சாயும் கதிர்கள் மலைகளில் படர்ந்து பனிப்படலத்தின் மேல் பொன்முலாம் பூசின.இரும்பும், வெள்ளியும், தங்கமும் போர்த்தி நின்ற மௌனம் உறையும் மலைகள்.மலைகள் அணிந்த கவசமா அல்லது உண்மைகளைப் போர்த்தி நிற்கும் மாயமா?எனக்கு நான் சிறு வயதில் பார்த்த பகல் வேஷக்காரன் நினைவில் எழுந்தான்.உங்களுக்கெல்லாம் பகல் வேஷக்காரனைத் தெரியுமா?பொதுவாகக் கண்ணனும், இராதையும் என வருவார்கள்.பளபளவென்று ஜிகினா வைத்துத் தைத்த கால்சராயும்,கண்களைக் கொல்லும் நிறங்களில் மேல்சட்டையும் அணிந்து, சிவப்பு சாயம் தீற்றிய உதடுகளோடு, காலில் சதங்கைகளோடு கண்ணன்.முகமெங்கும் ரோஸ் பவுடர், மை தீட்டிய விழிகள், புருவங்கள்,வாசிக்காத புல்லாங்குழல் என ரணகளமாக இருக்கும் அவனைப் பார்த்தாலே சிரிப்பு வரும்.இராதையையோ கேட்கவே வேண்டாம்.பல வர்ண ஜிலுஜிலுப் பாவாடை,மிட்டாய் ரோஸில் பிதுங்கப் பிதுங்க சட்டை,அபாரமான கூந்தல்,சதங்கைகள், கை நிறைய கண்ணாடி வளையல்கள்,காதுகளைத் தொடும் மைதீற்றல்,அவள் கையில் ஜால்ரா, அதை மாரிலும், இடையிலும் தட்டிக் கொண்டு நாங்கள் பணமோ, பொருளோ கொடுக்கும் வரை ஆடுவார்கள்.ஒரே இராகம், ஒரே தாளம், ஒரே நடனம்.அந்த ஒப்பனைகளைக் களைந்து பார்த்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று நான் வளர்ந்த பிறகு பலமுறை சிந்தித்துத் தோற்றிருக்கிறேன்.வேடமும் ஒரு கவசமே எனத் தெளிந்திருக்கிறேன்.
பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ஆதவன் விடை பெற்றுக் கொண்டான்.இரும்பின் நிறம் மட்டுமே தெரிந்து அதுவும் இருளில் மூழ்கப் பார்த்தது.அதன் அசையா நிலை என்னை அசைத்தது.யுகங்களின் சோகங்கள் இறுகி கெட்டிப்பட்டு மலையாக நிற்கின்றதா?இவை உதடுகளுக்குள் பாதுகாக்கும் செய்திதான் என்ன?பின்னர் எரிமலையென வெடித்து வெளி வருமோ?நெருங்கவும் இயலாது, விலகவும் முடியாது ஆடும் இந்த விளையாட்டில் வெற்றி, தோல்வி இவற்றிற்கெல்லாம் பொருளுண்டா?
மலைகள் மெதுவாகச் செருமும் சத்தம் போல் கேட்டது.அனைவரும் பேசிக்கொள்வது போல் நான் விளிம்பு நிலையில் இருக்கிறேனென்று தோன்றியது.இந்தக் குளிரில்,கேம்பின் கதகதப்பை விட்டு நழுவி வந்து மலையின் கவசங்களைப் பற்றிச் சிந்திக்கும் என்னை யாரால் புரிந்து கொள்ள முடியும்? மேலும், மலைகள் மனிதனைப் போல் கனைத்து தொண்டையையைச் செம்மைப்படுத்தி பேசும் என்றால்… எனக்குத் தயக்கமாக இருக்கிறது.. நீங்கள் மேலே படிக்க மாட்டீர்களோ என்று.
இல்லை, எனக்கு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. என் செவிகள் கூர்ந்திருக்கின்றன.இப்போது சிறு சிரிப்பொலியும் கேட்கிறது.கீழ்ப் பாறையின் புடைப்பில் இருந்து மனிதன் ஒருவன் வெளிப்பட்டான்.மறைந்த சூரியன் அதற்குள்ளாகவா உதித்துவிட்டான்?மேலே பரவாத சூரியன், நிலத்தில் மட்டும் ஒளி பரவ ….அதுவும் இரண்டு மீட்டர் விட்டம் உள்ள வட்டத்தில் மட்டும் ஜொலித்தான்.என்னால் உடலை அசைக்க முடியவில்லை.’ஓடு, ஓடு’ என்ற கட்டளையைக் கால்கள் செயல்படுத்தவில்லை.ஆனால் எனக்கும் உயிர்ப்பயம் உண்டு என்று உணர்ந்தேன்.சாவதைப் பற்றியே எண்ணிக்கொண்டு,அதற்கு எனக்கு ஒரு பயமுமில்லை என்ற என் திமிர்க் கவசம் கழன்று என் காலடியில் நொறுங்கியது.
“நான் கர்ணன்;சஹஸ்ர கவசன்.இந்த மலைகள்…..அவர்கள் நர நாரணர்கள்” என்றான்.
நிலைமையின் அபத்தத்தைப் பார்த்து என்னையும் அறியாமல் சிரித்தேன்.இவனும் என்னைப் போல் ஒருத்தன்.முகமூடிகளைக் கழட்டும் வேலை செய்தே அயர்ந்து போனவன்.மற்றவர்களிடமிருந்து அகற்றி அகற்றி ஒருக்கால் இவனே அணிந்திருக்கக்கூடும்.தன் உண்மைகளைத் தொலைத்த ஏக்கத்தில் பிதற்றுகிறான்.
அவன் என் எண்ணங்களைப் படித்தவன் போல் சொன்னான் ”நான் உண்மையிலேயே கர்ணன்.”
‘சரி’ என்றேன்.
“இந்திரன் வந்து பெற்றுச் சென்ற ஒரு கவசத்தைப் பற்றித்தான் உனக்குத் தெரியும்.என்னிடம் மொத்தமாக ஆயிரம் கவசச்சட்டைகள் இருந்தன. ஒன்றின் மேல் ஒன்றாக, வலுவாக, யாராலும் பிளக்க முடியாத கவசங்கள்.எடையற்றவை, ஆனால் உறுதியானவை.”
இந்த உளறலை ஏன் நான் கேட்க வேண்டும் என்று நினைத்து ’நல்லது,எனக்கு நேரமில்லை,நான் கிளம்புகிறேன்’ என்றேன்.
“என் ஒளி வட்டத்திலிருந்து நீ போக முடியாது; நான் தான் உன்னை விடுவிக்க வேண்டும்.பொறுமையாகக் கேள்” என்றான்.
அவன் தன் இடத்திலிருந்து நகரவில்லை.எனவே நான் பின் காலடி வைத்துப் போய்விடலாம் எனத் திட்டமிட்டேன்.நிலத்தில் கால்கள் பதிந்து நின்றன.சிறிதும் அசையமுடியவில்லை.
அவன் சற்று அசைந்தான்.ஒளி நீள்வட்டமாகியது;ஆனாலும் அதனுள் தான் நான் சிக்கியிருந்தேன்.அந்தக் குளிரிலும் எனக்கு வியர்த்தது,வாழும் இச்சை என்னையும் வாட்டும் என்று எனக்கே புரிந்தது.
“இப்படித்தான் நானும் சூழப்பட்டேன்.அதை அப்புறம் பார்ப்போம்,இப்போது இதைக் கேள்.என்னுடைய ஒரு கவசத்தை நீக்க பன்னிரண்டு ஆண்டுகள்ஒருவன் தவம் செய்து பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் என்னுடன் போர் புரிய வேண்டும்.ஏன் கவசத்தை நீக்க வேண்டும் என்று கேட்கமாட்டாயா?நீ எழுத்தாளன் என நினைக்கிறேன். வானையும், மலையையும், மரங்களையும் மலைத்து மலைத்துப் பார்த்து கதையைத் தேடுகிறாய், இங்கே ஒருத்தன் விரும்பி உனக்கு சொல்வதைக் கேட்க உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது.இருந்தாலும் சொல்வேன்.”
நான் வாயைத் திறக்கவில்லை.
“கவசங்கள் பெருங் காப்புகள்.அணிந்தவன் அதைத் தனது பாதுகாவல் என நினைக்கிறான்;அதை அகற்ற விழைபவனோ அதனால் பாதிக்கப்பட்டவன்.ஆனால், கவசங்களே தான் எனும் மாயையில் சிக்கியவன் அந்தக் கவசங்களாலேயே நொறுக்கப்படுகிறான்.”
இவன் ஏன் என்னிடம் தத்துவம் பேசுகிறான் என்று சலிப்பு வந்தது.அதைச் சொன்னால் அவனுக்குக் கோபம் வந்து என்னை ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று அடக்கிக்கொண்டேன்.
“உன்னை வெளிப்படுத்தக் கூடாது என்று மனதினுள் பேசுகிறாய். நான் வல்லமை உடையவன்;ஆயிரம் கவசங்களைக் காட்டியே அச்சுறுத்தி இன்பம் அடைந்தேன்.எதிர்ப்பார் இல்லை.பன்னிரண்டு வருடங்கள் தவம் செய்ய வேண்டும், பின்னர் பன்னிரண்டு வருடங்கள் என்னுடன் போர் செய்ய வேண்டும், அப்போதுதான் என் ஒரு கவசம் விலகும்;யாரால் இயலும் இது?”
பின்னர் பெருமாளும், அவன் சீடனும் மாறி மாறித் தவமும், போருமாக அவனது தொன்னூற்றி தொன்னுத்தொம்போது கவசங்களை அறுக்கையில் பிரும்ம பிரளயத்திற்குத் தப்பி எஞ்சிய ஒரு காப்போடு அவன் சூரியனிடம் சென்று சேர்ந்தானாம்.பறித்ததைத் திருப்பிக் கொடுக்கும் வள்ளலாக விழைந்து ஒற்றைக் கவசத்துடன் பிறந்தானாம்.
“புரிந்து கொள்.பாண்டவர் வனவாசம் பன்னிரண்டு ஆண்டுகள் தவத்தில் கழிந்தன.ஓராண்டு உன் பகல் வேஷக் காரர்களைப் போல் அவர்களும் வேடமிட்டு மறைந்திருந்தார்கள்.என் காப்பு ஊர் அறிந்தது அவர்கள் வேடம் யாருமறியாதது.தானமாகக் கொடுப்பதற்கென்றே பிறந்த நான் போரில் என் கவசத்தை இழப்பேனா என்ன?இந்திரனுக்குக் கொடுத்தேன்.ஊழின் திருப்பம் நன்றாக இல்லை?” என்று சிரித்தான்.
அவன் சிந்தனை என்னை வியப்பில் ஆழ்த்தியது.கணக்கை மீறிய ஒரு கணக்குக்குள் அவன் சீண்டி விளையாடியிருக்கிறான். இதில் தன் கவசத்தைக் கழட்டி தன் உண்மையை முன்னிறுத்தியிருக்கிறான்.அப்படியானால் குண்டலங்களுக்கும் ஒரு கதை இருக்க வேண்டுமே என்று கேட்டேன்.
“இதுதானே மனிதர்களிடம்? ம்ம்ம்…தொடர்பறாத விழைவு.வட்டத்தின் தொடக்கத்தையும், முடிவையும் காணும் ஆசை.ஆனால் உனக்காகச் சொல்கிறேன்;அவை நான் பெற்ற கொடை, என் தவத்தின் பயனல்ல.தன்னை நிலை நிறுத்தும் பொருட்டு பகல் தேவன் தந்த பரிசு; என்னை அன்பால் வளைக்கும் செயல்.முடிவு தெரிந்தும் ஆடும் ஆடல். அதை நிறுத்த முடியாது அல்லவா?”
எனக்குப் புரிந்தும் புரியாமலும் முழித்தேன்.
“அந்த வளைக்குள் வாழ்வது சுகம், நல்ல பாதுகாப்பு;ஆனாலும் விட்டுப்போய்விடும்.உங்கள் படிப்பு, அறிவு, பணம், குடும்பம்,புகழ்,அறியாமை, வறுமை,தனிமை, சிறுமை எல்லாமும் கவசங்கள் தான்.எல்லோருமே வேடதாரிகள் தான்.”