ஒரே சந்தோஷ இரைச்சலாகக் கேட்கிறது.தலை தீபாவளி அமர்க்களம்.நிறைய உறவினர்கள் வந்திருக்கிறார்கள்.குழந்தைகள் சிரிப்பும் போட்டியுமாக நீண்ட நடைபாதையில் நூலைக்கட்டி ட்ரெயின் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.மாலையில் இருக்கிறது பெரும் வெடிகளும், மற்றவையும்.சற்று புறநகர்ப்பகுதியென்பதால் கட்டுப்பாடுகள் அதிகமில்லை.யதேச்சையாக அடிச்சட்டத்தின் முனைக்கு எப்படியோ நழுவி வந்து விட்ட பெற்றோரின் படத்தைப் பார்த்தேன்.வழக்கமான புன்னகைதான் காணப்பட்டது;நாம் சிரிக்கும்போது சிரிக்கவும்,அழும் போது அழவும்,நம் வேதனைப் பெருமூச்சுக்களை விலக்கவுமாக அந்தப் புகைப்படங்கள் மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?அடுக்குகளில் தேடி நலுங்கும் நினைவுகள்.
சர்க்கரை ஜீரா வாசனை மூக்கைத் துளைக்கிறது.கல்லுரலில் ஆட்டி ‘ரெட்’டில் விழுதாக விழுந்து சுழிக் கோலங்களாகத் தூக்கலான நெய்யில் பொரிந்த மினுமினுப்பான செம்பவழ ஜாங்கிரிகள் அந்த ஜீராவில் முக்குளிக்கின்றன.”ம்ம்ம்… என்ன பேச்சு அங்க, மளமளன்னு ஆகட்டம்” என்று இராமகிருஷ்ணனின் குரல் கரகரவென்றுக் கேட்கிறது.கோட்டை அடுப்பில் அனல் தகதகத்துக்கொண்டிருக்கிறது.திறந்த வெளியில் மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கிய பக்ஷண வேலை ஊரையே மணக்கச் செய்கிறது.வெல்லமும், ஏலமுமாகத் தனியாகக் காற்றில் மிதந்து வந்து என்னையும் உள் இழுத்துக் கொள்ளேன் என்கிறது.வெல்லப்பாகில் தேங்குழலைப் போட்டு மனோகரம் செய்யும் வாசம் நாவில் நீர் ஊறச் செய்கிறது.பெரும் தேய்க்கரண்டிகளில் கடலை மாவுக் கரசலை ஊற்றி இலாகவமாக மற்றொரு கரண்டியால் பூந்தி தேய்க்கிறாள் ருக்குமணி.அவள் வேலை செய்வதே தெரியவில்லை;ஒரு சத்தமுமில்லை, ஒரு பொருள் சிந்தியது என்பதுமில்லை.வருடத்தில் ஒன்பது மாதம் இந்த அனலில் தான் வேகிறாள் அவள்;அவள் நிறம் அதனால் மங்கிவிடவில்லை.மூன்று மாதங்கள் எங்கே காணாமல் போகிறாள் என்பது யாரும் அறியாத இரகசியம். கிட்டத்தட்ட அந்த நேரத்தில் இராமகிருஷ்ணனும் இருப்பதில்லை.ஊருக்கு அவல் அவர்கள். பெருந்தலைகள் அவர்களுக்கு மணமுடிக்கப் பார்க்கையில் மறுத்துவிட்டார்களாம்.இத்தனைக்கும் கல்யாணம் ஆகாதவர்கள்தான் அவர்கள் இருவரும்.எப்படியோ போகட்டும்,கைபாகம் இப்படி அமைவது அபூர்வம் என்று ஊரும் விட்டுவிட்டது.
“‘லாடு’ நூறு போறும், பூந்தி பருப்புத் தேங்காய் ஒரு ஜோடி,சின்னக் கூட்டுல முந்திரிப்பருப்பு,மாலாடு ஒரு நூறு,மிக்ஸர் ஐம்பது கிலோ,ஓமப்பொடி இருபது கிலோ,அம்மணி, நிலக்கடல தீயறது பாரு,எறக்கு, எறக்கு,பாதுஷாக்கு வெண்ண போட்டு பிசிஞ்சியா,மெத்து மெத்துன்னு இருக்கணும், ஜீராவுல ஊறி லேயர் லேயரா வாய்ல கரையணும்.என்னடா மணி, பராக்கு பாக்கற;பஜ்ஜி ரெடியா,எங்க பாக்கட்டம்,நன்னா மாவுல தோய்ச்சுப் போட்றா,உன் தள்ளு வண்டில போட்ற மாரி போடாதே,சுப்பு, கேசரிக்கு ஊத்தச் சொன்னா அடுப்ல சிந்தறயே நெய்ய;கண்ல ரத்தம் வரதுடா; சோமூ, எத்தன காப்பி குடிப்ப, பித்தம் ஏறிடும்,அப்றம் வேலயே செய்யாம அழிச்சாட்டியமா சம்பளம் மட்டும் கேப்ப.மீனாட்சி, சிரிச்ச வரைக்கும் போறும்,சட்னியைப் பதமா அரைச்சு எடு;அடேய்,ஜானு,கொள்ளிவாய் மாரி எரியறது அடுப்பு, விறக வெளில இழுத்து தணிடா,சுட்டுக்காதே,என்னடா, முணுமுணுக்கற-சுட்டாலும் உறைக்காத தொழிலா?அது சரி, நாம படிச்சதுக்கு கலெக்டர் உத்யோகம் கொடுப்பா பாரு”
அவர் ஓயாது ஏவிக்கொண்டிருப்பதும்,அவர்கள் நமட்டுச் சிரிப்பில் அதைக் கடந்து போவதும் ஒரு அழகான நாடகமாகத் தோன்றும்.அந்தக் குரல் என் அம்மாவிடம் பேசும்போது எப்படித்தான் வேறுபடுமோ?
“மாமி,கொஞ்சம் டேஸ்ட் பண்ணிச் சொல்றேளா?பச்சக் கப்பூரம் திட்டம் நீங்கதான் மாமி;வேற யாரும் இவ்ளோ கச்சிதமாப் போட மாட்டா.மினுமினுன்னு பஜ்ஜி இருக்கு,தொட மாட்டேங்கறேளே?எங்க கடேசிக் கொழந்தை?ஆனை புகுந்த தோப்பாட்டம் எல்லாத்லயும் புகுந்து பொறப்படுவான்.”
‘அவன் சாப்டாலே நான் எடுத்துண்ட மாரி,ராமா’
அந்தக் கடைசி குழந்தைக்கு பதினைந்து வயது.ஒரே நேரத்தில் அவன் வகை வகையான தின்பண்டங்களை ருசித்து ருசித்துச் சாப்பிடுவதைப் பார்க்கையில் அப்பா தானே சாப்பிடுவது போல் மகிழ்வார்.தன் மூன்று வயதில் தந்தையை இழந்தவர் அவர்.தானே சம்பாதித்து நல்ல நிலைக்கு வந்ததும் தான் இளமையில் இழந்ததையெல்லாம் எங்களுக்குத் தந்தார்.
நான் தலையைச் சிலுப்பிக் கொண்டேன்.ரெடி மிக்ஸ் இனிப்பு மாவு,பஜ்ஜி மாவு,வாசமற்ற, திடமற்ற எண்ணை,மூன்று தினங்களுக்கு முன்பே வாங்கி குளிர்ப்பெட்டியில் அடைக்கப்படிருந்த காய்கள்,சமையல் சுவையூட்டிகள்,எல்லாவற்றிற்கும் மேலாக முகத்தில் அறையும் மோனம்..
“மாமி, உங்க மாப்ள, சம்பந்தியெல்லாம் வந்துட்டா போலருக்கே கொரல் கேக்கறதே”
அம்மாவும்,அப்பாவும் அவர்களை வரவேற்ற விதம் அத்தனை அருமை,கொஞ்சமும் செயற்கைத்தனமில்லாத உள்ளார்ந்த வரவேற்பு; எங்கள் சொந்தங்களே ஐம்பது பேரிருக்கும்,வந்தவர்கள் ஒரு பத்து பேர். தலை தீபாவளிக்குக் கல்யாணக் கூட்டம்;வந்தவர்கள் முதல் பந்தியில் சாப்பிட்டார்கள்;ருக்குமணியின் கைவண்ணத்தில் வாயில் மணத்த சின்ன வெங்காயச் சாம்பாரும்,உருளைக் கறியும், டாங்கரும் அவர்களால் மறக்க முடியவில்லை.நாங்கள் சாப்பிட்டு பட்டாசு வெடிக்கப் போய்விட்டோம்.
ஆனாலும், சாப்பாடு பரிமாறப்படும் ஒலியும், கரகரத்தக் குரல்களும் எங்களை மீண்டும் உள்ளே இழுத்தன.அத்தனை சமையல் ஆட்களையும் கூடத்தில் அமர வைத்து அம்மா பரிமாறிக் கொண்டிருந்தார்.அப்பா ஆனந்தப் புன்னைகையோடு தண்ணீர் கொடுத்துக் கொண்டிருந்தார்.அதிலும் மிக ஆச்சர்யமாக ருக்குமணி ராமகிருஷ்ணன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.அவள் கை இயல்பாக அவர் இலையிலிருந்து வடையை எடுத்துக்கொண்டது.
அவர் அம்மாவைப் பார்த்தார்-கண்களில் கண்ணீர்; “மாமி,அன்னபூரணி நீங்க,எங்க அன்னத்துக்கும்,எள்ளுக்கும், தண்ணிக்கும் வழி பண்ணிட்டேள்.யாரு செய்வா?மாமாவும் நீங்களும் ஆயுசுக்கும் கொழந்த குட்டிகளோட நன்னா இருக்கணும்;என்ன நீங்க சமயக்காரனா பாக்கல;ஏழையாப் பாக்கல,உறவோ, நட்போ அதுக்கும் மேலயோ,நன்னாயிருக்கணும் நீங்க.”எல்லோரும் சந்தோஷத்தில் அழுதோம்.
கடந்து வந்த பாதையில் முட்கள் இல்லாமலில்லை;கைகள் கோர்த்து கடக்கும் மனதும் வலுவும் இருந்தது.இத்தகைய சிந்தனைகள் சிறிது மகிழ்வு, பிறகு யதார்த்தம் தான் நிற்கும்.ஆம், நேரமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும்.மூடியும், பிடியும் கொண்ட அந்த அகல பேஸினில் குலோப் ஜாமூனை சர்க்கரைச் சாறுடன் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்கும்;குழைவாக வடித்த சாதத்தில், சிறிது பாலுடன், தயிரும், பாலாடையும்,தயிராடையும்,கொஞ்சம் வெண்ணயும் சேர்த்து மையப் பிசைந்து,மாதுளை முத்துக்களைத் தூவி,சின்ன சம்புடத்தில் தயிர் சாதம்;மேல் அலமாரியிலிருந்து நேற்றே எடுத்து சுத்தம் செய்த அந்தப் பெரிய ‘ஹாட்கேஸில்’ பிஸிபேளாபாத்;கூடையில் எல்லாவற்றையும் வைத்துக் கொண்டுவிடலாம்.’பிரின்ஸ்’ வீட்டிற்கு நேரத்தில் போய்விடவேண்டும்.
இந்த எண்ணங்களினூடாகச் சிரிப்பும் வந்தது. எங்கள் குடும்பமே பட்டப்பெயர் வைப்பதில் பெயர் பெற்றவர்கள்.கடைசிப் பையன்,என் தம்பி,அப்பாவிற்கு மிகப் பிரியமானவன்,அவன் எது செய்தாலும், அவருக்குச் சரியென்றுதான் படும்.அதனால், அவரையே ’ராயல்’ என்று அழைத்தவர்கள் நாங்கள்.அவன் பெயர் ஸ்ரீதர் என்பதே மறந்து போய்,அவனை ‘யுவராஜா’ என்று சொல்வதைப் போல் ‘பிரின்ஸ்’ என்றே அழைத்தோம்.’பிரின்ஸ்’ இப்போது ‘ராயல்’ ஆகிவிட்டான்.ஆனால், அவன் குடும்பத்தில் மொத்தமே மூவர்தான்.இப்போது விருந்தென்பது அவர்களுடன் சேர்ந்து உண்பதுதான்.