கொசு கூட
உள் நுழைய முடியாதபடிக்கு
பாதுகாப்பாய் வலையடித்த
சாளரம் வழி
எப்படியோ நுழைந்து
வீட்டின்
வரவேற்பறை வரை
வந்து விடுகிறது
தன்னைத் தானே விழுங்கும்
சர்ப்பம்.
வாலைக் கவ்வி
விழுங்க முயன்று
மீள முடியாமல்
முறுக்கித் திருகி
பித்தளை வளையம்போல
செய்வதறியாது திகைத்து நிற்கும்,
கூடத்தின் நடுவில்.
தன்னைத்தானே
தளர்த்திக்கொண்டு
களைப்பில்
செயலற்று கிடந்தபின்
திடீரெனெ விழித்தெழுகையில்,
வாந்தியெடுத்த வால்
நினைவுக்கு வர,
அவசரமாய்
விழுங்க முயன்று
மீள்வினையின் சமன்பாடாய்
முறுக்கி நிற்கும்
மறுபடியும்.
இமைக்க முடியா
தம் விழிகளால்
பக்தர்களை இடைவிடாது
வெறித்தபடி
பிரகாரத்தில்
நிற்கும் சர்ப்பங்கள்
மின் விசிறியின் சுழற்சியில்
துடிதுடித்துப்பறக்கும்
காலண்டரில்
பெரியாழ்வார் பல்லாண்டு கூறிய
பள்ளி கொண்டானுக்குப் பின்புறம்
படமெடுத்து
படுத்த பைந்நாகமாய்
ரப்பர் குழாயைப்போல
பாற்கடலின் மீது மிதந்து
நெளிந்திருக்கையில்
குங்குமம் பூசி
பிய்த்தெடுத்த சாமந்திப்பூ
தூவப்பட்ட தலையுடன்
குருக்களின்
தீபம் ஏற்றிய தட்டை
அலட்சியப்படுத்தியபடி
எழுந்து நிற்கையில்,
ஏழுதலைகளுள்
தன் வாலை விழுங்க
எந்த வாயைத் தேர்ந்தெடுப்பது
என்ற குழப்பத்தை
அவற்றின் கண்களில்
நீங்கள் கவனித்ததுண்டா?
குவாண்டம் சமன்பாடுகள்
எளிதில் நிறுவமுடிகிற
மாற்று உலகம்
நம் காது மடல்களின் விளிம்பில்
கன்னக் கதுப்பின் தசையில்
படிய மறுத்து
துருத்திக்கொண்டிருக்கும்
தலைமுடியில் உரசி நிற்கையில்
எப்ப வேண்டுமானாலும்
நிகழும் அதன் வருகை.
புராண உலகத்திலிருந்து
நிகழ்காலத்துக்குள்
அத்துமீறி
நுழைந்து விடும் சர்ப்பத்தை
அஞ்சத்தேவையில்லை.
காலால்
தரையில் உதைத்து தட்டினால் கூட
போதுமானது.
காது கேளாதுதான்
என்றாலும்
தரையின் அதிர்வுகளைப்போலவே
உங்களின் எண்ணத்தையும்
தன் எண்ணற்ற பாதங்கள் வழி
உணர்ந்து விடும்.
கோடை மழையில்
நனைந்த
வண்டியின் பாரக்கயிறு
கற்தரையில் இழுபடுவதைப்பதைபோல
தன் கிழ உடலை இழுத்துக்கொண்டு
சுவரோரம் சென்று
மறைந்துவிடும்.
தன்னைத்தானே விழுங்கும் சர்ப்பம்
ஆகஸ்ட் ஹெக்குலேயின்
பென்ஸீன் வளையத்தைப்போல
தோற்றமளிப்பதில்லை
என்பது மட்டுமல்ல.
கனவிலும் நிஜத்திலும்
எப்ப வரும்
என்றறியவும் இயலாது.
இப்போதுங்கூட ஒன்று
இந்த அறையில் தான்
எங்கோ ஒளிந்திருக்கிறது
அப்படியே இருக்கட்டும்.
கைதொடு தூரத்தில் இருந்தாலும்
அவற்றை கண்டு கொள்ளாதீர்.
நீங்கள் கண்டுகொள்ளாதவரை
அவைகளும்
உங்களை கண்டுகொள்வதில்லை.