பறையடிக்கும் போது
துள்ளிய மீன்களுக்கு
எந்தத் தெருவின்
கடலுக்குள் நுழைவது என்று
மிகப்பெரிய குழப்பம் வந்துவிட்டது.
ஊரின் நடுவேயுள்ள கடலை
அவ்வளவு நேர்த்தியாகப் பிரித்திருந்தார்கள்
வீட்டின் வாசல்களில் மிதந்த திண்ணைகள்
கம்பி வலைகளைப் பதித்திருந்தன.
அழகாகத் துள்ளி ஆடினாலும்
மீன்கள் நாறும் என்பதால்
வீடுகள்
ரகசியமாகக்
கடலுக்குள் மூழ்கி யோசித்து
ருசிக்காக மட்டும் ஏற்றுக் கொண்டன.
இசை நகர்ந்து
வேறு கடலுக்கு சென்றதும்
வீட்டுக்குள் நுழைந்த மீன்கள்
உள்ளே ததும்பும் கடல்
பல்வண்ண அடுக்குகளாக
பிரிந்திருந்தது கண்டு
செவுள்கள் வீங்க அழ ஆரம்பித்தன.
மீன்களைத் தடவியபடியே
துள்ளலின் போது முறுக்கிக் கொண்டிருக்கும்
நரம்புகளின் வேரை அவிழ்த்த வீடுகள்
வாய்க்குள் கைவிட்டு
முதுகெலும்பை உருவி
உருள விட்டு ரசித்தன.
தவழும் மீன்களையே
ஊரின் நடுவேயுள்ள கடல்
எப்போதும் விரும்பியது.
பசி வந்ததும்
கதவை மூடிய வீடுகள்
மீன்களின் கதறலை
இசையென்று அறிவித்த போது
நிம்மதியில்
மலர்ந்து கொண்டிருந்தது பெருங்கடல்.