பவரிதம் – பிரவின் குமார் சிறுகதை

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் போது கூட இதே நினைப்பு தான். அவசியம் ஊருக்குச் செல்லத் தான் வேண்டுமா…? பல மூளை முடுக்குகளில் வாழும் கிராமவாசிகள் வேலைகளை விடுத்து திருவிழாவை அலங்கரிக்க எப்படியோ எங்கள் கிராமத்திற்கு தஞ்சம் அடைகிறார்கள் ஆனால் என்னால் மட்டும் சில வருடங்களாக ஆர்வமின்றி தான் திருவிழாவிற்கு செல்ல நேர்கிறது.

ஜன்னல் இருக்கை பக்கம் என் மனைவி அமர்ந்ததும் அவள் மடியிலேயே என் மகன் தூங்கலானான். அவனை தொடர்ந்து என் தோள் மீது என் மனைவியும் நித்திரையில் ஆழ்ந்தாள். என் மகன் விழித்தபின் அவன் அழுகையை நிறுத்துவதற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடாக பேருந்திற்கு வெளியே கூவிக்கொண்டிருந்த வியாபாரிடம் ராகி பிஸ்கோத்தும் அடை முறுக்கு பாக்கெட்டும் வாங்கி வைத்தேன். பேருந்து வண்டலூர் நெடுஞ்சாலையை கடந்து போய்க்கொண்டிருந்தது. கடந்து வந்த திருவிழா நாட்கள் நினைக்கும் அதே நேரத்தில் மஞ்சள் பூசிய அந்த முகம் என்னுள் உலாவத்தொடங்கியது.

பெரும்பாலும் நேரங்களில் பவித்ராவை பார்ப்பது மஞ்சள் நிறத்தோடு தான். எப்போதும் மஞ்சளை அரைத்து முகத்தில் பூசியபடி இருப்பாள் எங்கள் கிராமத்தில் இருக்கும் பெண்களோடு பவித்ராவை ஒப்பிட்டால் அதிகம் மஞ்சள் நிறத்தோடு உறவாடியவள் அவளாக தான் இருக்கக்கூடும். என் வீட்டிலிருந்து சற்று தொலைவில் தான் பவித்ராவின் வீடு. அவளுடைய வீடு மட்டுமல்ல எங்கள் கிராமத்தில் அமைந்திருக்கும் பலரது வீடுகளும் நாற்று நடும் தோரணையில் தான் உள்ளே பிரவேசிக்க முடியும். பாதங்களின் மிதியில் கூழாகிப்போன செம்மண்ணில் செதுக்கிய வீடுகள் தான் கிராமம் முழுவதும் காட்சியளிக்கும். பனைவாரையை குறுக்கும் நெடுக்குமாக வைத்து அதன் மேல் காய்ந்து போன நெகுல்களை நேர்த்தியாக அடுக்கி கதிரவனின் அனல் பார்வை சிறிதளவும் உள்ளே எட்டி பார்க்காதபடி ஒரே நாட்களில் கட்டப்படும் கூரைகள் தான் அப்போது ஏராளம். திண்ணைகள் இல்லாத வீட்டை கட்டியதாகவும் பார்த்ததாகவும் கூட எவர் சொல்லியும் கேட்டிருக்க முடியாது. எழுபதுகளின் வாழ்வுமுறையை பிரதிபலித்து கொண்டிருந்தக் கூரைகள் இப்போது அடையாளச் சின்னங்களாக ஒரு சில தெருக்களில் மட்டும் மிஞ்சி இருப்பதை பார்க்கலாம்.

“ஏ பவித்ரா…” என்னும் குரல் அவ்வபோது எங்கள் வீட்டை கடந்து ஊர் ஏரியில் நீந்திக் கொண்டிருப்பவர்களையும் திரும்பிப் பார்க்கச் செய்யும், பவித்ரா அம்மாவிற்கு அப்பிடியான ஒரு குரல். பவித்ராவின் அம்மா ஓயாது கத்திக்கொண்டிருப்பதும் பவித்ரா வீட்டை கடந்துகொண்டிருக்கும் சிலர் “எதுக்கு பவித்ராம்மா இப்படி கத்திட்டு இருக்க…” என்று கேட்பதும் தினசரிக் காட்சிகளாக தெருவில் நடந்துகொண்டிருக்கும்.

பவித்ரா எட்டாம் வகுப்போடு பள்ளிக்கு முழுக்குப் போட்டதற்கு கருக்கடி அம்மன் அவள் உடலை ஆட்கொண்டது தான் காரணம் என்று சிறுசுகள் அவர்களுக்குள்ளே கிசுகிசுத்துக்கொண்டிருப்பார்கள். யாரும் எதிர்பாரா நேரத்தில் பவித்ரா திடீரென்று முடியை விரித்துபோட்டுக்கொண்டு கோயிலின் வாசலில் போய் விழுவாள். கருக்கடி அம்மன் பவித்ராவின் ரூபத்தில் வலம் வந்துகொண்டிருப்பதாக ஊருக்குள் ஊருக்குள் ரகசியம் பேசினார்கள். பள்ளியை விட்டு நின்றதிலிருந்து பவித்ராவை பார்ப்பதே அரிதாகிவிட்டது. எப்போதாவது அவள் ஊர் கிணத்தடிக்கு தண்ணீர் பிடிக்க போகும் நேரங்களிலும், மாடுகளை ஏரிக்கு கூட்டிச் செல்லும் நேரங்களில் மட்டும் அவளை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சில சமயம் எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்துகொண்டு என் அக்காவோடு பேசிக்கொண்டிருப்பாள்.

காலங்காலமாக எங்கள் ஊர் திருவிழாவில் அரங்கேறும் ஒரு நடைமுறை. எவர் ரூபத்தில் கருக்கடி அம்மன் தோன்றுகிறாளோ அவர் கையில் கொடுக்கப்படும் காப்பை தான் ஊர் திருவிழா அன்று கட்டிக்கொள்ளவேண்டும். கொஞ்ச வருடங்களாகவே பவித்ராவின் ரூபத்தில் கருக்கடி அம்மன் இவ்வேலையை செய்து கொண்டிருக்கிறாள். திருவிழாவிற்கு முந்தின இரண்டாம் நாள் ஊர் கோயிலின் பின் புறத்தில் உள்ள வெற்று நிலத்தில் இரவு பத்து மணிக்கு மேல் கருக்கடி அம்மன் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும். கிராமவாசிகள் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக இரண்டு போகஸ் பல்புகளை பனை மரத்தின் நடுவில் கட்டி வைத்திருப்பார்கள் நேரில் சென்று பார்க்க முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தே அம்மனின் வரவேற்பு உரையாடல்களை கேட்பதற்குத் தோதுவாக ஒலிபெருக்கி குழாய்களை ஊரைச் சுற்றியுள்ள கம்பங்களிலும் கட்டி வைத்திருப்பார்கள். அவ்வப்போது ஒலிப்பெருக்கியில் திருவிழாவின் அறிவிப்புகளை தொகுத்துக் கொண்டிருக்கும் குரல்களையும் சிறுசுகளின் ஓம் சக்தி பரா சக்தி கோஷங்களையும் கேட்ட முடியும்.

அம்மன் வரவேற்பு நிகழ்வின் பொழுது தான் கரகம் சுமக்க இருப்பவரும் தேர்ந்தெடுக்கப்படும். கரகம் சுமந்து செல்ல இருப்பவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் கருக்கடி அம்மனுடையது தான். மஞ்சள் நீர் நிரம்பிய கரகத்தை எலுமிச்சை பழங்களினாலும், பூக்களாலும் இரண்டரை அடி உயரத்திற்கு பிரத்தியோகமாக செய்து கருக்கடி அம்மனின் கிரகத்தை ஊரார் முன்னிலையில் வைத்திருப்பார்கள்.

பம்பையும் உடுக்கையும் ஆட்டம் கொள்ளும் நேரம் யார் யாரோ ரூபத்தில் ஏதேதோ சாமிகள் ஆக்ரஷத்தோடு ஆடிக்கொண்டு பம்பை உடுக்கைக்காரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தன்னை தானே அறிமுகம் செய்துகொள்ளும். கோவில் பக்கமே திரும்பாதவர்கள் எல்லாம் அருள் வந்து ஆடும் சாமிகளின் ஆட்டத்தை காண கோவிலுக்கு படையெடுத்து கொண்டிருப்பார்கள். முத்துமாரி, அங்காளி, பீலியம்மன், காத்தவராயன் என்று ஏதேதோ பெயரில் பல சாமிகள் வந்து தன் பங்களிப்பை கொடுத்துச் செல்லும். வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் சாமி ஆடிக்கொண்டிருப்பவர்களின் அவகாசம் முடிந்ததும் எரிந்து கொண்டிருக்கும் கற்பூரத்தை வயிற்றுக்குள் திணித்தும், விபுதி அடித்தும் சாமி ஆடிக்கொண்டிருந்தவர்களை மலை ஏற்றுவார்கள். பவித்ராவின் சாமி ஆட்டத்தை காண அவ்விரவில் முழித்துகொண்டிருக்கும் சிலர் பொறுமை இழந்து “சீக்கிரம் கருக்கடி அம்மாவ கூப்பிடுங்கப்பா…” என்று உரக்க சொல்லிவிடுவதும் உண்டு. அதுவரை கேலியாகவும், கலகலப்பாகவும் நடந்துகொண்டிருந்த நிகழ்ச்சி முடிவிற்கு வந்து கருக்கடி அம்மனின் வரவேற்பு தொடங்கும்.

பெரும்பாலும் நேரங்களில் பவித்ரா தன் வீட்டில் தூங்கிக்கொண்டு தான் இருப்பாள். பம்பை, உடுக்கை சத்தத்துடன் கருக்கடி அம்மனை வர்ணித்து பாடும் பாடல், கோவில் வாசலையும், தெரு வீதியையும் கடந்து பவித்ராவின் காதிற்குள் அழைப்பு மணியாய் ஒலிக்கும். அதுவரை நித்திரையில் மூழ்கிக்கொண்டிருந்தவள் சட்டென்று எழுந்து கண்களை அகல விரித்துக்கொண்டு விரித்த தலையுடன் பெருமூச்சு விட்டவாறே வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு விரைவாள். அவள் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவளது அம்மாவும், அப்பாவும் அவளை பின்தொடர்ந்துக்கொண்டிருப்பார்கள். பவித்ராவின் ஓட்டத்தை பார்த்து வெறுமனே கதைப் பேசிக்கொண்டிருந்த ஊர் மக்களும் பின்தொடருவார்கள்.

வரவேற்பு நிகழ்வின் இடத்திற்கு வந்ததும் பவித்ரா ஆடிக்கொண்டே இருப்பாள். எங்கிருந்தோ உடைக்கப்பட்ட வேப்பிலைகள் அவள் கைப்பிடிக்குள் தஞ்சம் அடையும். வேப்பிலையை மென்று கொண்டே வெற்று நிலத்தில் சுழன்றுகொண்டிருப்பாள். அவள் பாதத்தை பதம் பார்க்கும் முட்களும் கற்களும் கூட அவள் ஆட்டத்தின் வீழ்ச்சியை அடக்கமுடிவதில்லை.

அரைமணி நேரத்திற்கு குறையாமல் ஆடிக்கொண்டிருந்தவளின் பாதத்தை கர்ப்பிணி பெண்களும், கைக்குழந்தை வைத்திருப்பவர்களும் நேரம் பார்த்து சட்டென்று காலில் விழுந்து வணங்கிப் பின்வாங்கிக்கொள்வார்கள். சூறாவளியாக ஆடிக்கொண்டிருப்பவளை பார்த்து பயந்து தன் அம்மாவின் கழுத்தை இறுக்க அணைத்துக்கொள்ளும் குழந்தைகளும் அக்கூட்டத்தில் இருப்பார்கள். பம்பை உடுக்கைகாரர்கள் ஆளுக்கொரு கேள்வியாக ஊரார் கேட்க நினைக்கும் கேள்விகளுக்கு வேப்பிலையை மென்றுகொண்டே மேல் மூச்சு கீழ் மூச்சோடு பதில் சொல்லிக்கொண்டிருப்பாள்.

கரகம் தூக்க இருப்பவரை தேர்ந்தெடுக்கும் நேரம் வந்ததும் திருமணம் ஆகாத ஊரில் உள்ள இளைஞர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்து நிற்க வைக்கப்படுவார்கள். அப்பிடி நிற்கும் இளைஞர்களில் மற்ற ஊரை சேர்ந்தவர்கள் எவரும் நிற்க கூடாது என்பதும் விதியிற்குள் அடங்கும். கருக்கடி அம்மன் நம் வீட்டு மகனை தேர்ந்தெடுக்க மாட்டாளா…? என்று அந்தந்த இளைஞர்களின் குடும்பத்தினர்கள் மனதிற்குள் ஓயாது வேண்டிக்கொள்வதுமாக இருப்பார்கள். அப்பிடி நிற்க வைக்கப்படும் இளைஞர்களின் பார்வை கரகத்தின் மீதே பதிந்திருக்கவேண்டும். பவித்ரா உருவத்தில் ஆடிக்கொண்டிருக்கும் கருக்கடி அம்மன் இளைஞர்களை வட்டம் இட்டவாறே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பாள். எந்த பாலகன் முகத்தில் தேஜஸ் ஜொலிக்கிறதோ, எவர் மனதில் ஆன்மிகம் நிரம்பியிருக்கிறதோ அவனை கருக்கடி அம்மன் அடையாளம் கண்டு முடியை பிடித்து வந்து கரகத்தின் முன்பு நிறுத்துவாள்.

இறுதியாக அம்மனுக்கு மாலையிட்டு விரதம் இருப்பவர்களும், நேற்றி கடன் செய்ய இருப்பவர்களும் அவள் கரங்களினால் கொடுக்கப்படும் மஞ்சள் காப்பை கட்டிக்கொண்டு செல்வார்கள். காப்பை கைகளில் கட்டிய வினாடியிலிருந்து நான்கு நாட்களுக்கு ஊரைவிட்டு வெளியே எங்கும் செல்ல கூடாது என்பது காலங்காலமாக தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டுப்பாடு.

அன்றைய இரவே கரகம் வீதி உலா நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்டவன் கருக்கடி அம்மன் முன் மண்டியிட்டு நிற்க, பவித்ரா கரகம் சுமக்க இருப்பவனின் தலையில் கரகத்தை வைத்து வழி அனுப்புவாள். கரகத்தைச் சுமந்து செல்பவரை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்க வைத்து பாதத்தை நீரால் கழுவி மஞ்சள் குங்குமம் பூசி ஆரத்தி எடுத்து பாத பூஜை செய்யப்படும். இப்படி ஒவ்வொரு வீட்டு வாசலாகத் தீப்பந்தத் துணையுடன் ஊரைச் சுற்றிக் வந்து கோவிலுக்கு திரும்புவதற்குள் விடியல் அக்கரகத்தை வரவேற்றுகொண்டிருக்கும்.

ஒவ்வொரு இரவும் கரகம் வீதி உலா நடைபெறும் நேரங்களில் பவித்ராவை ஒலிபெருக்கியில் அழைக்க அவள் கோவிலுக்கும் வீட்டிற்கும் பறந்து கொண்டிருப்பாள். கரகத்தை ஏற்றுவது, இறக்குவது, கருக்கடி அம்மன் சிலைக்கு ஆராதனை செய்வது போன்ற சாங்கியங்களில் பவித்ரா முதன்மையாக நிறுத்தப்படுவாள். இதன் காரணமாகவே அவளது திருமணம் தடைப்பட்டுக்கொண்டிருந்தது. பவித்ரா விஷயத்தை அறிந்த பலரும் அவளை பெண் பார்க்க வருவதை தவிர்த்தனர்.

அப்பாவின் கட்டளைப்படி என் மேற்படிப்பிற்காக பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த கையோடு சென்னையில் உள்ள என் சித்தப்பா வீட்டிற்கு குடிபுகுந்தேன். அரசு கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் அன்றே கிராமத்தில் இருந்த வந்த மாணவர்களுடன் தான் என் நட்பும் உருப்பெற்றது. பண்டிகை நேரங்களில் பவித்ராவை சந்தித்தது பற்றியும் திருவிழா நாட்களில் பவித்ரா நடத்திய ஆர்ப்பாட்டங்களையும் ஊரில் இருந்து வந்ததும் ஓயாது என் நண்பர்களுக்கு சொல்லிக்கொண்டிருப்பேன். கல்லூரி மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் திருவிழாவிற்கு கிளம்பிக்கொண்டிருக்கையில் “இந்த தடவ வரும்போது எப்படியாவது பவித்ராவோட போட்டோ எதனா எடுத்துட்டு வா மச்சி…” என்று என் நண்பர்களே என்னை ஊருக்கு வழி அனுப்பி வைத்தார்கள்.

ஊருக்கு வந்ததும் என் நடையிலும் பேச்சிலும் சென்னையின் வாசம் ஒட்டிக்கொண்டிருப்பதாக என் கிராமத்து நண்பர்கள் என்னைக் கேலி செய்தனர். வழக்கம் போலவே அன்றிரவுக் கருக்கடி அம்மனின் வரவேற்பு. நீண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்திருந்ததால் ஊரில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களையும் கோரச் சம்பவங்களையும் என் நண்பர்கள் விவரிக்க அவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தேன். ஒரு பக்கம் பவித்ரா வருடந்தோறும் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொண்டிருந்தாள். திடிரென்று கரகம் தூக்க இருக்கும் இளைஞனை தேர்ந்தெடுக்க ஒருபுறமாக அனைவரையும் நிற்க வைத்தார்கள். இம்முறை என் அம்மா ஏதோ ஒரு வேண்டுதலுக்காக என்னையும் அக்கூட்டத்தினுள் நிற்க வைத்தாள். பவித்ராவின் பார்வையோ கருக்கடி அம்மனின் கரிசனமோ நிச்சயம் என் மேல் விழாது என்கிற நம்பிக்கையோடு கூட்டத்தில் ஓரமாக நின்றுகொண்டேன். பல வருட திருவிழா நாட்களை கடந்து வந்ததில் அன்றைய நாள் எனக்கு சற்றும் பொருத்தமில்லாத ஒன்றாக அமைந்தது. இளைஞர்களைச் சுற்றி சுற்றி ஆடிக்கொண்டிருந்த பவித்ரா எதிர் பாராத நேரத்தில் என் பிடரியை பிடித்து வந்து கரகத்தின் முன் நிறுத்தினாள்.

கரகத்தை சுமப்பதற்கு இவனே தகுந்த பாலகன் என்று ஊரார் முன்பு கட்டளையிட்டாள். அவ்வார்த்தையை பவித்ரா சொன்னாளா? இல்லை பவித்ரா ரூபத்தில் இருந்த கருக்கடி அம்மன் சொன்னாளா? என்பது தான் இன்றுவரை எனக்கு பிடிபடவில்லை. கருக்கடி அம்மன் என்னை தேர்ந்தெடுத்த பூரிப்பில் என் அக்காவும் அம்மாவும் பவித்ரா முன் விழுந்தார்கள். அன்றிரவே எங்கள் சொந்தபந்தங்களுக்கு இம்முறை செழியன் கரகத்தைச் சுமக்கிறான் என்னும் செய்தி பரவிக்கொண்டிருந்தது.

இது எனக்கு தேவைதானா என்று உள்ளுக்குள் நான் புலம்பிக்கொண்டிருந்த சமயத்தில் கருக்கடி அம்மன் எங்கள் குடும்பத்திற்குக் கொடுத்த கௌரவம் என்று என் அப்பா அனைவரிடமும் தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தார். வேறுவழியின்றி கரகத்தைச் சுமப்பதற்கு தயாரானேன். பவித்ரா கரங்களினால் கொடுத்த காப்பு என் கையில் கட்டப்பட்டது. வீட்டில் இருந்து கொண்டுவந்திருந்த வெள்ளை வேஷ்டியை கட்டிக்கொண்டேன் மஞ்சள் நீரால் என் தேகம் நனைந்துகொண்டிருந்த நேரத்தில் பம்பையும் உடுக்கையும் பாடத்தொடங்கியது. மூன்று முறை கோவிலை சுற்றி வந்த பிறகு கரகத்தை தலையில் வைக்கும் நேரத்தில் பவித்ராவின் உடலை கருக்கடி அம்மன் ஆட்கொண்டாள். கண்களை அகல விரித்துக்கொண்டு அருள் வந்தவளாய் என் தலையின் மேல் கரகத்தை வைக்க தள்ளாடினாள். விழிபிதுங்கிய அந்த பார்வையில் தென்பட்ட ஆவேசம் நீரில் நனைந்து படர்ந்திருந்த என் ரோமங்களை சிலிர்க்கச் செய்தது. ஒரு நிமிடம் கருக்கடி அம்மன் என் உடலில் ஊடுருவிக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன். பவித்ராவின் கரத்தினால் ஆரத்தி எடுக்கப்பட்டு கோவில் வாசலில் முதல் ஆளாய் பவித்ரா எனக்கு பாதபூஜை செய்யத்துடங்கினாள்.

அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு என் உடல் என்னை பிரிந்து தொலைவில் எங்கேயோ போய்க் கொண்டிருப்பது போல் இருந்தது. கரகத்தை சுமக்கும் ஒவ்வொரு மாலை பொழுதும் சென்னைக்கு திரும்பி ஓடிவிடலாமா என்றே யோசித்துக்கொண்டிருந்தேன். நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கவும், களைப்பின்றி படுத்துறங்கவும் போதிய நேரத்தை கருக்கடி அம்மன் எனக்கு கொடுக்கவில்லை. என் அம்மாவும் அக்காவும் பழச்சாற்றை கையில் ஏந்திக்கொண்டு முடிந்தவரை என்னை பின்தொடர்ந்தனர். என் முகத்தில் வழியும் வேர்வைத் துளிகளை அவ்வபோது அம்மா துடைத்துக்கொண்டிருந்தாள். எனக்கு துணையாக என் நண்பர்களும் அவர்களின் உறக்கத்திற்கு விடுப்பு கொடுத்திருந்தார்கள்.

உறங்கும் நேரங்களில் என் கால்களை நீவிவிடுவதற்க்கு எந்நேரமும் என் அப்பா தயாராகவே இருந்தார். என்னை கவனித்துக்கொள்ளும் மிதப்பில் அம்மாவை காரணங்களற்ற செய்கையில் அடிக்கடி எரிந்துகொண்டிருப்பதும் எனக்கென்று தனியாக இளநீர் குலைகளையும் வீட்டின் பின்புறத்தில் குவிப்பதுமாக திரிந்துக்கொண்டிருந்தார். கேட்கும் நேரங்களில் பால் காய்ச்சிக் கொடுப்பதையும், பழச்சாற்றை பிழிந்து கொடுப்பதையும் தன் பங்காக என் அக்காவும் செய்துகொண்டிருந்தாள். சொந்தபந்தங்கள் குமிந்திருந்த அந்த மூன்று நாட்கள் எவ்வருடமும் இல்லாத விசேஷமான திருவிழாவாக எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அமைந்தது. வீட்டு வாசல் முன் கரகம் சுமந்து நிற்கும் பொழுதுகளில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் என் பாதங்களை தொட்டு வணங்கிக்கொண்டிருந்தார்கள்.

என் மனைவியின் எழுப்புதலில் தான் என் நித்திரை முழுவதும் கலைந்தது. பேருந்தில் இருந்து இறங்கியதும் என் மாமா அவருடைய சாம்பல் நிற வோல்ஸ்வோகன் காரில் எங்களுக்காக காத்திருந்தார். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு சில பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு விரைந்தோம். வீட்டிற்கு வந்ததும் என் அம்மா தன் பேரனைத் தூக்கிக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள். நைட்டிக்கு மாறிய என் மனைவி வீட்டின் பின்புறம் உள்ள சமையல் கொட்டகைக்கு சென்று என் அக்காவுடன் நட்புறவாடினாள். கிராமத்தின் பழைய முகங்கள் என்னை அடையாளம் கண்டு கேலியும் கிண்டலுமாக பேசத் தொடங்கியது. ஒலிப்பெருக்கி குழாய்களில் ஓயாது எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருந்தார். அப்பாவின் பழைய வேஷ்டியை கட்டிக்கொண்டு இரைச்சல் இல்லாத தனிமையைத் தேடி ஊர் ஏரிக்கு விரைந்தேன்.

மறு நாள் விடியலிலிருந்தே திருவிழாவின் அன்றாட சங்கதிகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. என் அப்பா நாட்டுக்கோழியை உறிப்பதிலும், என் அம்மா ஓயாது இட்லி சட்டிகளை இறக்கி கொண்டிருப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். என் மனைவி என் அக்காவுடன் சேர்ந்து கோவிலுக்கும், வீட்டிற்குமாக நடை பயின்றாள். குப்பைகளாலும், பனை ஓலைகளாலும் தேங்கி இருந்த எங்களது பழைய கிணற்றடி பக்கம் என் நண்பர்களுடனும், என் மாமாவுடனும் உரையாடிக்கொண்டிருப்பதிலேயே நேரத்தை செலவழித்தேன். கிராமத்திற்கு வந்ததிலிருந்து கோவில் பக்கம் செல்வதற்கு கூட மனது முனைவதாக இல்லை. மதியம் தூக்கத்திலிருந்து எழுந்த பொழுது தான் வீடு வெறிச்சோடி இருப்பதை உணர்ந்தேன். என் மகனின் கண்கள் அவன் அம்மாவின் முகத்தை தேடி அழத் தொடங்கின. என் தூக்கத்தை கலைத்த என் மகன் மீதே வெறுப்பும் கோபமும் உருப்பெற தொடங்கியது. அழுகையில் இருந்து தேற்ற அவனை தூக்கிக்கொண்டு கோவிலுக்கு சென்றேன்.

அம்மனுக்கு கூழ்வாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் கோவிலை நெருங்க நெருங்க பம்பை சத்தமும் உடுக்கை சத்தமும் என்னை நெருங்கி வந்தன. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் கூழ் கரைத்து எடுத்து செல்லும் பெண்கள் வட்டமாக கோவில் முன் நின்றுகொண்டிருந்தார்கள். என் குடும்பத்தினரை தேடி அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்ததில் இறுதியாக பளிச்சென்று கண்ணில் பட்டது அந்த பச்சை நிற பட்டுப்புடவை. என் அம்மாவின் அருகில் என் மனைவியும், என் அக்காவும் நின்றிருப்பதை கவனித்தேன். முடிந்த அளவு கூட்டத்தை விலக்கிக்கொண்டு என் மனைவியிடம் சென்று குழந்தையை கொடுத்த மறு கணமே அங்கு நிற்க பிடிக்காமல் வீட்டிற்கு திரும்பினேன். பவித்ராவின் முகம் இக்கூட்டத்தில் எங்கேனும் தென்படுமா? என்னும் ஏக்கம் இப்பொழுதும் என் மனதில் இருந்துகொண்டு தான் வருகிறது. ஆனால் எங்கள் கிராமவாசிகளுக்கு பவித்ராவின் முகம் மறந்து பல வருடங்கள் கழிந்துவிட்டது.

கரகம் சுமக்க என்னை தேர்ந்தெடுத்த பவித்ராவின் கடைசித் திருவிழா அதுவாகத்தான் இருக்குமென்று நான் மட்டுமல்ல ஊரார் கூட அப்போது நினைத்திருக்கவில்லை. மூன்று நாட்களாக கரகம் சுமந்ததில் என் உடலின் பளு மொத்தமும் காணாமல் போனது இருந்தும் கூழ்வாத்தலின் போது பவித்ராவின் ஆட்டத்தை பார்ப்பதற்காக என் நண்பர்களுடன் நின்றிருந்தேன். பவித்ராவின் பாதங்களுக்கு சமமாக அவளது கேசமும் போட்டி போட்டு ஆடிக்கொண்டிருந்தது. நின்ற இடத்திலிருந்தே இடதும் வலதுமாக சோம்பல் முறிக்கும் பாவனையில் பொறுமையாகவும், உரக்க கத்தியும் உடுக்கைக்கார்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். யாரும் எதிர் பாராத வண்ணம் சட்டென்று பவித்ராவின் அம்மா அவள் காலில் விழுந்து “என் பொண்ண விட்டு போயிடு யம்மா… நீ அவ உடம்புல இருக்குறதுனால அவ கல்யாணம் தடைபட்டுடே போகுது, நீ என்ன கேட்டாலும் தரேன்… என் பொண்ண மட்டும் விட்டு போயிடு என் கருக்கடி அம்மாவே” என்று அவள் பாதத்தை பிடித்து கெஞ்சியும், புரண்டும் அழுதுக்கொண்டிருந்தாள். கூட்டம் ஒரு பக்கம் சலசலத்துக்கொண்டு அவ்விருவருக்காக உச்சுக் கொட்டியது. கோவிலின் முகப்பு வாசலை வெறித்து பார்த்துக்கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் பவித்ரா ஆடிக்கொண்டிருந்தாள். “அத எல்லாம் ஆத்தா பாத்துப்பா.. நீ கவலபடாம போ பவித்ராம்மா” என்று கோவில் பூசாரி பவித்ரா அம்மாவை சமரசம் செய்து அங்கிருந்து அழைத்துச்சென்றார்.

திருவிழா முடிந்து ஒரு வாரம் கழிந்த பின்பும் கூட பவித்ரா பற்றிய கதைகளையே ஊர் மக்கள் அசைபோட்டுகொண்டிருந்தார்கள். “அடுத்தா வருஷம் கருக்கடியம்மா யார் ரூபத்துல வருவாளோ இல்ல இந்த பவித்ரா பொண்ணு உடம்புலேயே இருந்துட போறாளோ..?” திரும்பும் திசையெங்கும் இவ்வார்த்தைகளே புழங்கிக்கொண்டிருந்தது.

ஆலங்குச்சியால் பற்களை தேய்த்துக்கொண்டு ஏரிக்கு நடந்துகொண்டிருந்தேன். பவித்ரா அவளது மாடுகளை ஓட்டிக்கொண்டு வயலுக்கு சென்றுகொண்டிருந்தாள் அவளாகவே என்னை பார்த்து
“என்ன செழியா திருவிழா முடிஞ்சும் இன்னும் ஊருக்கு போகாம இங்கேயே இருக்க”

“இல்ல பவித்ரா மூணு நாளா கரகம் தூக்குனதுல ஒடம்பு ரொம்ப வலியா இருக்கு, அதான் ஒரு வாரம் தங்கிட்டு பொறுமையா கிளம்பலாம்னு இருக்கேன்”

மாட்டை அதன் போக்கில் மேயவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்

“நான் உன்ன புடிச்சு இழுத்து போட்டேனு என் மேல எதனா கோவமா செழியா”

“ச்ச… ச்ச… அப்பிடி இல்ல பவித்ரா நிஜமாலுமே கரகம் தூக்க சரியான ஆளு நான்தானானு எனக்கு இன்னும் சந்தேகமாவே இருக்கு, ஊர்ல எவ்ளோ பசங்க அதுக்காக ஏங்கிகிட்டு இருக்கானுக என்னைய எதுக்கு வலிச்சு போட்ட..?”

கேளிக்கை கலந்த சிரிப்போடு

“என்ன கேட்டா எனக்கெப்டி தெரியும் அத நீ கருக்கடி அம்மாவ தான் கேக்கனோ, உன் மூஞ்சில சாமி பக்தி தாண்டவமாடுதோ என்னமோ அதான் கருக்கடி அம்மா உன்ன இழுத்து போட்டா… காரணம் இல்லாம ஆத்தா எதையும் செய்யாது”

கொஞ்ச நேரத்திற்கு ஊரில் நடக்கும் விஷயங்களை பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.

“ஏன் பவித்ரா நீ எப்புடி இருந்தாலும் கல்யாணம் பண்ணி வேற ஊருக்கு போயிடுவ அப்போ கூட கருக்கடி அம்மா உன் உடம்புல தான் இருக்குமா?”

“தெரில செழியா ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் என் உடல எந்த சாமிக்கும் கொடுக்க முடியாது”

ஊர் பெரியவர்கள் கலந்து பேசி சிறப்பு பூஜை ஒன்றை நடத்தி பவித்ரா உடலில் இருந்த கருக்கடியம்மனை வேறொரு இளைஞனின் உடம்பில் இறக்கச் செய்தனர். பவித்ரா உடம்பில் இருந்த கருக்கடி அம்மனே அந்த நபரை தேர்ந்தெடுத்தாள். கொஞ்ச மாதங்களாக பவித்ரா உடம்பு சரியில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கருக்கடி அம்மனின் கோபம் தான் அவள் உடலை வருத்திக்கொண்டிருப்பதாக பலர் புரளி பேச தொடங்கினர். யாருக்கும் எந்த அறிவிப்பும் சொல்லாமல் பவித்ரா தன் குடும்பத்தோடு அவளுடைய பெரியம்மாவின் கிராமத்திற்கு குடிபுகுந்துவிட்டதாக ஒரு செய்தி. உண்மையோ பொய்யோ… இன்று வரை யூகிக்கமுடியவில்லை. இவை எல்லாம் நான் சென்னைக்கு வந்த பிறகு தெரிந்துகொண்ட விஷயம். அன்றிலிருந்து நான் திருவிழாவையே வெறுக்கத் தொடங்கினேன் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்றாலும் கூட கோவில் பக்கம் செல்வதை மட்டும் தவிர்த்துவந்தேன்.

கூழ்வாத்தல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்ததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது பவித்ரா இப்போது எங்கிருப்பாள், என்ன செய்துகொண்டிருப்பாள் என்னும் சிந்தனையோடு பவித்ராவின் வீட்டு வாசலை அடைந்தேன். காற்றாலும் மழையாலும் சூறையாடப்பட்ட பவித்ராவின் வீடு பாதி இடிந்தும், சாய்ந்தும் கிழிசலைப் போல் தோற்றம் அளித்தது. வீட்டை சுற்றி பனை ஓலைகளால் கட்டப்பட்ட வேலிகள் உயிர் இழந்து காற்றில் இப்படியும் அப்படியுமாக ஊசலாடிக்கொண்டிருந்தது. ஒரு காலத்தில் கருக்கடி அம்மனின் சந்நிதானம் என்று கொண்டாடப்பட்ட பவித்ராவின் வீடு மரணப்படுக்கையில் சாவின் விளிம்பில் போராடிக்கொண்டிருக்கும் உடலைப் போல் காட்சி அளித்துக்கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திற்கு அவள் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். பவித்ராவின் வாழ்க்கை இவ்வீடு போல் அல்லாமல் நிச்சயம் வேறு மாதிரியாக அமைந்திருக்கும் என்று என்னுள் நம்பத் தொடங்கினேன்.

திருவிழா முடிந்து சென்னைக்கு திரும்புகையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினேன். அலுவலகத்திற்கு வந்ததும் ஆவணம் சரிபார்த்தல் சம்மந்தமாக கம்பெனி கொடுத்த முகவரிக்கு எனது பைக்கில் விரைந்தேன். நான் கண்டடைந்த முகவரி ஒரு டைலர் கடையாக இருந்தது. பார்வை விலகாமல் டைலரிங் மிஷினோடு மூழ்கி இருந்தவரிடம் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். பல வாடிக்கையாளரிடம் பார்க்கும் சிரிப்பு தன் தேவையை நிவர்த்தி செய்ய துடிக்கும் அதே இயற்கையான சிரிப்பு தான் அவரிடமிருந்தும் வந்தது. அங்கிருந்த சேரில் என்னை அமரச்செய்து ஆவணங்களை சரி பார்க்க எனக்கு உதவி செய்தார்.

வங்கிக்கணக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மட்டும் அதில் தவறி இருந்தது தெரிந்ததும் பதற்றத்தோடு வீட்டின் எண்ணிற்கு அழைத்து அவரச அவரசமாக வங்கி கணக்கு ஆவணங்களை எடுத்து வரும்படி எதிர் முனையில் பேசிக்கொண்டிருந்தவரிடம் வேண்டினார். வீடு அருகில் இருப்பதாகவும் சில நேரங்களில் ஆவணம் கைக்கு வந்துவிடவதாகவும் வாக்குறுதி அளித்தபின் அருகில் உள்ள தேநீர் கடைக்கு சென்று தேநீர் வாங்கிவந்து கொடுத்தார். தேநீர் குடித்துக்கொண்டே பைனான்ஸ் சம்மந்தப்பட்ட சந்தேகங்களுக்கு அவருக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தேன்.

பர்தா அணிந்து ஆட்டோவில் இருந்து இறங்கிய ஒரு இஸ்லாமிய பெண் நேராக அந்த டைலரிடம் வந்து பாலித்தீன் கவரில் வைத்திருந்த ஆவணங்களை எடுத்து நீட்டினாள். கொஞ்ச வருடங்களாக நினைவுகளில் மட்டுமே தோன்றி வந்த அந்த மஞ்சள் முகம் என் எதிரில் நின்றுக்கொண்டிருப்பதை பார்த்ததும் அடுக்கடுக்காக அவளது நினைவுகள் கண்முன் சரிய தொடங்கியது. அவளே தான் பவித்ரா…! தசைகள் கூடி பருமனாக மாறி இருந்தாள். பவித்ரா உருவத்தில் வேறு யாராவது இப்படி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்களா? என்று என் பிரக்ஞையில் தோன்றிய கேள்வியோடு குழம்பிய நிலையில் அமர்ந்திருந்தேன். ஊரார் கொண்டாடிய பவித்ரா என்னும் சாயல் முற்றிலும் அவளிடமிருந்து இப்போது தொலைந்து போயிருந்தது. நினைவுகளில் இருந்து மீள முடியாதவனாய் அவளையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன் அவளும் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்.

“ஏ செழியா…! நீ எப்புடி இங்க? நீ தான் எங்களுக்கு லோன் கொடுக்க போறியா… ஏங்க இவன் தான் செழியா எங்க ஊரு தான். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் இப்போ தான் இவன பாக்குறேன். செழியா இவரு தான் என் வீட்டுகாரு”

பவித்ரா அல்லாத புதியவளாய் என்னைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் விசாரித்துக்கொண்டிருந்தாள். பவித்ரா அருள் வந்து ஆடிய சம்பவங்களும், விழி பிதுங்கிய அந்த கண்களும் நினைவில் தோன்றி தோன்றி மறைந்தது.

“என்ன செழியா எதுவும் பேசமாட்டேங்குற..! ஊருக்கு இப்போ போறியா இல்லியா…? நீயும் மெட்ராஸ்லியே செட்டில் ஆயிட்டியா?”

அவளுக்கு மறுமொழியும் நிலையில் நான் இல்லை அவளது பெயரை உச்சரிக்க நா தழுதழுத்ததை உணர்ந்தேன்.

“ம் எப்போனாச்சு போவேன் நீ என்ன பவித்ரா இப்படி மாறிட்ட?”

“ஓ உனக்கு விஷயம் தெரியாதுல, அது ரொம்ப பெரிய கத செழியா, என் பேரு இப்போ பவித்ரா இல்ல… பரிதானு மாத்திட்டேன்.. சரி பத்திரம் எல்லாம் கரக்டா இருக்கா, லோன் கிடைச்சுடும்ல?”

நான் ஆவணங்களை சரி பார்க்க தொடங்கினேன். அருகில் நின்றிருந்த அவள் கணவனிடம் என்னைப் பற்றிய வரலாறுகளை அடுக்கிக்கொண்டிருந்தாள். எல்லாம் முடிந்து நான் கிளம்ப தயாரானேன்.

“எல்லாம் சரியா இருக்கு பவி…..தா”

மீண்டும் அவள் பெயரை சரியாக உச்சரிக்கப் போராடவேண்டியதாய் இருந்தது..

“கூடிய சீக்கிரம் லோன் கிடைச்சுடும் அப்போ நான் கிளம்புறேன்”

“ரொம்ப நன்றி செழியா, ஒரு நாள் வீட்டுக்கு வாயேன் நிறைய பேசனும்”

அப்போதைய நிலைமையில் சரி என்று மட்டுமே என்னால் தலையசைக்க முடிந்தது. பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பு நேரத்தில் கடையின் பெயரை பார்த்தேன். பரிதா டைலர்ஸ் என்று வரைந்திருந்தது. பவித்ரா எப்படி இஸ்லாமிய பெண்ணாக மாறினாள்? அவளுக்கு என்ன நடந்திருக்கும்? வீட்டின் சம்மதத்தோடு தான் திருமணம் செய்துகொண்டாளா?! இல்லை காலத்தின் சுழற்சியால் இப்படி நிற்கிறாளா? என்னுள் எழும்பிய கேள்விகளுக்கு விடை தெரியாதவனாய் யோசித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தேன். பவித்ரா சொல்லிய அந்த கடைசி வார்த்தைகள் மட்டும் அப்போது நினைவில் தோன்றியது.

“தெரில செழியா, ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் என் உடல எந்த சாமிக்கும் கொடுக்க முடியாது?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.