திங்கட்கிழமைக்கு உரிய சோர்வால் வெளிப்படும் அதீத உற்சாகத்தோடு இருந்தது கல்லூரி மைதானம்.மைதானத்தை சுற்றி இருந்த புங்கை ,பாதாம் மரங்களுக்கு அடியில் ஆசிரியர்கள் வந்து நின்றிருந்தார்கள்.காலைக்கூட்டத்திற்கு சத்யா வராததால் மாணவத்தலைவன் வரிசையாக நின்று மெதுவாக சலசலத்த மாணவக் கூட்டத்தைக் கண்ணளந்தான்.கண்களை கூசவைக்கும் மழைகாலத்து வெள்ளை வெயிலில் புருவங்களை சுருக்கியபடி நின்றிருந்தார்கள்.
சட்டென்று, “ ப்ரியா..” என்று உரக்க அழைத்தான். மேற்குபார்க்க நின்ற நான்காவது வரிசையில் கண்கண்ணாடியை சேலைத்தலைப்பால் துடைத்துக் கொண்டிருந்தவள் வேகமாக வந்தாள்.
“சேலை முந்தனைய செருகு..”என்றவனை முறைத்தாள்.
“பி.இ.டி மேம் உன்னையே பாக்கறாங்க..ஃபைன் குடு.எனக்கென்ன வந்துச்சு.பொன்மொழி இன்னிக்கி நீதான்..”என்றபடி அவள் பதிலை எதிர்பாராமல்,நிமிர்ந்துநின்று உரத்தக்குரலில் மணிவண்ணன், “ கவனம்,” என்று தொடங்கினான்.முதல்வர் வந்து நின்றார்.
அவளுக்கு ஒருமொழியும் மனதிற்கு பிடிபடாமல் இருந்தது. அவனை அறைய வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது.காலைவணக்கப்பாடல் முடிந்து பாலு திருக்குறள் சொல்லிக் கொண்டிருந்தான்.
சுந்தரி செய்தி வாசிக்கும்பொழுது ப்ரியாவிற்கு சட்டென்று முகம்பார்க்கும் கண்ணாடி என்ற வார்த்தை மட்டும் மனதில் வந்து சுழன்றது.பின்னாலிருந்து பாலு, “ போ,” என்று தள்ளாத குறையாக அதட்டினான்.சனியன்கள் என்று நினைத்தபடி சுந்தரிக்குப் பின்னால் சென்றாள்.
“ உலகத்தை புரிந்துகொள்ள உதவும் கண்ணாடியாக இருப்பது புத்தகங்களும் தோழமையும்,” என்றாள்.ப்ரியா திரும்பிச்செல்லும் போது முதல்வர், “வாய்க்கு வந்தத சொல்றது..”என்றார்.வலதுபுறம் நின்ற மணி அவளைப் பார்த்தான்.முறைத்தபடி நகர்ந்தாள். பதமான தரையில் பதிந்த காலடிச்சுவடுகளுடன் மைதானம் அமைதிக்கு திரும்பி வானத்தைப் பார்த்தபடி நின்றது.
கல்லூரி கட்டிடத்தின் முகப்பிலிருந்து முதல்வர்அறை வரை நீண்ட நடைபாதையின் இருபக்க சுவர்களும் நீண்ட அறிவிப்பு பலகைகளாக இருந்தன.வலதுபுறம் கல்வியியல் கல்லூரியின் அறிவிப்புப் பலகை.இடதுபுறம் ஆசிரியப்பயிற்சி பள்ளியின் அறிவிப்புப்பலகை.நீண்ட வழியெங்கும் பிள்ளைகளும்,பசங்களும் நின்று சலசலத்துக் கொண்டிருந்தார்கள்.
விளையாட்டு ஆசிரியர், “சத்தத்தக்குறைங்க,”என்றபடி அவர்களைக் கடந்து முதல்வர் அறைக்குள் நுழைந்தார்.
பாலு, “ கவிதை புரியல ப்ரியா..எதாவது ஆர்டிக்கல் எழுது,”என்றபடி, “உன்னோட ஆர்ட் எங்கடா அழகு,”என்று திரும்பினான்.
பக்கவாட்டிலிருந்து குணா, “ப்ரியாக்கா கவிதை நல்லாருக்கு..”என்று கண்சிமிட்டினாள்.
பார்த்துக்கொண்டிருந்த பாலுவிடம் ப்ரியா புருவத்தை உயர்த்த அவன், “இப்பதான் பனிரெண்டாவது முடிசிட்டு வந்திருக்கற சின்னப்பிள்ள சொல்றத பெரிசா எடுத்துக்காத..”என்று பார்வையை அழகுபக்கம் திருப்பினான்.
“கணக்கு வாத்தியாரே… கவிதைக்கு நீங்க குடுக்கற மார்க் மட்டும் கணக்கில்ல..”என்றபடி அவன் பின்னாலிருந்து தோளில் கைவைத்து அழகு வரைந்த ஓவியத்தை எட்டிப்பார்த்தாள்.
“சின்னப்பசங்கங்கறது சரியா இருக்கு…வீடு வரஞ்சிருகான்ய்யா,”என்று இடதுபுறத்திற்கு அவர்களை அழைத்தான் மணிவண்ணன்.
“வேணுண்ணே இன்னிக்கி என்னய இழுத்து விட்டுட்டான்,”என்று ப்ரியா முகத்தை சுருக்கினாள்.
மணி,“நீ சமாளிச்சிருவன்னுதான்…மத்தபடி வேணுண்ணு பண்ணல..”என்றான்.
“எப்பப்பாத்தலும் இப்பிடிதான்…”
“இங்கபாரு..அஸ் எ லீடர் சொல்லுவேன்.முடியாதுன்னா ப்ரிஸ்ன்பால் சார்க்கிட்ட சொல்லிடு..எதுக்குமே உன்னய கூப்பிடல ப்ரியா,”
“மரியாதையா பேசுடா..”என்றாள்.
“இன்னிக்கு காலையிலையே தொடங்கிட்டியா..”என்று பேண்ட்பெல்ட்டை இழுத்துவிட்டபடி ஓடிப் படியேறினான்.திடுதிடுவென்று ஷீகாலோடு ஓடிய ஒலி கேட்டு அங்கு நின்றவர்கள் திரும்பிப் பார்த்தார்கள்.
மதிஅக்கா,“அவன்ட்ட ஏன் எப்பவுமே ஹார்ஸா பிகேவ் பண்ற..”என்றாள்.
ப்ரியா,“ச்சை.. வந்து சேந்திருக்கான் பாரு…”என்று நெற்றியை சுருக்கினாள்.வகுப்பறைக்கு செல்வதற்கான முதல்மணி ஒலித்தது.
படியேறும் போது அவளுக்கு தன் எரிச்சலான மனநிலை பற்றிய எண்ணம் மனதினுள் ஓடியது.அவன் எத்தனை நட்பானவனாக இருந்தும் தான் குத்திக்கொண்டே இருப்பது மனதிற்கு அசௌகரியமாக இருந்தது.அவள் உள்ளே அவனுக்கென்று ஒருமுள் எந்தநேரமும் கூர்கொண்டிருந்தது.வகுப்பறைக்கான வளைவில் திரும்பி அங்கேயே நின்றாள்.
பாலு, “காலையிலேயே மூஞ்சத்தூக்காத…ஒருபாடமும் மண்டக்குள்ள போகாது..இன்னிக்கு வேற மதியானம் வரைக்கும் சைக்காலஜியாம்.அறிதல் படிநிலைகள்..பியாஜே,புரூணர்..”என்றபடி பையை அவள் கையில் திணித்துவிட்டு கழிவறைக்காக மாடியேறினான்.
கல்லூரியின் இரண்டாம் நாள் இதே இடத்தில் மதியஉணவு வேளையில் பிள்ளைகளுக்காக நின்றிருந்தாள்.
அவளை கடந்து சென்ற மணி பின்னால் வந்து, “பி.எட்..தானே,”என்றான்.
“ம்,”
“டிகிரியெல்லாம் எந்த காலேஜ்ல..”
“ இந்த கேம்பஸ்ல இருக்க ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ்,”
“இந்த சொம்பு காலேஜ்க்கே இத்தன பந்தாவா..”
“நா என்ன செஞ்சேன்..”
“பாத்தா பாக்கமாட்டியா…”
“எதாவது கேக்கனுன்னா கூப்பிட வேண்டியதுதானே?”என்றவள் சட்டென்று அவன் பார்வையை உணர்ந்து, அவனை நேராகப்பார்த்து, “நீ…பீ.ஜீ பயாலஜி தானேடா?”என்றாள்.
“ஆமா..அட நம்மளப்பத்தி தெரிஞ்சிருக்க..”
“அதான் நேத்தே கிளாஸ்ரெப்க்கு பேரு குடுத்தியே. நான் எம்.ஃ.பில்..”
“அய்யோ…”என்று உதட்டைப்பிதுக்கியவன் தலையைசாய்த்து, “பாத்தா அப்பிடித் தெரியலயே,”புருவங்களை உயர்த்தி அலட்சியமாக, “அதுகென்ன?”என்றான்.
“உன்னப்பாத்தாக்கூடதான் பீ.ஜீ முடிச்சு நாலுவருஷம் ஆனமாதிரி இருக்க.மரியாதையா பேசு,” என்று அவன் கண்களைப் பார்த்தாள்.அவன் படிகளில் இறங்கத் தொடங்கினான்.
அன்று கல்விமேலாண்மை ஆசிரியர் வாசுதேவன், “ஆறுமாசமா நாங்க பாடம் நடத்தி நீங்க கேட்டது போதும்.யார் முதல்ல வகுப்பெடுக்கறீங்க?” என்றார்.முதுநிலை மாணவர்கள் எடுக்கலாம் என்று முடிவானப்பின் அனைவரும் அமைதியாக இருக்க மணிவண்ணனிடம், “ஏம்ப்பா மாணவத்தலைவா நீயாச்சும் சொல்லு..”என்றார்.
“சார்…ஆள் குறைவா இருக்கற எக்கனாமிக்ஸ் முதல்ல எடுக்கட்டும்..இந்தவாரத்துக்குள்ள மத்தவங்கள லிஸ்ட் அவுட் பண்ணிக்கலாம் சார்..”என்றான்.பொருளியல் பிரிவில் ப்ரியா மட்டும்தான் இருந்தாள்.
அடுத்த நாள் அவள் வகுப்பெடுக்கும் போது மத்துப்போட்டு கடைவதைப் போல அவளை முன்பின் நகரவிடாமல் அடித்தான்.
கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்த வாசுதேவன், “முதல் செமினார் சார்..ஏன் இந்தப்போடு போடுறீங்க,”என்றார்.
ப்ரியா, “சார் கேள்வி கேட்கட்டும்..சாருக்கு மட்டும் புரியல..வாழதண்டு,”என்று அவனை விழித்துப் பார்த்தாள். தலையாட்டியபடி வாசுதேவன் புன்னகைத்தார்.
ஒருநாள் ராகவி படிகளில் தவறிய போது ப்ரியாவிற்கு ரத்தம் என்றால் பதறும் என்று தெரிந்தும் மணி அவளை முதலுதவிக்கு அனுப்பினான்.அத்தனைபேர் மத்தியில் மாட்டேன் என்று சொல்லமுடியாமல் ப்ரியா அன்று முழுவதும் நிலைகொள்ளாமல் இருந்தாள்.
மதிஅக்கா அவனை தனியாக அழைத்து கோபமாக, “சைக்மாதிரி பிகேவ் பண்ணாதடா..அவப் பிரச்சனை உனக்குத் தெரியாதா..”என்றாள்.
“தெரியுங்க்கா..”என்று மதியை கோபமாகப்பார்த்தான்.பேசநினைத்து பேசாமல் முழுக்கை கை சட்டையின் கைபட்டனை வேகமாக அவிழ்த்து மாட்டியபடி வேகமாக சென்றான்.
மணி மேசையைத் தட்டும் ஓசை எழுந்து அவளைக் கலைத்தது. பாலுவின் பையை அவன் இடத்தில் வைத்துவிட்டு அமர்ந்தாள்.மதிஅக்கா எதாவது சொல்லமாட்டாளா என்று எதிர்பார்த்தபடி ப்ரியா நோட்புக்கை டெஸ்கில் எடுத்துவைத்தாள்.
மதிஅக்காவிற்கு திருமணப்பேச்சுவார்த்தையும்,மாப்பிள்ளைகளும் வருவதும் போவதும் கல்லூரி அறிந்த செய்தியாக இருந்தது.திங்கட்கிழமை என்றால் தொடக்கத்தில் என்னாச்சு என்று பார்வையில், கண்ணசைவில் கேட்ட அண்ணன்கள் நாளடைவில் எதாவதுன்னா சொல்லட்டும் என்று விட்டுவிட்டார்கள்.
சிறியவர்கள்தான், “அக்கா..லேட்டானாலும் லேட்டஸ்ட்டா கல்யாணம் பண்ணுவீங்க..”என்று சிரித்து மதிஅக்காவை தங்களுடன் இணைத்துக் கொண்டார்கள்.
பேசிக்கொண்டிருக்கையில் ஒருநாள் ப்ரியா, “கல்யாணம் மட்டுமாக்கா வாழ்க்கை..அமைஞ்சா பண்ணிக்க..இல்லாட்டா விட்டுத்தொலை,”என்றாள்.
“நானும் உன்வயசில அப்பிடிதான் நெனச்சேன்.யாராச்சும் இருப்பாங்கல்ல…”
“உனக்கென்னக்கா கம்பீரமா இருக்க..”என்றதும் மதிஅக்கா சிரித்தபடி அவள் தலையில் தட்டினாள்.
“அதான் பிரச்சனையே…பிரிஸ்பால் கூட போலீஸ்.. மிலிட்ரிகாரன் வந்தாதான் தப்பிச்சான்னு லீவ் கேட்டப்ப சொன்னார்,”
“அவரு ஒரு வெள்ளவாத்து,”என்று நெற்றியை சுருக்கினாள்.
ப்ரியா..ப்ரியா…ப்ரியா..என்ற சங்கரியின் குரல்கேட்டு , “என்ன ?”என்றாள்.
“அட்டண்டென்ஸ் கண்ணா..கனவுக்குள்ள வந்து வெத்தலபாக்கு வச்சு அழைக்கனுமோ? நீயும் இங்க நின்னு கத்தனும்..அன்னைக்கு இருக்கு,”என்றபடி பதிவேட்டிலிருந்த தன் ஒற்றைவிரலை கூர்ந்து நோக்கினாள்.
ப்ரியா,“சாரிப்பா,”என்று எழுந்தாள்.
உளவியல்வகுப்பில் மதி இயல்பாக இருந்தாள்.மதியஉணவு இடைவேளையில் மதி ப்ரியாவிடம், “வா..கேண்ட்டினுக்கு போயிட்டுவரலாம்..”என்றாள்.
“ஏங்க்கா..எங்கூட சாப்பிடு,”
“ச்ச்..கேண்டினுக்குன்னா..கேண்டினுக்கு தானா? வயசுக்கேத்தப் படியில இன்னும் ஏறல,”என்று பக்கத்திருந்த பாலு முறைத்தான்.
மணி,“அதுக்கு என்னத் தெரியும்..”என்று ப்ரியாவைப் பார்த்தான்.
“மரியாதையா பேசுடா..”
மதி,“யாருட்ட பேசறதுன்னு தெரியல.மனசில இருக்கறத சொல்ல அம்மா இருக்கனும்,”என்றதும் பாலு, “பிரச்சனைய சொல்லுக்கா,”என்று தோளில் கைவைத்தான்.கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார்கள்.பின்னால் அமர்ந்திருந்த நண்பர்களும் வந்து பக்கத்திலமர்ந்தார்கள்.
“நேத்து வந்த மாப்பிள்ளைக்கு என்ன விட வயசு கம்மி..”
சட்டென்று மணி, “நீங்க எந்தகாலத்துல இருக்கீங்கக்கா..”என்றான்.
ப்ரியா,“நீ வாயமூடு..”என்றாள்.
பின்னாலிருந்து சரவணன், “உங்களுக்கு பிடிச்சிருக்கா மதி,”என்றபடி முன்னால் வந்தார்.
“ம்.வயசு தெரிஞ்சப்பறம் ஒருமாதிரி இருக்குங்க.அவருக்கு பிரச்சனையில்லைன்னு தோணுது.என்னவிட சின்னபசங்க என்ன நெனப்பீங்க….”
மனோ,“நாங்க என்ன நெனச்சா என்ன?எங்க சொந்தத்திலயும் இந்தமாதிரி ஜோடிகள் இருக்கா.குழப்பிங்காதீங்க..”என்றான்.
இடைவேளை முடிந்ததை அறிவிக்கும் மணி ஒலிக்கவும் பேசியபடி கலைந்தார்கள்.பாலு, “மேமாச ஹாலிடேஸ்ல கல்யாணத்த வைங்க.எங்க பாட்டிதாத்தாவுக்கெல்லாம் வயசே சரியா தெரியாது..”என்று சிரித்தான்.அதற்குப்பிறகு ப்ரியா மெதுவாக மணியுடனான பேச்சிலிருந்து பார்வையிலிருந்து சிரிப்பிலிருந்து கோபத்திலிருந்து விலகிச்சென்றாள்.
மேமாதம் செய்முறை தேர்வுகள் முடிந்த அன்று ப்ரியா கழிவறையில் மயங்கி விழுந்தாள்.மதியுடன் அரசுமருத்துவமனைக்கு சென்ற பொழுது கால்மணிநேரத்திற்கும்மேல் ப்ரியாவிடம் பேசிய அவர் பக்கத்து கட்டிடத்தில் ஆட்களே இல்லாத இன்னொருமருத்துவரிடம் அனுப்பினார்.
மேலும் அரைமணிநேரம் பேசிய அவர் கடைசியாக அவள் கைகளை தன் இருகைகளுக்குள்ளும் பொத்தி வைத்தபடி, “ரத்தம்ன்னா மத்தவங்களுக்கு வலின்னு மட்டும் புரிஞ்சுக்காதீங்க.ரத்தத்த சாவோட கனெக்ட் பண்ணாதீங்க.மென்சுரலை அருவருப்பானதா நெனக்கிறதால உங்களால சாப்பிடமுடியல.வாந்தி,மயக்கம் வருது.அடிபட்டா ரத்தம் வந்திருமோன்னு பயப்படாதீங்க..சிலநேரம் ரத்தம் வந்தாதான் நல்லது..ரத்தத்தக்கண்டு ஹெசிடேட் ஆகாம கண்ணத்திறந்து பாருங்க,”என்றபடி நிமிர்ந்தமர்ந்தார்.
குனிந்தே அமர்ந்திருந்த அவளின் தோளில்தட்டி, “ரத்தம்…பிளட் ங்கற வார்த்தைகள கூச்சமில்லாம சொல்லுங்க.நான் இங்கதான் இருப்பேன்..கொஞ்சநேரம் பேசலாம்..இங்க சிஸ்டர்க்கு ஹெல்ப்பா இருக்கலாம்..ஜீன்ல காலேஜ் திறந்தப்பின்னாடி அடிக்கடி வரனும்.கண்டிப்பா வரனும்,”என்றார்.அவள் தலையாட்டினாள்.
ஜீன்மாதம் யசனையில் மூன்றுநாட்கள் முகாம்வகுப்பு நடக்கவிருந்தது.காலை வெயிலேறும் பொழுதில் யசனை அரசுப்பள்ளி மைதானத்தின் ஓரத்தில் இருந்த செடிகளை அகற்றும்போது சற்று மேட்டுப்பகுதில் நீட்டிக்கொண்டிருந்த கண்ணாடி பாட்டிலின் உடைசல் புகாரியின் காணுக்காலை கிழித்தது.அதை முதலில் பார்த்த ப்ரியா பதறி நண்பர்களை அழைத்தாள்.
கைக்குட்டையில் கைகளைத்துடைத்தபடி நிலைகொள்ளாமலிருந்த அவளிடம் பாலு, “பதறாத சின்ன காயந்தான்.பசங்கன்னாக்கூட பரவாயில்ல.பொம்பளப்பிள்ள ரத்தம் பாத்து பயந்தா எப்படி வாழ்க்கைய ஓட்றது..அந்த டாக்டர்க்கிட்ட போகனும் ப்ரியா,”என்று தோளில் கைப்போட்டான்.
முதலுதவிப்பெட்டி வந்ததும் மணி, “ப்ரியா…”என்றழைத்தான்.பதறும் விழிகளுடன் வந்து நின்றாள்.“பக்கத்தில வா…கிட்டை கையில எடு…”என்றான்.
மதி,“வந்த இடத்தில அவள வம்புக்கிழுக்காத..”என்பதற்குள் , “மத்தவங்க வேலயப்பாருங்க…”என்ற ஆனந்தன்ஐயா குரலால் கலைந்தார்கள்.
உள்ளங்கை வியர்வையை கைக்குட்டையில் துடைத்தாள்.அவளையே பார்த்துக்கொண்டிருந்த புகாரி, “வலிக்குது…எடு சீக்கிரம்,”என்றான்.டெட்டால் பஞ்சை எடுத்து காயத்தில் வைக்கும் முன் அவன் முகத்தைப் பார்த்தாள்.அவன், “எம்மூஞ்சியப்பாக்காத..காயத்த மட்டும் பாரு..”என்றான்.
அவள் கைகளில் நடுக்கமிருந்ததை அவளின் ஒவ்வொரு தொடுகையிலும் உணர்ந்தான்.அவனையும் மீறி ஒரு முறை காலை இழுத்ததும் ப்ரியா கையிலிருந்த மருந்தை கீழே நழுவவிட்டாள்.அவன் மீண்டும், “காயத்த மட்டும் பாரு..”என்றான்.அவனுக்காக வந்த தேநீரை அவளிடம் நீட்டினான்.
“நீ குடி..”
“எனக்கு மூணுநாளும் நீதான் மருந்து போடனும்…தேங்ஸ்,”என்று புன்னகைத்தான்.
திரும்பிப்பார்த்த பாலு,“கெடா வெட்றத ஒருதரம் பாத்தா சரியா போயிடும்..இந்தவருசம் எங்க கோயிலுக்கு நீ வரனும்,”என்றான்.மணி,“எம்.ஃ.பில்…”என்று உதட்டைப் பிதுக்கினான்.
அவள் அமைதியாக இருக்கவும், “மூணுநாளும் நீதான் யாருக்கு அடிபட்டாலும் முதலுதவிக்கு போகனும்..ஒரு பத்து விழுப்புண்களை பார்க்கலாம்… ப்ரியா அவர்களே,”என்றான்.மணியோடு அனைவரும் சிரித்தார்கள்.
மதி,“என்னால முடியாதுன்னுட்டு போ,”என்றாள்.
“அவன் சரியான ரெப் ..அதனாலதான் இதெல்லாம்…”
மதிஅக்கா,“இவஒருத்தி…அவன் பெரிய சீ.எம் பாரு,” என்றதும் அனைவரும் சிரித்தபடி மீண்டும் செடிகளை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள்.
மூன்றாம் நாள் சாயுங்காலம் அரியலூர் பேருந்திற்காக அவர்கள் நால்வரோடு யசனைக்காரர்களும் காத்திருந்தார்கள்.
ப்ரியா,“மணி..இங்க வா,”என்றழைத்தாள்.
என்ன மரியாதை கத்துக்குடுக்க கூப்பிடுதோ என்றபடி ப்ரியாவின் அருகில் வந்தான்.மரத்தில் சாய்ந்து நின்ற அவள் எதிரே நின்றான்.அவள் அவனையே பார்த்தபடியிருந்தாள்.
மணி, “நீ சரியாவே என்னோட பேசறதில்ல..”என்றான்.
“டெய்லி நீ எப்பிடி பாக்கற ,பேசற அதுக்கு நான் எப்பிடி ரியாக்ட் பண்றதுன்னு எனக்கு எரிச்சலா இருக்கு.வெளிய போனா சும்மா திரும்பி பாத்தாவே கதை எழுதி மேடையேத்துறாங்கன்னு கடிவாளம் கட்டவேண்டியிருக்கு.காலேஜ்லயும் அதே லட்சணம்,”என்று சலித்துக்கொண்டாள்.
“?!”
“முதல்ல நீ பேசினது பாத்தது எதுவுமே சரியில்ல..”
அப்போதுதான் புரிவதைப் போல வேகமாக தலையசைத்தான்.அவள் கண்களைப்பார்த்து, “இந்த பப்பரக்க கண்ணுதான் உனக்கு ஒரு ஸ்கூல் ஸ்டூடண்ட் லுக் தருது,”என்றான். கண்ணாடிக்குள்ளிருந்த சிறிய கண்களை விரித்தாள்.
“வேணுன்னா அக்கான்னு கூப்டா..ச்..”என்று முகத்தை கோணலாக வைத்துக்கொண்டான்.
“உம்மனசுதான் இப்ப தெரிஞ்சிருச்சே. இனிமே கூப்டறதுல என்ன இருக்கு.உனக்கு பிடிச்சமாதிரி கூப்பிடு,”என்று நகர்ந்து மேற்கே திரும்பினாள். அந்தப் பெரிய புங்கைமரத்தின் கிளைநீட்டி மறித்திருந்த சாலையை எட்டிப்பார்த்தாள்.
ஆசிரியப் பயிற்சி பெறும் மாணவர்களின் அனுபவங்கள் புதுமையாக இருக்கின்றன. ரசித்தேன்.