அவளுக்கு சிறு வயதிலேயே குளூகொமாவும் காடராக்டும் வந்து விட்டது, ஆனால் அவள் எப்படியே சமாளித்துக் கொண்டிருந்தாள், தொடர்ந்து சின்னச் சின்ன கோலங்கள் கொண்ட க்ரோசட் பின்னினாள், கிளைப் பின்னலில் சிறு பறவைகளையும் மண்ணிலிருந்து சுருண்டு வெளியே எழும் டூலிப்கள் ஒன்றையொன்று சுற்றிக் கொள்வதையும் ஓவியங்களாய் துணியில் நெய்தாள். அது அவளது ஏழு குழந்தைகளுக்கும் அவர்களது துணைகளுக்கும் அந்த ஏழு குழந்தைகளின் பத்தொன்பது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியளித்தது.
ஆனால் இன்று பார்வை அவளுக்கு தொந்தரவாக இருக்கிறது. சமையலறை சன்னலில் நின்று, மலைகளை நோக்கி தலையை உயர்த்திப் பார்ப்பவள், எங்கே மலைகள் முடிகின்றன, எங்கே வானம் துவங்குகிறது என்பதைப் பிரித்துப் பார்க்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறாள். நேற்றிரவு அவளுக்கு வினோதமான கனவு வந்திருந்தது, உள்ளே எங்கேயோ இன்னும் அது அவளுள் அதிர்ந்து கொண்டிருந்தது. அவள் அந்தக் கனவை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள்; சூரியன் நகர்வதாய் அவள் கனவு கண்டாள், இல்லை, அது மெதுவாக வழுக்கிச் சென்றது, முதலில் ஒரு மலையைக் கடந்தது, பின்னர் மற்றதை, இறுதியில் மூன்றாவதைக் கடந்து அவளது பார்வையிலிருந்து மறைந்தது. பார்ப்பதற்கு சூரியன் மலைகளின் மீது ஸ்கேட்டிங் செய்து கொண்டு செல்வது போலவும், உள்ளடுக்கை தொட்டு விட்டது போலவும், வானத்திலிருந்து கீழே இறங்கி விட்டது போலவும், அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது போலவும், சமையலறை சன்னலின் வழியே அவளை பார்ப்பதற்காக அத்தனை தூரம் வந்தது போலவுமிருந்தது. அவளைப் பார்ப்பதற்காக மலைகளின் மேலிருந்து சறுக்கி வந்தது போலவும், அவளே சமையலறை சன்னலில் சூரியனைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தது போலவும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஒருவரையொருவர் ஆழம் பார்ப்பது போலிருந்தது. அதன் பின் சூரியன் மறைந்து விட்டது.
அது ஒரு தீர்க்கதரிசனக் கனவு என்று பட்டதால், அவளது உடல் இன்னும் அதிர்ந்து கொண்டிருந்தது. அவள் இது போன்ற கனவுகளை இதற்கு முன் இரண்டு முறை கண்டிருக்கிறாள். அவள் சிறு பெண்ணாக இருந்தபோது ஒரு முறை பாம்பு ஒன்றினால் வசியம் செய்யப்பட்ட பறவையைப் பற்றிய கனவு கண்டாள். அப்பறவை காற்றில் உறைந்து நின்றபடி பாம்பின் கண்ணை குத்திட்டு பார்த்துக் கொண்டிருக்க, தரையில் சுருண்டிருந்த பாம்பு முழுக்க எழுந்து ஒரு உலோகக் கம்பு போல் நிலைத்து நின்று அந்தப் பறவையின் பார்வையை சந்தித்தது. அதன் பின் சிறிது காலம் கழித்து அவள் தான் திருமணம் செய்து கொண்ட பையனைச் சந்தித்தாள்.
இரண்டாம் கனவு வெகு காலம் கழித்து, அவள் பெற்றெடுத்து வளர்த்த ஏழு குழந்தைகளும் சுற்றியுள்ள பண்ணைகளில் குடியமர்ந்து விட்டபின், ஏழு குழந்தைகளும், அவர்கள் பத்தொன்பது பிள்ளைகளும் பெற்ற பின், வந்தது. அவள் சமையலறை சன்னலருகே அமர்ந்திருப்பதாய் கனவு கண்டாள். அவளது கணவன் தன் கைகளை நெஞ்சில் குறுக்கே கட்டிக் கொண்டு, நீண்ட வெண்ணிற அங்கி அணிந்து சொர்க்கத்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தாள். தரையிறங்கி அவள் முன் நிற்கும் வரை, அவன் அவள் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே, மெல்ல மிதந்து வந்தான். அதன் பின் கொஞ்ச நாளில் அவன் இறந்து விட்டான்.
அதற்குப் பிறகு அவர்களுடைய ஏழு குழந்தைகளும் பத்தொன்பது பேரக் குழந்தைகளும் அவளுக்கு துணையாய் இருக்க அவர்களால் முடிந்ததையெல்லாம் செய்தார்கள். அடிக்கடி வீட்டிற்கு வந்தார்கள், சமையலறை மேஜையில் உட்கார்ந்து குறுக்கெழுத்து போட்டார்கள், பேச்சு கொடுத்தார்கள். அதெல்லாம் நன்றாகதான் இருந்தது, ஆனால் அவர்கள் தனக்காக வந்ததைவிட தங்களுக்காகவே வந்தார்கள் என்று அவளுக்குச் சில சமயம் தோன்றியது, அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு நியாயமாக நடந்து கொள்ளவே இங்கு வருகிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் எப்போதும் பிஸியாக இருந்தார்கள், செய்ய நிறைய இருந்தது. அவள் இங்கே வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், தினமும் சமையலறை மேஜை அருகில் உட்கார்ந்து கொண்டு க்ரோசெட் போட்டுக் கொண்டிருக்கிறாள், துணியில் சித்திர வேலைப்பாடுகள் நெய்து கொண்டிருக்கிறாள். சன்னல் வெளியே வெளியே பார்க்கிறாள். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமில்லை. அவர்கள் வந்தார்கள். அவளும் அங்கேதான் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
அவள் சன்னல் வழியே வெளியே பார்க்கிறாள், மலைகளுக்கும் வானத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளுக்கு இன்றோடு தொண்ணூறு ஆகிறது. வயல்களுக்கு அப்பாலிருந்து முதல் விருந்தாளிகள் நடந்து வருவதைப் பார்க்கிறாள். மேஜையில் எல்லாருக்கும் தட்டு வைத்திருக்கிறாள், அதற்காக தனது சிறிய வீட்டில் இருந்த அத்தனை மேஜைகளையும் இதற்கு பயன்படுத்திக் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாள். எல்லா நாற்காலிகளையும் முக்காலிகளையும் கண்டெடுத்தாள். அருகே நெருங்கிக் கொண்டிருக்கும் நிழல்களை எண்ணப் பார்த்தாள், முடியவில்லை. அவளால் தன் மகன்களையும் அவர்களுடைய மனைவிகளையும் அவர்களின் நடையை வைத்து அடையாளம் காண முடிந்தது, சில பேரக் குழந்தைகளையும். ஒருத்தி குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு வருகிறாள். அல்லது அவள் கேக் டின்னை சுமந்து வருகிறாளா? சன்னமாய் க்ரோசெட் செய்யப்பட்ட லேஸ் திரைச்சீலைகளை விலக்குகிறாள். அவர்கள் படியேறி வரும் சத்தமும், கதவின் கைப்பிடியைப் பிடித்து ஆட்டும் சத்தமும் கேட்கிறது. கதவைத் திறக்கப் பார்க்கிறார்கள். தட்டுகிறார்கள். அவள் நகரவில்லை. அழைப்பு மணி ஒலிக்கிறது. இன்னும் பல பேர் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாள், அவளது குடும்பத்தினர், எப்போதும் நேரத்துக்கு வந்து விடுபவர்கள், அதை ஒப்புக் கொண்டாக வேண்டும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. கதவின் கைப்பிடியை பலமாய் ஆட்டுகிறார்கள். அவள் அசையாமல் அமர்ந்திருக்கிறாள். அவள் கதவைத் திறக்க விரும்பவில்லை. அவள் தயாராகவில்லை, கனவு இன்னும் அவளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறாள், இன்னும் அது முடியவில்லை. அவள் தனியாய் இருக்க விரும்புகிறாள். அவர்களுடைய நிழல்கள் சன்னலை இருட்டடிப்பதைப் பார்க்கிறாள். அவர்கள் தட்டுகிறார்கள், அவளை பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அவள் குடும்பத்தினர் அனைவரும். ஆனால் அவள் திறக்க மாட்டாள்.
ஓய்வு பெரும் கட்டம் பல பெண்களின் வாழ்வில் நிகழ்வதே இல்லை.அத்தனை உறவுகளுக்கும் அவளின் இருப்பு ஒரு வசதியாக உள்ளது.மொழி பெயர்ப்பு என்றே தோன்றவில்லை.