பின்மதிய இடைவேளையில் அட்சயாதான் வந்து சொன்னாள். “ஐஷூ ரொம்ப அழறாப்பா. என்னன்னே தெரீல…”கண்கள் விரிய லட்சுமி ஒரு கணம் அவளை ஏரிட்டுப் பார்த்தாள். காற்றில் தும்பிக்கைகள் அலைய வினோத்தின் ரெக்கார்ட் நோட்புக்கில் ஹைட்ரா படத்தை வரைந்துகொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டுவிட்டு அட்சயாவுடன் ஓடினாள்.
அப்போதெல்லாம் ஒவ்வொருநாளும் காலை பத்தரை மணி இடைவேளையில், அது முடியவில்லை என்றால் லஞ்ச் பிரேக்கிலாவது, லட்சுமி ஐஷ்வர்யாவை சென்று பார்த்துவிடுவாள். அல்லது இவளைப் பார்க்க அவள் வந்துவிடுவாள். ஆனால் அன்று மட்டும் லட்சுமிக்கு ஐஷ்வர்யாவை சந்திக்க முடியாமல் போயிற்று. ஏனோ, காலையிலிருந்து வேலை. கிளாஸ் மானிட்டர் பொருப்புகள்.
முதலில் யூனிட் டெஸ்ட் தாள்களை கணக்கிட்டு டோட்டல் போட்டுத் தரச்சொல்லி உத்தரவு வந்தது. மதியம் போகலாம் என்றால் அன்று காலாண்டு பரிட்சைக்கு முந்தய வெள்ளிக்கிழமை. ரெக்கார்ட் நோட்டுகளை முடித்துத்தர வேண்டிய கடைசி நாள். வரிசையாக ஆளாளுக்கு வந்து “ஏய் ஒரு படம்தான் போட்டுத்தாயேன்” என்று நின்றார்கள். லட்சுமி “முடியாது” என்று சொல்லத் தெரியாத குட்டி. பீடி பீரியடிலும் தும்பிக்கைகளாக வரைந்துகொண்டிருந்தாள்.
ஐஷ்வர்யாவும் லட்சுமியும் எட்டாம் வகுப்புவரை ஒரே பெஞ்சில் ஒன்றாகவே படித்தவர்கள். ஐஷூ-லச்சு என்று இணை பெயராகத்தான் அறியப்பட்டார்கள். லட்சுமியின் ஹீரோ பேனாவை அந்த வகுப்பிலேயே பயன்படுத்தக்கூடிய ஒரே ஆள் ஐஷ்வர்யா மட்டும் தான் என்பது வித்யா விஹார் பள்ளியின் எட்டாம் வகுப்பு வரிசையே அறிந்த விஷயம். ஏனோ ஒன்பதாம் வகுப்பில், விதி – கிருஷ்ணகுமாரி டீச்சரின் கட்டளையை அப்படியும் சொல்லலாம் – அவர்களை வெவ்வேறு செக்ஷன்களில் பிரித்துவிட்டது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே பிள்ளைகள் சேர்ந்து படித்தால் ஒட்டிக்கொண்டுவிடுவார்கள், கவனம் குறையும் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் அந்த வருடம் எல்லா வகுப்புகளிலும் செக்ஷன்களை கலைத்துப் பிரித்தார்கள். விளைவாக லட்சுமி நைன் – ஏ. ஐஷ்வர்யா நைன் – சி.
வகுப்புகளாவது பக்கம் பக்கமாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை. அப்போது பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதியை இடித்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆகவே நைன் – ஏ மேலே மூன்றாம் மாடியிலும், நைன் – சி கீழே ஆடிட்டோரியம் பின்னாலேயும் அடியும் முடியுமாக இருந்தது. ஆகவே அன்று மதியம் ஐஷ்வர்யாவை பார்க்க, துப்பட்டாவும், தலைப்பின்னலும், அதிலிருந்து அவிழ்ந்து தொங்கிய கருநீலக்கலர் ரிப்பனும் முதுகுக்குப் பின்னால் படபடக்க, லட்சுமி படிகளில் தாவித்தாவி குதித்து கீழ் தளத்துக்கு ஓடினாள்.
நைன் – சி வகுப்பின் பின் வரிசையின் கடை ஓரத்தில் பெஞ்சு மீது உடலையே கூடென்றாக்கிக்கொண்டு தலையை கவிழ்த்து படுத்திருந்தவள்தான் ஐஷ்வர்யா என்று லட்சுமி கண்டுகொள்ள ஒரு நொடி பிடித்தது. வெள்ளைச்சீருடையிட்ட அந்த உரு நடுங்குக்கொண்டிருந்தது. கருநீல துப்பட்டாவின் முனை துவண்டு இருபக்கமும் தொங்கியது. உள்ளே அவள் விசும்பியிருக்கவேண்டும், உடலே தூக்கிப்போட்டு அதிர்ந்தது. லட்சுமி ஓடிப்போய், “ஐஷூ! ஐஷூ! ஏய், என்னடீ ஆச்சு? கேக்கறேன்ல?” என்று அவள் தோளை பிடித்துக் குலுக்கினாள். ஐஷ்வர்யா பந்தாகவே கிடந்தாள். ஒன்றும் சொல்லவில்லை. தலையைக்கூட நிமிரவில்லை. வகுப்பில் பத்து பேர்களுக்கு மேல் இருக்கவில்லை. முதல் பெஞ்சில் சில பையன்கள். இன்னும் சிலர் ஜன்னலோரமாக நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஐஷ்வர்யா பக்கத்தில் உட்காரும் திவ்யா அங்கே இருந்தாள்.
“திவ்யா என்னடீ ஆச்சு இவளுக்கு?” என்று லட்சுமி குரல் கொடுத்தாள்.
திவ்யா கும்பலுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து தோள் குலுக்கினாள். “உடம்பு சரியில்லன்னு லஞ்ச் பிரேக்லியே பின்னால போயி படுத்துகுட்டா… தெரியல” என்று நின்ற இடத்திலிருந்தே பதில் சொல்லிவிட்டு உடனே தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.
என்ன செய்வதென்று தெரியாமல் லட்சுமி பதறி சுற்றும் முற்றும் பார்த்தாள். “கிருஷ்ணகுமாரி மேடத்துட்ட போய் சொல்லலாமா?” என்று அட்சயா கேட்டாள்.
குனிந்த உருவிலிருந்து ஒரு கை மட்டும் பிரிந்து வந்து லட்சுமியின் கையைத் தேடி கெட்டியாக பிடித்துக்கொண்டது. “வேண்டாமே… ப்ளீஸ்?”
ஐஷ்வர்யா தலை நிமிர்ந்தாள். முகமெல்லாம் சிவந்து கன்னங்களில் உப்புக்கரை தீட்டியிருந்தது. “திட்டுவாங்க…” குரல் கெஞ்சி சிறுத்தது. அழுகையானது.
“என்ன ஆச்சுன்னு சொன்னா தானப்பா ஏதாச்சும் செய்ய முடியும்?” என்றாள் லட்சுமி. பதற்றத்தில் அவள் குரல் அதிர்வாக தொனித்தது.
அந்தக்குரலின் ஆணைக்கு கட்டுப்பட்ட பாவைபோல் ஐஷ்வர்யா இலேசாக எழுந்து திரும்பி குர்த்தாவை இழுத்துவிட்டுக் காட்டினாள். நீளமாகத்தொங்கிய அவள் பின்னலுக்கடியில் பெரிய செம்பருத்திப்பூவாக ஒரு குருதித்தடம் பதிந்திருந்தது. எழுந்தபோது மரபெஞ்ச்செல்லாம் சிவப்பான பசபசப்பு. அதன் வீச்சம் எழ என்ன செய்வதென்று தெரியாமல் ஐஷ்வர்யா பதறி உடனே அதன் மேலேயே திம்மென்று உட்கார்ந்தாள். அவளால் அதன்பின் யார் கண்ணையும் சந்திக்க முடியவில்லை.
லட்சுமி ஒரு நொடி தயங்கினாள். எழுந்து சென்றாள். முன்பெஞ்சு அருகே நின்றவனிடம், “பிரவீன்… பசங்களையெல்லம் கொஞ்சம் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய இருக்க சொல்றியா? ப்ளீஸ்?” என்றாள். பிரவீன் முழித்தான். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. அவள் சொன்னதை செய்தான்.
லட்சுமி நோட்டுப்புத்தகத்திலிருந்து தாள்களை கிழித்தாள். ஐஷ்வர்யாவை எழச்சொல்லி அவள் உட்கார்ந்த இடத்தை வழித்து எடுத்தாள். மூன்று நான்கு முறை எல்லாத் தடமும் போக துடைத்தாள். இரத்தம் படிந்த தாள்களை மடித்து மடித்து இன்னொரு தாளில் சுருட்டி யாரோ சாப்பிட்டு குப்பையில் போட்டிருந்த காலி சிப்ஸ் பாக்கெட்டில் போட்டு அதையும் சுருட்டி ஓர் ஓரமாக வைத்தாள். அதை எங்கே போடுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. மற்ற எல்லோரும் எட்டியே நின்று வேடிக்கை பார்த்தார்கள். யாரும் பக்கத்தில் வரவில்லை.
அடுத்து என்ன செய்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை. “ஐஷூ, வீட்டுக்குப் போறியா?” என்றாள். ஐஷூ விசும்பினாள். அந்நேரத்தில் அவள் வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று லட்சுமிக்குத் தெரியும். தவிர இந்த நிலையில் வெளியே எப்படி போவது?
“பேசாம டீச்சர்ட்டையே சொல்லிடலாமா?” என்று மீண்டும் அட்சயா கேட்டாள். “எந்த டீச்சர்?” என்றாள் லட்சுமி. ஒவ்வொரு பெயராக அவர்கள் மனதில் ஓடியது.
“செங்கொடி மிஸ் இன்னைக்கி லீவாச்சே?” என்றாள் அட்சயா. “வேற யார்ட்ட சொல்றது? சங்கரலிங்கம் சார்ட்டையா?” என்றாள் லட்சுமி. அதை யோசிக்கவே அவளுக்கு சிரிப்பாக வந்தது. ஐஷ்வர்யாவைப் பார்க்க அவளும் கண்ணீரை மீறி சிரித்துக்கொண்டிருந்தாள்.
“சரி. ஒண்ணு பண்ணு,” என்றாள் லட்சுமி. “இன்னொரு நேப்கின வச்சுகிட்டு இங்கியே உக்காரு. இன்னும் ரெண்டு பீரியட்தானே? சாய்ந்தரம் நானும் கூட வரேன். சேர்ந்தே வீட்டுக்குப் போகலாம். பஸ் வேண்டாம். ஆட்டோல போயிடலாம்,” என்றாள்.
ஐஷ்வர்யா பயந்த பார்வையுடன் பார்த்தாள். “ஏற்கனவே ரெண்டு வெச்சிருக்கேன்,” என்றாள்.
“பரவால்ல, மேல ஒண்ணு வெச்சுக்க,” என்றாள் அட்சயா.
ஐஷ்வர்யாவுக்கு பதட்டம் குறையவில்லை. “இதோட எப்பிடி டாய்லெட்டுக்கு போவேன்? எல்லாரும் பாப்பாங்களே?” என்றாள். அப்போது மூன்றரை மணி பெல் அடித்தது. கதவைத்திறந்து எல்லோரும் உள்ளே நுழையத்தொடங்கினார்கள்.
லட்சுமியின் அனிச்சையாக அதைச்செய்தாள். இரண்டு தோள்களிலிருந்து இரண்டு பின்களையும் நடு நெஞ்சிலிருந்து மூன்றாவது பின்னையும் சிவப்பு மானிட்டர் பேட்ஜையும் கழட்டி கருநீலநிற துப்பட்டாவை இழுத்து உதறினாள். இரண்டாக மடித்தாள். ஐஷ்வர்யாவை இழுத்து அவள் இடுப்பைச் சுற்றி கட்டி முடி போட்டாள்.
ஐஷ்வர்யா உடல் மெலிந்தது. இரண்டு கட்டு சுற்ற முடிந்தது. சொறுகிவிட்டு, “போ, ஒண்ணும் தெரியாது. இங்கியே திரும்ப வந்து உட்காரு. யாராவது கேட்டா உடம்பு சரியில்லன்னு சொல்லிக்கோ. கரெக்டா அஞ்சரைக்கு நான் வரேன், சரியா? நான் வரவரைக்கும் நீயா எங்கியும் போகாத. என்ன?” என்றாள். ஐஷ்வர்யா மௌனமாக தலையசைத்தாள். வெள்ளை குர்த்தாவில் லட்சுமி வகுப்பைவிட்டு வெளியேறினாள்.
அப்போதெல்லாம் வித்யாவிஹார் பள்ளியில் வாரத்துக்கு ஒரு முறை இந்த ‘வெள்ளைச்சீருடை’ தினம். மாணவிகள் மற்ற நாட்களில் கருநீல சல்வாரும் துப்பட்டாவும் இளநீலக்கட்டம் போட்ட குர்த்தாவும் போட்டுவர வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டும் வெள்ளைக் குர்த்தா. வெள்ளை கான்வாஸ் ஷூ. மாணவர்களுக்கும் இதே நியமம், என்ன சல்வார்-குர்த்தாவுக்கு பதிலாக பாண்ட்-சட்டை. துப்பட்டா கிடையாது.
ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்குள் ஒரு கூட்டம் ஆசிரியர்கள் மாறி மாறி ஷிஃப்ட் போட்டு பிள்ளைகளை கண்போனபோக்கில் நிறுத்தி சீருடைகளை சரிபார்ப்பார்கள். நுணுக்கி நுணுக்கி நோட்டமிடுவார்கள். நகங்களை வெட்டியிருக்க வேண்டும். ரிப்பனை முறுக்கியிருக்க வேண்டும். முகத்தில் முடி வளர்ந்திருந்தால் மழித்திருக்க வேண்டும். துப்பட்டாவை பெரிய பதாகையாக மடித்து பின் குத்தி நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதன் முனை காற்றில் பறக்காதபடிக்கு தோளுக்குப்பின்னால் முடித்துவிடப்பட்டிருக்க வேண்டும். வெள்ளைச் சீருடை பளீரென்று ஒரு பொட்டு கறையில்லாமல் முகத்திலறையும்படி இருக்கவேண்டும்.
உடலோடு ஒட்டிய வெள்ளை குர்த்தாவின் நுணி கால்களில் படபடக்க லட்சுமி படியேறிச்சென்றாள். மூன்று மாடிகள். மூச்சு வாங்க ஓடி வகுப்பை அடைந்தாள். நல்ல வேளை அடுத்த வகுப்புக்கான ஆசிரியர் வரவில்லை. கழுத்திலிருந்து நெஞ்சுக்குள் வேர்வை வழிந்தது. தன்னுடைய இருக்கையை அடைந்தபோது எல்லோரும் அவளையே பார்த்தார்கள். பிரீதி “துப்பட்டா எங்கடீ?” என்றாள். “நீ மொதல்ல தள்ளு…” என்று அவளுக்கும் ஜெனிஃபருக்கும் நடுவே தன்னை பொருத்திக்கொண்டாள் லட்சுமி.
மேசை மேல் அவள் பாதியில் விட்டுச்சென்ற ஹைட்ரா தும்பிக்கைகளை ஆர்வமாக துழாவியபடி காத்திருந்தது. எத்தனை ஆனந்தம்! நொடிப்பொழுதில் லட்சுமிக்கு முகமெல்லாம் குன்றும் குழியுமாய் பிளந்தது. ஒருநொடிக்கு அவளும் எங்கேயோ நெல்குருத்துபோல் ஆடிக்கொண்டிருந்தாள். அந்நேரம் ஜென்னிஃபர் “கைல என்ன?” என்றாள். சிரிப்பு மறைய “ம்ம்?” என்று குனிந்தாள். இரண்டு கைகளிலும் எதையோ கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள். இடது கையில் ரத்தம்படிந்த தாள்களை சுருட்டிவைத்திருந்த சிப்ஸ் பாக்கெட். வலதுகையில் சிவப்பு நிற மானிட்டர் பேட்ஜ்.
என்ன செய்வதென்று தெரியாமல் சிப்ஸ் பாக்கெட்டை தன்னுடைய ஸ்கூல் பேக்கின் ஒரு மூலையிலேயே அமுக்கி வைத்தாள். வீட்டுக்குப்போய் தூரப்போடலாம். கைகூட கழுவவில்லையே? அதனால் என்ன, பேப்பர்தானே? ஒன்றும் வியாதியெல்லாம் தொத்திக்கொள்ளாது… அவள் மானிட்டர் பேட்ஜை மீண்டும் நெஞ்சில் குத்திக்கொண்டிருந்தபோதே வைஸ் பிரின்சிபல் கிருஷ்ணகுமாரி டீச்சர் வகுப்பில் நுழைந்தார்.
அது அவருடைய வகுப்பு என்பதையே லட்சுமி மறந்துவிட்டிருந்தாள். இறுக்கிப் போர்த்திய முந்தானையும் இழுத்துக்கட்டிய கொண்டையுமாக அவருடைய குட்டி உருவம் உள்ளே உருண்டு வந்தது. வெறப்பா கைய கட்டிகிட்டு நிக்குற ஹைட்ரா! லட்சுமிக்கு சிரிப்பாக வந்தது. “ஏய், குனி. அவுங்க கண்ல பட்ட சாவுதான்,” என்று பிரீதி காதை கடித்தாள்.
கிருஷ்ணகுமாரி டீச்சர் அனாவசியமாக எந்த உடலசைவையும் செய்வதில்லை. கை உயர்த்துவதில்லை. குரல் உசத்துவதில்லை. கண்ணோட்டத்திலேயே வகுப்பை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் கொண்டிருந்தார். இப்போதும் கண்ணாடிவிளிம்பிலிருந்து இரண்டுபக்கமும் தொங்கிய திரி ஊசலாட கண்களை உயர்த்தி வகுப்பை நோட்டம் விட்டார் டீச்சர். உடனே சலசலப்பு அடங்கியது. அமைதி.
வரலாற்றுப் பாடம் தொடங்கியது. சுதந்திரப்போராட்டப்படலம். காந்தி இரண்டாம் வட்டமேசை மாநாட்டுக்கு 1931-ல் லண்டன் செல்கிறார். கச்சையாகக்கட்டிய ஒற்றைக் கதராடையில் லண்டன் குளிரையும் அங்குள்ள பிரிட்டிஷாரையும் எதிர்கொள்கிறார் காந்தி. பிறகு அரிஜனங்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அரிஜனமும் பொதுஜனம் அல்லவா? அவர்களுக்கும் கைகொடுத்து உதவவேண்டியது கடமையல்லவா? 1932-ல் பூனா ஒப்பந்தம் கையொப்பமாகிறது. 1935-ல் இந்திய அரசுச் சட்டம்… கிருஷ்ணகுமாரி டீச்சர் ஆண்டுகளையும் நிகழ்வுகளையும் மென்மையாக பிசகில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிச் செல்வதே வரலாற்றுப்பாடம் எடுக்கும் வழிமுறை. மாணவர்கள் அவற்றை அப்படியே வார்த்தை மாறாமல் எழுதிக்கொண்டிருந்தார்கள். 1937-ன் தேர்தல்களுக்கு வந்த போதுதான் நீல அலையாகத்தெரிந்த மாணவிகள் பக்கத்தில் ஒரு வெண்ணிற உருவை கண்டுகொண்டார்.
“லக்ஷ்மி!”
வெள்ளை குர்த்தாவை இழுத்துவிட்டுக்கொண்டு லட்சுமி நீலத்திரைக்குமேல் எழுந்தாள். விரல்களை இறுக்கி மடித்து தலை கவிழ்ந்தாள். எல்லோரும் திரும்பினார்கள்.
“ஒய் ஆர் யூ நாட் இன் யூனிஃபார்ம்?” டீச்சரின் குரல் அறை முழுவதும் ஒலித்தது.
லட்சுமி ஒன்றும் சொல்லாமல் நிமிர்ந்து டீச்சரின் கண்களை சந்தித்து மீண்டும் தாழ்த்திக்கொண்டாள்.
கிருஷ்ணகுமாரி டீச்சர் அவள் பெஞ்சை நோக்கி விடுவிடுவென்று நடந்து வர லட்சுமி தன்னை அறியாமலேயே பின்வாங்கினாள். கிருஷ்ணகுமாரி டீச்சர் பையன்கள் சேட்டைசெய்தால் நடுவகுப்பிலேயே தொப்புள்சதையை பிடித்து திருகுவார். அப்போது அவளையும் அப்படி செய்யுமளவுக்கு அவர் உடலில் வேகம் இருந்தது.
ஆனால் டீச்சர் அப்படியேதும் செய்யவில்லை. அவளை அடைந்தார். தாழ்வாக, நெருக்கமாக, சீரலாக, அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஆபாசம் பேசும் குரலில், “ஏய், துப்பட்டா எங்கடீ?” என்றார்.
அவள் அப்போதும் பதில் சொல்லாமல் நின்றாள்.
டீச்சரின் பார்வை அவள் மீது ஊறிச்சென்றது. அவர் பார்வை பட்ட இடங்களிலெல்லாம் கண்களாக முளைத்துவிட்டதுபோல் இருந்தது லட்சுமிக்கு.
“ஸிட் டௌன்,” என்றார்.
தோள்களை குறுக்கியபடி லட்சுமி உட்கார்ந்தாள். தலையை குனிந்தாள்.
ரெக்கார்ட் நோட்டிலிருந்து ஹைட்ரா எல்லா கைகளையும் ஆட்டியது. அழாதே, அழாதே என்பதுபோல்.
“ஹைட்ரா ஆழத்தில் வாழும். ஹைட்ரா தண்ணீரில் நீந்தும். ஹைட்ராவுக்கு கண் தெரியாது. ஹைட்ராவுக்கு கை மட்டும் தான் உள்ளது. ஒரு கை வெட்டப்பட்டால் ஹைட்ராவுக்கு அந்த இடத்தில் மற்றொரு கை முளைக்கும்.” பாடத்தின் வரிகளை லட்சுமி தனக்குள் அனிச்சையாக மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டே இருந்தாள். வார்த்தைகளை அப்படி இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருப்பது வரை அழுகை வராது என்று அவளுக்குத்தெரியும்.
“ஏய் துப்பட்டாவ என்னடீ பண்ண? அவங்கட்ட சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே?” என்று முணுமுணுத்தாள் பிரீதி. லட்சுமியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வினோதும் கார்த்தியும் திரும்பி பரிதாபமாக பார்த்தார்கள்.
வகுப்பு முடிந்த கையோடு டீச்சர் லட்சுமியை எழுப்பினார். மூன்று மாடிகள் இறங்கி கீழ்தளத்துக்கு அவர்களுடைய அறைக்கு கூட்டிச்சென்றார். தலைகுனிந்தபடியே லட்சுமி அவரை பின்தொடர்ந்து இறங்கினாள்.
தன்னுடைய அறையிலிருந்து லட்சுமியை அவள் அப்பாவுக்கு போன் போட்டுத்தரச்சொன்னார் டீச்சர். போனில் மென்மையாக, நிதானமாக, ஆனால் வலுவாக பேசினார். “ஆமா சார். ப்ளீஸ் கம் இம்மிடியட்லி… இல்ல, பதட்டப்பட ஒண்ணுமில்ல, ஆனா நீங்க வந்தா பெட்டர்.”
லட்சுமி அறையின் ஒரு மூலையில் அதே வெள்ளை குர்த்தாவில் உட்கார்ந்திருந்தாள். தன்னுடைய தாள்களில் மூழ்கியிருந்த கிருஷ்ணகுமாரி டீச்சர் அவ்வப்போது நிமிர்ந்து கண்ணாடிச்சில்லுக்கு மேலிருந்து அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினார். அவருக்குப்பின்னால் ஒரு சட்டகத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் கண்சொக்கி நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதுபோல் இருந்தார். பக்கத்திலே வெண்சேலையில் சாரதாதேவி அந்த அரங்கை பரிவோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
டீச்சர் நிமிர்ந்தார். “நீ உள்ள ஷிமீஸ் போடுறதில்லியா?” என்றார்.
லட்சுமி குனிந்து தோளுக்குள் விரலை விட்டு ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டாள்.
குர்த்தாவுக்கடியில் அதே வெண்ணிறத்தில் பருத்தி ஒற்றையாடையாக ஷிமீஸ் போட்டிருந்தாள். அதற்கடியில் உள்ளாடை. பொதுவாக இந்த அமைப்புக்கு மேல் துப்பட்டாவும் இருக்கும். இன்று இல்லை. ஓடி வியர்வையில் தோலோடு ஒட்டியதால் எந்த ஆடையும் தனியாகத் தெரியவில்லை. அவள் ஏதும் சொல்லவில்லை.
குரல் மாறியது. “காலையில துப்பட்டா போட்டுட்டுதான வந்த… எதுக்கு கழட்டுன? யாராவது பாத்தா தப்பா நெனைப்பாங்கல்ல? அதானே டீச்சர் கேக்கறேன்?”
ஆனால் அதற்கும் அவள் ஏதும் சொல்லவில்லை. தலை குனிந்தபடியே இருந்தது.
கிருஷ்ணகுமாரி டீச்சர் கண்களை சுறுக்கினார். “கேக்கறேன்ல? அங்க என்ன தனியா யோசனை? இப்படி கொஞ்சம் இறங்கி வர்ரது.”
லட்சுமி கண்கள் படபடக்க நிமிர்ந்து தலையசைத்தாள். கைவிரல்களை மடியில் முஷ்டியாக மடக்கிக்கொண்டாள். மேசை மீதிருந்த தூசின் மேல் ஹைட்ராக்கள் நெளிந்தன. கைகள் காற்றை அளைந்தன. அவை கொடிகளைப்போல் படபடத்தன. சுழலாக வட்டம்போட்டன. கைகோர்த்து நடனமிட்டன. லட்சுமி அவற்றை பார்த்துக்கொண்டிருந்தாள்.
லட்சுமியின் அப்பா வர ஐந்து மணிக்கு மேல் ஆனது.
“மேடம்… என் டாட்டர்… சி.லட்சுமி…” உள்ளே செருகப்படாமல் பாண்டுக்கு வெளியே தொங்கிய சட்டைநுணி மெல்லத்திரும்பிய ஃபேன் காற்றில் துடித்தது.
“உட்காருங்க. லட்சுமியோட அம்மாவால வரமுடியலியா?”
“இல்ல மேடம்…” லட்சுமியின் அப்பா தயங்கினார். “அவ இல்ல. இவளுக்கு மூணு வயசிருக்கும். அப்ப ஒரு ஆக்சிடண்ட்ல போயிட்டா”
“ஓ… ஐ யம் சாரி.” டீச்சர் கண்களை விலக்கிக்கொண்டார். மீண்டும் அவர் முகத்தை பார்த்தார். “இல்ல, கொஞ்சம் டெலிகேட் இஷ்யூ… அதான் உங்ககிட்ட எப்படி டிஸ்கஸ் பண்ணன்னு தெரியல…”
பெருமூச்சு விட்டார். “சார், தப்பா எடுத்துக்காதீங்க. ஆனா சொல்றது எங்க கடமையில்லிங்களா? உங்க டாட்டர்… ஷீ இஸ் நாட் அ சைல்ட் எனிமோர். அவளுக்கு இன்னும் கொஞ்சம் தன்ன பத்தின சென்ஸ் இருக்கணும் சார்.”
“மேடம், என்ன நடந்துச்சு?” லட்சுமியின் அப்பா திரும்பி மகளை பார்த்த்தார். “என்ன டா?”
ஒரு ஹைட்ரா கைகளை விரித்து காற்றாடி போல் அவள் கண்ணுக்கு முன்னால் மெல்ல சுற்றிக்கொண்டிருந்தது. அப்பா பார்த்ததை லட்சுமி பார்க்கவில்லை.
டீச்சர் கண்ணாடியை கழற்றினார். “சார், இன்னைக்கு அவ துப்பட்டா… அதான் பிள்ளைங்க மேல போடுவாங்களே… அதப்போடாம என் கிளாசுக்கு வந்தா. எங்கேயோ தொலச்சிருக்கா. நானும் விசாரிச்சு பாத்திட்டேன். சொல்லமாட்டேங்குறா. என்ன கேட்டாலும் உம்முணாம்மூஞ்சி கல்லு மாதிரி உக்காந்துட்டிருக்கா.” ஒரு கோப்பைத் திறந்தார். “இதோ நீங்களே பாருங்க. காலையில ஃபுல் யூனிஃபார்ம்லதான் வந்திருக்கா. ரெக்கார்ட்ல இருக்கு. நடுவுல எங்கியோ லூஸ் பண்ணியிருக்கா.”
லட்சுமியின் அப்பா இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தார்.
“மேடம்… இது… எங்கியாவது விழுந்திருக்கும்…” என்றார்.
டீச்சர் நெற்றி சுருக்கினார். “என்ன சார் சீரியஸ்னெஸ் புரியாம பேசரிங்க? மிஸ்பிளேஸ் பன்றதுக்கு துப்பட்டா என்ன சாவிக்கொத்தா? பின்பண்ணி வரணும்னு இன்சிஸ்ட் பன்றோம். அதப்போயி எதுக்கு கழட்டணும் சொல்லுங்க? அப்புறம் துப்பட்டா போடலன்றளவுக்கு அவ்வளவு மறதியா ஒரு பொண்ணுக்கு?
“சரி, நீங்க சொன்ன மாதிரியே விழுந்திருக்கட்டும். அப்ப கேட்டா சொல்றதுக்கென்ன?” டீச்சர் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். “வேறெங்கேயாவது போயிருக்கக் கூடாதில்ல?”
லட்சுமியின் அப்பா ஒன்றும் சொல்லாமல் வெறிக்க டீச்சர் கண்ணாடியை துடைத்து அணிந்தபடி தொடர்ந்தார். “துப்பட்டா தொலஞ்சுபோனதுகூட சரி சார். ஆனா பாருங்க. அதப்பத்தின அக்கறையே இல்லாம இருக்கா. புரியுதுங்களா சார்?” டீச்சர் தாள்களை சேர்த்து கொத்தாக அடுக்கி ஃபைலுக்குள் சேர்த்து அதன்மீது கைகோர்த்து பாந்தமாக இருத்தி அவர் கண்களை சந்தித்தார். “அவளுக்கு தன்னப்பதின சென்ஸே இல்ல. எங்கேயோ இருக்கா. அதத்தான் சொல்ல வர்ரேன்.”
அப்பா அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தார். அவளுடைய வெள்ளைச்சீருடை அப்போதுதான் அவர் கண்களில் பட்டதுபோல் ஒரு நொடி விழித்துக் கொட்டினார். பெரிய பதாகையைப்போல் நெஞ்சின்மேல் மையமாக குத்தியிருந்த சிவப்புநிற வட்டத்திலிருந்து அவரால் கண்களை எடுக்கமுடியவில்லை.
குரலை மீடெட்டுத்து லட்சுமியின் அப்பா மெல்ல, “மேடம்… தப்பா ஒண்ணும் நடந்திருக்காது…
நல்லா விசாரிச்சுப் பாத்தீங்களா?” என்றார்.
கிருஷ்ணகுமாரி டீச்சர் பொறுமையிழந்த உச்சுக்கொட்டுடன் நிமிர்ந்தார்.
“சார், தப்பா எதுவும் நடந்திருக்காதுன்னே வெச்சுக்குவோம். சரி. ஆனா கேள்வின்னு வந்திருச்சுல்ல? இப்ப நான் கேக்கறா மாதிரி அவ வெச்சுக்கலாமா, சொல்லுங்க? அந்த சென்ஸ் அவளுக்கா இருக்கணும் சார். நாமள எல்லாரும் பாக்கறாங்களே, கேள்வி கேப்பாங்களேன்ற உணர்வு உடம்போட இருக்கணும். எல்லாம் லைஃப்ல நெறைய பார்த்தாச்சு சார்… அந்த ஆதங்கத்துல சொல்றேன். அவ கொழந்த இல்ல. அம்மா இல்லாத பிள்ளைன்னு வேற சொல்றிங்க, வீட்ல யாராவது பெரியவங்கள விட்டு பேசிப் புரியவைங்க சார்…”
பேச்சுமும்முறத்தில், ஒரு ஹைட்ராவின் கை அந்த அறையிலிருந்து நீண்டு வெளிச்சென்றதை இருவருமே கவனிக்கவில்லை. அது தாழ்வாரங்களில் தலைகவிழ்த்தபடியே கண்ணில்படாமல் ஒழுகிச்சென்றது. நைன் – சி வகுப்பின் கடைசி பெஞ்சில், லட்சுமியின் துப்பட்டா முனையை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவள் வருவதற்க்காக அப்போதும் காத்துக்கொண்டிருந்த ஐஷ்வர்யாவின் கையை அடைந்தது. தலைதூக்கி, ‘நான்தான்’, என்று மெல்ல முட்டியது.
மிக அருமை. ஆனாலும் லக்ஷ்மி வாயைத் திறந்திருக்கலாமே! ஐஸ்வர்யாவின் தவிப்பைச் சொல்லி இருக்கலாமே!
எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வருணணை நன்றாக இருந்தது. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!!