‘க்ளைமேட்’, சிறுபத்திரிகை, ஆசிரியர் வியாகுலன், இணையாசிரியர் துரை அறிவழகன், விலை ரூ.30, ‘கலைவெளி மாத இதழ்’, முதல் பிரதி மே மாதம் வந்திருக்கிறது. ‘சுபமங்களா’ போன்ற ஒரு இடைநிலை இதழாக தங்களை வரித்துக் கொள்கிறார்கள்– “தீவிர மனநிலைக்கும் ஜனரஞ்சக மனநிலைக்கும் இடையே இயங்கும் ஓர் வட்டம் தமிழக வாசகப் பரப்பில் உள்ளது என்பதை பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மறந்தும் புறக்கணித்தும் விடுகிறார்கள்”– இந்த வெறுமையை இட்டு நிரப்பும் ‘க்ளைமேட்’. “அனைவருக்குமான இதழ், அனைத்துத் தரப்பு எழுத்தாளர்களுக்குமான இதழ்…” என்று கோமல் கொண்டிருந்ததைப் போல், “‘க்ளைமேட்’ மாத இதழ் புதிய எழுத்தாளர்களையும் புதிய வாசகர்களையும் கண்டடைந்து நவீன இலக்கியப் பரப்பில் புத்தம் புதிய பக்கங்களை தொடங்க உள்ளது… அனைத்து தரப்பு எழுத்தாளர்களிடமிருந்தும் படைப்புகளை எதிர்நோக்கியுள்ளோம்,” என்று எழுதுகிறார்கள் (நண்பர்கள் klymatte@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் படைப்புகளை அனுப்பிப் பார்க்கலாம்).
முதல் இதழ் நன்றாகவே வந்துள்ளது. எஸ். ராமகிருஷ்ணன், ‘புருவம் இல்லாத பொம்மைகள்,’ என்ற கதையையும் யுவன் சந்திரசேகர், ‘புழுதிப் புயல்’ என்ற கதையையும் எழுதியுள்ளார்கள். இரண்டு கதைகளுமே இடைநிலை வாசகர்களை புதிர்ப்படுத்தும் என்று நினைக்கிறேன் (“தனிமனிதனின் அகச் சிந்தனைகளையும் அம்மனிதன் சார்ந்துள்ள குழுக்களின் தத்துவார்த்த சிந்தனைகளையும் தாங்கி வரும் சிறுபத்திரிக்கைச் சூழல்…” என்பதை வைத்துப் பார்த்தால் சிறுபத்திரிக்கை ஆர்வலர்களுக்கான கதைகள் இவையல்ல என்று சொல்ல வேண்டும், ஆனால் இத்தன்மைகள் இல்லாத காரணத்தால் தீவிர இலக்கிய முத்திரை குத்தப்படக்கூடாத கதைகளாகி விடுவதில்லை இவை. யதார்த்த கதைகளுமல்ல, யதார்த்தத்திலிருந்து தப்பிக்க உந்தும் விழைவேக்கத்தை நிறைவு செய்யும் கதைகளுமல்ல– “இந்தக் கதையில் என்ன சொல்ல வரார்? உண்மையில் என்னதான் நடந்தது?” என்று நினைக்கச் செய்கின்றன.)
இந்த இரு கதைகளுக்கு இணையாக இரண்டு நேர்காணல்கள் இருக்கின்றன. ‘வெளிச்சம் என் உயிர்’ என்ற தலைப்பில், நடேஷ் முத்துச்சாமியின் நேர்முகமும், “எனக்கு சினிமாக்காரர்கள் போல் கதை சொல்லத் தெரியாது” என்ற தலைப்பில், வண்ணநிலவன் நேர்முகமும் இடம் பெற்றிருக்கின்றன. நடேஷ் நேர்முகம் பேச்சு நடையில் நிறைய ஆங்கிலச் சொற்களுடன் கொச்சைத் தமிழுக்கு அஞ்சாது அச்சிடப்பட்டுள்ளது சிறப்பு. ஆனால் ஆங்கிலச் சொற்களை ஆங்கில மொழியில் அச்சிட்டிருக்க வேண்டாம், எழுத்துரு கண்ணுக்கு உறுத்தலாக இருக்கிறது என்பது போக, எழுத்துப் பிழைகள் மலிந்திருக்கின்றன– “கலரு வந்து deel பண்ணினது ரொம்ப லேட்டு” (இங்கு லேட்டு ஏன் தமிழ்?), “அவன் lyricsamத்தை தூக்கி வெளியே போட்டான்,” “Mathematicalலா convent பண்ணிருவான்,” என்பதெல்லாம் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளுக்கும் பாதகம். மிகவும் அனுபவித்து ரசிக்க வேண்டிய நேர்முகத்தை இம்சையான வாசிப்பாக்கி விடுகின்றன இந்த பிழைகள். வண்ணநிலவன் பேட்டி பற்றி சொல்ல வேண்டாம், ஆரம்ப நிலை வாசகன் எடுத்துக் கொள்ள ஏதாவது ஒன்று ஒவ்வொரு பேட்டியிலும் இருக்கும். இதிலும் இருக்கிறது– “தமிழில் எவ்வளவோ படைப்பாளிகள் கவிஞர்கள் இன்று உலகத்தரத்தில் இயங்குகிறார்கள் என்பதை நான் பெருமையுடன் பார்க்கிறேன். ஆனால் எப்பேர்பட்ட படைப்பும், கிணற்றில் போட்ட கல் மாதிரி விமரிசகர்கள் இல்லாமல் தடுமாறுகிறதே, இந்த நேரந்தான் க.நா.சு.வை எனக்கு அடிக்கடி நினைக்கத் தோன்றுகிறது… கநாசு மாதிரி, வல்லிக்கண்ணன் மாதிரி, திகசி மாதிரி மறுபடியும் தமிழில் ஒரு விமரிசனச்சூழல் உருவாக வேண்டும் என்பதே இன்றைக்கு நன்றாக எழுதிக் கொண்டிருக்கிற இளம் படைப்பாளிகளுக்கு ஒரு முக்கியமான தேவையாகவே நான் கருதுகிறேன்”. விமரிசனம் என்றால் போட்டுத் தாக்க வேண்டாம், நம் குழுவுக்கு வெளியே உள்ள ஒருத்தர் ஒரு கதையோ கவிதையோ நன்றாக எழுதினால், ‘நன்றாக இருக்கிறது’ என்று ஒரு வார்த்தை, ‘ஏன் நன்றாக இருக்கிறது’ என்று இன்னும் சில வார்த்தைகள் சொன்னால் போதும். சமூக ஊடகத்தில் இதற்கே நல்ல விளைவுகள் இருக்கும். பதாகை வாசகர்களாவது இதை தவறாமல் செய்ய வேண்டும்.
இந்த நான்கு போக, பாவண்ணன், கே.என். செந்தில் இருவரும் தம் எழுத்து பற்றி எழுதியிருக்கிறார்கள். பாவண்ணன் கட்டுரை தலைப்புக்கேற்ப, ‘மாபெரும் கனவு’, கனவுகளை தேக்கி வைத்த வாக்கியங்கள் கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கற்பனை தோய்ந்த நடை, “ஏதோ ஒரு சொல் அல்லது ஒரு காட்சி அல்லது ஒரு அசைவு என்னைத் தூண்டி விடும்போதெல்லாம் மின்னேற்றம் பெற்றதும் காந்தத் துண்டென மாறி விடுகிறது மனம். அதுவே கதை பிறக்கும் தருணம்.” கொஞ்சம் சோதிக்கிறது என்றாலும் ஒரு கவி மனதின் உரைநடையை இங்கே பார்க்க முடிகிறது– “:அப்படித்தான் நானும் ஓர் எழுத்தாளனாக மலர்ந்தேன். இரவெல்லாம் சொல்லரும்புகளைக் கோர்த்துக் கோர்த்து என் முதல் சிறுகதையை ஒரு மாலையென புனைந்து முடித்தேன். இன்னும் இருள் பிரியாத காலையில் குயில்களின் பாடல் கேட்டது. என் நெஞ்சில் ஊற்றெடுத்த உல்லாசத்தையே அக்குரல் பிரதிபலித்தது. வானத்தில் ஆழ்ந்து பின்னோக்கிச் செல்லும் நட்சத்திரங்களையும் அவற்றை நோக்கிப் பறந்து செல்லும் காக்கைகளையும் பார்த்துப் புன்னகைத்தேன். வானமே, மேகமே, காற்றே, பறவைகளே, மரங்களே, மலர்களே, பாருங்கள், பாருங்கள், என என் கதையைக் காட்டி பெருமிதமடைந்தேன்.” இந்தக் காலத்தில் இப்படியும் எழுதுகிறார் ஒருவர்! ஆனால் இதுவும் இது போல் இன்னும் பலவும் வெவ்வேறென வேண்டும்.
தன் கதைகளைப் பற்றி எழுதியுள்ள கே. என். செந்தில் கட்டுரையில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்– “ஒரு போதும் மோஸ்தரான மேற்பூச்சு கொண்ட மொழியினால் மட்டும் அமைந்த கதைகளை எழுத முயன்றதில்லை. மொழியினால் நிற்கும் கதைகளை எழுதியிருக்கிறேன். வளவளவென, சோடையாக மொழி அமையுமென்றால் அதை எழுதாமல் இருப்பதே நல்லது என்ற எண்ணமே எனக்குள்ளது. ஈராயிரம் வருட மரபு கொண்ட மொழியில் எழுத வரும்போது அம்மொழியை கைகொள்வது சார்ந்து, வலுவாக பயன்படுத்துவது சார்ந்து எழுந்த யோசனைகள் இதற்கு காரணமாக இருக்கக்கூடும்.” கதைகளைப் பற்றி சொல்லவில்லை, இது போன்ற கட்டுரைகள் எழுதும்போது கே.என். செந்தில் ஷோல்டரைச் சற்று இறக்கிக் கொள்வது நல்ல வாசிப்பனுபவத்தை அளிப்பதாக இருக்கும்.
இந்த ஆறு போக, சோ. தர்மனின் “கூத்துக் கலை: சிறந்த கதைசொல்லி” என்ற கட்டுரை வந்திருக்கிறது. இது ஒரு தொகைநூலில் இடம் பெரும் சிறப்பு கொண்டது. “என்னுடைய குழந்தைப் பருவத்தில் பகவான் ஸ்ரீராமனின் தோளில் உட்கார்ந்து பயணப்பட்டிருக்கிறேன். லட்சுமணனின் கைகளில் தவழ்ந்திருக்கிறேன். சீதையின் மடியில் உறங்கியிருக்கிறேன். தனியே சுழற்றி வைக்கப்பட்ட ராவணனின் பத்து தலைகளும் அனுமனின் நீண்ட வாலும் விகார முகமும் என் விளையாட்டுப் பொருட்களாய் இருக்க, சலங்கை கெச்சங்களின் தாளலயத்துடன் ஆடும் ராமாயணக் கும்மியாட்டம் நடைபெறும். என்னுடைய அப்பாதான் கதாநாயகன் ஸ்ரீராமன். என் சித்தப்பா லட்சுமணன். மாமா ராவணன் வேஷம்.” கூத்துக்கலையின் தொடர்ச்சியாகவே தன் கதைசொல்லலைக் காண்கிறார் சோ. தருமன். தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான சோ. தருமன், தன் புனைவில் கூத்துக்கலையின் தாக்கம் பற்றி சொல்லியிருப்பது மட்டுமன்றி, திராவிட இலக்கியம் மற்றும் சுதந்திரகால லட்சியவாத எழுத்து தன்னை ஈர்த்து சலிப்படையச் செய்தது பற்றி சொல்லியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் (இதில் திராவிட இலக்கியம் பற்றி மிகக் கடுமையாகவே சொல்லியிருக்கிறார்).
ஏழாச்சா, எட்டாவதாக, நபகோவ் மொழியாக்கம் பற்றி கூறியுள்ளவை, மற்றும் அவர் அவ்வாறு கூறியதன் பின்னணி குறித்து ஜி. குப்புசாமி எழுதியுள்ள ‘மொழிபெயர்ப்பாளனின் மூன்று பாவங்கள்,’ என்ற கட்டுரை விரிவாக இருக்கிறது. இதில் அவர், தான் சொல்ல வரும் விஷயங்களை தெளிவாக எழுதியிருக்கிறார். நபகோவ் பற்றி ஒரு நல்ல அறிமுகம், ருஷ்ய மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட பின்புலம், நமக்கு தெரிய வருகிறது.
இதெல்லாம் போக சா. தேவதாஸ் சூடான் நாட்டுக்கதை ஒன்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். ஸ்ரீநேசன், ராணி திலக், ந. பெரியசாமி, அதீதன், ஸ்ரீஷங்கர் கவிதைகளும் இடம் பெற்றிருக்கின்றன. அப்புறம் கடைசியாக ஒன்று. ‘க்ளைமேட்’ இதழின் ஆசிரியர் வியாகுலனின் கவிதை தொகுப்பு பற்றி ஸ்ரீ ஹரி ஒரு நூல் விமரிசனம் எழுதியிருக்கிறார், இதை முதல் இதழிலேயே பதிப்பித்திருப்பதை தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒருவர் எவ்வளவு சிறந்தவராகவோ சாதாரணமானவராகவோ இருந்தாலும் ஒருத்தரைப் போல் ஒருத்தர் இருக்க முடியாது, ஒருத்தர் செய்ததை இன்னொருத்தர் செய்ய முடியாது. இந்த இதழில் உள்ள அக்கறையும் ஆர்வமும் ரசனை தேர்வுகளும் இனி வரும் இதழ்களிலும் இருந்தால், ‘சுபமங்களா’ செய்ததைச் செய்கிறதோ இல்லையோ, ‘க்ளைமேட்’ செய்ததை நாமும் செய்ய வேண்டும் என்று சில ஆண்டுகளில் இன்னும் சில பேர் நினைக்கக்கூடும்.
(க்ளைமேட், மாத இதழ், 66 பக்கங்கள், ரூ.30, 14 A, அப்பர் தெரு, காமகோடி நகர், வளசரவாக்கம்,சென்னை 600087, செல்– 88258 99791, மின்னஞ்சல் முகவரி – klymatte@gmail.com)