காலச்சுழி
மதில்மேல் தாவியேறி
விறுவிறுவென நடக்கத் துவங்கியது
புலிவால் பூனையொன்று.
சுவரோ, அடுத்த காலம்வரை நீண்டிருந்தது.
கும்மிருட்டிலும்
வாலை ஒருவாறு தாவிப்பிடித்து மேலேறிவிட்டேன்.
சீறிப்பாயும் நோக்கில்
எனை முறைத்த அதன் விழிகள்
ஒளிரும் கோலிக்குண்டுகளென மினுங்கின.
மதிற்சவாரி
சர்க்கஸ் உயரம்போல் அலாதியெனினும்
கடந்துவந்த காலச்சுழிகளை துழாவியபடி
பின்னோக்கிப் பார்வையைத் திருப்புகிறேன்,
என் வாலைப் பிடித்தபடி
வரிசையில் சாகசிக்கின்றன
புலித்தலையுடன் நான்கு பூனைக்குட்டிகள்.
வினோதத் தரை
நழுவி, கீழே விழும் யாவற்றையும்
மலைப்பாம்பென விழுங்கித் தீர்க்கிறது
வீட்டின் வினோதத் தரை.
சமீபத்தில், உளுந்து டப்பாவிலிருந்து உருண்டோடிய கறுப்புளுந்துகள்.
பழைய மாயாஜாலப் படம்போல் சுவாரஸ்யமாய் இருக்கவே,
இருப்பின் மொத்த தானியங்களை சிதறவிடுகையில்
நொடியில் மாயமாயின அவ்வளவும்.
அப்போதுகூட சிமெண்ட் தரை
கிட்டத்தட்ட மொசைக் தரை போலிருந்தது.
நம்புங்கள்
இப்போதில்லாவிட்டாலும்
பிரம்மாண்ட வாய்பிளந்து
எனையும் விழுங்கி ஏப்பமிடும் அதிசயநாளில்
இவ்வளவும் உண்மையென
நிச்சயம் புரிந்துவிடும் உங்களுக்கு.