ஞாயிறு மதியம் ஒரு மணியளவில் நண்பனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ‘சண்டே லஞ்சுக்கு வாடா,’ என்று நேற்று அழைத்திருந்தான். நான் மட்டும் வருமாறு அவன் சொல்லவில்லையென்றாலும், என் குடும்பத்தை பற்றி குறிப்பிடவில்லை என்பதால் குழம்பினேன். ஆனால் முன்பொருமுறை மனைவி, மகனுடன் அவன் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டிருப்பதால் தங்களை அழைக்கவில்லை என்றாலும் என் வீட்டினர் கோபப்பட மாட்டார்கள் என்பதால் நான் மட்டுமே செல்வதாக முடிவு செய்திருந்தேன். அடுத்த குழப்பம், தனியாக வரச் சொல்கிறான் என்றால் பணவுதவி கேட்கப் போகிறானோ? அவனுக்கு கணிசமான சம்பளம், சொந்த வீடு கட்டியிருக்கிறான். ஆனால் அதை வைத்து முடிவு செய்ய முடியாது. என் பெயரிலும் அபார்ட்மெண்ட் இருக்கிறது, கூடவே இன்னும் பதினொரு வருடத்திற்கு ஈ.எம்.ஐயும். எந்தப் பெயர் வைத்துச் சுட்டினாலும், அது கடன்தானே. அவனுக்கும் பணப் பிரச்சனை இருக்கக்கூடும். அப்படி அவன் கடன் கேட்டால் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்திருந்தேன்.
‘பையன் எங்கடா?’ ஹாலில் அமர்ந்ததும் நான் கேட்க, ‘வெளையாட போயிருக்கான்’ என்றவனின் மனைவியும் ஹாலுக்கு வந்து பேச ஆரம்பித்தார். அலைபேசியில் நேரத்தை பார்த்தேன், வந்து பத்து நிமிடத்திற்கு மேலாகிவிட்டது. சமைக்கும் வேலை இல்லையா, அல்லது எல்லாம் முடித்து விட்டாரா? மகன் வேறு வீட்டில் இல்லை, கண்டிப்பாக உதவி கேட்கப் போகிறான். ‘ஒரு நிமிஷம், வாட்ஸாப் இம்சை. கடுப்பேத்தறாங்க, ரிப்ளை பண்ணிடறேன்,’ என்றுவிட்டு வாட்ஸாப்பில் வந்திருந்த மெசேஜ்களை படிக்க ஆரம்பித்தேன். நேர் உரையாடலைத் தவிர்க்க நான் கடைபிடிக்கும் உத்தி. வராத செய்திகளை படிப்பது போல் ஒன்றிரெண்டு நிமிடங்கள் கழித்தால் எதிரே பேசிக்கொண்டிருப்பவர் கவனமும் சிதறும்.
இந்த முறை உண்மையாகவே நான் படிக்கச் செய்திகள் இருந்தன. பள்ளி வாட்ஸாப் க்ரூப்பில், கூடப் படித்தவனின் அன்றைய கனவுக் கன்னியான சக மாணவி பற்றி ஒருவன் சீண்ட அதையொட்டி தொடர்ந்து பல மெசேஜ்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன. என்னுடைய பங்களிப்பையும் அளித்தபடி, நண்பன் பணவுதவி கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தேன். நேற்றிலிருந்து பதில் கிடைக்காத கேள்வி, அந்த நேரத்திற்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் பதில். ‘ஸாரி, வாட்ஸாப் அன்இன்ஸ்டால் பண்ணிடப் போறேன்’ என்றபடி அலைபேசியை அருகில் வைத்து விட்டு எதிரே நோக்கினேன்.
ஹாலில் யாருமில்லை. நண்பனை பெயர் சொல்லி அழைத்ததற்கு எந்த பதிலுமில்லை. அவன் மனைவி பெயர் தெரியுமென்றாலும், அப்படிச் சொல்லி அழைத்ததில்லை. ‘சிஸ்டர்’ என்றழைப்பது என்னை வெறி கொள்ளச் செய்யும் செயல். ‘மேடம்’ பொருந்தாது. ‘ஏங்க, ஹலோ’ என்றபடி சமையலறை வாசலுக்குச் சென்றேன், யாருமில்லை. திறந்திருந்த அவன் மகனின் படுக்கையறை காலி. மூடியிருந்த மாஸ்டர் பெட்ரூம் கதவைத் தட்ட தயங்கினேன். விருந்தாளி வந்திருக்கும்போது அவனை விட்டுவிட்டு கதவை மூடி.. அதுவும் பகல் நேரத்தில்… வக்கிர புத்தி எனக்கு. தட்டியதற்கு பதிலில்லை. உள்ளே தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ? கதவைத் தள்ள, திறந்தது. இங்குமில்லை. வாசலுக்கு வந்து நடமாட்டமில்லாத தெருவை கவனித்த பின் மாடிக்குச் சென்று பார்த்தேன். எங்கே போனார்கள்?
காலை பத்து-இருபதுக்கு ‘எங்கே போனார்கள்?’ என்ற வரியை எழுதினேன். மாலை நான்கு மணியானது. என் நண்பனும் அவன் மனைவியும் எங்கு சென்றிருக்கக் கூடும் என்பதற்கான ஓரிரு சாத்தியக்கூறுகளைக்கூட என்னால் யூகிக்க முடியிவில்லை. புனைவெழுத ‘முயற்சிக்கும்’ எனக்கு ‘கற்பனை’ பிரச்சினைக்குரிய விஷயம் என்பதில் உள்ள நகைமுரணை நான் உணர்ந்தே இருக்கிறேன் என்றாலும், இந்தக் கதையை எழுத ஆரம்பித்ததற்கு காரணம் உண்டு. இதில் வரும் நண்பன் கற்பனை பாத்திரம் அல்ல, பத்து நிமிட தூரத்தில் வசிப்பவன்தான். ஏழெட்டு மாதத்திற்கு முன் வாட்ஸாப் க்ரூப்பொன்றை உருவாக்கி அதில் என்னையும் சேர்த்தான். பத்து பேர் இருந்திருப்போம். ஆரம்பத்திலிருந்தே அதில் எந்த உரையாடலும் பெரிதாக நிகழவில்லை. ‘இனிய காலை’, ‘இனிய இரவு’ வணக்கம் சொல்லும் மெசேஜ்கள் சில நாட்கள் வந்து பின் அவையும் நின்றன. சென்ற வாரம் இந்த குழுமம் குறித்து நினைவுக்கு வந்து அதில் நுழைந்தேன். என்னையும், வேறொருவரையும் தவிர மற்ற அனைவரும் க்ரூப்பிலிருந்து வெளியேறி இருந்தார்கள். அதை ஆரம்பித்த என் நண்பனும்தான். அவனை வாரமொரு முறையேனும் பார்க்கிறேன், தினமும் வாட்ஸாபில் உரையாடுகிறோம், ஆனால் இதை அவன் என்னிடம் சொல்லவில்லை. அவனை வசை பாட அலைபேசியில் அழைப்பு விடுக்க எண்ணியவனுக்கு ஒரு விஷயம் உறைத்தது. இது ஒரு அபத்த சுவை கொண்ட சம்பவம் (அல்லது நான்அப்படி தான் அதை எடுத்துக் கொள்கிறேன்), இதை புனைவாக்கிவிடலாமே.
நண்பன் செய்ததை விவரித்து, அதனால் கடுப்புறும் கதைசொல்லியாகிய நான், புதிதாக இன்னொரு க்ரூப்பை உருவாக்கி அதில் அவனைச் சேர்த்து பின் விலகி விடுவதாக முதலில் எழுத எண்ணியதை அது புனைவு போல இல்லையென்பதாலும், சிறுபிள்ளைத்தனமான பழிவாங்கும் செயலாக இருப்பதாலும் அதை ஒதுக்கினேன். ஏன் நடந்ததை அப்படியே எழுத வேண்டும். அவனை பழிவாங்க வேறு வழி இல்லாமலா போய் விடும் என்று தான் இந்த புனைவின் ஆரம்பத்திலுள்ள ‘கதையை’ எழுத முயன்று, பிள்ளையாரை எப்போதும் போல் குரங்காக மாற்றினேன்.
இரண்டு நாட்கள் அந்தக் கதையை பற்றி யோசிக்காமலிருந்துவிட்டு . மீண்டும் அதை எடுத்தேன். மர்மம், திகில் என கதையின் ஆரம்பம் ஓரளவிற்கு சுவாரஸ்யமாக உள்ளது என்றுதான் நினைக்கிறேன், ஆனால் இதுவரை அதை கொண்டு செல்லும் வழி புலப்படாத நிலையில் இனி அது தோன்றுமென்று நம்புவது வீண். என் போதாமைகளை நன்குணர்ந்தவன் நான். தவிர இதை திகில் கதையாக எழுதி முடித்தால் இலக்கிய உலகின் அவச்சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும். அதில் எனக்கு அனுபவம் உண்டு. எனவே மீண்டும் முதலில் யோசித்தது போல் நண்பன் செய்ததை விவரித்து அதை வேறு திசையில் கொண்டு செல்லலாம்.
இந்த முறை என் முன் சில பாதைகள் தெரிந்தன.
- க்ரூப்பில் மிச்சமிருப்பவரை பெண்ணாக மாற்றி, அவருடன் கதைசொல்லி ‘இப்படி எல்லோரும் விலகி விட்டார்களே’ என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்து, அவர்களுக்கிடையில் ஏற்படும் உறவை விவரிக்கலாம். அந்த ஒரு கணம், யோசிக்காமல் கதைசொல்லி அனுப்பும் செய்தி இரண்டு பேரின் வாழ்வை எப்படி திசைமாற்றுகிறது என்பது பற்றிய புனைவாக அது உருபெறக்கூடும். ஆனால் ஆண்-பெண் உறவு என்ற பகற்கனவை பேசும் கதை, அதை எழுதியவன் எளிய குமாஸ்தா என்ற விமர்சனம் வரும்.
- க்ரூப்பில் மிச்சமிருப்பவரை பெண்ணாக மாற்றி, அவரிடம் கதைசொல்லி, ‘இப்படி எல்லோரும் விலகி விட்டார்களே’ என்று பேச்சு கொடுக்கிறான். அந்தப் பெண் ‘என்னை தொந்தரவு செய்யாதீர்கள்,’ என்று பதில் அனுப்ப, இவன் எரிச்சலுற்று தொடர்ந்து ‘இனிய காலை’, ‘இனிய இரவு’ வணக்கங்களை அனுப்புகிறான். அந்தப் பெண் தொடர்ந்து கடுமையாக எதிர்வினையாற்றுகிறார். வாட்ஸாப் மோதல் முற்றி, கதைசொல்லி அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனையால் பீடிக்கப்படுகிறார். அவளுடைய பேஸ்புக் விவரத்தை கண்டுபிடித்து இணையத்தில் பின்தொடர ஆரம்பிக்கும் கதைசொல்லி, பின் வீட்டின் முகவரியையும் அறிந்து கொண்டு மாலை வேளைகளில் அந்தத் தெருவிலேயே சுற்றுகிறார். தான் வெளியே செல்லும்போதெல்லாம் பின்னால் ஒருவன் வருவதை கவனிக்கும் அப்பெண் முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவிட்டாலும் பின் பயந்து கணவனிடம் இது குறித்து சொல்கிறார். கதைசொல்லிக்கும் கணவனுக்கும் மோதல் (வாய்ச் சண்டை தான், கைகலப்பு பற்றி எனக்கு எழுத வரவில்லை), அதன் பின்பும் தன் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாத கதைசொல்லி, ஒரு கட்டத்தில் உளச்சிக்கல் முற்றி அப்பெண்ணின் வீட்டினுள் நுழைந்து விட அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்கிறார்கள். பெரிய சிக்கலில்லாத மத்திய தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் சிதைவதை பற்றிய புனைவு, காமம் – எளிய பகற்கனவு – சிறிது கூட கிடையாது, எனவே இந்தக் பாதையைப் பொறுத்தவரை நான் குமாஸ்தா இல்லை. ஆனால் ‘மிட் ஏஜ் க்ரைசிஸ்’ பற்றிய சராசரி கதை என்று இது விமர்சிக்கப்படக்கூடும். ‘என்னடா உன்னோட சொந்தக் கதையா இது,’ என்று கேட்கும் நண்பர்கள் வேறு எனக்கு வாய்த்திருக்கிறார்கள்.
- க்ரூபில் கதைசொல்லியைத் தவிர யாருமே இல்லை. தான் அனுப்பிய செய்திகளால் தான் அனைவரும் வெளியேறி விட்டார்கள் என்று நினைக்கும் கதைசொல்லி வெறிகொண்டு அந்த குழுமத்தில் தொடர் மெசேஜ்கள் அனுப்ப ஆரம்பிக்கிறான். பின் அச் செய்திகளுக்கான எதிர்வினைகளும் அவனாலேயே அனுப்பப்படுகின்றன. ஒரு செய்திக்கு நாலைந்து விதமான – அதை ஏற்றும், மறுத்தும் – எதிர்வினைகளை அனுப்ப ஆரம்பிக்கிறான். குழுமத்தில் கடும் விவாதங்களை ஒற்றை ஆளாய் அவனே நடத்தி, வேறெதிலும் கவனம் செலுத்தாமல் பாராட்டுக்களும், வசைகளும் நிறைந்து வழியும் அந்தக் குழுமத்தில் மூழ்கி விடுகிறான். (ஒரு ஆள் மட்டும் உள்ள க்ரூபில், கேள்வியும் நானே, பதிலும் நானே பாணியில் மெசேஜ் அனுப்ப முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்). கொஞ்சம் கூட நம்பும்படி இல்லையென்ற விமர்சனம் இந்தக் கதைக்கு கண்டிப்பாக வரப்போகிற விமர்சனத்தை மெய்நிகர் இணைய உலகைப் பற்றிய கூர்மையான அவதானிப்பை இந்தக் கதை முன்வைக்கிறது என்று எதிர்கொள்ள முடியும். முந்தைய பேஸ்புக் போஸ்ட்டை விட சிறிது குறைவாக லைக்ஸ், கமெண்ட்ஸ் வந்தாலும் சோர்வடைபவர்களைப் பற்றியும், நடுநிசியில் முழித்து அன்று மாலை தாங்கள் செய்த போஸ்ட்டிற்கு எத்தனை பேர் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள் என்று பார்ப்பவர்கள் பற்றியும் நாம் படிக்கிறோமே?
வார இறுதி வரை காத்திருந்தேன். மூன்றில் எதை தேர்வு செய்தாலும், ‘த ரோட் நாட் டேக்கன்’ என்று நான் வருந்த வாய்ப்பில்லை, எந்தப் பாதையில் சென்றாலும் அதன் முடிவு, புதைகுழி அல்லது முட்டுச்சந்துதான் என்று உறுதியாக தெரிந்தது. நிஜத்தை நிழலாக்குவது என்னால் இயலாது, எனவே நிஜத்தை அப்படியே எழுத வேண்டியதுதான். அதாவது, நடந்ததை நடந்தபடி விவரித்திருக்கும் இந்தக் கதை.
இதை நேற்றிரவு எழுதி முடித்து விட்டு பெரியவர் முற்றுப்புள்ளிக்கு அனுப்பினேன். இன்று பலமான காலையுணவை சாப்பிட்டு அவர் வீட்டிற்கு கிளம்பினேன். என் கதைகள் குறித்த அவருடைய விமர்சனங்களை கேட்டபின் அன்று முழுதும் உண்ணவே தோன்றாது, எனவே என் செவிகளுக்கான உணவை அவர் தரும் முன் என் வயிற்றை நிரப்பி விடுவேன். அவர் என்ன சொல்வார் என்பதும் எனக்கு இப்போதே தெரியும். (எப்போதும் அவர் சுட்டிக்காட்டும் இலக்கிய ஆளுமைகள்/ படைப்புக்கள் பற்றிய பெயர் உதிர்த்தல்கள் இந்தப் புனைவில் அதிகம் இல்லை என்பது சாதகமான அம்சம் என்று இப்போதே என்னை ஆசுவாசப் படுத்திக்கொள்கிறேன்1). அவர் விமர்சனத்தையும் புனைவாக்கி விடலாம். இரண்டு கதைகள். இரண்டில் ஒன்றாவது பிரசுரமாகாதா?
எப்படியிருந்தாலும் சரி, முற்றுப்புள்ளியை சந்தித்து திரும்பும்போது, இந்தக் கதையை என் நண்பனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு நான் தரக்கூடிய ஆகக் கொடூரமான தண்டனை இதுவாகத்தான் இருக்க முடியும். (‘ஆகக் கொடூரம்’ என்று எழுதவதற்கு தயக்கமாக இருந்தது. ஆனால், ‘ஆகச் சிறந்த’, ‘பேரன்பு’, ‘பெருங்கோபம்’, ‘ஆயிரம் அன்பு முத்தங்கள்’, ‘பெருங்கதையாடல்’ போன்ற மிகை சொற்றொடர்கள் இப்போது அதிகம் உபயோகப்படுத்தப் படுகின்றன என்று எனக்குத் தோன்றுவதால் நானும் அப்படியே செய்திருக்கிறேன், மற்றபடி இது பொருத்தமாக உள்ளதா என்பது குறித்து வாசகர்கள் தான் முடிவு செய்யவேண்டும்)
இதை எல்லாம் படிக்கையில் ஃபேஸ்புக்கும் , வாட்சப்பும் மனிதர்களை எவ்வளவு தூரம் ஆக்கிரமித்துள்ளது என்பது புரிகிறது. குறிப்பிட்ட நேரங்கள் தவிர்த்து, முக்கியமான தொடர்புகள் தவிர்த்து வாட்சப்பை எல்லாம்/முகநூலையும் கூடப் பொழுதுபோக்குவதற்கு என வைத்திருப்பவர்களை என்ன சொல்லுவது? மனிதன் இணைய உலகுக்கு அடிமையாகி விட்டான்.
https://padhaakai.com/2019/04/10/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b9%e0%af%86%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%a9%e0%ae%b5%e0%af%81/