மஞ்சள் வெயிலில் மிளிரும் நீர்த்திவலைகள் – பிரேமா மகாலிங்கத்தின் ‘நீர்த்திவலைகள்’ சிறுகதை தொகுப்பு குறித்து மு.கோபி சரபோஜி

பிரேமா மகாலிங்கத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பு “”. பதினேழு கதைகள் அடங்கிய இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையையும் தன்னுடைய நுட்பமான அவதானிப்புகளாலும், சொல்லாடல்களாலும் நமக்குள் கடத்திப் போகிறார்.

சிறுகதையை வாசிக்கின்ற வாசகனுக்கு கதையின் மையப்புள்ளியை கோடி காட்டி விட்டு படைப்பாளி மெளனமாகி விடுகின்றான். அதன் பின் படைப்பாளி பேசும் அத்தனை வார்த்தைகளும் வாசகனின் மனதை கதைக்கு அருகில் கொண்டு செலுத்த மட்டுமே உதவுகின்றன. படைப்பாளி மெளனமடையும் அந்த இடத்தில் இருந்து வாசகன் பங்கேற்பாளனாக மாறி கதையின் போக்கில் தன் மனஓட்டத்தை தன்னியல்பாக நகர்த்திச் செல்கின்றான். கதையின் இறுதி வரியில் அவனும், படைப்பாளியும் சந்திக்க நேரும் புள்ளியில் படைப்பாளி வாசகனை “அட” என வியக்கவோ, மிரளவோ வைக்கும் போது வாசகனின் மனதில் அந்தக் கதை சிம்மாசனம் இட்டுக் கொள்கிறது. இத்தொகுப்பில் அப்படி சிம்மாசனமிட்டுக் கொள்ளும் கதைகளாக “முட்டையின் நிறம் கருப்பு”, “நீர்த்திவலைகள்”, ”மஞ்சள் வெயில்” ஆகிய கதைகளைச் சொல்லலாம்.

குழந்தை பாக்கியம் கிட்டாத ஒரு பெண்னின் மனநிலையைச் சுற்றி நகரும் “முட்டையின் நிறம் கருப்பு” கதையும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வந்து வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் பணிப்பெண் எதிர்கொள்ளும் உடல் சார்ந்த பிரச்சனையை மையமாகக் கொண்டிருக்கும் “நீர்த்திவலைகள்” கதையும், மனிதாபிமானத்தின் மைய இழையில் பின்னப்பட்டிருக்கும் ”மஞ்சள் வெயில்” கதையும் தன்னை முடித்துக் கொள்ளும் முடிவால் நம்மை மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தூண்டுகின்றன. இத்தொகுப்பில் இருக்கும் பல கதைகளை அதன் முடிவுகளே நமக்குரியதாக்குகின்றன.

பணியின் பொருட்டோ, படிப்பின் பொருட்டோ பிற நாடுகளுக்குச் சென்று வசிப்பவர்கள் கதைகள், நாவல்கள் எழுதும் போது “அந்நாட்டுக் கதை” என்பதை வாசிப்பவனுக்குச் சுட்டிக் காட்ட மெனக்கெடுவார்கள். அந்த நாட்டில் இருக்கும் சில இடங்களின் பெயர்களையும், அந்நாட்டு மக்கள் உச்சரிக்கும் மொழி நடையையும் வலிந்து படைப்புக்குள் திணித்துத் தர நினைப்பார்கள். துரதிருஷ்டவசமாக அத்தகைய திணிப்புகளின் துருத்தல்களை வாசகன் கண்டுபிடித்து விடுவான். ஆனால், அந்த மண் சார்ந்த படைப்பாளியின் படைப்புகளில் இத்தகைய துருத்தல்களை அடையாளம் காண முடியாது. பிரேமா மண் சார்ந்த படைப்பாளியாக இருப்பதால் துருத்தல்கள் அற்ற மொழி நடையில் சிங்கப்பூரின் கலாச்சாரம், பழக்கவழக்கம், சமூகக் கட்டமைப்பு, நம்பிக்கைகள் ஆகியவைகளை கதைகளின் வழியாக இயல்பாய் சொல்ல முடிந்திருக்கிறது/.

கதை, நாவல், கட்டுரை, கவிதை என எந்தப் படைப்பிலக்கியமும் வாசிப்பவனுக்கு சமகாலத்தோடு கதை நிகழும் காலச் சூழலையும்,. சமூகம் நிகழ்த்திய தோலுரித்தல்களை ஆவணப்படுத்தும் வேலையையும் செய்ய வேண்டு,ம். அப்படியான படைப்புகள் மட்டுமே தலைமுறை கடந்தும் நிற்கும். அப்படியில்லாத படைப்புகளை வாசகன் தன் காலத்திலேயே புறந்தள்ளி விடுகின்றான். அல்லது மறந்து விடுகிறான். இந்தத்தொகுப்பானது காலம் கடந்தும் நிற்கும் என்பதை முதல் கதையான “நிலாச்சோறு” முன் மொழிந்து விடுகிறது.

பழமையின் மேல் அத்தனை அடையாளங்களையும் நிறுத்தி இருக்கும் நாடு சிங்கப்பூர். மசாலா அரைக்க அங்கும் கூட மாவுமில்கள் இருந்ததையும், காலஓட்டத்தில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மசாலாக்களின் வருகை மாவுமில்களை கண்காட்சிக் கூடங்களுக்குக் கொண்டு போய்விட்ட செய்தியையும் சொல்லும் அதேநேரம் அதன் தாக்கத்தையும் பதிவு செய்கிறார். ”ஒரு காலத்தில் மாவுமில்லுக்குச் சொந்தக்காரர். இப்போது யாரோ ஒருவருடைய கடையில் எடுபிடி” என்ற வரிகளை வாசிக்கும் போதே தாரளமயமாக்கல் தரும் தாக்கம் நம்முள் அலையடிக்க ஆரம்பித்து விடுகிறது.

கதையின் முடிவால் அல்லது தன்னியல்பில் அந்தக் கதை கொள்ளும் இறுதி வரிகளால் தன்னை ஒப்புக் கொடுக்கும் வாசகன் அதை மறு வாசிப்புச் செய்கின்றான். அப்படியான கதைகளை எத்தனை முறை வாசித்தாலும் அவனுக்கு அது சலிப்பைத் தருவதில்லை. அவனுக்குள் ஒரு புதிய திறப்பை அது நிகழ்த்திய படியே இருக்கிறது. மாறாக, முடிவுகளை இறுதி செய்து விட்டு அதனை நோக்கிச் சம்பவங்களை விரித்துச் செல்லும் போது கதையின் இறுக்கம் தளர்ந்து விடுகிறது. வாசகன் கதையின் வழியாக பெறும் செய்திகளில் மட்டும் லயிப்பதில்லை. அது தன்னை மெல்லமேனும் அசைக்க வேண்டும். தன் சிந்தனையின் மீது எதிர்வினையாற்றக் கூடியதாய் இருக்க வேண்டும் என நினைக்கின்றான். அப்படி அமையாத கதையின் முடிவு வாசகனுக்கு வியப்பைத் தந்தாலும் மறு வாசிப்பைக் கோருவதில்லை. இத்தொகுப்பில் உள்ள “சக்திவேல்” என்ற கதை அப்படியான ஒன்று!

சிங்கப்பூர் அரசாங்கத்தால் பின்பற்றப்படும் ”மஞ்சள் ரிப்பன் திட்டம்” என்ற ஒற்றை வரிச் செய்தியின் வழியாக சிறையில் இருக்கும் மகனை அவன் தாய் பார்க்க வராததைப் பற்றி இக்கதை பேசுகிறது. வெறும் விவரணையின் வழியே நகரும் இக்கதையின் முடிவு வாசகனை சற்றே நிறுத்தி வைக்குமேயொழிய மறு வாசிப்புச் செய்ய வைக்காது. முதியோர் இல்லம், அதில் தங்கி இருக்கும் முதியவர்கள் பற்றிய “காகிதப் பூக்கள்”, சுய தொழில் செய்ய சம்மதம் பெறுதல் குறித்து நிற்கும் “மெல்லத் திறந்தது கனவு”, குழந்தை வளர்ப்பு குறித்துப் பேசும் “சின்னஞ்சிறு உலகம்” ஆகிய கதைகளும் மேற்சொன்னவைகளின் சாயல்களையேத் தாங்கி நிற்கின்றன.

கதைக்குத் தேவையில்லை எனும் போது ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் அதை அறுத்தெறிந்திட வேண்டும். அப்படியில்லாமல் கதையை நகர்த்துவதற்காக சம்பவங்களை வாசகனுக்குக் கடத்த முனையும் போது அது அவனை அயர்ச்சி அடைய வைத்து விடுகிறது. கதை நகர்வுக்காக மட்டுமே படைப்பாளி கையாளும் விவரணைகளை முழுவடிவ கேக்கின் வெட்டப்பட்ட பகுதிகளாகவே வாசகன் அணுகுகிறான். இவைகள் கதையை பலவீனப்படுத்தி விடுகின்றன. உதாரணமாக, ”தீக்குள் விரலை விட்டால்” கதையின் இத்தகைய ஜோடிப்புகள் கதையின் முடிவு இப்படியாகத் தான் இருக்கப்போகிறது என்பதை அனுமானிக்க வைத்து விடுகிறது. கதை சொல்லலில் இத்தகைய பலவீனங்கள் களையப்பட வேண்டும்..

சமகாலச் சிக்கல்களை, பிரச்சனைகளைப் படைப்புகளாக மாற்றுவது காலத்தின் கட்டாயம். அடுத்த தலைமுறைகளுக்கு விட்டுச் செல்லும் ஆவணமாக அது அமையும். இதை, முதியோர்களைக் கையாள்வதில் இருக்கும் சிக்கல்களைப் பேசும் “ததும்பி வழியும் உயிர்”, சமூக வலைத்தளங்களில் முகமூடி தரித்த முகங்கள் நிகழ்த்தும் பித்தலாட்டங்களை அடையாளமிடும் ”பொய் மெய்” ஆகிய இருகதைகளின் வழியே தன் முதல் தொகுப்பிலேயே செய்திருக்கிறார் பிரேமா.

“டாக்சி எண் 8884” கதையின் ஊடாக பல்வேறு இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் அவர்களிடையே நிலவும் நம்பிக்கையை நமக்கு அறியத் தருகிறார். அமானுஷ்யத்திற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் நகரும் ”பச்சை பங்களா” கதை பழிக்குப் பழி வாங்கும் வெறி கொண்டிராத பேய் படம் பார்த்த உணர்வைத் தந்து போகிறது. ”தமிழ் நம் மூச்சு” என தமிழின் மீது தீரா மோகம் கொண்டவர்களாய் தன்னைக் காட்டிக் கொள்பவர்களின் இன்னொரு பக்கத்தைத் தோலுரிக்கும் ”பலூன்” என்ற கதையோடு தொகுப்பு நிறைவடைகிறது

வெறும் நிகழ்வுகளை மட்டும் பேசும் ”ஊர்க்குருவி”, “கடகம்”, ஓர் இரவு ஒரு பொழுது” உள்ளிட்ட கதைகளை தவிர்த்து விட்டுப் பார்த்தால் மொத்தத் தொகுப்பில் இருக்கும் கதைகள் நமக்கு நெருக்கமானதாகவே இருக்கிறது. கதையில் வரும் மாந்தர்கள் நாம் அறிந்தவர்களாக, நமக்குத் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களில் நாமாகவும் இருக்கின்றோம்.

கதைக்கான களங்களை நிகழ்வுகளோடு உள்வாங்குதல், சூழ்நிலைகளைச் சரியாக அவதானித்தல், அதன் வழி தனக்குத் தானே உள்ளார்ந்த உரையாடல் நிகழ்த்திப் பார்த்தல், அதை இயல்பான மொழி நடையில் வாசகனுக்குக் கடத்துதல், அதன் மூலமாக அவனுக்குள் மாற்றத்திற்கான திறப்பைச் செய்தல் என ஒரு கதைசொல்லிக்கு இருக்க வேண்டிய அத்தனை அமசங்களிலும் நின்று பிரேமா இக்கதைகளை கட்டமைக்க முனைந்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். பெரும்பாலான கதைகளில் படிந்திருக்கும் மரணத்தின் நிழல் வாசிக்கின்ற நம் மீதும் படரவே செய்கிறது. இத்தொகுப்பை வாசித்து முடிக்கையில் சிங்கப்பூர் சார்ந்தும், அங்குள்ள மக்கள் சார்ந்தும் சொல்லப்பட வேண்டிய கதைகள் இன்னும் இருப்பது தெரிகிறது. அதைச் சிங்கப்பூரின் முகமாக இருந்து பிரேமாவால் செய்ய முடியும் என்ற எண்ணம் பிறக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.