211 ஆம் பக்கத்தை விரித்ததும் இருந்தது ‘நிழல்கள்’ கதை
இரண்டு மூன்று வரிகளைக் கடக்கும் போதே
ஹாஸ்டலின் பெரிய இரும்புக் கிராதிகளாலான கேட் தெரிய ஆரம்பித்தது
அவளை ஹாஸ்டலில் விட்டு அவன் இருப்பிடத்திற்குத் திரும்பவேண்டும்
கேட்டின் முன்பு அவனும் அவளும் உரையாடியபடியிருந்தனர்
திரும்பிச் செல்ல அவனுக்கு மனமில்லை
காதலியைப் பிரிய யாருக்குத் தான் மனம் வரும்
அன்று அவளோடு செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக
அவன் பூடகமாகப் பேசுவதையும்
வார்த்தையிலேயே அவள் நழுவி நழுவி ஓடுவதையும்
அந்த இரவு நேரத்தில் ஹாஸ்டல் முன்பு நின்று கவனிக்க
யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் என் நெஞ்சைக் கவ்வியது
இதைப் போய் ஏன் பார்க்கிறேன் என்ற அடுத்த கணத்தில்
மாடிப்படியின் திருப்பத்தில் ஒரு வாகான இடத்தில் அமர்ந்து
கதையை வாசிப்பதை நிஜமென உணர முடிந்த அந்த சமயம்
வெறும் செக்ஸுக்காக மட்டும் கெஞ்சவில்லை புரிந்துகொள் என்று
அவன் அவளிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்
கதையை வாசிக்கும் என்னையும் புத்தகத்தையும்
அங்கிருந்து எழுந்திருக்காமலே
வெளியே வந்து இடையிடையே ஒருமுறை நான் பார்த்துக் கொள்ள
கதை உச்சத்தை நெருங்கியிருந்தது
உன்னிடமிருந்து வேண்டுவது அதுவல்ல
எனக்கு வேண்டியது நீ பூரணமான திரைகளற்ற நீ முழுமையான நீ
அது மட்டுந்தான் புரிகிறதா என அவன் அவளிடம் கூறியதும்
யாரோ என்னை எங்கோ தூக்கி எறிந்தது போலிருந்தது
ஆமாம் அதை அவன் கூறவில்லை சாட்சாத் ஆதவனே கூறியிருக்கிறார்
அவர் முன்னால் கை கட்டி வாய் பொத்தி மண்டியிட்டு
இன்னும் சொல்லிவிட மாட்டாராயென
அந்த இரவு நேரத்தில் ஹாஸ்டல் முன்பு ஒரு ஓரமாகக் கிடந்தேன்
இன்னும் அந்த ஹாஸ்டல் வளாகத்தில் தான் சுற்றிக்கொண்டிருக்கிறேன்
ஆதவன் தான் எதுவுமே பேசமாட்டேனென்கிறார்
*ஜூலை 19,1987