இடைவெளி இல்லாமல்
கூடிக் கிடக்கும் உடல்களை
சட்டென்று கிழித்துப் பாய்கிறது
ஆம்புலன்ஸ் சைரனின் சிவப்பொளி.
திகிலடையும் நள்ளிரவின் பாதை
மரங்களின் வேர்களை எழுப்புவதால்
அயர்ந்துறங்கும் பறவைகள்
நெஞ்சிலடித்துக் கொள்கின்றன.
இலைகள்
இதயங்களாகத் துடிக்கின்றன.
நகரத்தின் கடைசியாகப் பூட்டப்படும்
தேநீர்க் கடை வாசலில் நிற்பவன்
இறப்பிலிருந்து தப்பிக்கும் படகு
ஆவி பறக்கும்
குவளைக்குள் இருக்கிறதா என
உற்றுப் பார்க்கிறான்.
சர்க்கரை தின்ற எறும்பொன்று
செத்து மிதக்கிறது.
அத்தனை கொடிய தருணத்திலும்
நடைபாதையில் உறங்குபவர்களின் காமத்தை
அனுமதியற்று நுகருகிறான்.
ஆம்புலன்ஸிற்காக வழி விடுகிறவர்கள்
இறப்பிலிருந்து விலகி
வாழ்வின் வாகனக் கரங்களை
இறுக்கமாகப் பிடித்தபடி
வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
சைரன் ஒலி
தூங்கும் சகல ஜீவராசிகளையும்
உலுக்கி எழுப்புகிறது.
எல்லோர் ரத்தத்திலும்
அப்போது
ஒரு ஆம்புலன்ஸ்
ஓடிக் கொண்டிருக்கிறது.