரத்தினால் ஆன பேனா ஸ்டான்ட்டிலிருந்து, மூர் இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை வசை பாடி,கடிதம் எழுதினான் என் மகன். இவன் படித்ததே இதற்க்காகத்தானோ என்னவோ?மாரியுடன்,அதுதான் காதலிக்காமல்,எந்த ஒரு பந்தத்தையும் விரும்பாத, ஆனால் பசிக்கு உணவு போல, இவன் விரும்பும் பெண், சொல்லியும்கூட, ரேமோனின் அறையில் ஒரு பெண் மிருக அடிகள் வாங்கி அலறும் போதும் கூட போலீஸைக்கூப்பிடப் பிடிக்காத இவன், சட்டத்தின் பிடியில் சிக்கியது எத்தனை முரண் நகை!அந்த மாமாப்பயலுக்கு இவன் சாட்சி சொல்ல ஒத்துக்கொண்டதில் பெண்ணைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் இவன் மனப்போக்கு புரிகிறதா, சகோதரி.தொலைந்த நாயைத் தேடி அந்தக் குடியிருப்பின் சலாமானோ அழுகையில் இவனுக்கு என் நினைவு வந்ததாம்;சொந்தங்களை இறுத்தி வைத்துக்கொள்ளவும் முடியவில்லை, விலக்கி விடவும் முடிவதில்லை;மனிதன் ஏன் மிருகங்களைப் போல் குடும்பமற்று இருக்கக்கூடாது?சலாமானோ,மறைமுகமாக இவன் துக்கம் அனுசரிக்காமல் இருப்பதைப் பற்றியும்,என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்திருப்பதால் அந்த வட்டார வாசிகள் இவனை மதிக்காதது பற்றியும் சொன்னாலும், என்னவோ இறைவன் கட்டளையின் விதி போல் இவனுக்கு இவன் செயல்பாட்டில் அப்படி ஒரு நிம்மதி!எனக்கு சகவயது நண்பர்கள் கிடைப்பார்கள் என்று ஒரு விளக்கம் வேறு;அது போகட்டும் விடு.அவன் மாரியுடனும் ரேமோனுடனும் பஸ்ஸில் கடற்கரைக்குச் செல்ல இருக்கையில் இவர்களைக் குறிப்பாக ஆண்கள் இருவரையும் நோட்டம் பார்க்கும் அராபியர்களைப் பார்க்கிறார்கள்.இவனுக்கு அப்போதும் கூட ரேமோனின் விவகாரத்தில் என்ன சம்பந்தம்?அல்ஜேயின் புற நகர்ப் பகுதியிலிருந்து மேடாக இருந்த திறந்த வெளியைக் கடந்து, பழுப்புப் பாறைகளைப் பார்வையிட்டு ,ஈச்ச மரங்களின் பின்னிருக்கும் வீடுகளைக் கவனித்து ரேமோனின் நண்பன் மாசோனின் மரக்குடிலுக்குப் போனான்.கடலில் காதல் விளையாட்டு, அவன் வீட்டில் முட்டமுட்ட சாப்பாடும், குடியும்.மாரியைக் கல்யாணம் செய்து கொள்ளும் இச்சை,இவன் எப்போதிருந்து இப்படி ஒரு கலவையானான் என்று எனக்குப் புரியவில்லை, தோழி.உச்சி வெயில் மணலில் செங்குத்தாக விழுகிறது;சூரியன் கடலில் பட்டு பளீரென்று கூசுகிறது, இதில் நடந்து போக விரும்பும் இவர்களின் இரசனையை என்ன சொல்ல?எதிர் பார்த்திருக்கும் மோதல் நிகழ்ந்தது.இரு அராபியர்கள், நீல அங்கிக்காரர்கள், இரத்தம் வர ரேமோனைக் கையிலும் வாயிலும் கத்தியால் குத்தினார்கள்; பின்னர் ஓடியும் விட்டார்கள்.ரத்தம் கொப்பளிக்க நிற்கும் அந்த ரேமோன்– பாவி, முடிவில் என் ரத்தத்தை அல்லவா குடித்துவிட்டான்?
இதை நான் எப்படி ஒப்புக்கொள்வேன்?மணலில் படர்ந்து உள் உறிஞ்சப்பட்ட அந்த சிவப்பு இரத்தத்தில் என் முலைப் பாலும் கலந்திருக்கிறதே?அந்தப் பாழாய்ப் போன ரேமோனை உன் மகன் ஏன் மீண்டும் பின் தொடர்ந்து செல்ல வேண்டும் அவன் தடுத்தும் கூட?வேதம் ஓதும் சாத்தான் என்பதைப் போல் ரேமோனுக்கு அந்த நீல அங்கி அராபியர்கள் கத்தியைக் காட்டி மிரட்டுகையில் மட்டும் துப்பாக்கியை உபயோகிக்க அறிவுரை வேறு!கானலில்,ஈரமேயற்ற சூழலில், வெயிலின் அசாத்தியமான சாடலில்,சிறு ஓடையின் சலசலப்பில், அந்த மற்றொரு அராபியன் சிறு புல்லாங்குழலில் வாசித்த மூன்று ஸ்வரங்களில்,ஏன் உன் மகன் கொடூரத்தை மட்டும் பார்த்தான்?பெண்களிடம் நடந்ததைச் சொல்ல அலுப்பாக இருந்ததாம் உன் மகனுக்கு;பெண்கள் மீள மீளக் கேட்பதில் உணர்ச்சிகளின் தீவிரம் மழுங்கடிக்கப் படுகிறது என்ற மனோ தத்துவம் தெரியவில்லை உன் மெர்சோவிற்கு. மீண்டும் அவன் துப்பாக்கியுடன் கடற்கரைக்குப் போனான் என ஊகித்துக் கொள்கிறேன்.
ஆம், அப்படித்தான் நடந்தது; நிழலையும், நிழல் தரும் சுகத்தையும் எண்ணிக்கொண்டுதான் அவன் அங்கு வந்தான்.இப்போது ஒரே ஒரு அராபியன் தான் இருந்தான்;அதே வெயில். மணற்பரப்பின் அதே பிரகாசம், பழுக்கக் காய்ச்சிய உலோகக் கடலில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நங்கூரம் பாய்ச்சியது போல் அசைவற்றிருந்த அந்தக் கொடிய பகல், என்னை அடக்கம் செய்த தினத்தின் அனல் மழை வெம்மை.மன்னிப்பு, நான் இப்போது கேட்பது, அதுவும் அவனுக்காக கேட்பது அபத்தம்,ஆனால், மன்னித்துவிடு சகோதரி,ஒன்றும் பின்பு நான்குமாக அவன் வெயிலைப் பழி தீர்த்துக் கொண்டான்,அது எவ்வகையிலும் நியாயமற்ற,புத்தி பேதலித்த செய்கை.உன் கண்களில் இப்பொழுதும் பெருகும் நீர் என் மனதினுள் குருதியாகக் கொப்பளிக்கிறது.
ஆம் நாம் அன்னையர். நம் உள்ளம் இப்படிதான் பெரும்பாலும் இருக்கிறது. என்னை கிட்டத்தட்ட வேசி என நினைத்த மூத்த மகன், நான் அல்லல் படுவதைப் பார்த்து ஆனந்திக்கும் இரண்டாம் மகன்;சிறு வயதிலியே இமாமிடம் பொய் சொன்னவன் ஹரூன்.மூசா தன் இயற்பெயரை,தன் உயிரை, தன் பிரேதத்தைக் கூட ஒரே நாளில் இழந்துவிட்டான். என் இரத்தம் கொதிக்கிறது இன்றும்.ஹரூன் உன் மெர்சோவைப் பற்றி மிகச் சரியாகத்தான் சொல்கிறான்–அவனது வாழ்வில் எல்லாம் இருந்தது– வேலை,நண்பர்கள், காதலி, பாரிஸுக்குச் செல்ல வாய்ப்பு– நிச்சயமாக அவன் கொடூர மனம் படைத்தவன்.வெளுத்த வெள்ளைத் தோல் சருமங்கள் எங்களிடத்தில் வந்து பால் கலந்த காஃபியைப் போல் சுவையற்று எங்களையும் வாழவிடாமல்… எத்தனை அவலம்!இதில் ஒரு இரும்புக்காப்பினைப் போல் உறுத்துகிறது என்றாலும் செயல்படுவது, ஒருவன் பிறப்பினால் கொண்டுள்ள மதமே!இந்த அறிவிலி மகன்கள் ஒருக்காலும் இதை உணரப்போவதேயில்லை,அம்மா; என்னை, என் வஞ்சத்தை, என் ஆற்றாமையை, என் ஆளுமையை ஹரூன் தூக்கிக் கொண்டு அலைந்தானாம்; அவனை அப்படியே புரிந்து கொண்ட மெரியம் கூட பின் அவனை விட்டு ஏன் போனாள்?நீங்களும் சரி, நாங்களும் சரி வெள்ளிக்கிழமைகளை சாத்தானின் தினம் எனச் சொல்வதில்லை. ஹரூனிற்க்கு அவனது நாள்காட்டியில் சாவுக்கு மிக அருகில் இருக்கும் நாள் எனப் படுகிறது. எத்தனை நஞ்சுடைய எண்ணம்?சாவிற்கு அருகில் இருப்பவர்கள் எல்லோருமா இறைவன் அருகில் இருப்பதாக உணர்கிறார்கள்? இதில் இவனுக்கு வெட்டிப் பெருமை வேறு.பொதுவாக, பாய்மரக் கப்பலின் தொய்ந்து போன பாயைப் போல வெள்ளிக்கிழமைகளில் வானம் தோன்றுமாம், உச்சி வேளை நெருங்கும் போது உலகம் முழுதும் பாலையாகத் தென்படுமாம். இவனுடைய கவித்துவ சோகத்தை, சுய வெறுப்பை, இறை நம்பிக்கை இல்லாத திமிரை என்னவென்று சொல்வது?இப்படிப்பட்டவர்கள் உலகோர் வாழ்வதைப் போல் இயல்பாக வாழ்வதில்லை என்பதினால்தான் இந்த மதங்கள், இறைகள், நியமங்கள் தோன்றியதோ, தோழி?மூசா ஒரு முறை தான் இறந்தான்–ஆனால், எனக்கும், என் மகனுக்கும் இவன் இறக்காத நேரம் இல்லை அம்மா. கண்ணாடி ஜன்னலில் வந்து மோதும் ஈயைப் போல் மரக்குடிலிலும்,அந்தக் கடற்கரைப் பாறையிலும் நாங்கள் மோதிக்கொண்டேயிருந்தோம்.காற்றில் அனாமதேயமாக கலந்து போக என் மகன் என்ன அப்படி செய்துவிட்டான், சொல்?சூழல் இறுக்கங்களைச் சொல்லிக் கேட்போரை வசப்படுத்தும் வித்தை உன் மகனுக்கு வாய்த்திருக்கிறது.ஆனால், என் மகன் கண்ட மற்றொருவனை, என்னால் பார்க்க முடிகிறது.மற்றொருவனா ,யார் அவன் என வியக்காதே, அம்மா. உனக்குத் தெரியாதா,எப்போதுமே ஒரு மற்றவன் இருப்பான், தோழி. காதலில், நட்பில் பயணத்தில்.அந்த மற்றவனைக் கொன்றது, ஒரு வகையில் ஈடு செய்யும் செயல்.ஆனால், என் வஞ்சத்தைத் தீர்த்ததாக ஹரூன் மாற்றப்பார்ப்பது முற்றான உண்மையில்லை,அம்மா.நான் சொல்லி இவன் இமாமிடம் போகவில்லை, நான் தடுத்தும் சிறு வயது தொடங்கி பொய்யில் ஆரம்பித்து குடி வரை போனவன், தொழுகைக்குச் செல்லாதவன்,பழி தீர்க்க மட்டும் என் பெயரை ஏன் குறிப்பிடுகிறான்?இவன் மூசாவைத் தந்தையெனத் தானே உருவகித்தான்–இவனுக்கும் ரத்தம் கொதிக்கவில்லையா? நான் இல்லாவிட்டாலும் அந்த ‘மதியம் இரண்டு மணி’ இவனை விட்டுப் போய்விடுமா?
போகாது சகோதரி,நீ இழந்ததும்,அவன் இழந்ததும் ஒரே உயிர்;ஆனால், அது கொள்ளும் பொருள் உங்களுக்குள் நிச்சயமாக வேறுபடும். நீ சொல்லும் அந்த மற்றவன் ஹரூனால் கொலையுண்டதில், உன் மகன் ஈடு செய்துவிட்ட மகிழ்ச்சியை ஒரு கணமேனும் உணர்ந்திருப்பான்;ஆனால், உன் கருப்பை கதறியிருக்கும், அந்த மற்றவன் பயத்தில் கொட்டிய வியர்வைத்துளிகள் உன் கருவறையில் குருதியெனக் கொப்பளித்திருக்கும்.வெயிலையும்,மணலையும், காற்றையும் காட்சிப்படுத்தி என் மகன் கொலை செய்தான்;எட்டிப் பிடித்துவிடக் கூடிய நிலாவின் ஒளி பிரகாசிக்க,புழுக்கமான வெப்பத்தை மடமடவெனக் குறைத்து,இதமான சூழலில் அந்தப் பிரெஞ்சுக்காரனை ஹரூன், நீ பின் நிற்க இரு தோட்டாக்களில் கொன்றுவிட்டான்.ஒன்று என் மகனுக்குப் போலும், செத்தவனைச் சுட்டிருக்கிறான்! மற்றொரு குண்டு அந்த மற்றவனுக்காகப் போலிருக்கிறது.மூசாவின் சாவினால் பிணைக்கைதியைப் போல் இருந்த ஹரூன் இந்தக் கொலையால் விடுதலையை உணர்ந்த பகடியை என்னவென்று சொல்வது சொல், சகோதரி.’மதியம் இரண்டு மணி’ என்பது ‘நள்ளிரவு இரண்டு மணி’ என்று மாறியது,அங்கே தகிக்கும் வெம்மை, இங்கே குளிரும் நிலவு,அங்கே இருவர், இங்கே மூவர்,அங்கே பாறையும் கடலும், இங்கே முற்றமும் எலுமிச்சை மரமும்,இரண்டு இடத்திலும் குற்றத்திற்க்கு தனக்குத்தானே கற்பித்துக்கொள்ளும் விலகல்கள்,ஏற்றல்கள்..ஆண் பெண்ணைவிட மாறுபட்டவன் தான் சகோதரி, உடலால் மட்டுமல்ல, உள்ளத்தாலும் தான்;ஆனால், அவர்கள் தன் இனத்தை ஏற்றுக்கொள்ளும் விதம் இருக்கிறதே,அது நம்மிடத்தில் இல்லை எனத் தோன்றுகிறது.துயரத்தின் வாயிலை நான்கு முறை தட்டிய என் மகன்,நீதி மன்றத்திலும் மனிதனின் அச்ச இயல்புகளை விலக்கியே இருந்தான்.இவனுக்காக அமர்த்தப்பட்டிருந்த வக்கீலிடம் என் அம்மா இறந்து போகாமலிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றான்;ஆரோக்கியமாக இருக்கும் யாருமே சில சமயங்களில் தமக்குப் பிடித்தமானவர்களின் மரணத்தை விழைவதுண்டாம்; இதை நீ கேள்விப் பட்டிருக்கிறாயா? எங்கோ முதியோர் விடுதியில் இருந்த என்னை இவன் எப்போது பார்க்க வந்திருக்கிறான்?அன்பு என்பது காட்டப்படுவது,உணர்த்தப்படுவது;அதை விட்டு ‘நான் அன்போடு உன்னை நினைக்கிறேன்’ எனச் சொல்வதெல்லாம் எப்போதோ உண்மை, எப்போதும் உண்மையில்லை.விசாரணை நீதிபதியிடம் என்ன ஒரு கேலிக்கூத்தாக நடந்து கொண்டான்.இவனை அவர் ‘இறுகிய ஆன்மா’ எனச் சொன்னது மிகவும் சரி.பதினோரு மாதங்கள் விசாரணை– பின்னர் போலீஸ், சிறை; தனித்த சிறைக்கூண்டு;அப்போதும் அவன் கடலைப் பார்த்தான். மாரி, அவன் காதலி, அவனைப் பார்க்க வருகையில், அவளுக்கு இருந்த நம்பிக்கையைக்கூட இவன் பிரதிபலிக்கவில்லை.ஒரு மரப் பொந்திலேயே வாழ்நாட்களைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் என்று ஏற்பட்டிருக்குமேயானால், அப்போது கூட அங்கிருந்து தெரியும் ஆகாய மலரைப் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பழக்கப்பட்டிருப்பானாம் அவன்; வாழ்க்கை அவனுக்கு முன்னர் அப்படித்தானே அமைந்திருந்தது; என்னையும் கண்காணாமல் அனுப்பிவிட்டு விட்டு விடுதலையாகத்தானே இருந்தான்.ஒருக்கால், சுவாரசியமற்ற வாழ்வில் சாகசங்கள் மூலம் ஒரு அர்த்தம் தேடினானோ, என்னவோ?வாழ்ந்து பார்க்கையில் மிக அதிகமாக நீடித்திருப்பது போல் தோன்றினாலும்,எந்த இடத்தில் ஒரு காலப் பொழுது முடிந்து மற்றொருகாலப் பொழுது தொடங்குகிறது என்று தெரியாத நிலையில் அவை ஒன்றோடொன்று கலந்திருந்தன என்கிறான்;இத்தனைச் சிறந்த தெளிவுள்ளவன் ஏன் கொலை செய்தான்?ஓரு கோடைக் காலம் போய் மற்றொரு கோடைக்காலம் விரைவில் வந்துவிட்டிருந்தது.பத்திரிக்கையாளர்களும், ஜூரிகளும், ஆர்வக்கோளாறான மனிதர்களும் குற்றத்தின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அங்கு இருந்தனர்.அந்தப் பத்திரிக்கையாளரில் ஒருவன், யுவன், சாம்பல் நிறக் கோட்டும், கால் சட்டையும்,நீல நிற டையும் அணிந்து, சற்றுக் கோணலான முகமும், நீலநிறத் தெளிவான கண்களுமாக என் மகனையே பார்த்திருந்தான்; அவன் உன் மகன் சொல்லும் மற்றொருவனோ?செலஸ்த்தின் உணவு விடுதியில் மெர்சோ பார்த்திருந்த அந்த இளம் பெண்ணும் அங்கிருந்தாள்.இந்த இருவரும் குற்றவாளியான என் மகனைப் பார்த்தபடியே இருந்தார்கள்.எல்லாமே உண்மைதான்; எதுவுமே உண்மையில்லைதான்.என் மகன் தன் வாழ்வில் சம்பாதித்த ஓர் நல்ல நட்பு அந்த உணவு விடுதியாளன் செலஸ்த்தான்.அவனது சாட்சியமும் இவனது குணத்தைப் புரிய வைக்க முடியவில்லையே!மாரியின் சாட்சியிலிருந்து அரசு தரப்பில் பெறப்பட்டவைகளுக்கு குற்ற முலாம் பூசுகையில் அல்லது என் மகனது இயல்பைப் புரிந்து கொள்ள முடியாமல் சாதாரணக் கண்கள் கொண்டு அதை அவர்கள் பார்க்கையில்,எதை இந்த விசாரணை எதிர் கொண்டு செல்கிறது என என் ஆன்மா துடித்து அலறியது சகோதரி.வேனிற்கால மாலைப் பொழுதின் பழக்கப்பட்ட பாதைகள் நிர்மலமான தூக்கத்துக்கு அழைத்துச் செல்வது போலவே சிறைச்சாலைக்கும் அழைத்துச் சென்றதே!ஒரு சாதாரண மனிதனிடம் சிறப்பானவை என்று கருதப்படும் புத்திசாலித்தனமும், சொல் அமைப்புக்களும் ஒரு குற்றவாளிக்கு எதிரான பலத்த குற்றச்சாடுகளாக நீதிமன்றத்தில் ஆன விசித்திரத்தை நானும் என் மகனுடன் வியந்தேன்.வெயிலால் தூண்டப்பட்டு கொலை செய்தேன் என்ற என் மகனின் கூற்று எந்த அவையில் எடுபடும்?பிரெஞ்சுக் குடியரசின் மக்கள் பெயரால் என் மகன் ஒரு பொது இடத்தில் தலை துண்டிக்கப்படுவான் என்றது தீர்ப்பு.குற்றவாளியின் கோணத்தில் பார்க்க இயலாத ஒரு நீதி என்பது ஒருவகையில் அநீதிதான் இல்லையா?சிறையின் தனிமையில் எதிர் நோக்கி நின்றிருக்கும் விடியல் அல்லது மேல்முறையீட்டில் அல்லது இரண்டிலுமாக ஊசலாடி மரணத்தின் காலடி ஓசையை அவன் கூர்ந்து கொண்டேயிருந்த நேரம் என் இறந்த வயிற்றிலும் தேள்கள் கொட்டிக் கொண்டேயிருந்தன. நிச்சயமற்ற பாதிரியாரும் இந்த உலக வாழ்வைத்தவிர எதுவுமே நிச்சயமில்லை என்ற என் மகனும் சந்திக்காமலே இருந்திருக்கலாம்;அவனுக்கு அவன் வாழ்வின் போதாமை புரியவில்லை.குலுக்குச் சீட்டில் தனக்கு விழுந்த பகடையில் அவன் ஆடியிருக்கிறான்.அவனைப் பொறுத்த மட்டில் அனைவரும் அதிர்ஷ்ட சாலிகளே!அந்தக் கோடை காலத்தின் அற்புதமான அமைதியில்,அந்திப் பொழுதின் சோகமான இளைப்பாறலில், இவ்வுலகின் மென்மையான அலட்சியத்தை அவன் வரவேற்றான் சகோதரி.பல்லோர் பார்க்க, வெறுத்து கூச்சலிட தன் தலை துண்டிக்கப்படவேண்டும் என என் மகன் விரும்பியது ஒரு வகை பாவ மன்னிப்புக் கோரலே! அவனை தயவு செய்து மன்னித்துவிடுங்கள்.
அம்மா, அந்த மற்றொருவன் கொலையுண்ட இடம் கூட நான் வேலை செய்து வந்த லார்க்கே குடும்பத்தின் வீடுதான். அவர்கள் அல்ஜீரிய விடுதலைப் போராட்டங்களுக்குப் பயந்து ஒடிவிட்டதால் நாங்கள் பெற்ற, அதாவது எடுத்துக்கொண்ட சொத்து. எங்கள் பூமி, எங்களுக்கென்று ஓர் இடம். ஆனால், என் மகன் எல்லா மெர்சோக்களையும் விரட்ட முற்படவில்லை.அவனுடைய வயதில் நாட்டுக்கு விடுதலை வாங்குவதற்க்கான போராட்டத்திலெல்லாம் அவன் பங்கு பெறவில்லை; அதை அவன் செய்திருந்தால், நான் மகிழ்ந்திருப்பேன் என நினைக்கிறேன், விடுதலைப் போராட்டத்தில் எதிரிகள் மரணிப்பது கொலை என்று ஆவதில்லை அல்லவா?இவன் பிரெஞ்சுக்காரனைப் பார்த்த சமயம் சூரியன் காட்டுத்தனமான வெளிச்சத்தோடு, ஓடிக்கொண்டிருப்பவனைத் தேடுவது போல் வானத்தில் கிறீச்சிட்டுக் கொண்டிருந்தான்.விதி என்றுதான் சொல்ல வேண்டும். கொட்டகைக் கூரையின் குறுக்குச் சட்டத்துக்குப் பின் ஒளித்து வைக்கப்பட்டிருந்த, ஒற்றை மூக்கு ஓட்டையுடன் இருந்த, உலோக நாயைப் போன்ற அந்த கனமான கைதுப்பாக்கி என் மகனுக்குக் கிடைப்பானேன்?லார்க்கே குடும்பத்துடன் உறவாடிய அந்த பிரெஞ்சுக்காரன் இரவில் கரிய நிழலென வருவானேன்? எனக்கு ஒரு நியாயம் வேண்டியிருந்தது; அதை விடுதலைப் போராட்டத்தின் மூலம் என் மகன் கொடுத்திருக்கலாம்;முடிவின்மைக்கும் சிறையில் மாட்டிக்கொண்ட என் மகன் சொல்வதைப் பார்– அம்மாவிடம் தான் என் கோபம், உண்மையில் இக்குற்றத்தைச் செய்தது அவள்தான்,என் கைகளை பிணைத்திருந்தாள், மூசா அவளைப் பிணைத்திருந்ததிற்க்கு ஈடாக;பூமியை இரவு வானத்துக்கு அழைத்து ,அனந்தத்தில் தனக்கிருக்கும் பங்குக்குக்குச் சமமான பங்கு ஒன்றை அதனிடம் ஒப்படைக்கிறது என கவித்துவமாக நினைப்பவன் பாவத்திலிருந்து விலக்கிக்கொள்ள நினைக்கலாமா?ஓரு உயிர் என்னவோ திடமான எதையுமே சார்ந்து இருப்பதில்லை அம்மா.மூசாவின் மறுவருகையை நான் தவிப்புடனும்,அவன் ஆன்ம சாந்திக்காகவும் கொண்டாடினேன், மெலிந்த குரலில் பாடினேன்.சாவின் சிறு தடம் கூட இல்லாமல் செய்திருந்தேன்.அவனும் நானும் எங்கள் சோகக்கதையிலிருந்து–தடுமாறிக்கொண்டேதான் என்றாலும்,சமாதானமும் அடைந்து–மீண்டு வந்த அதே நேரத்தில் நாடு முழுவதும் மண்ணையும், மீதமிருந்த வானத்தையும், வீடுகளையும், மின்கம்பங்களையும்,பறவைகளையும், தற்காத்துக்கொள்ள முடியாத உயிரினங்களையும் மற்ற எல்லா மக்களும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.ஆதிக்கமும், கலகமும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல எனத் தோன்றுகிறது.
என் மகனை ஜீப்பில் ஏற்றி அழைத்துச் செல்கையில் நீண்ட ஹயிக் அணிந்த நான் சாலை ஓரத்தில் கற்சிலையைப் போல் நின்றிருந்தேன். ஹஜூத்தில் நான் எனக்கு உயிரோடு இருப்பது ஒரே மகன் எனவும், அவன் அண்ணன் மூசாவைக் கடற்கரையில் வைத்துக் கொன்றார்கள் என்றும், அதுவே அவன் புரட்சியில் பங்கெடுக்காததற்க்கான காரணமென்றும் சொன்னேன். அந்த பேப்பர் துண்டுகளைக்கூடக் காட்டினேன். அன்னையின் சொல்லை விட அடையாளத்தைத் தேடும் நீதிகள் பரிகசிக்கப்படவேண்டியவை ,அம்மா.உண்மையில் சொல்லப்போனால், இந்த நாட்டு மக்களுக்கு முன்னதாகவே நாங்கள் போராட்டத்தைத் தொடங்கிவிட்டோமே!இயல்புக்கு,சாதாரணமாகக் காணப்படும் மனித இயல்புகளுக்கு மாறாக இருந்த நம் மகன்களை எந்த வகையிலும் எந்தக் காலத்திலும் சட்டத்தினாலோ, தர்மத்தினாலோ புரிந்து கொள்ள முற்படமாட்டார்கள்.அது கடினமே!சிறை அறையில் அவன் தன் பார்வையில் படாத மரங்களின் கிளைகள் கரிய, மணம் கமழும் அடித் தண்டுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காகப் பலமாக ஆடிக்கொண்டிருக்க, அந்த மரங்கள் நடந்து போக முயன்ற போது, அவன் தன் செவிகளால் அந்தப் போராட்டத்தை உணர்ந்தான்.அவனை விடுதலை செய்யும் முகாந்திரம் இருந்தும் அவன் தண்டிக்கப்படத்தான் விரும்பினான்.நான் வைத்திருந்த செய்தித்தாளில் சிறு இரு பத்திகளில் இறந்து போன மூசாவை நான் ஹரூன் மூலம் உயிர்ப்பித்துக்கொண்டேயிருந்தேன்.அந்தக் காரணமற்ற கொலை என்னைப் படுத்தியது.
காதல் ஒரு சமரசம் தான் ,புதிர் அல்ல என்று நம்பிய என் மகன் அந்த மெரியத்திடம் காதல் கொண்டான். அவள் தான் மூசாவைப்பற்றிய அந்த எழுத்தாளன் எழுதியதை ஆய்வு செய்ய எங்களைத் தேடி வந்தவள்.இவளால் என் மகன் மூசாவின் சாவை நாங்கள் மூன்றாம் முறையாக நடத்த நேரிட்டது.ஒரு வெற்றுக்கல்லறையைத் தோண்டுவது என்பது ஒரு குடும்பத்திற்க்கு நேரும் ஆழ் சோகம்.என் மகன் தனியன்தான்;அவள் தன் வேலை முடிந்தவுடன் சென்றுவிட்டாள்,ஆனால் சில மாதங்கள் பழகினார்கள்.இவன் இறை மறுப்பாளனா என்றால் எனக்குத் தெரியாது;ஆனால், உலகோர் கொள்ளும் அச்சத்தை அவன் ஆண்டவனிடம் கொள்ளவில்லை.இன்னொரு உலகில் பதில் சொல்ல நேரிடுமெனப் பயப்படவில்லை. உண்மையான உண்மையானவன்.எல்லாமே எழுதப்பட்டுவிட்டிருக்கிறது;அது ஒன்றுதான் ஆறுதல், பயம், கவலை, தன்னிரக்கம்,பகடை விளையாட்டு வெட்டும் காய்களும், வெட்டப்படும் காய்களுமான சூது.உன் மகன் பாதிரியாரின் அங்கியைப் பிடித்து தன் இறை மறுப்பைத் தெரிவித்தான்; என் மகன் இமாமின் அங்கியை.
ஒன்று மட்டும் நம் மகன்களை இணைக்கிறது.மெர்சோவின் மேல் மூசாவைக் கொன்றதால் ஹரூனுக்கு இருந்த வெறுப்பு,மெர்சோவுடன் தன்னை அடையாளம் கண்டு கொள்வதில் முடிகிறது.கிட்டத்தட்ட கொலையாளனின் அச்சு.
ஆம், அபத்தத்திலிருந்து சிந்திக்கத் தொடங்கி வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கட்டமைத்துக்கொள்ள முடியும்;ஆனால், வாழ்க்கையின் அர்த்தமும்,அதன் நிஜங்களும் தங்கள் கைவசம் இருப்பதாக நினைத்துச் சிந்திப்பவர்கள் எப்போதும் அபத்தத்தில்தான் போய் முடிகிறார்கள்.மூசாவும்,மெர்சோவும் அல்லது காம்யுவும்,தாவுத்தும் முதல் வகை, நாம் இரண்டாம் வகையோ?
நம் தொப்புள்கொடிகள் நம் கழுத்தைச் சுற்றி இறுக்குகின்றன.
ஆம், முடிச்சு இறுகுகிறது.