மெய்யுணர் வழிகள் என நம் மரபு எவற்றையெல்லாம் சுட்டிக்காட்டியுள்ளது என்று கணக்கு எடுத்தால் அது நீண்ட பட்டியலாகத்தான் இருக்கமுடியும். உதாரணமாக காஷ்மீரி சைவ நூலான விஞ்ஞான பைரவ தந்திரத்தில் அவற்றை 112-வழிகளாக பொதுமைப் படுத்தியுள்ளது. ஒரு சார்வகனிற்கோ லௌகீகனிற்கோ இது அனைத்தும் பிறழ்வாகவே தோன்றும். அவ்வளவு ஏன்? இன்று அனைத்தும் தீர்மானிக்கின்ற ஜனநாயக நுகர்வோனுக்கு மெய்யுணர்தல் என்ற ஆன்மீக சாராம்சமே பொருள்சேர் என்ற கருதுகோளாகவே புரியும். இதுவே ஒரு பிறழ்வுதான்.
அறுதி உண்மையான மெய்ஞானப் பாதையில் உள்ளோர் எக்காலத்திலும் சிறுபான்மையினராகவே உள்ளனர். அப்படி இருந்தும் ஒரு பொது சமூகம் அந்த சிறுபான்மையினரை அடையாளங்கண்டு ஏற்றுக்கொள்வதென்பது அந்த பாதைக்கு வலுசேர்ப்பதாக இருக்கும். மேலும் பொது சமூகத்திற்கு அது நல்லதும்கூட. ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. பிறழ்வே வழியாகக் கொண்டோரை இந்த சமூகம் எப்படி ஏற்கும். கொடிறுடைக்கும் கூன்கை கொண்ட சமூகம் அவர்களுடன் வன்முறையால்தான் உரையாடும். அதுவே பிறழ்வின் பக்கவிளைவு.
சமூகம் தன் எண்ணற்ற நடத்தைகளில் பிறழ்வை எப்படி அடையாளங்காணும்? மனக்கட்டுறுதி குழைதல் எனும் விழுக்காட்டு வரையறைக் கணக்கில்தான். அந்த வரையறைக்கு மேலோ கீழோ போகும்போது அது பித்து பிறழ்வு என்றாகிவிடுகிறது. மனக்கட்டுறுதி என்பது சமூக ஏற்புப் பரப்பில் அந்த விழுக்காட்டு வரம்பிற்கு உட்பட்டவையாக இருத்தல் வேண்டும். அதுவே ஏற்புடையது என்று நம் பொதுபுத்தி கருதுகிறது.
இந்த நாவலின் நாயகன் பிறழ்வின் வழி சேர்ந்தவன். அவ்வழி அவனை அறுதி பிரக்ஞையான மெய்ஞானத்திற்கு இட்டுச்சென்றதா? அப்பாதைக்கு அவனை கொண்டுசேர்த்தது என்ன? அங்கே அவன் கண்ட சாபங்கள் வரங்கள் விமோச்சனங்கள் என்ன? ஆதாரப்புலன்களால் ஆட்கொள்ளப்பட்டபோது அதனிடம் தன்னை விரும்பி ஒப்புக்கொடுத்தானா? அல்லது புயலில் மாட்டியவன் கதியென ஆனானா? இப்படி பல கேள்விகளாக நம் மனம் விரியும்.
மனக்கட்டுறுதி உடற்கட்டுறுதி குழைதல் என்ற அந்தகாசத்தில் தெய்வங்கள் நிகழும். இதை காரண காரியத்திற்கு உட்பட்ட பட்டுணர்ச்சி தொட்டுணர்ச்சி விதிகளின் கீழ் நிரூபிக்கமுடியாது. அப்படி நிரூபிக்கமுடியாத ஆனால் ஆழுள்ளம் அறிந்த ஒன்றை இப்படி கதைகள் கவிதைகளின் மூலம் சொல்லிவிடலாம்.
அறுதி நிலை என்பது உலகியல் எல்லைக்கு அப்பால் உள்ள வீடுபேறு எல்லைக்குள் வரும் என்று நாம் ஊகிக்கலாம். அந்த விழுமிய எல்லைகளில் பயணிப்பவர்களுக்கு கட்டுறுதி குழைதல் என்பது இன்றியமையாதது. குரு என்பவர் தன் கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பான அந்தகாசப் பரப்பில்; ஞானப் பாதையில் இருப்பவனை குழைத்தும், மறுத்தும், தகர்த்தும் மாற்றியமைப்பார். அது தன்னிலை அழிதல். எந்த ஆன்மீக முறைமைகளும் தன்னிலை அழிதலையே பிரதானமாக செய்யும். அப்படி குரு இல்லாத பயணிப்பவனுக்கும் பித்தனுக்கும் குண வித்தியாசங்கள் இருப்பதில்லை. நாவலில் இதுவே நடக்கிறது
விஷ்ணுபுரம் நாவலில் வரும் பிங்கலன் தன் புலன் அறிவையே பிரமானமாகக் கொண்டு அதையே மெய்காண் முறைமையாக வகுத்துக்கொண்டவன். ஆனால் நம் கதை நாயகனோ காம யட்சியால் ஆட்கொள்ளப்பட்டவன். தன்னிலை அழிந்து பிறிதொன்றாக ஆனவனல்லன். வேறொன்றாக ஆனதினால் தன்னிலை அழிந்தவன். சாபம் சாபவிமோசனம் என்று புராண கதை மரபில் பார்த்திருக்கிறோம்; அதையே இந்நாவல் நவீன மொழியின் ஆழ்பரப்பில் நிகழ்த்திக் காட்டுகிறது. நம் அறிவுசேகர எல்லைக்கு அப்பால் உள்ள, அனுபவ அளவைகளால் அள்ள முடியாத ஒன்று உள்ளது என்று நம் ஆழ் மன பிரக்ஞை அதை கற்பனையால் உரசி அறிகிறது. இதுவே இந்நாவலின் வெற்றியாக எனக்கு படுகிறது.
நாவலில் பல்வேறு இடங்களில் நம் மனம் மேலெழுந்து பரவசம்கொள்கிறது. நாவலின் ஆரம்பத்தில் வரும் ராஜநாகம் ஒரு பெரிய குறியீட்டு வெளியாக மனதில் பதிகிறது. காமத்தையும் அதன் பிறழ்வுகளையும் கதாசிரியர் தன் முதற்தர சொற்தேர்வுகளால் அதன் ஆதார அம்சத்தை நம் கண் முன் விரித்து காட்டுகிறார்.
மெய் தீண்டிய கதை நாயகனிடம் ஒரு வெள்ளாட்டு குட்டி இயல்பாக வந்து ஓட்டுகிறது நாவலில் ஒரு இடத்தில். மயில்வாகனனிற்கு ஆதியில் அஜவாகனம் என்று நினைக்கையில் அந்தக் காட்சி மேலும் துலங்கி மனதின் பீடத்தில் அமர்கிறது.
வளர்த்த குழந்தையைத் தீண்டும் கரங்கள், அங்கு நிலைகொள்ளும் சாபம், உயிர்பலிகள், அதுவே கதை நாயகனின் திரிப்பிற்கான ஊற்றுக்கண், கடைசியில் யட்சியின் பழிதீர்த்தலும் சாபவிமோசனமும் என்று நாவல் முழுவதும் வரும் அதிர்ச்சிகள்.
ஞானப் பாதையில் மனிதனிற்கு மட்டும்தான் மேற்கூரை இடப்படாமல் இருக்கிறது. அவனது கால்கள் மண்ணில் நிலைபெற்றிருந்தாலும் அவன் மேல் எழும்போதெல்லாம் தன்பிரக்ஞை வான் நிறைக்கும். மற்ற ஜீவராசிகளிற்கு ஜீவித்தல் மட்டுமே விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மனிதன் ஜீவித்தலோடு நிறுத்த தேவையில்லை. அவன் மேலெழும் பாதை எதுவாகவும் இருக்கலாம். பிறழ்வாகக்கூட.
இதையே நாம் வேறுவிதமாகவும் பார்க்கலாம். புராண நெடுகிலும் சிவனின் சுக்கிலத்தில் இருந்து அதிசய பிறப்புகளும் நிகழ்வுகளும் காணக்கிடைக்கிறது. முருகனே அப்படி பிறந்தவன்தான். யோக தந்திரத்திலும்கூட ஒருவனின் வீரிய பாதுகாப்பு பேசப் படுகிறது. பாதுகாப்போ விரயமோ ஏதுவாகிலும் அறுதி ஞானத்திற்கு அதுவே வழியாக அமையும். நாவலில் நம் கதை நாயகனை குழந்தையாக, காதலனாக, பிறழ்வுற்ற பித்தனாக, முடவனாக, மெய்தீண்டியவனாக, இறுதியில் சுக்கில மணியாக என ஆறுமுகமாக காண்கிறோம். அங்கிருந்து மேலும் நம் மனம் பல திசைகளில் விரிந்து சென்றுகொண்டே இருக்கிறது.
இந்த தேசம் புண்ணிய பூமி என்று எனக்கு எள்ளளவோ சொல்லளவோ சந்தேகமில்லை. சுபிட்ச முருகன் இங்கு மட்டுமே நிகழக்கூடியது.