அழுக்கு வெள்ளையில்
அம்மை கண்டது போல்
உடல் எங்கும்
கரும் புள்ளிகள்.
இளச்சிவப்பு
உள் தெரியும்
பெரிய காதுகள்.
கால் முதல்
தலை வரை ஒன்றாய் தைத்து
வெள்ளாடு போல்
வால் வைத்து,
இழுத்து மூடும்
ஆடையில்
நாய் வேடமிட்டு வந்த கடவுள்
நகைக்கடைத் தெருவின்
நடைபாதையில் இறங்கி
சாலையின் குறுக்கே
நடந்து செல்கிறார்,
ஒரு
குல டால்மேஷன்
நாயைப்போல.
மின்கம்பத்தின்
அருகில்
நிதானித்து
பின்னங்காலை
பக்கவாட்டில் தூக்கியதும்
உரக்க சிரிக்கிறான்
ஒரு சிறுவன்
வலது புறம் கிடந்த
வாழைப்பழத் தோலை
முகர்ந்து
இடது
பின்னங்கால் கொண்டு
பிடரியில் சொறிந்து
காற்றடிக்கும்
நாற்றாங்கால் போல
முதுகை சிலிர்த்துவிட்டு
நடக்கையில்,
தனக்கு முன்
சென்ற திரளில்
சும்மா கேட்டுக்கொண்டு
சென்றவனிடம்
இடைவெளிவிடாமல்
பேசிக்கொண்டு சென்ற
குறுந்தாடிக்காரனை
இடை மறித்து
விளக்கிச் சொல்ல
எத்தனையோ விஷயம் இருந்தது
அவரிடம்.
இருந்தும்,
பேசுபவனை பார்த்து நின்று
லொள், லொள் என
தோராயமாக
குரைத்த பிறகு
நிதானமாய் நடந்து செல்கிறார்,
நான்கு கால்களால்.
நாய் வேடமிட்ட
கடவுள்.
மனிதபாஷையில்
மனிதர்களிடம்
விளக்கிச்சொல்ல ஆயிரம்
விஷயம் இருந்தும்,
நாய் வேடமிட்டிருக்கையில்
நாய்போல குரைப்பதன்றி
வேறெதைத்தான் கூற முடியும்?
கடவுளாகவே இருந்தாலும்?