அலைவரிசை
கானலடிக்கும் வெயில் அலைகளில்
மிதக்கிறது
நிழற்படம் போலவோ,
தொலைப்படம் போலவோ,
அந்தமுகம்.
புறத்தின் எந்தத்தடையும் இன்றி
செவிநரம்புகளை இதமாய் தொடுகிறது
மென்காற்றென ஒருகுரல்,
படக்கருவி அருகினில் காட்டிய கண்கள்,
எப்போதோ புன்னகைத்த இதழ்களை இப்போதெனக் காணும்
யுகத்தில் நீயாரோ ?
பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு அலையில் உன்குரல்,
அதே பிரபஞ்சத்தில் கேட்கும் என் செவிகள்,
அருவக்குரல் சொந்தமில்லையாதலால்
அன்னியமுமில்லை.
வெயிலுக்கு ஒதுங்கிய கூரையிலிருந்து
உன்குரலோடு தெருவில் இறங்கி நடக்கிறேன்.
எனக்கும்….
அந்தத் தகரக்கொட்டகைக்கும்
இடையிலான தொலைவில் தேய்ந்து மறைகிறது
ஒரு புரியாதபுதிர்.
மாற்றுலகம்
இன்னும் மென்மை எய்தாத
இளம்சிறுமியின் குரல் அது,
கண்களை விரித்து இசைக்கு
தலையாட்டியபடி பாடினாள்,
பெரும்பாலும் முகத்தின் உணர்வுகளில்
மாற்றமில்லை…
அவள் காணும் கனவில்
நானுமிருந்தேன்
நிகழ்காலத்தின் மாசில்லாதொரு
பொழுதில்
அந்தியின் கடைசிப்பறவை
மேகங்கள் அற்றவெளியில்
நிலவெழுந்த வானில்….
மென்குரலில் ‘ கீகீகீ.. ’
ஒற்றைப்பறவையின் பதறிய குரல்.
உணவோ… நீரோ..
குறிவைத்தக் கண்ணியோ… உடலோ…
இப்படி எதனால் பிந்தியதோ?
என்னவாயிருந்தால் என்ன?
அதன் வழியில் குறுக்கிட
எந்தப்பறவையும் இல்லை என்பதே
எத்தனை ஆசுவாசம்.