‘ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்துருக்காம்டா’ என்று இண்டர்வலின் போது திலீப் சொன்னதை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவன் மட்டும் ‘யாருடா சொன்னாங்க’ என்று கேட்க, ‘சும்மா டூப்படிக்கறான்டா’ என்றான் சந்துரு. ‘இல்லடா எங்க சொந்தக்காரர் தான் சொன்னாரு’, ‘அவருக்கு எப்படி தெரியும்’, ‘பைபிள்ல ஏதாவது ஒரு பேஜ்ல சின்ன முடி இருக்காம், அதுக்கு சாத்தான் பொறந்திருக்குன்னு அர்த்தமாம். இப்ப நெறைய பேர் பாத்திருக்காங்கன்னு சொன்னார்’,
‘நீ செக் பண்ணியா’
‘எங்க வீட்ல பைபிள் இல்லடா’
‘ஒங்க ரிலேடிவ் வீட்ல’ என்று இவன் கேட்டதற்கு திலீப் பதில் சொல்வதற்குள் மணி அடிக்க வகுப்பறைக்குள் நுழைந்தார்கள். தார்சியஸ் ஸாரின் மேத்ஸ் பீரியட். அக்குளில் அவர் கிள்ளும்போது குதிகால் தரையில் படாமல் உடல் மேலெழும்பும். ஆறு முதல் எட்டாம் வகுப்பு படிப்பவர்களில் நிறைய பேருக்கு ஸார் தான் சாத்தான். ஆனால் இப்போது தான் சாத்தான் பிறந்திருக்கிறது என்கிறான் திலீப்.
மாலை வீட்டுப் பாடங்களை எழுதி முடித்தான். ஆண்ட்டை க்ரைஸ்ட் பிறந்தால் உலகம் அழிந்து விடுமா? கலியுகத்தின் முடிவில் கல்கி வேறு வெள்ளை குதிரையில் வருவார் என்கிறார்கள், கல்கி தான் சாத்தானோ? அவதாரத்தை பற்றி இப்படி நினைத்தால் சபித்து விடக்கூடும். முனிவர்கள் தான் சாபமளிப்பார்கள், கடவுள் வேறேதேனும் தண்டனை கொடுப்பார், பரீட்சை வேறு வருகிறது. கல்கி வருவது சாத்தானுடன் மோதுவதற்காக கூட இருக்கலாம். திலீப் சொல்வதை எப்படி நம்ப? ஷெல்பிலுள்ள புத்தகங்களை எடுத்தான். அப்பன் முதலாண்டிற்கு பின் நிறுத்திவிட்ட மருத்துவ படிப்பின் எச்சமாக உள்ள கருப்பு அட்டையுடைய நூலையடுத்து, மழுங்கிப் போன பக்கங்களுடன் பைபிள். புரட்டினான், எதுவும் இல்லை. நூலை மூடியவன் இம்முறை மெதுவாக பக்கங்களை திருப்பிக் கொண்டு வந்தான். நகத்தினளவில் இருப்பது தூசியா, அது கருப்பாக இருக்காது, இது முடி தான். ஆண்ட்டை க்ரைஸ்ட் நிஜம்.
சுவற்றோடு சாய்ந்தமர்ந்தவன் மீண்டுமெழுந்து ஷெல்பிலிருந்து ‘ஓமன்’ முதல் பாகம் மற்றும் இறுதிப் பகுதியான ‘ஓமன் – பைனல் கான்ப்ளிக்ட்’டை எடுத்தான். ஓமனில் ஆண்ட்டை க்ரைஸ்ட் சாத்தானின் குழந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அவனையும் சாத்தான் என்றழைப்பது சரியாக இருக்குமா? மகனென்றாலும் அவனும் அதே வம்சம் தான் என்பதால் அப்படி அழைப்பதில் தவறொன்றும் இல்லை. ‘அப்பா’ சாத்தானின், தந்தை யார், அவரும் ஆண்ட்டை க்ரைஸ்ட்டாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அவனை தேவதையாக படைத்தது கடவுள், இப்போது பிறந்திருக்கும் சாத்தானின் தாத்தா. அவரையும் சாத்தானென்று எப்படி சொல்ல? சாத்தான் குடும்பத்தை பற்றி அறிந்து கொள்வதை விட, அவனை எதிர்கொள்வதே இப்போது முக்கியம். ஓமன் முதல் பாகத்தில் குழந்தையாக இருக்கும் போதே அழிவை ஏற்படுத்துகிறான், எனவே அவனை வளர விடக் கூடாது, கல்கி வரும் வரை காத்திருக்க தேவையில்லை. ‘பைனல் கான்ப்ளிக்ட்டில்’ சாத்தானை கொல்ல ஏழு கத்திகள் உள்ளன என்று சொல்லப்பட்டுள்ளது. ஆறு முறை தவறிய பின், ஏழாவது கத்தி வைத்திருப்பவன் தான் சாத்தானை கொல்கிறான். திலீப், மணி என ஐந்து கத்திகளை தந்து விடலாம். சந்துருவிற்கு ஆறாவது கத்தி, ஏழாவது எனக்கு. ஆண்ட்டை க்ரைஸ்ட்டை கொல்வது நானாகத் தான் இருக்க வேண்டும்.
‘டேய் எங்க வீட்டு பைபிள்ல முடி இருக்குடா’ என்று அடுத்த வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் கத்தினான். ‘என்ன பைபிள்’ என்றான் சந்துரு.
‘அதான் ஆண்ட்டை க்ரைஸ்ட்டா’
‘டேய் திலீப் புளுகறான்னு சொன்னேன்ல’,
‘இல்லடா இந்த தடவை அவன் சொன்னது உண்மை. நான் நேத்து நைட் பைபிள்ல பார்த்தேன்’
‘என்ன பாத்த’ என்றான் சரவணன்.
‘முடிடா’,
‘மயிறு, ஒங்க வீட்ல எப்படிடா பைபிள் இருக்கு’
‘முன்னாடி பக்கத்து போர்ஷன்ல குடியிருந்த கோம்ஸ் மிஸ் விட்டுட்டு போயிருப்பாங்கன்னு நினைக்கறேன்’.
‘எல்லா பைபிள்லயும் சாத்தானோட மயிறு எப்படி வரும்டா லூசு’
‘அப்பத் தான யாராவது ஒருத்தராவது அதை கவனிப்பாங்க, ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்திருக்குன்னு தெரிய வரும்’
திலீப் வந்தவுடன் அவனை அருகில் அமர வைத்துக் கொண்டவன் ‘ஓங்க ரிலேடிவ் சொன்னது உண்மை தான், பைபிள்ல செக் பண்ணிட்டேன். சாத்தானை சொல்றது பத்தி ஏதாவது சொன்னாரா, ஏழு கத்தி..’ என்று இவன் சொல்லிக்கொண்டிருக்க ‘அவர் ஊருக்கு போயிட்டார்டா’ என்றான் திலீப். ‘நான் சொல்லிட்டேருக்கேன் இவன போய் நம்பற, கரெக்ட்டா இந்த விஷயத்த சொல்லிட்டு கிளம்பிட்டாராம்’ என்று சந்துரு ஆரம்பிக்க ‘டேய் அவர் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல வீட்டுக்கு வருவாருடா, அப்ப அவர் கிட்ட கூட்டிட்டு போறேன்’ என்றான் திலீப்.
அன்று மதியம் காலாண்டு தேர்வுகளுக்கான டைம் டேபிளை தந்தார்கள். இரண்டு வாரத்தில் ஆரம்பம். ‘போன வாட்டி மேத்ஸ்ல பெயில்’
‘நீ ஒரு சப்ஜெக்டல தான, நான் மூணுல அவுட்டு’
‘மேத்ஸ்டா பெயில் டா. வீட்ல அடிக்கறத தாங்கிக்கலாம் தார்சியஸ் ஸார் கிட்ட கிள்ளு வாங்க முடியாது’.
யாருக்கும் உலகம் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தை பற்றிய அக்கறையில்லை. சாத்தான் பெரியவனாகி விட்டால் அவனை கொல்வது இன்னும் கடினமாகி விடும். இப்போதே அதை சுற்றி பாதுகாவலர்கள் இருப்பார்கள். அவன் எங்கு பிறந்திருப்பான்? முடி இருக்கும் பைபிள் பக்கத்தை திறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அரை வட்ட சந்திரனின் வடிவில் சாத்தான் பிறந்துள்ளதற்கான அத்தாட்சி. வீட்டிலுள்ள பைபிளில் தென்படுகிறது என்றால் சாத்தானும் அருகில் தான் இருக்க வேண்டும். எங்கு? பருத்த உடல்வாகு, சுருட்டை முடி, நெற்றியில் அப்பிய திருநீறுக்கு மத்தியில் பெரிய குங்குமப் பொட்டு இட்டு, கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருக்கும், அடுத்த வீட்டில் வசிக்கும் ராட்சஸி பில்லி சூனியம் செய்யக் கூடியவர் என்று சொல்கிறார்கள். விபூதி எல்லாம் இட்டுக்கொள்பவர் சாத்தானை எப்படி வழிபடுவார். திருநீறு அணிந்து சூனியம் வைக்க முடியும் என்றால் சாத்தானை துதிப்பதில் என்ன தடையிருக்கக் கூடும். ஆனால் அவர் கர்ப்பமாக இல்லை, தவிர அவருக்கு முடியெல்லாம் நரைத்து விட்டது. ஓமனில் ஆண்ட்டை க்ரைஸ்ட் ஓநாய்க்கு தான் பிறக்கிறான். அதில் குழந்தை சாத்தானை பாதுக்காக்க தாதியாக வருபவளின் உருவ அமைப்பு ராட்சஸியை ஒத்துள்ளது எதேச்சையானதாக இருக்க முடியாது. தெருவில் ஓநாய்கள் கிடையாது. ஆனால் நாய்களும் ஓநாய்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை, ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தின் புகைப்படங்களை பார்த்தால் ஓநாய் போலவே தோற்றமளிக்கின்றன. ராட்சஸி வீட்டில் நாயில்லை. ஓநாய் நாயாக நடித்தபடி தெருவில் உலவிக் கொண்டிருக்கக் கூடும், ஆண்ட்டை க்ரைஸ்ட்டை ஈன்றவுடன் ராட்சஸியிடம் தந்து விடும்.
இரண்டு நாட்களாக தேடித் பார்த்தாகி விட்டது. பெரிய, சின்ன மணிக்காரத் தெருக்களில் புதிதாக எந்த நாயும் வந்ததுள்ளது போல் தெரியவில்லை, நீண்ட நாட்களாக சுற்றிக் கொண்டிருப்பவற்றில் எதற்கும் ஓநாய் ஜாடை இல்லை. கர்ப்பமாக உள்ள நாய்களோ, சமீபத்தில் பிரசவிக்கப்பட்டுள்ள குட்டிகளோ இல்லை. இதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது, சாத்தான் தந்திரங்களில் தேர்ந்தவன். பூனைகளுக்கும் அமானுஷ்யத்திற்கும் தொடர்புள்ளதென்று சொல்கிறார்கள், குறிப்பாக கருப்பு நிற உடலும், பச்சை நிற கண்களும் கொண்டவை. எனவே அவன் பூனை வயிற்றிலும் பிறந்திருக்கக் கூடும். பூனைகளை கவனிக்க ஆரம்பித்தான். கறுப்புப் நிறத்தில் எதுவும் இல்லை. அலமேலு வெள்ளை நிறம், தவிர ஆறேழு மாதங்கள் முன்பே தன் நிறத்திலேயே குட்டிகளை ஈன்றிருந்தாள், அவை பெரிதாகி வேறெங்கோ சென்றும் விட்டன. அவற்றையோ, அவளையோ கொல்லும் மனத்திடம் இருந்திருக்காது.
சாத்தானின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பது ஒரு புறமிருக்க, அவனை கொல்வதற்கான ஆயத்தங்களை செய்து தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆசிர்வதிக்கப்பட்ட கத்திகள் கிடைக்க வாய்ப்பில்லை. சமயலறையில் அம்மா வெங்காயத்தையும், தக்காளியையும் நறுக்கி தட்டில் வைத்திருக்கிறாள், அருகில் தக்காளி விதைகள் ஒட்டியிருக்கும் கத்தி. சாத்தானின் ரத்தமும் சிவப்பு நிறமாக இருக்குமா, சாவியில் வந்த தொடர்கதையில் பச்சை நிறத்திலிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. கத்தியை எடுத்து அதில் படிந்திருந்த வெங்காயமும், தக்காளியும் கலந்த மணத்தை முகர்ந்தவன், கண்களில் சிறு எரிச்சல் ஏற்பட கத்தியை மேடையில் வைத்தான். இதை தான் உபயோகப்படுத்த வேண்டும். கத்தியை பூஜையறையில் வைத்து வழிபட்டால் இறைசக்தி கத்தியில் இறங்கும். ‘யார்’ படத்தில் எல்லா மதத்தினரும் கூட்டாக பிரார்த்தனை செய்து தான் சாத்தானை அழித்தார்கள். பள்ளியிலுள்ள மேரி மாதா சிலைக்கு முன்பும் வைத்து வேண்டிக் கொள்ளலாம். மசூதிக்குள் நுழைய முடியமா என்று தெரியவில்லை. அங்கு வைத்து வழிபட முடியாமல் போகலாம், ஆனால் மூன்றில் ரெண்டு இடத்தில் வைத்து வழிபட்டால் கூட சாத்தானை அழிக்கும் ஆற்றல் கத்திக்கு வந்து விடும். கத்தி தயார். அடுத்து சாத்தானை கொல்ல ஏற்ற இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
ஆண்ட்டை க்ரைஸ்ட்டை தேவாலயத்தில் வைத்து தான் அழிக்க முடியும் என்று ஓமனில் சொல்லப்பட்டுள்ளது. சாத்தானின் வளர்ப்புத் தந்தை சர்ச்சில் அவனை கொல்ல முயற்சிப்பதை பார்க்கும் போலீஸார் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று எண்ணி சுட்டுக் கொன்றுவிடுகிறார்கள். எனவே மக்கள் நடமாட்டமுள்ள இடத்தில் செய்யக் கூடாது. பின்னாலுள்ள காலி மனை தான் சரியான இடம். மதிய நேரத்திலோ, இரவிலோ ஆண்ட்டை க்ரைஸ்ட்டை அங்கு கொண்டு சென்று கொன்று விட வேண்டும். சாத்தான் என்றாலும் ஓமனில் வருவது போல் அழகான குழந்தையின் உருவத்தில் இருக்கும், அதை அழிக்க மனதை திடப்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாக கத்தி நன்கு கழுவப்பட்டிருக்க வேண்டும், இல்லையென்றால் சாத்தானை கொல்ல அதை ஓங்கும் போது வெங்காய நெடியில் கண்ணெரிச்சல் அவன் தப்பித்து விடுவான். ஆயுதம், இடம் தயார், சாத்தானின் இருப்பிடம் மட்டும் தெரிந்தால் போதும்.
பரீட்சைக்கு மூன்று நாட்கள். ‘சாத்தான் சாத்தான்னு சொல்லிட்டே இரு, சாவடி தான் வாங்கப் போற பாரு’, சந்துரு கூட ஆண்ட்டை க்ரைஸ்ட்டை பற்றி இவன் சொல்வதை கேட்க தயாராக இல்லை. அப்பனிடம் பேசி ஒரு வருடத்திற்கு மேலாகப்போகிறது. சாத்தான் பற்றி அம்மாவிடம் சொன்னதற்கு ‘அப்படியா’ என்று மட்டும் கூறினாள். அடுத்த போர்ஷனில் வசிக்கும் சுந்தரி அக்காவிடம் சென்றான். இவன் அவர் முன் நீட்டிய பைபிளின் பக்கத்தை பார்த்து விட்டு ‘என்னடா’ என்று கேட்டார்.
‘இங்க பாருங்க’
‘என்னது,தெரியலையே’
‘முடி பாருங்க, ஆண்ட்டை க்ரைஸ்ட் பொறந்திருக்கு’
‘ஆண்ட்டை.. அப்டினா’
‘சாத்தான்க்கா, அது பொறந்திருக்காம்’ என்று விளக்க ஆரம்பித்து ‘ராட்சஸி மேல தான் எனக்கு சந்தேகமா இருக்கு’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, சுந்தரி அக்கா சிரித்தபடியே’ஏண்டா செவன்த் வந்துட்ட, இப்பவும் இதெல்லாம் நம்பறியே’ என்றார்.
‘ராட்சஸி சூனியம்லாம் வெப்பாங்கன்னு நீங்க தான சொன்னீங்க’
‘அது வேற டா’
‘அப்ப இந்த முடி இங்க எப்படி வந்தது’
‘மயிலிறகா இருக்கும்டா, புக்ல அதை வெச்சுப்பாங்கல்ல, அது வெளியே விழும் போது துண்டு மட்டும் மாட்டிக்கிட்டிருக்கும், இல்லைனா இத படிக்கும் போது தலைலேந்து உதிர்ந்திருக்கலாம். இத போய் சாத்தான்னு சொல்லிட்டு, அதெல்லாம் சும்மாடா’
‘கார் ஆக்ஸிடென்ட்ல கை பிராக்சரோட தப்பிச்ச உங்க சித்தியை, அதுல செத்துப் போன இன்னொரு லேடி ராத்திரி ராத்திரி தன் கூட வரச் சொல்லி கூப்படறாங்கன்னு நீங்க தான சொன்னீங்க, அப்ப பேய் ஆவிலாம் இருக்கு தானே’
‘ஆவி வேற, சாத்தான் வேற டா’
‘ரெண்டுத்துக்கும் என்ன டிப்பரன்ஸ்’
‘அதெல்லாம் ஒனக்கு புரியாது’
‘நீங்க அன்னிக்கு ஒருநாள் கிளி ஜோசியம் பாத்தீங்களே அது’,
‘அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம், உன்கிட்ட பேசி புரிய வைக்க முடியாது’.
போர்ஷனுக்குள் நுழைந்தவன் பைபிளை ஷெல்பில் வைத்து விட்டு பைனல் கான்ப்லிக்ட்டை எடுத்தான். கருப்பு நிற அட்டையில் நீண்ட பற்களுடன் வாயைப் பிளந்து ஊளையிடும் ஓநாய். அதன் பற்களிலிருந்து வடியும் குருதி முன்னமே இருந்ததா? யாருக்கும் வரவிருக்கும் அபாயம் புரியவில்லை.
காலாண்டு விடுமுறை ஆரம்பித்து இரு நாட்களாகிவிட்டன. முந்தைய நாள் படித்து முடித்த காட்பாதரின் இறுதிப் பக்கத்தை மட்டும் மீண்டுமொருமுறை வாசித்தான். மைக்கேலின் வீட்டில் அவனுடைய அலுவல் அறை. ரோமானிய பேரரசன் போல் நின்றுகொண்டிருப்பவனின் முன் க்ளிமென்ஸாவும் மற்றவர்களும் வணங்கி ‘டான் கார்லியோநெ’ என்றழைப்பதை நேற்றிலிருந்து நான்காவது முறையாக பார்க்கிறான்.
இடது கையை இடுப்பில் வைத்தபடி காலி மனையின் நடுவே பள்ளி சீருடையில் நின்றுகொண்டிருக்கிறான். அருகில் சந்துரு. செங்கல்பட்டின் காட்பாதர் இவன் தான். முழுதும் அடிபணியாமலிருக்கும் எதிரணி தலைவன் பற்றி சந்துரு சொல்ல, அவனை அழைத்து வருமாறு கூறிவிட்டு ‘ஐ வில் மேக் ஹிம் அன் ஆபர் ஹி கான்ட் ரிப்யுஸ்’ என்கிறான் இவன். தார்சியஸ் ஸார் இவன் முன்னே வந்து, ‘டான் XXX’ என்று மெல்லிய குரலில் இவன் பெயர் சொல்லி அழைத்த பின் குனிந்து அவனது வலது கை மணிக்கட்டை பற்றி முத்தமிடுகிறார். அவரைத் தொடர்ந்து பி.டி ஸார் மற்றும் இன்னும் சிலர் அதையே செய்ய, சக்கரவர்த்தி போல் அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது காலி மனையை நிறைக்கும் ஓலம் அந்தக் கணம் தான் பிரசவித்திருக்கும் ஓநாயினுடையதாக இருக்கக் கூடும்.